

என்னை கவனிக்கவில்லை, இல்லை அடையாளம் தெரியவில்லை, ஏதோ ஒன்று. அவசரமாகக் கடந்து சென்றார் ஆளுநர் மாரி சென்னா ரெட்டி. காரில் ஏறி அமர்ந்த பிறகு சட்டென்று கண்ணாடியைத் திறந்து, அருகிலிருந்த அதிகாரி மூலம் என்னை அழைத்தார். அங்கே என்னை எதிர்பார்க்காததுதான் அவர் கடந்து சென்றதற்குக் காரணம் என்று புரிந்து கொண்டேன்.
பின்னால் வரும் வாகனத்தில் என்னை ஏறிக்கொள்ளச் சொன்னார். அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வந்தோம்.
ஆளுநர் மாரி சென்னா ரெட்டியைப் பற்றிய சில தகவல்களை இங்கே நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான்கே நான்கு ஆண்டுகள், அதுவும் இடைவெளிவிட்டு, ஆந்திர முதல்வராக இருந்தவர்தான் என்றாலும், மாரி சென்னா ரெட்டியின் அரசியல் வாழ்க்கை அசாதாரணமானது. அவரை அகற்றி நிறுத்தி ஆந்திராவில் எந்த அரசியலும் நடக்காது என்று சொல்லும் அளவுக்கு அவரது ஆதிக்கம் கொடிகட்டி ஒரு காலத்தில் பறந்தது.
மருத்துவராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே அரசியலுக்கு வந்து விட்டவர் மாரி சென்னா ரெட்டி. சுதந்திரத்திற்கு முந்தைய ஹைதராபாத் சமஸ்தானத்தில் நிஜாமுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்களில் முக்கியமானவர் அவர். அங்கே காங்கிரஸ் கட்சியை நிறுவி வளர்த்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.
ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்ததைத் தொடர்ந்து, 1950-இல் ஏற்பட்ட இடைக்கால நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டார். 1952-இல் ஹைதராபாத் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னா ரெட்டி உணவு, விவசாயத் துறை அமைச்சரானபோது அவரது வயது 30 தான்.
ஹைதராபாத்தைத் தலைநகராகக் கொண்ட தெலங்கானா, ஆந்திராவுடன் இணைவதைக் கடுமையாக எதிர்த்த சென்னா ரெட்டியைக் காங்கிரஸ் தலைமை எப்படியோ சம்மதிக்க வைத்தது. தனித் தெலங்கானா மாநிலம் கோரிக்கையின் முன்னோடியும், அதற்காகப் போராட்டம் தொடங்கியவரும் சென்னா ரெட்டிதான். அதன் பலனைத்தான் இப்போது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
1962 தேர்தலிலும், 1967 தேர்தலிலும் தந்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னா ரெட்டி நிதி, கல்வி, வர்த்தகம், வரித்துறை அமைச்சரானார். பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்றுப் பதவி விலகி, மத்திய அமைச்சரவைக்குப் போனார் சென்னா ரெட்டி. அப்போது விதி விளையாடியது.
1967 சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்காக அவரது தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.
பதவி இல்லாமல், அரசியல் இல்லாமல் மாரி சென்னா ரெட்டியால் இருக்க முடியாது. தேர்தல் முறைகேடு வழக்கின் காரணமாக 1968-இல் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் ஹைதராபாத் திரும்பிய சென்னா ரெட்டி, மீண்டும் தெலங்கானா போராட்டத்தைக் கையிலெடுத்தார். தெலங்கானா பிரஜா ஸமிதி என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். ஆந்திராவில் மீண்டும் தெலங்கானா கோரிக்கை வலுத்தது.
1971-இல் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திரா காந்தி அலையில் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிதிரண்டபோது, ஆந்திராவில் தெலங்கானா பகுதியில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில், சென்னா ரெட்டி நிறுத்திய 10 தெலங்கானா பிரஜா ஸமிதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பதவி இல்லாமல், அரசியல் இல்லாமல் சென்னா ரெட்டியை வைத்திருப்பது ஆபத்து என்பதை பிரதமர் இந்திரா காந்தி உணர்ந்தார்.
சென்னா ரெட்டி தில்லிக்கு அழைக்கப்பட்டார். அவரது தெலங்கானா பிரஜா ஸமிதி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. சென்னா ரெட்டிக்கு என்ன பதவி கொடுப்பது என்று பிரதமருக்குத் தெரியவில்லை. சட்டென்று ஒரு யோசனை
வந்தது.
தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதுதானே அவருக்கு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. நியமனப் பதவி கூடாது என்று சொல்லவில்லையே. தேர்தல் ஆணையத்தால் தண்டிக்கப்பட்டிருந்த மாரி சென்னா ரெட்டி உத்தர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற 55-ஆவது நாள், உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது, அதிகாரம் அவரது கையில் வந்தது.
மூன்று ஆண்டுகள் உத்தர பிரதேச ஆளுநராகவும், ஓராண்டு பஞ்சாப் ஆளுநராகவும் அவர் இருந்தபோது, சீர்குலைந்திருந்த அந்த மாநிலங்களின் நிர்வாகத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்த பெருமை அவருக்குண்டு. எந்தவொரு பிரச்னையிலும் விரைந்து முடிவெடுத்து, நிறைவேற்றுவதில் மாரி சென்னா ரெட்டிக்கு நிகர் அவர் மட்டுமே என்று அவரைத் தெரிந்தவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.
போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பலையை சந்தித்த நேரம். 1989-இல் சென்னா ரெட்டியின் தலைமையில் என்.டி. ராமா ராவின் தெலுங்கு தேசத்தைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சி அமைத்தது. ஒரு வருடம்தான் அவரால் தாக்குப்பிடிக்க முடிந்தது. அவருக்கு எதிராகக் காங்கிரஸ்காரர்களே கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டனர். தெலங்கானா - ஆந்திரா எம்எல்ஏ-கள் மத்தியிலான பிளவுதான் அதற்குக் காரணம்.
பதவியிலிருந்து அகற்றப்பட்டதும் மீண்டும் தெலங்கானா பிரச்னையைக் கையிலெடுக்க முற்பட்டார் சென்னா ரெட்டி. அதைப் புரிந்து கொண்ட பிரதமர் நரசிம்ம ராவ் அவரை ராஜஸ்தான் ஆளுநராக்கினார். அங்கே முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத்தின் இரும்புப் பிடிக்கு முன்னால், சென்னா ரெட்டியால் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்ட முடியவில்லை. பிரதமர் நரசிம்ம ராவுக்கு வசதியாக அவர் தமிழக ஆளுநராக, முதல்வர் ஜெயலலிதா வரம்புமீறல் இருப்பதைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடுமையான பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில்தான், திருப்பதியில் உள்ள அந்த விருந்தினர் மாளிகையில் நான் அவரை சந்திக்க அழைக்கப்பட்டிருந்தேன்.
உள்ளே போன என்னை எதிரிலிருந்த சோபாவில் அமரச் சொன்னார். தெலங்கானா பிரச்னை குறித்து ஒரு முறையும், அவர் ஆந்திர முதல்வராக இருந்தபோது சென்னைக்கு வந்தபோது ஒரு முறையும் சென்னா ரெட்டியை நான் பேட்டி எடுத்திருக்கிறேன்.
அவர் ராஜஸ்தான் ஆளுநராக இருந்தபோது, தில்லி விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ம. நடராஜன் இன்னொரு விமானத்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அருகில் வந்த ம. நடராஜனை அப்போது ராஜஸ்தான் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கு அறிமுகப்படுத்தியதை நான் மறந்துவிட்டேன். அவர் நினைவில் வைத்திருந்தார்.
""உங்கள் நண்பர் நடராஜன் எப்படி இருக்கிறார்? அவரை சந்திக்கிறீர்களா?''
""அடிக்கடி எல்லாம் நாங்கள் சந்திப்பது கிடையாது. எப்போதாவது சந்திப்பது உண்டு. அதுவும் பெரும்பாலும் தில்லியில்தான் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம். சென்னையில் இருக்கும்போது அவரைச் சந்திக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை.''
""முதல்வர் ஜெயலலிதா ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? அது பற்றி நடராஜன் உங்களிடம் ஏதாவது சொன்னாரா?''
நான் அதிர்ந்து விட்டேன். முதல்வர் ஜெயலலிதா பற்றி என்னிடம் ஏன் ஆளுநர் சென்னா ரெட்டி விசாரிக்க வேண்டும் என்று குழம்பிப் போனேன். அவரே தொடர்ந்தார்.
""உங்கள் நண்பர் ம. நடராஜனை நான் சந்திக்க வேண்டும். அவரிடம் தனிப்பட்ட முறையில் சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. ராஜ்பவனுக்கு வருவதில் அவருக்கு தர்மசங்கடம் இருக்குமானால், திருப்பதியில் சந்திப்போம். இல்லையென்றால் தில்லியில் சந்திப்போம்.''
""நீங்கள் எங்கே சந்தித்தாலும், தகவல் பத்திரிகைகளுக்குத் தெரியுமோ இல்லையோ, முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இருக்காது. அதை அவர் விரும்புவாரா என்று என்னால் சொல்ல முடியாது. நீங்கள் சந்திக்க விரும்புகிறீர்கள் என்கிற தகவலை நடராஜனுக்கு நான் தெரிவிக்கிறேன். அது என்னால் முடியும்.''
""நான் முதல்வராக இருந்தபோது சென்னையில் உங்களுக்குத் தந்த பேட்டியில் ஜெயலலிதாவைப் பாராட்டிக் கருத்துக் கூறியிருந்தேன், நினைவிருக்கிறதா? அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். சட்டப்பேரவையில் அவருக்கு அவமானம் நேர்ந்தபோது, முதலில் கண்டனம் தெரிவித்தவன் நான்தான். இப்போது அவர் என்னை எதிரியாகவே நினைக்கிறார்.''
""அவர் உங்களை எதிரியாக நினைக்கவில்லை. அவரது ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்கவும், அவரை பலவீனப்படுத்தவும் பிரதமரால் அனுப்பப்பட்டிருக்கும் ஏஜென்டாக நினைக்கிறார்.''
""நரசிம்ம ராவ் அரசியலில் என்னைவிட ஜூனியர். என்னுடன் அமைச்சராக இருந்தவர். நான் நினைத்தால் பிரதமருக்கும், முதல்வருக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை அகற்றி, சுமுகமான உறவை ஏற்படுத்த முடியும். அது ஏன் ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லை?''
கோபமாகப் பேசிக் கொண்டே போனார் ஆளுநர் சென்னா ரெட்டி. நான் தர்மசங்கடத்தில் நெளிந்தேன். இவர்களுக்கு இடையேயான அரசியல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு நான் முக்கியமானவனும் கிடையாது, தொடர்புடையவனும் கிடையாது. அவர் பேசுவதை எல்லாம் வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
""சென்னைக்குப் போனதும், ம. நடராஜனுடன் தொடர்பு கொண்டு, நீங்கள் சந்திக்க விரும்புவதை அவரிடம் தெரிவிக்கிறேன். அதற்குப் பிறகு அவரது விருப்பம்.''
அடுத்த நாள் காலையில் சுப்ரபாத தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தந்தார் ஆளுநர் சென்னா ரெட்டி. பெருமாள் தரிசனத்துக்குப் பிறகு, குடியரசுத் தலைவரையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பினேன். அடுத்த நாளே பெசன்ட் நகரிலுள்ள ம. நடராஜனை சந்திக்கச் சென்றேன்.
திருப்பதியில் ஆளுநர் சென்னா ரெட்டியைச் சந்தித்த விவரத்தைச் சொன்னவுடன் ம. நடராஜன் சிரித்தார். ஆளுநர் அவரை சந்திக்க விரும்புகிறார் என்று நான் சொன்னவுடன், அவர் எந்தவித ஆர்வமும் காட்டாதது எனக்கு வியப்பாக இருந்தது.
""இந்தத் தகவலை எனக்குத் தெரிவிக்கும் மூன்றாவது நபர் நீங்கள். என்னை சந்திக்க விரும்புவதாக அவர் ஏற்கெனவே இரண்டு பேர்கள் மூலம் எனக்குத் தகவல் அனுப்பி இருக்கிறார்.''
""சரி, நீங்கள் ஏன் சந்திக்கவில்லை? சந்திக்க விரும்பவில்லையா? அவரிடம் தெரிவிக்கட்டுமா?''
""சந்திக்க விரும்பவில்லை என்பதல்ல. அப்படி நான் ஆளுநரை சந்திப்பதை அந்த அம்மா விரும்பமாட்டார். நானும் ஆளுநரும் சேர்ந்து ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறோம் என்று தவறாகக் கணக்குப் போட்டாலும் போடுவார்.''
""அப்படியானால், முதல்வர் ஜெயலலிதாவின் சம்மதத்துடன் சந்திப்பதுதானே? ஆளுநர் சந்திக்க விரும்புகிறார், சந்திக்கலாமா என்று கேட்டு செய்தி அனுப்புங்களேன்...''
""அப்படி எல்லாம் இருந்தால் என்னவெல்லாமோ செய்யலாமே...'' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நடராஜன்.
பெசன்ட் நகர் கலாúக்ஷத்ரா காலனியிலுள்ள ம. நடராஜனின் வீட்டு மொட்டை மாடியில் இருந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது இரண்டு தகவல்கள் வந்தன. முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் நரசிம்ம ராவும் சந்தித்திருக்கிறார்கள் என்பது முதலாவது தகவல். ஆளுநர் சென்னா ரெட்டியை சந்திக்க டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி சென்னை வருகிறார் என்பது இரண்டாவது தகவல்.
எதுவும் பேசாமல் எதிரில் அமர்ந்திருந்த ம. நடராஜன் சொன்னார் -
""சுப்பிரமணியம் சுவாமி ஆளுநரை சந்திப்பதற்கு முன்னால், நான் சுவாமியை
சந்திக்க வேண்டும்!''
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.