குகை!

தட தடவெனும் பேரிரைச்சலுடன் அவன் உடம்புக்கு மேல் ஒரு மயிரிழை மட்டுமேயான இடைவெளியில் ரயில் ஓடிக் கொண்டிருப்பது போலிருந்தது.
குகை!

தட தடவெனும் பேரிரைச்சலுடன் அவன் உடம்புக்கு மேல் ஒரு மயிரிழை மட்டுமேயான இடைவெளியில் ரயில் ஓடிக் கொண்டிருப்பது போலிருந்தது. எழுந்திருக்க முடியாமல் கையைக் காலைக் கட்டிப் போட்டுவிட்டு தண்டவாளத்தில் ராட்சஸப் பாய்ச்சலில் விரைந்து கொண்டிருக்கும் ரயிலின் கீழ் !

அச்சு அசலாய் அப்படித் தான் இருந்தது. அப்போதைய அவன் நிலைமை! அப்படியும் இப்படியும் திரும்பக் கூட முடியாத குறுகலான பெஞ்ச் போன்ற படுக்கையில் படுக்கச் சொல்லி உடம்பை அந்தப் படுக்கையுடன் பெல்ட்டுகளால் பிணைத்து ஆளுயரத்தில் நீண்டிருந்த ஒரு கூண்டுக்குள் அவனைச் செலுத்த முற்பட்டபோது மிரட்சியுடன் டாக்டரா..? டெக்னீஷியனா..? அவர் கையைப் பிடித்துக் கொண்டார் சிவராமன்.
""பயப்பட ஒண்ணுமில்லே சிவராமன். உள்ளே நீங்க! கண்ணை மூடிட்டு நிம்மதியா படுத்திருக்கலாம் . மூச்சை இழுத்துப் பிடிங்க! விடுங்கனு..! அப்பப்ப நாங்க சொல்லும்போது அதன்படி மட்டும் செய்தால் போதும்! ஜஸ்ட் டுவெண்டி மினிட்ஸ்ல. முடிஞ்சுடும்''.
அவனைச் சமாதானப்படுத்துபவர் போல் சொன்னவர் அதோடு விட்டிருக்கலாம். அவன் தோளுக்கருகே இருந்த ஒரு சின்னஞ்சிறு குமிழைக் காட்டினார். ""மூச்சு திணறுவது போல் இருந்தால் இதை பிரஸ் செய்யுங்க. ! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது. சும்மா ஒரு முன் ஜாக்கிரதைக்காகத் தான்''.
""அப்படியென்றால் மூச்ச விடச் சிரமமாக இருக்குமா?'' நினைத்து முடிப்பதற்குள்ளாகவே சிவராமன் அந்தக் கூண்டுக்குள் செலுத்தப்பட்டுவிட்டார்.
உள்ளே சிறைப்பட்ட சில விநாடிகள் நிசப்தம். பிறகு ஆரம்பமாகி விட்டது இரைச்சல். கூண்டுக்கு மேலே ரயில் ஓடுகிறதா எனும் விந்தைப் பிரமையைத் தோற்றுவித்தபடி! கண் இமையின் மென் ரோமங்களைச் சற்றே மில்லி மீட்டர் உயர்த்தினாலும் அது கூண்டின் கூரையை இடிக்குமோ! அவ்வளவு இட நெருக்கடி! சில விநாடிகள் ரயில் சத்தக் கற்பனை மாயமாகி மோட்டார் எஞ்சின் ஒலி. இது எவ்வளவு நேரம் நீடிக்குமோ! எஞ்சின் ஒலி அடங்கி மரத்தை ரம்பத்தால் இழைத்து இழைத்து அறுப்பது போல்..!
இந்தச் சத்தங்களினின்று கவனத்தை விடுவிக்கும் வகையில், அவர்கள் சொன்னது போல் கண்ணை மூடித் தூங்கலாமா? அவகாசம் மறுக்கப்பட்டது போல் வெளியிலிருந்து!
""ஹோல்ட் யுவர் ப்ரீத். மூச்சை இழுத்துப் பிடிங்க. லீவ் இட்'' அதன் பிறகு கண்ணசரவும் பயமேற்பட்டது. மறுபடியும் வெளியிலிருந்து கட்டளை வந்தால்? மின் விசிறி சுற்றுவது போன்ற சற்றே மெல்லிய ஒலியுடனான சில கணங்களுக்குப் பின்னர் திடீரென தட தடவென கூரையை இரும்புக் கம்பியால் அடிப்பது போல்.. அப்படியே அதிர்ந்து போனார் சிவராமன்.
என்ன இதெல்லாம். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கு? என்னை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்தப் பாதாளக் குகையில் தள்ளி என் வயிற்றுக் குகையை பொக்லைன் போல் தோண்டிக் கொண்டிருக்கின்றனவா இந்த ராட்சஸ இயந்திரங்கள்? இந்தச் சித்திரவதையைவிட இத்தனை மாதங்களாய் பாடாய்ப்படுத்தி கொண்டிருக்கும் ஆளைப் புரட்டிப் போடும் வயிற்று வலி இம்சையே தேவலை போலிருக்கிறதே! என்று சிவராமன் நொந்துகொண்டார்.
ஏறக்குறைய ஏழெட்டு மாத வலி. முதலில் நமநமன்னு இலேசாய் ஆரம்பித்தது போகப் போக கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக் கொண்டே போனது. நாளெல்லாம் தொடர்ந்து இருக்காது. கொஞ்ச நேரம் இருக்கும். பிறகு இருந்த சுவடே தெரியாது. அடியோடு மறைந்து போய்விடும்.
குறைந்துவிட்ட ஆசுவாசத்தில் மறுபடியும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என அசட்டை செய்து நாளடைவில் நேர இடைவெளி அதே விதமாய் இருந்தும் வலியின் தீவிரம் அதிகமாகி விட்டது. பகையாளியின் கைகள் வயிறு எனும் மாயக் குகைக்குள் புகுந்து ஆத்திரம் தீரப் பிறாண்டிக் கொண்டிருப்பது போல்! இத்தனைக்கும் பசி, செரிமானம் எல்லாமே நார்மலாக இருந்தது.. விட்டு விட்டு வரும் பாழாய் போன வலி மட்டும் வாழ்க்கையே வெறுப்பேற்றியது.
கை வைத்தியம்.. மருந்துக் கடைகள்.. பக்கத்துத் தெரு டாக்டர்.. எனப் பலவும் முயன்று பிறகு ஸ்பெஷலிஸ்ட்கள்... அவர்கள் உபதேசப்படி பல வித ரத்த பரிசோதனைகள்.. எக்ஸ்ரே.. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன். எண்டோஸ்கோபி.. கொலொனாஸ்கோபி... வகைகள் என இப்படி எத்தனை தினுசு பரிசோதனைகள் உண்டோ அத்தனையும் செய்தாகி விட்டது.
வயிற்று வலிக்கான காரணம் மட்டும் எந்த இயந்திரத்துக்கும் எந்த மருத்துவ நிபுணருக்கும் பிடி கொடுத்தபாடில்லை. அல்சர்.. வாய்வுத் தொல்லை.. அப்பெண்டிசைடிஸ்.. ஜீரணக் கோளாறு.. கொழுப்பு.. பித்தம்..கட்டி,. இன்ன பிற எதுவுமே இல்லை.! பித்தப் பையில் மட்டும் சில கற்கள் சின்னதாய்.. பத்தாண்டுகளுக்கு மேலாய் இருக்கும். அவையும் தொல்லை தரும் வகையில் இல்லை.. வலிக்கான காரணம் அவையல்ல' என்றார்கள்.
"தங்கம். என்வயிற்றில் மாணிக்கம்.. வைரம்.. முத்து.. ரத்தினம்.. பவழம்னு நிறைய கல் இருக்கு. எல்லாவற்றையும் கோர்த்து மாலையாப் போட்டுக்கறயா..?'' என்று சிவராமன் தனது மனைவி தங்கத்தைக் கேட்பார்.
""போதும். நீங்களும் உங்க ஜோக்கும். சகிக்கலே. அதான் அவற்றால் பிரச்னையில்லைன்னு சொல்லிட்டாங்களே! அவை பாட்டுக்கு பத்திரமா அங்கேயே கிடக்கட்டும்'' என்று மனைவியும் பதில் அளித்தார்.
அதோடு அந்தக் கற்கள் நினைப்பையே சிவராமன் விட்டுவிட்டார். டாக்டர்களும் தான்! காரணம் தெரியாத வயிற்று வலி மட்டும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. சில சமயம் வலியின் அடையாளமே துளியும் கூட இருக்காது. திடீரென தலையெடுக்கும் புற்றுப் பாம்பாய். எந்த மகுடி இசையும் இல்லாமலே! அப்போதெல்லாம் டாக்டர்கள் எழுதிக் கொடுத்த வலி நிவாரணி மாத்திரைகள் உற்ற தோழனாய் கை கொடுக்கும்.
"கரோனாவுடன் வாழப் பழகு' என்ற அரசாங்கத்தின் அறிவுரை போல், மூன்றாண்டுகள் முன்னர் வயிற்றுவலியுடனே வாழப் பழகி அலுவலகமும் போய் சிவராமனும் வந்து கொண்டிருக்கிறார். அலோபதி.. ஹோமியோபதி.. ஆயுர்வேதம்.. சித்தா... என எத்தனை மருத்துவங்கள் உண்டோ அத்தனையும் முயற்சித்தபடியே..!.
அந்த விடாமுயற்சியின் ஒரு பகுதிதான் பரிசோதனை. இதோ இந்த எம். ஆர். சி. பி. எனும் இதுவரை அவன் கேள்விப்பட்டேயிராத இந்த விநோதக் கூண்டுவாசம்! இரு நாள்கள் முன் நகரத்தின் இன்னொரு பெரிய வைத்திய நிபுணரின் வழிகாட்டல்! இந்த வழி நிச்சயம் சரியான இலக்கு கொண்டு சேர்க்குமெனும் ஆழ்நம்பிக்கையுடன்!
"இவ்வளவு நாள்கள் ஏன் இந்த டாக்டரிடம் போகலே? அறிந்தவர், தெரிந்தவர்களின் ஆதங்கங்கள். அவரது நம்பிக்கையை வலுப்படுத்தியிருந்தன.
எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சிறு சாலை விபத்தில் தலையில் அடிபட்டபோது செய்யப்பட்ட மிகவும் சாதுவான எம்.ஆர்.ஐ . ஸ்கேன் அனுபவம் உண்டு. இந்தப் புது வகை ஸ்கேன் குறித்து கூகுளில் நிறையப் படித்து தான் வந்திருக்கிறார். ஆனால் இந்த உலக மகா பல் குரல் இரைச்சல்.
"இடியொலிகள்... இட நெருக்கடி..' இவையெல்லாம் ஏதோ விசித்திரப் பிரபஞ்சத்தில் அவரைத் தனியே விட்டு தப்பிக்கும் வழியை அடைத்து விட்டாற் போல் திகிலூட்டியே இருக்கின்றன. தானும் தனது எண்ணங்களுமாய் இருந்தவருக்கு இப்படியாவது நேரம் கழிந்ததே என ஆறுதலாக இருந்தது.
"" ஜஸ்ட் டுவெண்டி மினிட்ஸ்'' என்றார்கள். இப்போதே கண்டிப்பாக அரை மணிக்கு மேலாகியிருக்கும்!
திடீரென மூச்சுத் திணறி வியர்த்துக் கொட்டுவது போலிருக்க! அவர்கள் சொன்ன பெல்லை அழுத்தலாமா ? வேண்டாம்! அப்படியெல்லாம் இருக்காது. பீதியினாலான மாயப் பிரமை இது! அது சரி! என்ன இது! வெளியிலிருந்து சத்தமே காணோம் .
ஹோல்ட் யுவர் ப்ரீத்! லீவ் இட்..! ஆர்டர் கூடக் கொஞ்ச நேரமாய் இல்லையே?! அவன் உள்ளே இருப்பது மறந்து போய் அப்படியே போய் விட்டிருப்பார்களா? எப்போது வருவார்கள்! அவர்கள் வருவார்களா? வருவார்களா? பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தையுடன் இப்படிக் காத்திருக்கவும் செய்து விட்டார்களே?
இப்படித் தான் அவன் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது பள்ளியில் சுற்றுலா அழைத்துச் சென்ற போது பீச்சில் மாணவர்கள் ஆபத்தற்ற இடம் வரை அனுமதிக்கப்பட்டு அலைகளிடையே குதித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது. திடீரென ராட்சஸ அலை ஒன்று ஆக்ரோஷமாய் பாய்ந்து வர, அலறியடித்துக் கொண்டு கரை நோக்கி ஓடி வந்த பிள்ளைகளிடையே அவன் ஆருயிர் தோழன் சீனு இல்லை! வருவான். வந்து விடுவான்.. வருவானா! வருவானா! அழுதபடி பிள்ளைகள் காத்திருக்க? வந்தார்கள் தேடிச் சென்ற குழுவினர் உயிரற்ற சீனுவுடன்! அந்தக் கணம் பொசுக்கென மனதில் வந்த முகாந்திரமே இல்லாத மடத்தனமான ஞாபகம் அது என உறைத்தாலும் வியர்த்துக் கொட்டி நிஜமாகவே மூச்சடைப்பது போல்!
""ஹோல்ட் யுவர் ப்ரீத்'' =வெளியிலிருந்து குரல்!
அப்பாடா!- வந்து விட்டார்கள்.
மூச்சு இழுப்பதும் விடுவதுமாய் சில கணங்கள் செலவழிந்தன. ""இன்னும் எத்தனை நேரம்?'' ஏறக்குறைய கத்தினான். பதிலில்லை. வெளிக்குரல் மட்டும்தான் கேட்குமா? "கடவுளே! எப்போது வெளியே போவோம்?
ஒலி மண்டல வாசத்துக்குப் பின்னான சில நிசப்த நிமிடங்களுக்குப் பின்னர், அவன் படுக்கை வெளியே இழுக்கப்பட்டு உடம்பைப் பிணைத்திருந்த பெல்ட்டுகள் அகற்றப்பட்டு எழுந்து உட்காரச் சொன்னார்கள். அவன் ஊர் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் இருக்கும் மிகக் குறுகிய குகையில் நுழைந்து படுத்தபடியே உடம்பை இழுத்து இழுத்துக் கீழ் நகர்ந்து வளைந்து திரும்பிய அதன் பாதையைக் கடந்து வெளிவந்த நினைவு இப்போது அவன் மனதில்! அந்த அனுபவம் ஒரு பரவசச் சிலிர்ப்பு!
இது அச்சு அசலாய் ஒரு திகில் படம் பார்த்த ஆசுவாசம்! எல்லோருக்கும் அப்படித்தானா? எனக்கு மட்டுமே இப்படியா?! இனி போகலாம் எனும் அவர்கள் தலையசைப்புக்குப் பின்னர் அந்த அறையினின்று வெளியே வந்தான். அதற்கென்றான பிரத்யேகமான அங்கி போன்ற உடையில் வெளி இருக்கையில் அமர்ந்திருந்தவர் தேடலுடன் இவன் முகம்!
அனுதாபத்துடன் இவன் அவர் முகம் பார்க்க! ஒரே ஒரு கணம் போல் நின்று ஏதும் பேசாமல் உடை மாற்றிக் கொண்டு வெளி ஹாலுக்கு வந்தான். அவன் கண்ணில்பட்டது தான் தாமதம்! சரேலென எழுந்தாள் ஆவலும் கவலையுமாய் தங்கம்.
அப்பாடா =நிம்மதிப் பெருமூச்சுடன் அவள் பக்கத்தில் உட்கார்ந்தார்.
"' விசித்திரமான அனுபவம்தான் போ! என்னாச்சுன்னு விவரிக்கறது ரொம்பக் கஷ்டம். உன்னால் புரிஞ்சுக்கவும் முடியாது. பட்டால்தான் தெரியும், அது அந்தக் கூண்டு!''
""இருங்க! இருங்க ரொம்பக் களைச்சுப் போயிருக்கீங்க? அவங்க கொடுத்த பைன் ஆப்பிள் ஜூஸ் தவிர காலையிலிருந்து காலி வயிறு. முதலில் வெளியில் கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு நிதானமா சொல்லுங்க உங்க அனுபவத்தையெல்லாம்!=தாயினும் சாலப் பரிந்த தங்கம்!''
சாப்பிட்டுக் கொண்டே அத்தனையும் விவரித்தான் அவன். குறுக்கிடாமல் பொறுமையாய் கேட்டுக் கொண்டாள் அவள். ""பாவங்க நீங்க! ஆனா ஒரு விஷயம் மட்டும் புரியல எனக்கு! எல்லோருக்கும் இப்படித்தான் இருக்குமா இல்லே நீங்க? உங்களுக்கு மட்டும்! ஏதாவது கோளாறு நேர்ந்திருக்குமா?''
""அப்படி தவறு ஏதேனும் நடந்திருந்தால், அவங்களுக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். .! நான் தான் ஏகத்துக்குப் பயந்து போயிருக்கேன்! அது நிஜம்மா பக்கா ஸ்கேரி ஹவுஸ் போல் தான் தங்கம்''. அவனை மேலே பேச விடாமல் இப்போது குறுக்கிட்டாள்.
""போகட்டும் விடுங்க. இவ்வளவு கடினமான இந்தப் பரிசோதனை மூலமா உங்க வயிற்றில் என்ன தான் பிரச்னைன்னு இந்த முறை நிச்சயமாத் தெரிஞ்சுடும்! உங்க கஷ்டதுக்கெல்லாம் தீர்வு கிடைக்கப் போறதுன்னு சந்தோஷப்படலாம்'' என்றாள்.
""சத்தம்! சமுத்திரம்! இருட்டு! அது இதுன்னு அதையே நினைத்து மனசை உழப்பிக்காதீங்க'' பரிசோதனை என்ன முடிவைச் சொல்லப் போகிறதோ எனும் கவலையைப் பிடிவாதமாய் மனதுக்குள் அழுத்தித் தள்ளியபடி கேட்டாள், "" ஆமாம்! இத்தனைக்கும் உங்க வயித்து வலி எப்படி இருக்கு?
வந்ததா?''
""அட! ஆமாம். இல்லையே? வந்ததா, இல்லையான்னு தெரியலயே? அந்தக் குகைக்குள்ளே இந்தக் குகைச் சங்கதி மறந்தே போய்ட்டது பார்'' சிரித்தபடி வயிற்றைத் தடவிக் கொண்டான்.
அன்று மாலை வந்து ரிப்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்றார்கள். மறுபடியும் இவ்வளவு தூரம் வர வேண்டாம். போகிற வழிதானே.. மறுநாள் காலை டாக்டரைச் சந்திக்கும் முன் வாங்கிக் கொள்ளலாமென இருந்து விட்டார்கள்.
கனவும் நனவும் செவிகளைக் கிழிக்கும் பேரிரைச்சல்களின் பிரமையும் நினைவுகளுமாய் இரவைக் கழித்தான் சிவராமன். சற்று முன்னதாகவே புறப்பட்டு ரிப்போர்ட் பெற்றுக் கொண்டார்கள். அவனைவிட அதிகப் பதற்றத்துடன் அவசர, அவசரமாக அவனிடமிருந்து பிடுங்காதக் குறையாய் அதை வாங்கிக் கொண்டாள் தங்கம் . ஒன்றுமே புரியவில்லை. ஏதேதோ மருத்துவ வார்த்தைப் பயன்பாடுகள்! அவனுக்கும் ஒரு சொல் கூட விளங்கவில்லை.
ரிஸப்ஷனில் கேட்ட போது ரிப்போர்ட்டைப் பார்க்காமலே கிடைத்த பதில் - ""உங்க டாக்டர் சொல்வார்''
மிகவும் புகழ் பெற்ற மருத்துவமனை. முன்பதிவு செய்திருந்தும் ஏகத்துக்குக் கூட்டம். அவன் டோக்கன் நம்பர் பத்தொன்பது. டாக்டர் ஆபரேஷன் தியேட்டரில் இருப்பதாய் தகவல். எல்லாமாய் கணக்குப் போட்டுப் பார்த்த போது அவன் முறை வர மணி இரண்டு இரண்டரை ஆகி விடும் போலிருந்தது.
"இப்பத்தான் பதினொன்றரை ஆறது?'' எரிச்சலுடன் முணுமுணுத்தாள் தங்கம்.
""அதனால் என்ன! சமையல் கூட முடிக்சுட்டு வந்திருக்கே! பிள்ளைகளும் நாலு மணிக்கு மேல் தான் வருவாங்க? இதெல்லாம் நமக்குப் புதுசில்லையே?'' அலட்டிக்காமல் சொன்ன கணவரையே வியப்புடன் நோக்கினாள் தங்கம்.
""அதில்லே. ரிப்போர்ட்டில் என்ன இருக்கு! டாக்டர் என்ன சொல்லப் போறாரோ? உங்க உடம்பில் அப்படி என்னதான் பிரச்னைன்னு நான் கிடந்து தவிச்சிட்டிருக்கேன். கொஞ்சம் கூட டென்ஷனே இல்லையா உங்களுக்கு? இப்படிக் கூட ஒரு மனுஷன் இருப்பாரா?''
""அதான் நான் இருக்கனே உன் கண் முன்னாலயே'' சிரித்தான் சிவராமன்.
""ரிப்போர்ட் ஏற்கெனவே எழுதியாச்சு! இனி புதுசா எழுதப் போறதில்லே? கவலைப்பட்டு என்னாகப் போறது? என்ற சிவராமனுக்கு என்ன நோய் என்று டாக்டர் சொன்னாலும் கவலையில்லை. அதற்கான சிகிச்சை = அறுவை சிகிச்சையென்றால் = அவனது நினைவை மயக்கமருந்து மூலம் அகற்றிவிட்டு செய்யப்போகிற சிகிச்சை. எந்த பதைபதைப்பும் இல்லாமல் எதிர்கொள்ளலாம். முந்தினநாள் எதிர்கொண்ட அனுபவத்தை விட என்று நினைத்த சிவராமன், ""இந்தக் காத்திருப்பெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லப்பா?'' என்று கூறிவிட்டு செல்போனுக்குள் புகுந்தான் அவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com