ஆசை ஆசையாய் இருக்கிறதே!

நகர்மயமாதலின் விளைவாக,  கிராமங்களில்கூட கூட்டுக் குடும்ப அமைப்பு முற்றிலுமாக வழக்கொழிந்துவிட்டது.
ஆசை ஆசையாய் இருக்கிறதே!

நகர்மயமாதலின் விளைவாக,  கிராமங்களில்கூட கூட்டுக் குடும்ப அமைப்பு முற்றிலுமாக வழக்கொழிந்துவிட்டது. இந்த நிலையில், மயிலாடுதுறையில் 5 தலைமுறையினர் ஓரிடத்தில் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியிருக்கிறது வியப்பில் ஆழ்த்துகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் 1850-ஆம் ஆண்டு முதல் தலைமுறையான விசுவலிங்கத்தின் மகன் ராமசாமி. இவர் மீனாட்சி என்பவரை திருமணம் முடித்து மளிகைக்கடை நடத்தி,  உழைப்பால் செல்வந்தராக உயர்ந்தவர்.

இரண்டாம் தலைமுறையான ராமசாமி-மீனாட்சி தம்பதியினருக்கு 5 மகன்கள்,  1 மகளுடன் துவங்கிய குடும்பம் தற்போது 7-வது தலைமுறையைக் கண்டுள்ளது. 2-வது தலைமுறையில் இருந்து கூட்டுக்குடும்பமாக வசித்த இவர்கள் சுமார் 500 பேர் பணி நிமித்தமாக, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வசித்து வருகின்றனர். 

கூட்டுக் குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூட நினைத்து கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் உறவினர்களை சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்தனர். 

ராமசாமி-மீனாட்சி தலைமுறைகள் சங்கமம்' என்ற நிகழ்வின் வாயிலாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஆக. 14-இல் சந்தித்தனர். 

தாத்தா, பாட்டிகள் தொடங்கி மகன்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள், எள்ளுபேரன்கள் வரை 5 தலைமுறைகளைச் சேர்ந்த 27 குடும்பத்தினரை சேர்ந்த 485 பேர் ஒரே இடத்தில் சங்கமித்து தங்கள் உறவுகளுடன் கலந்துரையாடினர். 

தற்போது வாழ்ந்து வரும் மூத்த தலைமுறைகளை மேடையில் ஏற்றி  "ஃபேமிலி ட்ரீ' எனும் புகைப்படத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை "செல்பி' எடுத்துகொண்டும் கொஞ்சிப் பேசியும், மூத்த தலைமுறையினரிடம் ஆசி பெற்றும் அளவளாவிய காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. 

இந்த சந்திப்பின்போது, தங்களது முன்னோர் வாழ்ந்த வீடு, அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்திய பொருள்கள், பாக்குவெட்டி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டன. 

ஒரு கூட்டுக் குயில்களான இவர்கள், பணி, தொழில் நிமித்தமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தாலும் தங்கள் கூடு ஒன்றுதான் என்பதை உணர்த்தும் விதமாக தலைமுறைகளின் சங்கமம் என்ற பெயரில் ஒன்று
கூடியது அதிசயம்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com