ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வியர்வை அதிகமாக வருவது ஏன் ?

 என் மகனுக்கு வயது 10 ஆகிறது. அவனுக்கு உடம்பைத் தொட்டால் குளிர்ச்சியாக இருக்கிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வியர்வை அதிகமாக வருவது ஏன் ?

 என் மகனுக்கு வயது 10 ஆகிறது. அவனுக்கு உடம்பைத் தொட்டால் குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் தலை மட்டும் சூடாக இருக்கிறது. நல்ல வேகத்தில் சுழலும் மின்விசிறியின் கீழ் அமர்ந்திருந்தாலும் அவனுக்கு அரும்பு அரும்பாக நெற்றியும் முகமும் வேர்க்கிறது. தலையில் வியர்வை அதிகமாக இருக்கிறது. இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?
 - காயத்ரி, நங்கநல்லூர், சென்னை.
 நீங்கள் மகனை கர்ப்பபையினுள் சுமந்திருந்தபோது, கல்லீரல் சார்ந்த உபாதை ஏதேனும் ஏற்பட்டு, உடல் அரிப்பினால் அவதியுற்று, அதைச் சரிப்படுத்துவதற்காக ஏதேனும் மாத்திரை மருந்துகள் சாப்பிட்டிருந்தால், நீங்கள் குறிப்பிடும் வகையில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். கணவர் மற்றும் அவர் சார்ந்த உறவினர்களிடம் கர்ப்பிணி காலத்தில் ஏற்படும் சண்டைச் சச்சரவுகள், மனம் சார்ந்த வேதனை, மன அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும் குழந்தைக்கு இதுபோன்ற உபாதை ஏற்படும். உணவில் காரம், புளி, உப்பு, எண்ணெய்யில் பொரித்த உணவுப் பொருட்களை அதிகம் விரும்பிச் சாப்பிடிருந்தாலும், குழந்தைக்கு தலைசார்ந்த வியர்வையும், சூடும் கூடியிருக்கும்.
 உங்கள் வம்சாவழியிலோ, கணவரின் வம்சாவழியிலோ இதே போன்றதொரு உபாதையை யாரேனும் சந்தித்திருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். படிப்பு, தொழில், அலுவல் ஆகியவற்றில் பிறரிடம் ஏற்படும் மனஸ்தாபம், கோபம், வெறுப்பு, பயம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்னைகளாலும் மகனுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கலாம்.
 சூடும் வியர்வையும் பித்த தோஷம் சார்ந்த உபாதைகளாகும். "ஆலோசகம்' எனும் பித்த தோஷம், தலையின் கண்களிலிருந்து செயல்படுவதால், அதனை போஷிப்பதற்காக, வயிற்றைச் சார்ந்த "பாசகம்' எனும் பித்தம் அதற்குத் தேவையான அளவில் தன் குணங்களையும் செயல்களையும் அனுப்பிவைப்பதில், முனைப்பைக் காட்டுகிறது.
 அவற்றின் வரவு, கல்லீரல் வழியாக, அதிக அளவில் பெறப்படும் நிலையில், தலையில் வியர்வையும், சூடும் கூடிவிடும். அந்தக் குணங்களையும் செயல்களையும் தலையிலிருந்து கீழிறக்கி வெளியேற்றும் திறமை மலத்தைத் திரவரூப வடிவில் வெளித்தள்ளும் மருந்துகளால் மட்டுமே செய்ய முடியும் என்பதால், மகனுக்கு "அவிபத்தி' எனும் சூரண மருந்தை, ஐந்து கிராம் அளவில் எடுத்து, பத்து மில்லி லிட்டர் தேன் குழைத்து, மதிய உணவிற்கு அரை மணி முன் நக்கிச் சாப்பிடச் சொல்ல வேண்டும்.
 பள்ளியில் மற்ற பிள்ளைகளுக்கு நடுவில் இதை எப்படி சாப்பிடுவது என்ற சங்கோஜம் மகனுக்கு இருந்தால், வீட்டில் காலையிலேயே கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்துமூடி, நீங்கள் கொடுத்தனுப்பலாம்.
 சுத்தமான ஸ்பூனால் எடுத்து நக்கிச் சாப்பிட்டால் போதுமானது. ஆரம்பத்தில் விரைவாகச் செயல்பட்டு, மலத்தை வெளியேற்றினால் பள்ளியிலிருந்து மாலையில் வீடு திரும்பியதும் சாப்பிடக் கொடுக்கலாம். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் கொடுத்துவர, பித்ததோஷ சீற்றமானது நன்கு குறையும்.
 தலைக்குத் தேய்த்துக் குளிக்க, சந்தனாதி தைலம், அமிருதாதி தைலம், சந்தனபலாலாக்ஷôதி தைலம், பிரம்மீதைலம் போன்றவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
 உணவிற்குப் பிறகு "உசீராஸவம் எனும் திரவ மருந்தை, சுமார் 10-15 மில்லி லிட்டர், காலை இரவு பயன்படுத்தலாம். உணவில் காரம், புளி, உப்பைக் குறைத்து, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவைகளை அதிகம் பயன்படுத்தலாம். அன்பும், அரவணைப்பும் மன மகிழ்ச்சியைத் தரும் சொற்களும், பித்த தோஷத்தைக் குறைக்கும் சிறந்த விஷயங்களாகும்.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com