ஜெயமஹாலின் கதை....

ஜெயமஹாலின் கதை....

மன்னர்களின் மானியங்களை பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சி ரத்து செய்த போது, ஏராளமான மன்னர்கள் தங்களது அரண்மனைகளை இனி எப்படி பராமரிப்பது என்று கவலைப்பட்டனர்.

மன்னர்களின் மானியங்களை பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சி ரத்து செய்த போது, ஏராளமான மன்னர்கள் தங்களது அரண்மனைகளை இனி எப்படி பராமரிப்பது என்று கவலைப்பட்டனர்.

பெரும்பாலான மன்னர்கள் தங்களது அரண்மனைகளை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களாக நடத்தவும், சிலர் ஆடம்பரத் திருமணங்கள் நடத்தவும் குத்தகைக்கு விடத் தொடங்கினர். 

அரசக் குடும்பத்தினர் மட்டுமின்றி, பிரபலமானவர்கள், திரை நட்சத்திரங்கள் தங்களது திருமணம், இல்ல நிகழ்ச்சிகளை அரண்மனைகளில் நடத்துவதைப் பெருமையாகக் கருதினர்.

அப்படி கை மாறிய அரண்மனைகளில் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள  நூறாண்டு பழமை வாய்ந்த ஜெய மஹால் அரண்மனையும் ஒன்று.

இதைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. 

தமிழ், கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களின் ஷூட்டிங் இங்கு நடைபெற்றுள்ளன; நடைபெற்றும் வருகின்றன.

இந்த அரண்மனையைப் பற்றி மறைந்த மைசூரு மன்னர் ஜெய சாமராஜேந்திர உடையாரின் 4-ஆவது மகள் இந்திராக்ஷி தேவியை இதே அரண்மனையில் திருமணம் செய்துகொண்ட ராஜா சந்திர அர்ஸ் கூறியதாவது:

""1903-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆற்காட்டைச் சேர்ந்த மராத்தா பிராமண வகுப்பைச் சேர்ந்த ஆரணி ஜாகிர்தார் இந்த மாளிகையைக் கட்டி முடித்தார். அப்போது, இந்த மாளிகை "ஆரணி ஹவுஸ்'  என்றே அழைக்கப்பட்டது. இதன் அருகே மைசூரு மன்னருக்குச் சொந்தமான பெங்களூரு அரண்மனையும் இருந்தது.

தனது அரண்மனையை அடிக்கடி பைனாகுலர் மூலம் ஆரணி ஜாகிர்தார் பார்ப்பதாக அறிந்த நான்காம் கிருஷ்ணராஜ உடையார், (1894 முதல் 1940 -ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த) இந்த அரண்மனையை தனது வசமாக்கிக் கொண்டார்.

தனக்குப் பின்னர், 1940 முதல் 1950-ஆம் ஆண்டு வரை ஆட்சிப் புரிந்த தனது உறவினரான மகாராஜ ஜெயசாம ராஜேந்திர உடையாரின் தந்தை கண்டீரவா நரசிம்ம உடையாரிடம் ஒப்படைத்தார். இதன்பிறகே இந்த அரண்மனை "ஜெய மஹால் பேலஸ்'  என்று அழைக்கப்பட்டது.

இருப்பினும், ஜெயசாம ராஜேந்திர உடையாருக்குப் பட்டத்துக்கு வர வேண்டும் என்ற ஆசை இல்லை. மாறாக, இசைக் கலைஞராக விரும்பிய அவர், 1939-ஆம் ஆண்டு பிரபல மேல்நாட்டு இசைக் கலைஞர்களிடம் பயிற்சி பெற உலகப் பயணம் மேற்கொண்டார்.

அரண்மனையில் ஓர் அறை முழுக்க இசைக் கருவிகளாக வாங்கிக் குவித்திருந்தார். எதிர்பாராதவிதமாக இவருடைய தந்தை காலமாகிவிடவே, 1940-ஆம் ஆண்டு ஜெயசாம ராஜேந்திர உடையார் மைசூரு மன்னராகப் பதவியேற்க வேண்டியதாகிற்று.

அதன்பின்னர், மைசூரிலேயே இருந்த காரணத்தால் ஜெயமஹால் அரண்மனை தேவையில்லாமல் போனது. ஏற்கெனவே பெங்களூரு அரண்மனையும் இருந்ததால், 1949-ஆம் ஆண்டு குஜராத் ராஜ்காட் அருகே இருந்த கொண்டல் மகாராஜா இந்த அரண்மனையை வாங்கி, தனது விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

இவர் வாத்மன் மன்னர் வம்சத்தைச் சேர்ந்த மன்னர் கன்வர் ஆத்ம நாய தேவ் சிங் உடையாரின் மகள் காமாட்சி தேவியை திருமணம் செய்துகொண்ட வகையில், உறவினர் ஆவார்.

இந்த அரண்மனை 24 ஏக்கரில் அமைந்துள்ளது. இதன் அருகேயுள்ள மூன்று ஏக்கர் நிலம் உடையார் வம்சத்து உறவினர் தர்மபுரி மன்னருக்குச் சொந்தமான
தாகும்.

மன்னர்களுக்கு அளித்துவந்த கௌரவம் குறைவதற்கு முன்பே இந்த அரண்மனையை ஓட்டலாக மாற்ற நினைத்த கொண்டல் மகாராஜா, இதை பராமரிக்கும் பொறுப்பை கொண்டல் ராணி குமுத் குமாரியிடம் ஒப்படைத்தார்.

2000-ஆம் ஆண்டு முதல் ஜெய மஹால் அரண்மனை "ஜெய மஹால் பேலஸ் ஹோட்டல்' என்ற பெயரில் இயங்கிவருகிறது.

நிறைய தனியார் நிகழ்ச்சிகள், திருமணங்கள் என ஆண்டு முழுவதும் கலகலப்பாக உள்ள இந்த ஹோட்டலுக்கு மற்றுமொரு சிறப்புணடு. நெருக்கடி நிலை பிரகடனத்துக்குப் பின்னர், சில நாள்கள் இந்திரா காந்தி இங்கு தங்கியதும் உண்டு'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com