ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க...!

என் வீட்டைச் சுற்றி பல குடித்தனங்கள் உள்ளன. பலரும் இருமல், தும்மல், சளியை தொண்டையிலிருந்து வெளியேற்றி கமறிக் கமறித் துப்புவதைப்  பார்க்கவே  பயமாக இருக்கிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க...!


என் வீட்டைச் சுற்றி பல குடித்தனங்கள் உள்ளன. பலரும் இருமல், தும்மல், சளியை தொண்டையிலிருந்து வெளியேற்றி கமறிக் கமறித் துப்புவதைப்  பார்க்கவே  பயமாக இருக்கிறது.  எங்கே என்னுடைய பத்து வயது மற்றும் ஏழு வயது பிள்ளைகளுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.  அவர்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வழி என்ன? அவர்கள் இனிப்பான மருந்தாக இருந்தால் மட்டுமே விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆயுர்வேதத்தில் அப்படிப்பட்ட மருந்துகள் இருக்கின்றனவா?

 ராஜலட்சுமி, ஆவடி,
சென்னை.

சிறு பிள்ளைகளிடம் "முக கவசம் அணிந்து விளையாடு', "மற்றவர்கள் அருகில் செல்லாதே' என்று கூறுவதெல்லாம் நடக்காத காரியமாகும்.  நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதே ஒரே வழியாகும்.  சியவனப்பிராசம் எனும் இனிப்பான லேகிய மருந்தை காலையில்  வெறும் வயிற்றில் சுமார் ஐந்து கிராம் அளவில் கொடுத்து நக்கிச் சாப்பிடச் சொல்லவும்.  அதன் மேல் சிறிது (சுமார் நூறு மில்லி லிட்டர்) சூடான பால் அருந்தக் கொடுக்கலாம்.  இந்த மருந்தில்  அடங்கியுள்ள நெல்லிக்காய் மற்றும் பிற மருந்துகளால், குடலிலுள்ள செரிமான திரவங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு உண்ணும் உணவின் சாராம்சத்தை, தாதுக்களில் நன்கு பரவி, அங்குள்ள தாது அக்னிகளின் வழியாகச் செரிக்கச் செய்து,  உடல் ஊட்டத்தை வளர்க்கச் செய்கிறது.  இந்த ஊட்டக் குறைவு ஏற்படும் பிள்ளைகளுக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும்.  அது போன்ற ஒரு நிலையை இந்த லேகிய மருந்தானது தடுத்துவிடுகிறது.

வாஸாரிஷ்டம் எனும் ஓர் இனிப்பான மருந்து, சளி, இருமல், தும்மல், தொண்டைக்கட்டு போன்ற உபாதைகளை பிள்ளைகளுக்கு ஏற்படாமல் தடுக்கிறது.  பத்து வயது பிள்ளைக்கு பதினைந்து மில்லி லிட்டர், ஏழு வயது பிள்ளைக்கு பத்து மில்லி லிட்டர் வரையிலும் காலை, இரவு உணவுக்குப் பிறகு  கொடுக்கலாம்.

தாளீசபத்ராதி எனும் இனிப்பான சூரண மருந்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். காற்றின் மூலமாக  பரவக் கூடிய வைரஸ் தொற்றை ஏற்படாமல்  தடுக்கச் செய்யும். சுமார் மூன்று கிராம் அளவில் எடுத்து ஆறு மில்லி லிட்டர் தேன் குழைத்து வைத்துவிட்டால் போதும். நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.  அதன் இனிப்புச் சுவையில் விருப்பம் கொள்ளும் குழந்தைகளே அதை எடுத்து சாப்பிட்டுவிடுவார்கள். இதைச் சாப்பிட நேரம், காலம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. 

எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அஸனவில்வாதி எனும் மூலிகைத் தைலத்தை, இளஞ்சூடாக பிள்ளைகளுக்குத் தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, வாரமிருமுறையாவது குளிக்கச் செய்வதால்,  நோய் எதிர்ப்பு சக்தியானது  நன்கு வளரும்.

சிறுவயது முதலே, பிள்ளைகள் யோகாசனப் பயிற்சிகளை ஆசான் மூலம் கற்றறிதல் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆசனங்களைக் கற்றறிந்த பிறகு செய்யப்படும் பிராணாயாமப் பயிற்சியானது பிராண வாயு மற்றும் நுரையீரலை நன்கு வளர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை அதிகம் சேர்க்காமல், காலை உணவாக சூடான பருப்பு நெய் சேர்த்த  அன்னத்துடன், மிளகு, சீரகம் சேர்த்த ரசம் சாதம் கொடுப்பதும், உணவிற்குப் பிறகு, சிறிது குளிர்ந்த  நீரில் தேன் கலந்து சாப்பிடக் கொடுப்பது, பிள்ளைகளுக்கு நோய்த் தொற்றைத் தவிர்ப்பதற்கான ஓர் ஏற்பாடாகும். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com