அதிகாரம்

பியூலாராணி வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடும்போதே, ""மேம் இன்னைக்கு நீங்கதான் ஒருநாள் ஹெச்.ஹெம்.'' என்றாள் வந்தனா சிரித்தபடி!
அதிகாரம்

பியூலாராணி வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடும்போதே, ""மேம் இன்னைக்கு நீங்கதான் ஒருநாள் ஹெச்.ஹெம்.'' என்றாள் வந்தனா சிரித்தபடி!

""அப்படியா! ஹெச். எம். என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே?'' என்றாள் பியூலாராணி.

""ரெஜிஸ்டர்ல எழுதி வச்சுட்டுப் போயிருக்கார் மேம்''என்ற வந்தனா பேரேட்டைத் திறந்து பியூலாராணியிடம் பவ்யமாய்க் காண்பித்தாள்.

"ஒருநாள் ஹெச்.எம்.' என்பது அவர்களின் கிண்டலான குறிப்புச் சொல். அன்றைக்கு ஒருநாள் மட்டும் பியூலாராணி தான் தற்காலிகத் தலைமை ஆசிரியை என்று அர்த்தம்.

""என்னங்க இது அராஜகமா இருக்கு. இன்னைக்கு சாயங்காலம் ஒன் அவர் பெர்மிஷன்ல போகலாம்னு நெனச்சிருந்தேன். அதுக்கும் ஆப்பா? ஏதாச்சும் தகவல் வேணுமின்னா ராத்திரி 12 மணிக்குக் கூட போன் பண்ணி டார்ச்சர் பண்ணுகிற ஹெச்.எம். இதையும் போன் பண்ணிச் சொல்ல என்ன கேடு?'' என்று பியூலாராணி கிட்டத்தட்ட கொந்தளித்தாள்.

""முன்கூட்டியே உங்களுக்குச் சொன்னால் நீங்களும் லீவு போட்டுருவீங்களோன்னு பயம் தான் ஹெச்.எம்முக்கு; அதான் சொல்லல போல மேடம்'' என்று சிரித்தபடி விளக்கமளித்தாள் வந்தனா.

""அப்படி ஹெச். எம்மும் ஏ.ஹெச்.எம்மும் எங்கதான் போகப் போறாங்களாம். உனக்கு ஏதாச்சும் தகவல் தெரியுமா?''

""ஹெச்.எம்.களை எல்லாம் மாவட்ட கல்வி அதிகாரி மீட்டிங் கூப்பிட்டுருக்கார்; அது தெரிஞ்சதும் ஹெச்.எம். வழக்கம் போல சி.எல். எழுதி வச்சிட்டார். ஹெச்.எம். மீட்டிங் போகாததால ஏ.ஹெச்.எம். மேடம் மீட்டிங் போறாங்க?'' என்று விளக்கமளித்தாள்வந்தனா.

""மீட்டிங்கைக் கூட எதிர்கொள்ளத் திராணி இல்லாத இவரெல்லாம் ஏன் தான் ஹெச். எம்மா வரணுமோ? பதவிக்கான மரியாதை, சலுகைகள் எல்லாம் வேணும். ஆனால் அதுக்கான பொறுப்பை மட்டும் எடுத்துக்க மாட்டேன் என்பது என்ன மாதிரி மன நிலையோ?'' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்ட பியூலாராணி, ""சரி நான் என்னோட வகுப்புக்குப் போறேன். அவங்களுக்கு ஏதாவது படிக்கச் சொல்லிட்டு கீழ வர்றேன். அப்புறம் அட்டடெண்ஸ் குளோஸ் பண்ணிடலாம். அதுக்குள் யாராவது வந்தால் அல்லது ஏதாவதுன்னா பசங்ககிட்ட சொல்லி அனுப்பு. நான் கீழ வர்றேன்'' என்றாள்.

பியூலாராணியைப் பார்த்த சக ஆசிரியர்களும் வணக்கம் வைத்தார்கள்.

""என்ன மேம் இன்னைக்கு ஒருநாள் ஹெச். எம்.?'' என்று கிண்டலாகவும் சிலர் விசாரித்தார்கள்.

வகுப்புக்குப் போனதும் பிள்ளைகளிடம் ஒரு பாடத்தின் பெயரைச் சொல்லி அதிலிருக்கிற மனப்பாடப் பகுதிகளைப் படித்துக் கொண்டு இருக்கும்படியும் தான் மறுபடி வந்ததும் அதை பார்க்காமல் எழுதிக்காட்ட வேண்டும் என்றும் சொல்லிவிட்டு மறுபடியும் அலுவலக அறைக்குப் போனாள்.

""அட்டடெண்ஸ் குளோஸ் பண்ணிடலாமா வந்தனா?'' என்று பியூலாராணி கேட்கவும், ""சடகோபன் ஸாரும் காயத்ரி மேடமும் இன்னும் வரலையே மேம்..'' என்றாள் வந்தனா தயங்கியபடி.

""இன்னுமா வரலை? யாருகிட்டயாச்சும் லீவு இன்ஃபார்ம் பண்ணி இருக்காங்களா?''

""அவங்க ரெண்டு பேருமே ஹெச். எம்-க்கு செல்லப் பிள்ளைங்க மேடம். அவர்கிட்ட ஏதும் சொல்லி இருக்காங்களோ என்னமோ?''

""அப்படிச் சொல்லி இருந்தால் அவர் ஸ்கூலுக்குப் போன் பண்ணிச் சொல்லி இருப்பாரே, இல்லைன்னா அவரே அவங்ககிட்ட நான் லீவும்மா; நீங்களே ஸ்கூலுக்குப் போன் பண்ணிச் சொல்லீடுங்கன்னு சொல்லி இருக்கணுமில்ல?''

""தெரியலையே மேடம்; ஒருவேளை அவரு மறந்துட்டாரோ என்னவோ?'' என்ற வந்தனா அவர்களின் அலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ள முயன்றாள்.

சடகோபனின் அலைபேசி அடித்துக் கொண்டே இருந்து எடுக்கப்படாமலேயே கட் ஆனது. காயத்ரியின் எண்ணுக்கு போன் பண்ணினால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

""இவ்வளவு பொறுப்பில்லாம இருக்கிறாங்களே?'' என்று அலுத்துக் கொண்ட பியூலாராணி, இருவருக்கும் ஆப்செண்ட் மார்க் பண்ணி அட்டெண்டென்ஸைக் குளோஸ் பண்ணினாள்.

பதினோரு மணிக்கு மேல் ஒருவர் பின்னர் ஒருவராக இருவரும் பள்ளிக்கு வந்து அவர்களுக்கு ஆப்சென்ட் போட்டதற்காக பியூலாராணியிடம் சண்டை போட்டனர். தாங்கள் முன்தினமே தலைமை ஆசிரியரிடம் அடுத்தநாள் கொஞ்சம் தாமதமாக வருவதற்கு அனுமதி வாங்கி இருந்ததாக சாதித்தனர். அதனால் ஆப்சென்ட் மார்க்கை அழித்து தாங்கள் கையெழுத்து போட்டே தீர்வோம் என்று அடம்பிடித்தார்கள். ஆனால் பியூலா ராணி அனுமதிக்கவில்லை.

அரைநாள் தற்செயல் விடுப்பு எழுதிக் கொடுத்தால், அதன்படி ரிஜிஸ்டரில் மாற்றம் செய்து கொள்வதாகவும் மற்ற எதற்கும் சம்மதிக்க முடியாது என்றும் பியூலாராணி தீர்மானமாகச் சொல்லவும், ""ஆக்டிங் ஹெச். எம். தான் நீ! ஓவரா ஆடாத!'' என்று எச்சரிப்பது போல் பேசிவிட்டு அரைநாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார் சடகோபன்.

ஆனால் காயத்ரி விடுப்பு எழுதிக் கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

""நான் இன்னைக்கு லீவு எழுதிக் கொடுக்க முடியாது மேடம். பிராக்டிகல் எக்ஸாம் நடந்துக்கிட்டு இருக்குது. நான் தான் இன்டர்னல் எக்ஸாமினர்..''என்றாள் அழுதுவிடுகிற தொனியில்.

""அதுசரி; பரீட்சை இருந்தும் லேட்டா வருவீங்களா? கல்வி அதிகாரியோட ஆபீஸ்லருந்து இன்ஸ்பெக்ஷன் வந்திருந்தால் என்னாவது?''என்று கடிந்து கொண்டாள் பியூலாராணி.

அப்புறம் கோபம் தணிந்தவளாக காயத்ரியிடம், ""சரி போனது போகட்டும்; இன்னைக்கு முருகவள்ளியே இண்டர்னல் எக்ஸாமினரா காலை பேட்சுக்கு இருக்கட்டும். மத்தியான பேட்சுக்கு மட்டும் நீங்க இன்டர்னல் எக்ஸாமினரா இருந்துக்குங்க.'' என்று சொல்லி அவளை பரீட்சை நடக்கும் இடத்துக்குப் போகும்படி அனுப்பி வைத்தாள் பியூலாராணி.

காயத்ரி அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், ஆனால் வேறு வழி இல்லை என்பதால் முனங்கியபடியே கிளம்பிப் போனாள்.

மதிய உணவை முடித்துவிட்டு பியூலாராணி அலுவலகத்தில் ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது ஒருத்தர் வந்தார். அவர் தன்னுடைய பெயரை மாரியப்பன் என்றும் பிரபலமான தனியார் கம்பெனியின் நிர்வாகியாக இருப்பதாகவும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

""நான் இந்தப் பள்ளியோட முன்னாள் மாணவன் மேடம்!'' என்று மாரியப்பன் சொல்லவும் பியூலா சந்தோஷமாக எழுந்து நின்று அவரை வரவேற்று உட்கார வைத்தாள்.

""நான் வேலை பார்க்கிற கம்பெனி சார்பா இந்தப் பள்ளிக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படறேன். ஒவ்வொரு வருஷமும் சி. எஸ். ஆர். நிதின்னு ஒதுக்குவோம். அந்த நிதியில இந்த வருஷம் என்னோட பழைய ஸ்கூலுக்கு வேண்டியதைப் பண்ணிக் குடுக்கணும்.. என்ன வேணுமின்னு கேட்டீங்கன்னா அதை செஞ்சு குடுப்போம்..''என்றார்.

""சி. எஸ். ஆர். நிதின்னா என்ன ஸார்?''

""இதுகூடவா தெரியாது'' என்று ஆச்சர்ய முகபாவம் காட்டியவர், கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி. கம்பெனி சார்பா இந்தச் சமூகத்துக்கு ஏதாவது செஞ்சு குடுக்குறது மேடம்?''என்று வேண்டா வெறுப்பாக விளக்கம் அளித்தார்.

""நான் இன்னைக்கு ஆக்டிங் ஹெச். எம். தான்; அதனால தான் எனக்கு அதுபத்தி எதுவும் தெரியல. நீங்க கோவிச்சுக்கலைன்னா இன்னும் ஒன்னு கேட்கட்டுமா?''

""மனசுக்குள்ள கேள்வி முளைச்சிடுச்சுல்ல; அப்புறம் கேட்டுட வேண்டியதுதான் மேடம்? ''

"" அதனால உங்க கம்பெனிக்கு என்ன லாபம்?''

""பெருசா ஒரு லாபமும் இல்ல; அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் இந்தச் சமூகத்துக்கு ஏதாவது செய்து கொடுக்கணும்னு எதிர்பார்க்குது. எங்களுக்கும் நிஜமாகவே ஏதாவது செய்து கொடுப்பதில் ஆர்வம் இருக்கிறது. அதுக்கு அரசிடமிருந்து வரி விலக்கும் கிடைக்கும். யாருக்கோ செஞ்சு குடுக்குறதை நான் படிச்ச பள்ளிக் கூடத்துக்கு செஞ்சு குடுக்க ஆசைப்படுறேன்; ஒரு ஆத்ம திருப்திக்காகன்னு வச்சுக்குங்களேன்.''
""மேடம் இவர் பத்து நாளைக்கு முன்னாலயே நம்ம ஹெச். எம்மைப் பார்த்தார்'' என்று வந்தனா சொல்லவும், பியூலா வந்திருப்பவரை சந்தேகத்தோடு பார்த்தாள்.
""ஆமாம் மேடம். நான் ஏற்கெனவே ஒருமுறை வந்து ஹெச். எம்மைப் பார்த்தது வாஸ்தவம் தான், அவர் கிட்டயும் இது சம்பந்தமாப் பேசினேன். ஆனால் அவர் பிடி கொடுத்தே பேசல. அவர் பணமா கொடுங்க; நாங்களே ஸ்கூலுக்கு வேண்டியதைப் பண்ணிக்குவோம்னு சொன்னார். கம்பெனி சார்பா பணமாக எல்லாம் கொடுக்க முடியாது. என்ன வேணும்னு சொன்னீங்கன்னா அதை செஞ்சு கொடுப்போம். அதான் மறுபடியும் ஃபைனலா ஒருதடவைக் கேட்டுட்டுப் போகலாம்னு வந்துருக்கேன்.'' என்றார்.

""வேலைன்னா என்ன மாதிரி வேலைகள் செஞ்சு குடுப்பீங்க?'' என்றாள் பியூலா.

""டெஸ்க்குகள், பீரோக்கள், நாற்காலிகள் மாதிரியான சாமான்கள் வாங்கித் தரலாம். லேப் அப்பரேட்டஸ், கம்யூட்டர்கள், லைப்ரரி புத்தகங்கள்னு நீங்க எது கேட்டாலும் எங்க பட்ஜெட்டுக்கு உட்பட்டு வாங்கித் தருவோம்.''

கொஞ்சநேரம் யோசித்த பியூலா, ""மாணவிகளுக்கு டாய்லெட்டுகள் ரொம்பவும் கம்மியா இருக்கு; இருக்கிற டாய்லெட்டுகளும் ரொம்பவும் மோசமான நிலைமையில இருக்கு. பொம்பளைப் புள்ளைங்க ரொம்பவும் சிரமப்படுறாங்க. இன்னும் அஞ்சாறு டாய்லெட் ரூம்ஸ் கட்டி, இப்ப இருக்கிற டாய்லெட் ரூம்களையும் நவீன வசதிகளோடு மாத்தித் தருவீங்களா?'' என்று கேட்டாள்.

""பட்ஜெட் ரொம்பவே அதிகமாகுமே மேடம்'' என்றார் தயங்கியபடி.

கொஞ்சநேரம் யோசித்தவர், ""ஓ.கே. மேடம். பரவாயில்லை. செஞ்சு குடுக்கலாம். நீங்க கன்ஃபார்ம் பண்ணீங்கன்னா எங்க ஆபிஸ்ல அப்ரூவல் வாங்கிட்டு வேலைகளை உடனேயே தொடங்கிடுவோம்'' என்று சொல்லி அதை உறுதிப் படுத்தி எழுதிக் கொடுக்கச் சொன்னார்.

பியூலா அதை கடிதமாக எழுதத் தொடங்கியதும், வந்தனா இடை மறித்து, ""மேடம்; எதுக்கும் நீங்க ஹெச். எம்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு எழுதிக் கொடுங்க'' என்றாள்.

""தேவை இல்லை வந்தனா. ஹெச். எம். இதை கண்டிப்பா ஒத்துக்க மாட்டார்னு எனக்கும் தெரியும். ஆனால் இன்னைக்கு நான் தான் ஆக்டிங் ஹெச். எம். எனக்கு முடிவெடுக்கிற அதிகாரம் இருக்கு. அதை வச்சு மாணவர்களுக்கு உபயோகமா ஏதாச்சும் செய்யனும்னு ஆசைப்படுறேன். அவரிடம் நான் அப்புறம் சொல்லிக்கிறேன்'' என்றவள் சரசரவென்று கடிதம் எழுதி பச்சை மையில் கையொப்பமிட்டு மாரியப்பனிடம் கொடுத்தாள்.

மாலை மூன்றரை மணி அளவில் புதிதாய் இன்னொரு பிரச்னை முளைத்து வந்தது. பள்ளி யூனிஃபார்ம் அணிந்த ஒரு மாணவியும் அவளுடைய தந்தையும் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த பியூலாராணியிடம் வந்தார்கள்.

""வணக்கம் மேடம். இவள் என் பொண்ணு கோடீஸ்வரி. இங்கதான் ப்ளஸ் டூ படிக்கிறாள். இன்னைக்கு இவளுக்கு இயற்பியல் பிராக்டிகல் பரீட்சை. ஆனால் இவள டீச்சர் பரீட்சை எழுத விட மாட்டேங்குறாங்க. நீங்கதான் எப்படியாச்சும் இவள் பிராக்டிகல் பரீட்சை எழுத உதவி பண்ணனும்'' என்றார் பெண்ணின் தகப்பன் கூனிக்குறுகிப் போய்!

""இவளை எனக்குத்தான் தெரியுமே; ஏன் என்னாச்சு கோடீஸ்வரி? ஏன் உன்னை உங்கள் டீச்சர் பரீட்சை எழுதவிட மாட்டேங்குறாங்க.?'' என்று பியூலாராணி மாணவியிடம் கனிவாய் விசாரித்தாள்.

""என்னால இப்ப ஒரு மூணு மணிக்குத்தான் ஸ்கூலுக்கே வர முடிஞ்சது'' என்று சொல்லத் தொடங்கிய கோடீஸ்வரி , ஓவென்று கதறி அழத் தொடங்கி விட்டாள்.

அழும் தனது பெண்ணை தன்மீது சாய்த்துக் கொண்ட அவளுடைய தந்தைதான் தொடர்ந்துபேசினார்.

""இவளோட அம்மா உடம்புக்கு முடியாமல் ஒரு வருஷமாவே படுத்த படுக்கையா இருந்து இன்னைக்குக் காலையில தான் இறந்து போயிட்டாங்க. இந்த வருஷம் முச்சூடும் புள்ளையால அதிகம் ஸ்கூலுக்கே வரமுடியல மேடம். கோடீஸ்வரியோட அம்மாவுக்கு சுகமில்லைங்கிறதால இந்த வயசுலயே வீட்டு வேலைகளை எல்லாம் சுமந்துக்கிட்டு அம்மாவையும் பார்த்துக்கிட்டாள். இப்ப பரீட்சை எழுதலைன்னா ஒரு வருஷம் வீணாயிடும்னு சொன்னாங்க. அதான் இவளோட அம்மாவை அடக்கம் பண்ணிட்டு அவசர அவசரமாக் கிளம்பி வர்றோம். கொஞ்சம் நீங்கதான் பெரிய மனசு பண்ணி என் பொண்ணை பரீட்சை எழுத அனுமதிக்கனும்..'' என்றவர் படீரென்று பியூலாராணியின் கால்களில் விழுந்து விட்டார்.
பதறிப்போன பியூலாராணி அவரை எழுப்பி அலுவலகத்திலேயே உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டு, மாணவியை மட்டும் மாடி அறையில் இருந்த இயற்பியல் செய்முறைக் கூடத்திற்கு அழைத்துப் போனாள். அங்கு மூன்று ஆசிரியைகள் மட்டும் ஏதோ பேசியபடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருத்தி காயத்ரி. அவள் இயற்பியல் ஆசிரியை. இன்னொரு இயற்பியல் ஆசிரியை வள்ளியும், வெளி பள்ளியில் இருந்து பரீட்சைக்காக வந்திருக்கும் எக்ஸ்டர்னல் ஆசிரியை ஒருத்தியும் இருந்தாள். பியூலாராணியைக் கண்டதும் மூவரும் எழும்பி நின்று வரவேற்றார்கள்.
""எல்லாம் முடிச்சிட்டோம் மேடம். கையெழுத்துப் போட்டுடுறீங்களா?'' என்றாள் வள்ளி.

வாசலில் நின்று கொண்டிருந்த கோடீஸ்வரியைக் காட்டி, ""இவளை ஏன் பரீட்சை எழுத விட மாட்றீங்களாம்?'' என்றாள் பியூலாராணி.

""அவளுக்கு நேத்தே பரீட்சை. வரல; இன்னைக்கும் மூணு மணிக்குத் தான் மகாராணி ஆடி அசைந்து வர்றாள். திமிர் பிடிச்ச பொண்ணு மேடம். ஒரு வருஷம் வீணாகட்டும். அப்பவாவது புத்தி வருதான்னு பார்க்கலாம். அதோட இவளெல்லாம் படிச்சு என்ன செய்யப் போறாள்? அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டு புள்ளைகளாப் பெத்துப்போட்டு ஜனத்தொகைய உயர்த்துவா; அவ்வளவு தான்!'' என்று பொரிந்து தள்ளினாள் காயத்ரி.

""அப்படியெல்லாம் யாரையும் குறைச்சு மதிப்பிட வேணாம் மேடம். அதோட படிச்சு முடிச்சிட்டு அவள் என்ன வேணா பண்ணீட்டுப் போகட்டும்; அதைப்பத்தி நமக்கென்ன? பாவம் கோடீஸ்வரியோட அம்மா காலையில தான் இறந்துட்டாங்களாம். அதான் காலையில வரமுடியலைன்னு சொல்றாங்க!'' என்று பொறுமையாக பேசினாள் பியூலாராணி.

""பொய் சொல்றா மேடம்; இவள் பள்ளிக்கூடத்துக்கு வர்றதே அபூர்வம். இந்த வருஷம் முழுக்க எப்பவாவது தான் ஸ்கூலுக்கு வந்துருக்காள்; இலவச லேப்டாப்பும் சைக்கிளும் வாங்க ஸ்கூல்ல சேர்ந்துருக்க கேட்டகிரி இவள்.''என்ற காயத்ரியிடம், ""கோடீஸ்வரியோட அம்மா சுகவீனமா படுத்த படுக்கையா இருந்திருக்காங்க. அவங்களப் பார்த்துக் கிட்டதும் கோடீஸ்வரிங்கிறதால, அவளால ஒழுங்க பள்ளிக்கு வரமுடியலையாம். சில விஷயங்கள நாம கரிசனத்தோட தான் பார்க்கணும்'' என்றாள் பியூலாராணி.

அப்புறம் காயத்ரி குனிந்து பியூலா ராணியின் காதுக்கருகில் போய் குரலைத் தாழ்த்திக் கொண்டு , ""போன வருஷம் நம்ம ஸ்கூல் பேரு பொதுவெளியில அசிங்கப்பட்டுச்சே ஞாபகம் இல்லைங்களா மேடம்? அதுக்கான காரணகர்த்தா இவள் தான். இவளைப் பழிவாங்க கடவுளா கொடுத்திருக்கிற ஒரு வாய்ப்பு. அதைத் தவறவிடக் கூடாது மேடம்..''என்றாள்.

சென்ற வருஷம் நடந்த சம்பவம் பியூலாராணிக்கு இலேசாக ஞாபகத்துக்கு வந்தது.

பள்ளிக் கழிவறைகளை சுத்தப்படுத்த சில நாள்களாக ஆள்கள் வராமல் இருந்த ஒரு சமயத்தில் காயத்ரி தான் ப்ளஸ் ஒன்னில் சேர்ந்திருந்த சில பெண்களை அழைத்து குரூப்புகளாகப் பிரித்து வாரம் ஒரு குரூப் கழிவறைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டாள்.

அதன்படி அன்றைக்கு கோடீஸ்வரியும் இன்னொரு பெண்ணும் கழிவறையை சுத்தும் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கோடீஸ்வரியுடைய மாமா அவளை ஸ்கூலிலிருந்து அழைத்துப் போக வந்திருக்கிறார். பள்ளி முடிந்து கொஞ்ச நேரமாகியும் கோடீஸ்வரி வெளியே வரவில்லை என்றதும் உள்ளே போய் விசாரித்திருக்கிறார்.

அவளுடன் படித்த பெண்கள் கோடீஸ்வரி டாய்லெட் கிளீன் பண்ணிக் கொண்டிருப்பதாக சொல்ல, அவருக்குக் கோபம் வந்து கழிவறைக்கே போய் ஸ்கூல் யூனிஃபார்ம் அணிந்த இரண்டு பெண்கள் கழிவறையை சுத்தம் பண்ணிக் கொண்டிருப்பதை செல்போனில் படம் பிடித்து அதை சமூகவலை தளத்தில் பதிவிட்டு விட்டார்.

அது பற்றிக் கொண்டு எரிந்து, தொலைக்காட்சிகளில் செய்தியாகி, பள்ளியின் பெயர் ஒரே வாரத்தில் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி, கடைசியில் கழிவறையை சுத்தப்படுத்தச் சொன்னதற்காக தலைமை ஆசிரியை வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதில் காயத்ரி எந்த காயமும் இன்றி தப்பித்து விட்டார்.

பியூலாராணியும் குரலைத் தாழ்த்திக் கொண்டு, காயத்ரியிடம், ""மேடம் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீது அக்கறையும் கொஞ்சம் கோபமும் இருக்கலாம். ஆனால் வன்மம் இருக்கவே கூடாது. கோடீஸ்வரியை பரீட்சை எழுத விடுங்க..''என்றாள்.

""உங்க அட்வைஸூக்கு நன்றி'' என்று கிண்டலாகச் சொன்ன காயத்ரி, ""பரீட்சை எல்லாம் முடிஞ்சு பேப்பர் எல்லாம் திருத்தி கட்டிப்போட்டாச்சு மேடம். இனிமே பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது. ஹெச்.எம்.கிட்டயும் போன் பன்ணி நடந்ததை சொல்லீட்டேன். அவரும் நான் செஞ்சது தான் சரின்னுட்டார்.'' என்றாள் தீர்மானம் தொனிக்கிற குரலில்.

""இன்னைக்கு நான் தான் இன்சார்ஜ். நான் சொல்றேன். கோடீஸ்வரியை பரீட்சை எழுத அனுமதியுங்கள்!'' என்று கோபமாய் சொன்ன பியூலாராணி எக்ஸ்டெர்னல் எக்ஸாமினராக வந்திருக்கும் ஆசிரியையிடம், ""டீச்சர், இதுல உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இருக்கா?'' என்றாள்.

""நிச்சயமா இல்லை மேடம்; அந்தப் பொண்ணு வந்து பரீட்சை எழுத அனுமதி கேட்டப்பவே நான் பரீட்சை எழுத விட்டுறலாம்; ஒரு ஏழைப் பொண்ணோட பாவத்தை நாம ஏன் வாங்கிக்கனும்னு தான் சொன்னேன். ஆனால் காயத்ரி மிஸ் தான் முடியவே முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க!''என்றாள்.

""இப்பவும் சொல்றேன். என்னால அவள பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது. நீங்க தமிழ் டீச்சர்; அறிவியல் அதுவும் பிராக்டிகள் சம்பந்தமாக உங்களுக்கு எதுவும் தெரியாது. அதனால பேசாமல் போயிடுங்க!'' என்றாள் காயத்ரியும் அழுத்தமான பிடிவாதத்துடன்.

""நான் சொல்றதை நீங்க கேட்கலைன்னா உங்களுக்கு நான் இப்பவே மெமோ குடுக்க வேண்டி இருக்கும். அதுல ரெண்டு விஷயம் குறிப்பிடுவேன். பரீட்சை இருக்கும்போதே நீங்க காலையில எந்தத் தகவலும் சொல்லாம பள்ளிக்கு வராமல் இருந்தது; இன்னொன்னு நான் சொல்வதை மதிக்காதது. நீங்க கோடீஸ்வரியை பரீட்சை எழுத அனுமதிக்காட்டாலும் நான் வள்ளி மூலமா பரீட்சை நடத்துவேன்; உங்களால ஆனதைப் பார்த்துக்குங்க.'' என்று உறுதியாகச் சொன்ன பியூலாராணி கோடீஸ்வரியை பரீட்சை எழுத வரச் சொன்னாள்.

காயத்ரி சட்டென்று இறங்கி வந்து, ""நீங்க சொன்னா சரிதான் மேடம். முருகேஸ்வரி பரீட்சை எழுதுவதில் எனக்கும் சம்மதமே'' என்றாள் கனிந்த குரலில்!

மாதங்கள் கடந்து, தேர்வு முடிவுகளும் வெளியானது. அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகளில் கோடீஸ்வரி பள்ளியில் முதல் மதிப்பெண்களைப் பெற்றார். இதோடு, நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேரவும் இடம் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com