மீனாம்பாள் அத்தை

அன்பே உருவான மீனாம்பாள் அத்தை எங்களை விட்டுப் பிரிந்த பிறகு நாங்கள் முதல் முறையாக இப்பொழுதுதான் எங்கள் கிராமத்துக்குச் செல்கிறோம்..
மீனாம்பாள் அத்தை

அன்பே உருவான மீனாம்பாள் அத்தை எங்களை விட்டுப் பிரிந்த பிறகு நாங்கள் முதல் முறையாக இப்பொழுதுதான் எங்கள் கிராமத்துக்குச் செல்கிறோம்.. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்துக்குச் செல்கிறோம் என்ற நினைப்பே இறக்கை முளைத்தாற்போன்று புதிய உற்சாகத்தைக் கொடுத்தது.

ஆனால் ஒவ்வொரு முறை நாங்கள் கிராமத்தில் காலடி எடுத்து வைக்கும்பொழுதும், எங்களைக் காணாது கண்ட மாதிரி ஆசையுடன் வரவேற்கும்எங்கள் அத்தை இப்பொழுது இல்லை என்பதை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

தில்லியிலேயே பிறந்து வளர்ந்த நானும் எனது சகோதரியும் எங்களுக்கு திருமணமாகும் வரையில் பெற்றோருடன் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கிராமத்துக்குச் சென்று ஒரு சில நாள்களையாவது மீனாம்பாள்அத்தையுடன் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட எனது தந்தையை வளர்த்து ஆளாக்கியதெல்லாம் அவருடைய மூத்த சகோதரியான மீனாம்பாள் அத்தைதான். கருணையே உருவான அவரை இன்றைக்கு நினைத்தாலும் மனமெல்லாம் நிறைந்து போகிறது.

திருநெல்வேலி டவுனிலிருந்து குறுக்குத்துறைவழியாக தாமிரவருணி நதியைக் கடந்து சென்றால் அமைதியாக காட்சியளிக்கும், மேலநத்தம் எனும் பெயர் கொண்ட குக்கிராமம் தான் எங்கள் கிராமம். பாரதிராஜா படங்களில் வரும் கிராமங்களைப் போல் பச்சை பசேலென்று வயல்வெளியும், நீரூற்றுகளும், வண்ணப் பறவைகளும் நம்மை வரவேற்காவிட்டாலும், கிராமங்களுக்கே உரிய அழகும், அமைதியும், மேலநத்தமக்களின் உபசரிப்பும் நம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்று விடும்.

மேலநத்தம் ஒரு சில வீடுகளை மட்டுமே கொண்ட குக்கிராமம்தான் என்றாலும், அந்த வீடுகளில் குடியிருந்த அத்தனை குடும்பங்களும் பாசத்துடன் பிணைந்திருந்தன. இந்தக் கிராமத்தை ஒட்டினாற்போல் இருந்த சற்றே பெரிய ஊரான மேலப்பாளையத்தில் முகம்மதியர்கள் அதிகமாக வசித்து வந்தாலும் இரண்டு கிராம மக்களும் மத நல்லிணக்கத்துடனே வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பகுதியில் மதக் கலவரங்கள் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தன.

எனது தந்தை தனது இருபத்தைந்தாவது வயதிலேயே தொலைதூரத்தில் உள்ள தில்லிக்கு குடிபெயர்ந்து விட்டாலும், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய தனது சகோதரியை இரண்டாண்டுகளுக்கொரு முறையாவது கிராமத்துக்குச் சென்று நலம் விசாரித்து விட்டு வருவதை தனது தலையாய கடமையாகக் கருதினார். என் தந்தை உயிருடன் இருந்தவரையில் அதை நிறைவேற்றவும் செய்தார். தனது அக்காவுக்குதான் தான் கொள்ளி வைக்க வேண்டும், இறுதிச் சடங்கையெல்லாம் முறையாகச் செய்ய வேண்டும் என்ற அவரதுஎண்ணம் நிறைவேறுவதற்கு முன்பே அவர் முந்தி கொண்டு விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அறுபது வயதில் திடீரென்று என் தந்தை இறந்து விட்ட அதிர்ச்சியை எங்களாலேயே தாங்கிக் கொள்ள முடியாதபொழுது, எண்பது வயதான எங்கள் அத்தை இடிந்து போய்விட்டார். என் தந்தை இறந்த சோகத்திலிருந்து மீளாமலே எங்கள் அத்தையும் ஓர் ஆண்டுக்குள் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார். அந்தஅத்தையின் நினைவுகளை சுமந்து கொண்டுஅவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நானும் எனது சகோதரியும் இதோ அவர் வாழ்ந்த கிராமத்துக்குவந்துள்ளோம்.

மீனாம்பாள் அத்தையை என்றைக்குமேஇளமையாகப் பார்த்த ஞாபகம் எங்களுக்கு இல்லை. மீனாம்பாள் அத்தை ஒரு கன்னி விதவை. ஏழு வயதில் திருமணமாகி, பத்து வயதிலேயே தலையை மழித்து அந்தக் காலத்து வழக்கப்படி விதவைக் கோலம் பூண்டவர். வெள்ளைப் புடவையைத் தவிர வேறொன்றையும் அவர் உடுத்தி யாரும் பார்த்ததில்லை. வெள்ளை நிறத்தில் முரட்டு பருத்தியினால் நெய்யப்பட்ட ஒன்பது கஜம் புடவை மட்டுமே அவரது ஆடை. மூன்று புடவைகளும் ஒரு துண்டும் மட்டுமே அவரது பொக்கிஷம். அவருடைய மொத்த துணிமணியும் ஒரு மூங்கில் கூடையில் அடங்கிவிடும். மழிக்கப்பட்ட தனது தலையை மூடி மறைத்து, வெள்ளைப் புடவையால் தலையைச் சுற்றி முக்காடிட்டு, முந்தானையை மார்பின் குறுக்காக கொண்டு வந்து இடுப்பில் சொருகி இருப்பார். விதவைகள் ரவிக்கை அணியாத காலக்கட்டத்தில் வாழ்ந்த அவர் தன் உடலை மறைக்க செய்து கொண்ட கோலம் அது.

தனது தந்தையின் முதல் தாரத்து மனைவியின் மகனை, அதாவது எனது தந்தையை வளர்த்து ஆளாக்கியது போதாதென்று, சிறு வயதிலே இறந்து விட்ட தனது கடைசி தங்கையின் மூன்று குழந்தைகளையும் வளர்த்து, படிக்க வைத்து பெரியவர்களாக்கின பெருமையும் எங்கள் அத்தையையே சேரும்.

இத்தனைக்கும் எங்கள் அத்தையிடம் அதிக பண வசதியெல்லாம் கிடையாது. கணவர் விட்டுச் சென்ற கொஞ்சம் நிலமும், பிறந்த வீட்டுச் சொத்தாக வந்த ஒரு வீடுமே அவர் சொத்து. மஞ்சக் காணி சொத்தாக வந்த வீடு பங்களா வடிவில் அமைந்திருந்ததால் அந்த வீட்டுக்கு பங்களா என்று ஊர்க்காரர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள். மற்றபடி அந்த விடு இரண்டே அறைகள் கொண்ட குடில்.

தனது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், உறவினர், தெரிந்தவர், ஊர்க்காரர்கள் என்று மற்றவர்களுக்காகவே வாழ்ந்த ஓர் அதிசயப் பிறவி, எங்கள் அத்தை.

அந்தக் கிராமத்தில் மட்டுமல்லாது சுற்று வட்டாரக் கிராமங்களிலும், திருநெல்வேலி டவுனில்கூட, யார் வீட்டில் நல்லது, கெட்டது நடந்தாலும், முதல் அழைப்பு எங்கள் அத்தைக்குத்தான்.

சுமங்கலிப் பிரார்த்தனை, வளைகாப்பு, சீமந்தம், சமாராதனை. என்று எல்லா விசேஷங்களுக்கும் எங்கள் அத்தையின் உதவி தேவை. கல்யாணம், சீமந்தம் என்றால் முறுக்கு சுற்றுவதிலிருந்து, அப்பளம் இடுவது வரையில் எங்கள்அத்தையின் கையையே எதிர்பார்ப்பார்கள்.

யார் வீட்டு மகள் அல்லது மருமகளுக்கு பிரசவ வலி எடுத்தாலும், மருத்துவச்சியைக் கூப்பிடுகிறார்களோ இல்லையோஎங்கள் அத்தைக்கு அழைப்பு வந்து விடும்.

நாங்கள் விடுமுறையில் கிராமத்துக்குப் போகும்பொழுது, காலையில் அவர் எப்பொழுது எழுந்திருக்கிறார் என்று கூட எங்களுக்குத் தெரியாது. அவ்வளவு சுறுசுறுப்பு. இரண்டு குடங்களை எடுத்துக் கொண்டு, பொழுது விடிவதற்கு முன்பே ஆற்றங்கரைக்குப் போய் தன்னுடைய புடவையை துவைத்து குளித்துவிட்டு, குடங்களில் தண்ணீரை சுமந்தவாறு ஈரப்புடவையுடன் அவர் ஆற்றங்கரையிலிருந்து திரும்புகையில் சில சமயங்களில் நாங்கள் விழித்துக் கொண்டு விடுவதுண்டு. கொஞ்ச சாமான்களை வைத்து, அறுசுவை உணவு பத்து மணிக்குள் தயாராகி விடும்.

அப்படி ஒரு கைமணம். சமைத்து முடித்தவுடன், சுடச் சுட நொண்டி சங்கருக்கு சாப்பாடு "பேக்" ஆகிவிடும். ஆம் அந்தக் காலத்தில் கிராமத்தில் அவனை அப்படித்தான் அழைத்தார்கள். ஏதோ விபத்தில் ஒரு காலை இழந்த விட்ட சங்கர் ஆதரவற்று அநாதையாக
கிராமத்தில் ஒரு சிறு வீட்டில் வசித்து வந்தார். இளகிய மனசுள்ள எங்கள் அத்தை வேலை ஒன்று இல்லாமல் கிடந்த சங்கருக்கு தினமும் ஒரு வேளை சாப்பாடு கொடுப்பதை தனது கடமையாக நினைத்து செய்து கொண்டிருந்தார், கடவுளுக்கு நைவேத்தியம் செய்வது போல் சமைத்து முடித்த கையோடு "நொண்டி சங்கருக்கு" உணவளிப்பதை ஊரே அதிசயமாகப் பார்த்தது.

வீட்டில் அதிக மளிகை சாமானோ, பாத்திரம்பண்டங்களோ இல்லாமல் கண் மூடித் திறக்கும்நேரத்தில் உணவு தயார் செய்து திடீரென்று வீட்டுக்கு யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாத மனசைக் கொண்டிருந்தார் எங்கள் அத்தை. வெளியுலகுக்குஅதிகம் தெரியாமல், வெளிச்சத்திற்கு வராமல் ஆங்காங்கே எத்தனையோ அன்னை தெரசாக்கள் இந்த நாட்டில் தோன்றி இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் எங்கள் மீனாம்பாள் அத்தை.

அப்படிப்பட்ட எங்கள் அத்தை இறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. கரோனா காலமாதலால் அப்பொழுது வரமுடியாத நாங்கள் அவருடைய நினைவுகளை சுமந்த வண்ணம் அவர் வாழ்ந்த கிராமத்தையும் வீட்டையும் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்த இப்பொழுதுவந்திருக்கிறோம்.

கிராமத்துக்குள் நுழைந்ததும் நாங்கள். கிராமத்து மக்கள் பொதுவாகக் கூடும் அரச மரத்தைத் தேடினோம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து. வெளி ஊரிலிருந்து வருபவர்கள் வெயிலில் இளைப்பாறுவதற்கும், மழைக்கு ஒதுங்குவதற்கும் வசதியாககிராமத்தின் நடுவில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் அந்த அரச மரம்.

கிராமத்துக்காரர்களும் கூடுவதற்கும் பேசுவதற்கும் வசதியாக யாரோ ஒரு புண்ணியவான் அந்த மரத்தடியில் பென்ச் ஒன்று போட்டு வைத்திருந்தான். அந்த கிராமத்துக்கே ஒரு அடையாளத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த அரச மரம் எங்கள் அத்தையைப் போலவே போவோர் வருவோருக்கு அடைக்கலம் அளித்து உபசரித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது அந்த அரச மரத்தை காணவில்லை. வெறிச்சோடிக் கிடந்த அந்த இடத்தைப் பார்த்து எங்களுக்குதிக்கென்றது.

எங்களைக் கண்டு விட்ட தூரத்து உறவினர்ஒருவர் எங்களை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று நீர் மோரெல்லாம் கொடுத்து உபசரிக்க ஆரம்பித்தார். நாங்கள் வந்திருக்கும் செய்தி பரவி ஊர்க்காரர்களெல்லாம் அந்த வீட்டில் கூட ஆரம்பித்தனர். எங்கள் அத்தைஎப்படி கரோனா தொற்றுக்கு ஆளாகி "ஏன்' என்று கேட்பாரற்று ஓர் அநாதை போல் உயிர் நீர்த்தார் என்று ஊர் ஜனங்கள் வர்ணிக்க வர்ணிக்கஎங்களுக்கு துக்கம் தாளவில்லை.

ஊர் மக்கள் அனைவருக்கும் ஓடி ஓடி உதவிய எங்கள் அத்தைக்கு கடைசி காலத்தில் ஒரு வாய் காப்பி கொடுக்கக் கூட நாதியில்லாமல் போனது கொடுமையிலும் கொடுமை.

சரியான கவனிப்பு இல்லாமல் கரோனா தொற்று அவரைத் தாக்கிய நான்கே நாள்களில் அவர் இவ்வுலகை விட்டு மறைந்ததை என்னெவென்று சொல்வது?
அத்தை இறந்தது தான் இப்படியென்றால்அவரது இறுதிப் பயணம் அதைவிடக் கொடுமையானது .

ஊர்க்காரர்கள் அனைவரும் எங்கே கொள்ளை நோய் தங்களை தொற்றிக்கொண்டு விடுமோ என்ற பயத்தில் தங்கள் வீட்டுக் கதவுகளை அடைத்து உள்ளே ஒளிந்து கொண்டு விட்டனராம். ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பாதுகாப்புக் கவசம் அணிந்த ஊழியர்கள் ஊராட்சி வாகனத்தில் உடலைஅள்ளிப் போட்டுக் கொண்டு போன காட்சியை மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல் வழியாகக்கண்ணீர் மல்க கண்டு கொண்டிருந்தனராம். துக்கம்தொண்டையை அடைக்க ஊர் ஜனங்கள் மீனாம்பாள் அத்தையின் இறுதி யாத்திரையை வர்ணித்ததோடு இல்லாமல், அதைத் தொடர்ந்து அவர்கள் சொன்ன விஷயம் எங்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது.

அன்று மதியம் வரையில் நன்றாக வெயிலடித்துக் கொண்டிருந்த வானிலை அத்தையின் இறுதிப் பயணம் புறப்படும் சமயத்தில் திடீரென்று மாறி சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஆரம்பித்ததாம். கொட்டும் மழையின் சத்தமும், ஊளைக் காற்றின் ஓலமும் அத்தையின் மரணத்துக்கு ஊரே ஒன்று கூடி ஒப்பாரி வைத்து அழுவது போல் ஓர்அமானுஷ்ய சூழலை ஏற்படுத்தியதாம்.

அதுபோதாதென்று இறுதி ஊர்வலம் கடந்து போகையில் எங்கள் அத்தையைப் போலவே எல்லோருக்கும் அடைக்கலம் அளித்து கொண்டிருந்த அந்த அரச மரம் தடாலென்று வேரோடு சாய்ந்து விழுந்தது எங்கள் அத்தையின் உடலுக்கு அந்த அரச மரம் தலைவணங்கி வழியனுப்பி வைத்தது போல் தோன்றியதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com