வண்ணங்கள்

மேம்பாலத்தைப் பேருந்து கடக்கையில் நெரிசல் தாளாது சில நிமிடங்கள் நின்று போயிற்று.
வண்ணங்கள்

மேம்பாலத்தைப் பேருந்து கடக்கையில் நெரிசல் தாளாது சில நிமிடங்கள் நின்று போயிற்று. அங்கிருந்து கீழே பார்க்க நெடுஞ்சாலையில் பேருந்துகளும், சீருந்துகளும், இரு சக்கர வாகனங்களும் அடர்ந்து நகர இயலாது தவித்துக் கொண்டிருந்தன. தினமும் பார்க்கும் காட்சிதான் என்றாலும், இன்று என்னவோ நெரிசல் அதிகமாய்த் தோன்றியது. இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு நகரத்துக்கு வந்த நாள்கள் நினைவிலாடிற்று. இந்த இடத்தில் வீடு வாங்கிக் குடி வந்த போது உறவுகளெல்லாம் கேட்ட முதல் கேள்வி....
""என்ன இம்புட்டு தொலைவா இருக்கு ? ஜனநடமாட்டமே இல்ல...'' என்பதுதான். ஆனால் அப்போது இருந்த வசதிக்கும் வாய்ப்புக்கும் இங்குதான் வாங்க முடிந்தது. ஆனால் இன்று நகரம், நீண்டு அகன்று, வளர்ந்து விட்டது. அதற்குள் இந்த இடமும் அடங்கிப் போய்... நினைவுகளைக் கலைத்தது மனைவியின் குரல்...
"" ம்... சொல்லு ....'' என்றேன்.
"" எங்க இருக்கீங்க?'' அடிக்கடி கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
"" மேம்பாலத்துக்கு மேல... நெரிசல் அதிகமாயிட்டது. வந்துருவேன்...''
"" பொண்ணும், மருமகனும் வந்திருக்காங்க... ஏதாவது இனிப்பு வாங்கிட்டு வாங்க ''
மனம் பிரகாசமாயிற்று. மகளைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கும்.
வீட்டுக்குள் நுழைகையில் சிரிப்பொலி மனதைக் கவ்விற்று.
"" அப்பா...'' என்ற சொல்லின் குழைவும், இழைவும் அவளின் மகிழ்ச்சியைக் காட்டிற்று.
"" எப்ப தங்கம் வந்த ...'' என்றேன்.
""மதியமே வந்துட்டேன் பா...'' என்றாள் என் உணவுப் பையை வாங்கியபடி. மாப்பிள்ளை அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, மீண்டும் சிரிப்பில் அமிழ்ந்தது வீடு.
"" ஒரு கல்யாணப் பத்திரிகை கொண்டாந்தாங்க... ஊர்ல இருந்து... அந்தட்ட பாருங்க டி.வி. பக்கத்துல இருக்கு''
யார் நேரில் வந்திருப்பார்கள்? கிட்டத்தட்ட முந்நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து...
"" யாரும்மா ...'' என்றபடி டி.வி.யை நோக்கி நகர்ந்தேன்.
"" யாரோ செல்வியாம்... அவுக புள்ளைக்குக் கல்யாணமாம்...''
"" நம்ம ஊர்ல இருந்தா வந்தாங்க ?'' என்றேன்.
"" சரியா சொல்லல யே... ''
"" ஏதாவது சாப்பிடக் கொடுத்தியா ...?''
"" ம்... காபி மட்டும்தான் குடிச்சாக... உக்காந்து பேசக் கூட நேரமில்லை... ஓடனே போயிட்டாக... ''
"" உங்க நெம்பர் வாங்கிட்டுப் போனாக... பேசறாங்கலாம்...''
சில சொற்களில் செல்வியைக் கடந்து விட அவளால் முடிந்தது. என்னால் தொடர்ந்த நிமிடங்களை எளிதாய் கடந்து போக முடியவில்லை. விரல் நடுங்க அழைப்பிதழை எடுத்துப் பார்த்தேன். செல்வியின் பெயரைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.
"" ஏங்க... உங்க போன் அடிக்குதில்ல...''
புதிய எண்ணாக இருந்தது. செல்வியாக இருக்குமோ? பேசலாமா ? வேண்டாமா ? என்ன பேசுவது ? இருந்து என்னைப் பார்த்து விட்டுப் போயிருக்கலாமில்லயா.... என்று சொல்லலாமா ! கூடாதா ! கேள்விகள் அடுக்கடுக்காய் விழ... பேசியின் அழைப்பு ஓய்ந்தது. மீண்டும் ஒலிப்பதற்குள் மனதுக்குள் நிறையப் பேசிப் பார்த்தேன்.
ஒரு தொலைபேசி அழைப்பு இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துமா ?
மீண்டும் ஒலித்தது.
"" ஹலோ'' என்றேன்.
"" நான் செல்வி... பேசறேங்க...''
சட்டென்று மனமும் உடலும் குளிர்ந்தது. திரும்பத் திரும்ப "" நல்லாருக்கியா'' என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் பேசாத எங்களின் உரையாடலில்...
"" கண்டிப்பா என் பொண்ணு கல்யாணத்துக்கு வரணும்'' என்ற செல்வியின் குரல் மட்டும்தான் எனக்குள் பதிந்தது. மீண்டும் அழைப்பிதழைப் பிரித்தேன். அதற்குள்ளிருந்த தாழம்பூவும் குங்குமமும் கலந்த மணம் காற்றில் நிறைந்தது. அழைப்பிதழோடு மனமும் பின்னோக்கிப் பறந்து விரிந்தது.
ஊரில் குல தெய்வத்துக்கு பண்டிகைக்காக பூச்சாட்டியிருந்தார்கள். குல தெய்வம் சக்தி மிக்கது என்பது நம்பிக்கை.
"" ஏலே எந்திருப்பா.... கோயிலுக்கு போய் நீர் ஊத்தணூமில்ல... அப்பறம் காலேஜுக்கு நேரத்துக்கு போவ முடியாதப்பா...''
அம்மாவின் குரல் எழுப்பிற்று. பெண்கள் எவரும் கோயிலுக்குள் செல்வதில்லை. தெய்வம் அதை ஏற்பதில்லை என்பதும் நம்பிக்கை.
பண்டிகைக்கு கம்பம் நட்ட பின் ஆண்கள் மட்டுமே பதின்மூன்று நாள்களுக்கு கோயிலுக்குச் சென்று
தண்ணீர் ஊற்ற வேண்டும். நீர் ஊற்றி வெளியே வந்து வரிசையாக நாங்கள் நிற்க, எங்கள் கால்களுக்கு பிறர் நீர் ஊற்றி வணங்குவது ஊர் வழக்கம். நம்பிக்கை. குல தெய்வத்துக்கு உருவமில்லை. கூரையில்லை. நூறு வருடம் கடந்த வேப்ப மரமும் அதன் கீழ் நடப்பட்ட வேல் கம்பும் மட்டுமே இருந்தன. தோளில் இருந்த குடத்து நீர் முழுவதையும் வேல்கம்பின் மேல் சாய்க்க... நீர் முழுவதும்
மரத்தடி வேருக்குள் சென்று பரவிற்று. கை கூப்பி கண் மூடி வணங்கினேன்.
வெளியே வந்து நிற்க, ஊர் பெண்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் செல்வியும் இருந்தாள். இளம் நீலத்தில் தாவணியும் அடர் மஞ்சளில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். வேறு வண்ணங்களே அவளிடம் கிடையாதா... அல்லது எப்போதும்
இதையே போட்டுக் கொள்கிறாளே... நான் பார்க்கும் போதெல்லாம் இதே வண்ணத்தில்... சிட்டுக்குருவி மாதிரி சுறுசுறுப்புடன்...
சற்றே நீண்ட முகமும், அளவாய் வளைந்த புருவங்களும், வண்ணமடித்தாற் போல உதடுகளும், சிரிக்கையில் தூக்கலாய்த் தெரியும் முன்னிரண்டு பற்களும்... " சட்' டென்று தலையைச் சிலுப்பிக் கொண்டேன்.
குடத்துத் தண்ணீரை வரிசையாய் ஒவ்வொருவரின் கால்களிலும் பெண்கள் ஊற்றிவிட்டுப் போக... நான் கடைசியாய் நின்று கொண்டிருந்தேன். எல்லாரும் தண்ணீரை மட்டும் ஊற்றி விட்டுப் போக செல்வியின் முறை வந்த போது, தண்ணீரை ஊற்றி விட்டு... நான் எதிர்பாராத ஒரு நொடியில், நறுக்கென்று கை விரல்களில் ஒளித்து வைத்திருந்த வேலி முள்ளால் என் கால்களைக் குத்தி விட்டு அவள் சிரிக்க... வலி தாங்காது "ஆய்...' என்ற என் அலறலில் செல்வியின் சிரிப்பு மாறிற்று. எல்லாமும் மாறிற்று. எல்லாருக்கும் தெரிந்து போயிற்று. நான் வீடு வருவதற்குள் அம்மாவுக்கு செய்தி வந்து சேர்ந்திருந்தது.
நொடிகள் வலி தாங்காமல் போனதில் எல்லாம் தலை கீழாய் போனதை உணர்ந்து கலவரமாகிப் போனேன்.
செல்வி காலில் குத்தியதை அம்மா ஏதேதோ பேசி மனதில் குத்தினாள். என்னோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
செல்வியின் வீட்டுத் திண்ணையில் விளக்குமாற்றை எறிந்து விட்டு... கண்டபடி திட்டினாள்.
அதற்கு மேல் செல்வியின் அம்மாவைப் பார்த்து அம்மா பேசியவை வார்த்தைகளே இல்லை. இரண்டு நாள்கள் உள் பக்கம் பூட்டியிருந்த செல்வியின் வீட்டில் அதன் பின்னர் வெளிப்பக்கம் நிரந்தரமாகப் பூட்டு தொங்கிற்று. வலியை உடலிலும், முள்ளை மனதிலும் விட்டு விட்டுப் போன செல்வியை அதன் பின்னர் நான் பார்க்கவே இல்லை.
சில ஆண்டுகள் கழித்து " யாரென்று கண்டுபிடி... பார்க்கலாம்...' என்று பொங்கல் வாழ்த்து அஞ்சலில் வந்தது. எழுத்துகளின் மேல் புள்ளியை உருண்டை உருண்டையாய் வைத்து எழுத செல்வியைத் தவிர யாரால் முடியும்? வயிறு குழைந்து கண் கலங்கிற்று. தெரிந்த ஒரே வழியில், தபால் தலை முத்திரையில், ஊரைத் தேடி கண்டுபிடிக்க முயற்சிக்க... முத்திரை தெளிவாக இல்லையா... கண் கலங்கி... நீர்த் திரையில் தெளிவாகத் தெரியவில்லையா?
இத்தனை வயதில் கண்கலங்கித் திரையாய்க் கண்ணீர் படிவது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. இரவு இரக்கமும் உறக்கமும் அற்று நீண்டு கொண்டிருந்தது. மணி எப்படியும் இரண்டுக்கு மேல் இருக்கும்.
கொஞ்ச நேரம் மொட்டை மாடியில் நட்சத்திரங்களை எண்ணியபடி நடந்து கொண்டிருந்தேன். முடியவில்லை. கீழே வந்த போது எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்
தார்கள். இரவு விளக்கின் ஒளியில் தொங்கிக் கொண்டிருந்த மாதக் காலண்டரில் அந்தக் கல்யாண தேதியில் பெருக்கல் குறியிட்டேன்.
பெருக்கல் குறியிட்ட அந்த நாள் காலையில், எதிர்பார்த்த மாதிரியே.... "" யாருங்க அவுங்க... நம்ம ஒறவுக்காரக மாதிரி தெரியலேயே... கல்யாணத்துக்கு போயே ஆகணுமா ?''
டீயை வடிகட்டிக் கொண்டே மனைவி கேட்ட போது, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வார்த்தைகளைத் தேடினேன்.
""நமக்கு தூரத்து உறவும்மா... நான் காலேஜ் படிக்கையில் நம்ம ஊர்ல இருந்தாங்க...''
ஒவ்வொரு வார்த்தையாய் தேடித் தேடிச் சொன்னேன்.
"" நான் ராத்திரி ரிசப்ஷனுக்கு போயிட்டு காலைல வந்துடறேன். மதியம் ரெண்டரை மணிக்கு ஒரு ரயில் இருக்கு...''
என்ன வண்ணத்தில் உடை அணிந்து கொள்வது என்று தேடினேன். மென்மையான நீல வண்ணத்தில் மேற் சட்டையையும், சந்தனமும், அடர் மஞ்சளும் குழைத்த வண்ணத்தில் கால் சட்டையையும் எடுத்து வைத்தேன். ரயிலை விட்டு இறங்கும் போது உடை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வழக்கமாய் பயணத்தில் உட்கார்ந்த அரை மணியில் தலை சாய்த்து விடும் எனக்கு இன்றைக்கு துளியும் உறக்கமில்லை. வெயிலில் விழுந்து புரண்டு கதறியபடி ரயில் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. அதை விட வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது மனம்.
மண்டபத்தை நெருங்குகையில் இரவு ஏழரைக்கு மேல் இருக்கும். பதற்றமாயிருந்தது. திரும்பப் போய் விடலாமா என்று தோன்றிற்று. என்ன பேசுவது... செல்வியிடம் ஏதாவது கட்டுபாடில்லாமல் பேசி விடுவேனோ?
மண்டபத்தில் வரவேற்கும் இடத்தை நெருங்குகையில் பதட்டம் கூடிற்று. சிலர் நின்று கொண்டிருக்க... அவர்களில் யாரையும் எனக்கும், எனக்கு அவர்களையும் தெரியவில்லை. ஒலிப்பெட்டியில் புல்லாங்குழல் கசிந்து கொண்டிருந்தது. அவ்வளவு கூட்டத்தில் பொருத்தமற்றுத் தணித்திருப்பதாய் உணர்ந்து... கிடைத்த இடத்தில் அமர்ந்தேன். யாரோ வந்து...
""சாப்பிட்டுட்டு வந்துறலாம்... வாங்க...'' என்றழைக்க ,
""இல்லிங்க... கொஞ்சம் நேரம் ஆகட்டும்...''
கண் மூடி புல்லாங்குழலில் அமிழ்ந்தது. அது என்ன பாட்டு என்று கண்டு பிடிக்க
முயல்கையில் ...
"" எப்ப வந்தீங்க... ?''
இமைகள் கலைந்த நொடியில் செல்வி நின்று கொண்டிருந்ததை உணர்ந்தேன். வெளிர் ரோஜா வண்ணத்தில் புடவையும், அடர்த்தியான அதே வண்ணத்தில் பூக்களிறைத்த ரவிக்கையும் அணிந்திருந்தாள். நீள வாக்கில் வைத்திருந்த பொட்டும், சிரிக்கையில் தூக்கி நிற்கும் முன்னிரண்டு பற்களும்... கொஞ்சம் பெரிதாகியிருந்தாள். கழுத்தில் வட்டமாய் சுருண்டிருந்த தசை மடிப்பும்... ""தவறு'' என்று மனதுக்குள் சொல்லியபடி தலையை சிலுப்பிக் கொண்டேன்.
"" எப்ப வந்தீங்க...'' மறுபடியும் அதே கேள்வி.
"" இவரு என் வீட்டுக்காரர்... ''
அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தினாள். அவரும் அதே வண்ணத்தில் சட்டை அணிந்திருந்தார். இருவருக்கும் மிகப் பொருத்தமாய் இருந்தது.
"" சாயங்காலம் வர்ற ரயில்ல... வந்தேன்''
"" அடடா... ரொம்ப களைப்பா இருக்குமே...'' செல்வியை விட அவளின் கணவர் ரொம்ப இயல்பாகப் பேசினார். மண மேடையில் ஏதோ சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்க... வேடிக்கை விளையாட்டுகளில் பிள்ளைகள் உற்சாகமாய் இருந்தனர்.
"" இதுதான் என் பொண்ணு '' என்று மணப்பெண்ûணை அறிமுகப்படுத்தினாள் செல்வி.
"" இங்கேயே உட்காருங்க... ஏர்கூலர் இருக்கு...''
என்னை உட்கார வைத்து விட்டு அருகில் செல்வியின் கணவரும் செல்வியும் அமர்ந்து கொள்ள... சிரிப்பும், துள்ளலுமாய் பிள்ளைகள்
ஓடிக் கொண்டிருந்தன. எனக்கு முன்னிருக்கையில் மணப் பெண் அமர்ந்திருந்தது. யாரோ ஒரு பெண், மணப்பெண்ணின் தோழியாய் இருக்க வேண்டும்.
"" கேட்டியே.... இந்தா....'' என்று எதையோ கொடுக்க மணப்பெண் வாங்கிக் கொண்டு சிரித்தது. சற்று நேரத்தில் மாப்பிள்ளையும் வந்து உட்கார... இன்னும் குதூகலமாயிற்று சூழல்.
"" இன்னும் கொஞ்சம் நெருக்கமா உட்காருங்க... மாப்பிள்ளை... பரவால்ல....'' தொடர்ந்த சிரிப்பு.
பூக்கள் தொடுக்கப்பட்ட கயிற்றின் ஒரு முனையை மாப்பிள்ளையும், மறு முனையை மணப்பெண்ணும் பிடித்து இழுக்க, பெண்ணுக்கு ஆதரவாய் தோழிகளும், மாப்பிள்ளைக்கு ஆதரவாய் தோழர்களும் பிடித்து இழுக்க... உற்சாகம் கொப்பளித்தது, அந்தச் சூழலில்.
அதன் பின்னர் மாப்பிள்ளையை உட்கார வைத்து பூக்களை அவரின் பாதங்களில் மணப்பெண் தூவி ஏதோ சடங்கு செய்ய...
சட்டென்று "ஆய்' என்ற மாப்பிள்ளையின் அலறல் கேட்டது. மணப்பெண் கையிலிருந்த ஊசியைக் காட்டி சிரிக்க... தோழிகளும் சிரிக்க... மாப்பிள்ளை செல்லக் கோபம் காட்டி சிரிக்க... எல்லாரும் சிரிக்க...
கண்ணீர்த் துளிகள் திரண்டிருந்தன, எனக்கும் செல்விக்கும் மட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com