'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 75

அங்கே இருந்தவர் வேறு யாருமல்ல, "விடுதலை' ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணிதான்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 75
Published on
Updated on
5 min read

அங்கே இருந்தவர் வேறு யாருமல்ல, "விடுதலை' ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணிதான். அதற்கு முன்பு அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன், எழுத்தைப் படித்திருக்கிறேனே தவிர, நேருக்கு நேர் அருகில் பார்த்ததில்லை.

ம. நடராஜன் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தியபோது, "சாவி' யில் இருந்தவர்தானே? என்று அவர் சட்டெனக் கேட்டது என்னை ஆச்சரியப்பட வைத்தது. "சாவி' இதழில் நான் வேலை பார்த்தபோது, அவரைச் சந்தித்ததே இல்லை. அப்படி இருந்தும் அவர் என்னை அடையாளம் காண்கிறார் என்றால், எந்த அளவுக்கு அவர் எல்லோர் குறித்தும், எல்லா நிகழ்வுகள் குறித்தும் புரிதலுடன் இருக்கிறார் என்பது தெரிந்தது. தலைவர்களிடம் மட்டுமே காணப்படும் குணாதிசயம் அது.

உத்தர பிரதேச மாநிலத்தில் குடிமைப்பணி அதிகாரிகளாக இருந்து பணி ஓய்வுபெற்ற மூன்று நான்கு தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் "விடுதலை' ஆசிரியர் கி. வீரமணியுடன் இருந்தனர். சில உத்தர பிரதேச அரசியல்வாதிகளும். நான் ஓர் ஓரமாக சென்று அமர்ந்துவிட்டேன். "விடுதலை' ஆசிரியர் வீரமணியும், ம. நடராஜனும்தான் தீவிரமான ஆலோசனையிலும் விவாதத்திலும் இருந்தனர். என்னை அவர்கள் வெளியே போகச் சொல்லாததிலிருந்து, அவர்கள் பேசுவதை நான் கேட்டால் தவறில்லை என்று கருதுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னைப் பற்றி ம. நடராஜன் என்ன சொல்லியிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.

வி.பி. சிங்கின் ஜனதா தளம், முலாயம் சிங்யாதவின் சமாஜவாதி கட்சி, கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி மூன்றையும் ஓரணியில் இணைப்பது என்பதுதான் "விடுதலை' ஆசிரியர் கி. வீரமணியின் திட்டமாக இருந்தது. அதற்காகத்தான் அவர் தில்லியில் தங்கி இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது முன்மொழியப்படும் சமூக நீதிக் கூட்டணிக்கான முதல் முயற்சி 1993-இல் தி.க. தலைவர் வீரமணியால் முன்னெடுக்கப்பட்டது என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

வி.பி. சிங், கன்ஷிராம் இருவருமே "விடுதலை' ஆசிரியர் வீரமணியிடம் அதீத மரியாதை வைத்திருந்தனர். கன்ஷிராம் அவரை ராஜகுருவாகவே கருதினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவரை வடநாட்டு தலித் அமைப்புகள் பெரியாரை அங்கீகரித்ததில்லை. அவர் குறித்துப் பரவலாக தெரியாது. "விடுதலை' ஆசிரியர் வீரமணியுடனான உறவின் காரணமாகத்தான், அம்பேத்கருக்கு நிகரான முக்கியத்துவத்தைப் பெரியார் ஈ.வெ.ராவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தரத் தொடங்கியது. இப்போது வரை அது தொடர்கிறது.

""பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளைத் தவிர, ஏனைய கட்சிகளை எல்லாம் ஓரணியில் திரட்டி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால்தான், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும். இல்லாவிட்டால், பாஜகவோ, காங்கிரúஸா ஏதாவது ஒரு கட்சியைத் தேர்தலுக்குப் பிறகு இழுத்துக் கொண்டு ஆட்சிஅமைத்துவிடும்''- இதுதான் "விடுதலை' ஆசிரியர் கி. வீரமணியின் கருத்து என்று ம. நடராஜன் என்னிடம் தெரிவித்தார்.

ஒருபுறம், "விடுதலை' ஆசிரியர் வீரமணி எல்லா கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்றால், இன்னொருபுறம் முலாயம் சிங், ஜனதா தளத்தைப் பலவீனப்படுத்துவதில் குறியாக இருந்தார். ஏற்கெனவே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து ஜனதா தளம் (அஜீத் சிங்) என்கிற பெயரில் இயங்கி வந்த அஜீத் சிங்கை சந்திக்கச் சென்றேன்.

""முலாயம் சிங்கை இவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர் எனது தந்தை சரண்சிங்கின் சீடர் என்பதால், ஆரம்பத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். காங்கிரஸின் வாக்கு வங்கியை ஏனைய கட்சிகள் பிரித்துக் கொண்டு விட்டதால், காங்கிரஸ் முலாயமுக்கு ஒரு பொருட்டே அல்ல. பாஜகதான் அவரது எதிரி. வி.பி. சிங், நான், கன்ஷிராம் போன்றோர் இருப்பது அவருக்கு இடைஞ்சலாகத் தெரிகிறது. தனது வாக்கு வங்கிக்குப் போட்டியாக இல்லாத கன்ஷிராமை வேண்டுமானால் அவர் ஏற்றுக்கொள்வார். எங்களைப் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்'' - இது அஜீத் சிங் என்னிடம் சொன்னது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தில்லியில் இருப்பது குறித்தும், அவர் உத்தர பிரதேசத்தில் சமூகநீதிக் கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிப்பது குறித்தும் அவரிடம் சொன்னேன்.

""அதில் இணைந்து கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், அவர்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஜாட்டுகளை முற்பட்ட இனத்தவரும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்த்துக் கொள்வதில்லை. கன்ஷிராம் கட்சியினருக்கும் நாங்கள் தீண்டத்தகாதவர்கள். குறிப்பாக, என்னை வி.பி. சிங்கும், முலாயம் சிங்கும் அகற்றி நிறுத்தி அழிக்கத்தான் விரும்புவார்கள். வேறு வழியில்லாவிட்டால், நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்...'' என்று சொன்னார் அஜீத் சிங்.

அமர் சிங் மூலம் இந்தத் தகவலை முலாயம் சிங்கிற்குத் தெரிவித்தேன். எனக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா? ""அஜீத் சிங், அவரையும் அவரது கட்சியையும் பற்றிக் கவலைப்படட்டும். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்!''

1991-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 46 இடங்களிலும், ஜனதா தளம் 92 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. ஜனதா தளத்திலிருந்து பிரிந்து, சந்திரசேகரின் சமாஜவாதி ஜனதா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 34 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 12 இடங்களிலும் வென்றிருந்தன.

முலாயம் சிங் மீண்டும் இணைந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகமும், சிறுபான்மை சமூகமும் முழு ஆதரவைத் தரக்கூடும் என்பது வி.பி. சிங்கின் 1993 தேர்தல் எதிர்பார்ப்பு. பலவீனமாகிவிட்ட காங்கிரஸ் வாக்குகளும் தங்களுக்குக் கிடைத்தால் 200 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கலாம் என்று அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள முலாயம் சிங் தயாராக இல்லை.

முலாயம் சிங், வி.பி. சிங்கை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றால், கன்ஷிராமும் வி.பி. சிங்கை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தனது முயற்சிகள் ஆடு, புலி, புல்லுக்கட்டு பிரச்னையாக இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, தி.க. தலைவர் வீரமணி தனது அடுத்தகட்ட முயற்சியில் இறங்கினார் என்று தோன்றுகிறது. அப்போது அவர் வகுத்த வியூகங்கள் என்னென்ன என்பதெல்லாம் குறித்து "விடுதலை' ஆசிரியர்தான் விளக்க வேண்டும். எனக்குத் தெரியாது.

""வி.பி. சிங்குடன் இணையாமல் இருப்பதற்கு முலாயம் சிங்கிற்கு ஒரு காரணம் உண்டு. சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவாளர்கள் ஓரணியில் திரள்கிறார்கள் என்கிற சந்தேகம் ஏற்பட்டால், ஹிந்துக்கள் ஓரணியில் பாஜக பின்னால் அணி திரண்டு விடுவார்கள். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பு தனக்குத்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினால், பாஜகவைத் தோற்கடிப்பதற்காக முஸ்லிம்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போட்டுக் காயை நகர்த்துகிறார் முலாயம்'' என்று எனக்குப் பொறுமையாக விளக்கினார் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்ஜியின் உதவியாளர் யாதவ். அதுதான் நடந்தது.

இன்னொரு பக்கம், "விடுதலை' ஆசிரியர் வீரமணி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமின் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்துதான் தேர்தல் வியூகங்களை வகுத்தனர் என்றுகூட நான் நினைக்கிறேன். அந்த சந்திப்புகளில் ம. நடராஜனுக்குப் பங்கு இருந்ததாகத் தெரியவில்லை.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமைப் பற்றிக் கூறும்போது அம்பேத்ராஜனைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. கன்ஷிராமின் நிழல் என்றேகூட அவரைச் சொல்லலாம். கன்ஷிராமுக்கும் திராவிட கழகத் தலைவர்
கி. வீரமணிக்கும் இடையே பாலமாகவும், அவர்களது கருத்துப் பரிமாற்றங்களுக்குத் துணையாகவும் அந்தக் காலகட்டத்தில் இருந்தவர் அம்பேத்ராஜன்தான்.

கன்ஷிராம் உடல் நலமில்லாமல் சிகிச்சைக்கு சென்னைக்கு வந்தபோது, தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அம்பேத்ராஜனைத் தன்னருகில் வைத்துக் கொண்டார். கன்ஷிராமின் கடைசிக் காலம் வரை அவரைவிட்டுப் பிரியாமல் இருந்த அம்பேத்ராஜன், அவரது மறைவுக்குப் பிறகு "பெஹன்ஜி' என்று அழைக்கப்படும் மாயாவதிக்கும் உதவியாளராகவும், தனிச்செயலாளராகவும், கட்சியின் செயலாளராகவும் தொடர்ந்தார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த அம்பேத்ராஜன், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆரம்பம் முதல் அதன் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரியும். மாயாவதி அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது, அந்தக் கட்சியில் பலருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி. தமிழர் ஒருவர் உத்தர பிரதேச அரசியலில் முதன்மை பெறுவதும், மாயாவதியின் நம்பிக்கைக்குரியவராகத் தொடர்வதும் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியதில் வியப்பென்ன இருக்கிறது?

இப்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இல்லை என்பது மாயாவதியின் துரதிருஷ்டம். கட்சியில் இருந்த அவரது வடநாட்டு எதிரிகள் வெற்றியடைந்தனர்.

அது இருக்கட்டும். கூட்டணி முடிவுக்கு "விடுதலை' ஆசிரியரும், கன்ஷிராமும் முன்னெடுத்த முயற்சி காரணமா, இல்லை முலாயம் சிங் யாதவின் ராஜதந்திரக் கணக்கு காரணமா என்பது குறித்த விவாதம் தேவையற்றது. சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைப்பது என்று முடிவெடுத்தபோதே, 1993 உத்தர பிரதேசத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

முலாயம் சிங் யாதவின் பின்னால் ஏறத்தாழ ஒரு கோடி யாதவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கையில் அணி திரண்டனர். அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்களான ஒன்றரைகோடி தலித்துகளும் இணைகிறார்கள் எனும்போது, சிறுபான்மை முஸ்லிம்களின் 80% வாக்குகள் அந்தக் கூட்டணிக்கு உறுதியானது.

தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததுபோல அமையவில்லை. 422 உறுப்பினர்கள் கொண்ட அவையில் பாஜக 177 இடங்களை வென்றிருந்தது. தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. 109 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், 67 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றி பெற்று, அந்தக் கூட்டணி 176 இடங்களுடன் பாஜகவுக்கு அடுத்தபடியாக வந்திருந்தது. 28 இடங்களுடன் காங்கிரஸூம், 27 இடங்களுடன் ஜனதா தளமும் வேறு வழியில்லாமல் முலாயம் சிங்கின் கூட்டணியை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.

கூட்டணியை ஏற்படுத்திக் கொடுத்ததில் "விடுதலை' ஆசிரியரின் பங்கு கணிசமானது. அதேபோல, பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தியதில் ஜெயலலிதாவின் பங்கு இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஏனைய அரசியல் கட்சிகளைப்போல அல்லாமல், தேர்தலை எதிர்கொள்ளும் பணபலம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எப்படி வந்தது என்கிற கேள்விக்கு ஒருவேளை அம்பேத்ராஜன் விடை தருவாரோ என்னவோ தெரியாது. 1993 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பல வடநாட்டு மாநிலக் கட்சித் தலைவர்கள் ம. நடராஜனின் நட்பை நாடினார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அந்தத் தேர்தல் முடிவுகள் வி.பி. சிங்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்றுதான் கூற வேண்டும். அதேபோல, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் விரும்பியது போலவே, காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரியின் அரசியல் வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.

1993-இல் தொடங்கி இன்றுவரை உத்தர பிரதேச அரசியல் பாஜக - சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கிடையேயான ஆட்சி அதிகாரப் போட்டியாகத்தான் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதன் பின்னால் தமிழ்நாட்டின் பங்கு இருக்கிறது என்பதை எல்லோருமே மறந்துவிட்டார்கள்.

நான் முன்பே சொன்னதுபோல, 1993 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் பங்கு தேசிய அளவில் கவனம் பெறவில்லை. தமிழ்நாட்டில் அது உணரப்படவில்லை. "விடுதலை' ஆசிரியர் கி. வீரமணியும், கன்ஷிராமின் உதவியாளராக இருந்த அம்பேத்ராஜனும், அந்த நாள் ஞாபகமாகப் பகிர்ந்துக் கொள்ள பல செய்திகள் உண்டு என்பது மட்டும் உறுதி.

(தொடரும்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com