'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 92
தில்லி தல்கத்தோரா மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு, பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.


தில்லி தல்கத்தோரா மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு, பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். தலைநகரில் அரசியல் செயல்பாடுகள் அனைத்துமே ஏறத்தாழ இயங்காத நிலைமை. எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியேகூட, தீவிரமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
தில்லி அரசியலில் ஒருவித மெத்தனம் காணப்பட்டது என்றால், தமிழக அரசியல் பரபரப்பாக மாறி இருந்தது. எதிர்க்கட்சியான திமுக முற்றிலுமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆளும் அதிமுகவுக்கு முழு மூச்சுடன் எதிர்ப்பை முன்வைத்துக் கொண்டிருந்தவை, புதிதாகத் தொடங்கப்பட்ட மதிமுகவும், அதிமுகவுடன் உறவை முறித்துக் கொண்ட காங்கிரஸூம்தான்.
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது முதல்வர் ஜெயலலிதா காங்கிரஸ் மீது முன்வைத்த குற்றச்சாட்டு. ""காங்கிரஸூக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது'' என்கிற அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டை முதல்வர் ஜெயலலிதா முன்வைத்தபோது, அகில இந்திய அளவில் அந்த அறிக்கை அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.
தில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, வாழப்பாடி ராமமூர்த்தியும் அந்த விமானத்தில் இருந்தார். அவரிடம் ஜெயலலிதாவின் காங்கிரஸ் எதிர்ப்புக்குப் பின்னால் இருக்கும் அரசியல் குறித்துக் கேட்டேன்.
""அப்படியெல்லாம் அரசியல் ரீதியாக முதல்வர் ஜெயலலிதா சிந்தித்து செயல்படுவார் என்று தான் நம்பவில்லை. அவரது ஊழல்களை மறைப்பதற்கும், அவருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளிலிருந்து உலகத்தைத் திசைதிருப்புவதற்கும்தான் அவர் இப்படியெல்லாம் அபாண்டமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்.''
""ராஜீவ் காந்தியின் ரத்தத்தால் பெற்ற வெற்றி அல்ல என்று அவர் கூறியபோதுகூட அடக்கி வாசித்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதிமுகவையும், ஜெயலலிதாவையும் கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணம் என்ன?''
ஜெயலலிதா தவறு செய்கிறார். அவர் எதிர்த்தாலும் அதிமுக தொண்டர்கள் காங்கிரஸூடனான உறவைத்தான் விரும்புவார்கள்.
""அரசியல் ரீதியாகக் காங்கிரஸூடன் இணைந்து செயல்பட தகுதியான கட்சி அதிமுகதான் என்பதில் சந்தேகம் கிடையாது. முதல்வர் ஜெயலலிதா காங்கிரûஸ எதிர்த்து அரசியல் செய்தாலும், அதிமுக தொண்டர்கள் காங்கிரஸூடனான உறவைத்தான் விரும்புகிறார்கள். அதேபோல, திமுக என்னதான் நெருக்கமாக வந்தாலும், காங்கிரஸ் தொண்டர்கள் அந்தக் கட்சியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.''
""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''
""அது அப்படித்தான். காங்கிரûஸ ஆட்சியிலிருந்து அகற்றிய கட்சி என்கிற வெறுப்பு திமுக மீது காங்கிரஸ் தொண்டர்களின் மரபணுவில் இருக்கிறது. திமுக தலைவர்கள் பெருந்தலைவர் காமராஜரையும், ஏனைய தலைவர்களையும் எப்படியெல்லாம், என்னவெல்லாம் கேவலமாகப் பேசினார்கள் என்பதை அவர்கள் மறக்கவே மாட்டார்கள். திமுகவைப் பிரிவினைவாதம் பேசும் கட்சியாகவும், அதிமுகவை தேசிய சிந்தனையுள்ள கட்சியாகவும்தான் நாங்கள் பார்க்கிறோம்.''

""அதிமுகவில் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்கிற வதந்தி பரவலாக இருக்கிறது. ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதுகூட ஜெயலலிதாவின் கோபத்துக்குக் காரணமாக இருக்குமோ?''
""இருக்கலாம். காங்கிரஸூக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ரகசிய உறவு இருப்பதாகக் கூறுவதன் மூலம், பிரதமர் நரசிம்ம ராவுக்கும், சோனியா காந்திக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துவதும் அவரது நோக்கமாக இருக்கக்கூடும்.''
""இது பிரதமர் நரசிம்ம ராவுக்குத் தெரியுமா?''
""எனக்குத் தெரியாது!''
பிரதமர் நரசிம்ம ராவுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இடையே அப்போதே கருத்து வேறுபாடுகள் பெரிய அளவில் பெருகியிருந்திருந்தன. தனது அமைச்சரவையிலிருந்து காவிரிப் பிரச்னையில் வாழப்பாடி ராமமூர்த்தி விலகியதை பிரதமர் ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனாரின் முக்கியத்துவம் குறைந்திருந்தது என்றாலும், வாழப்பாடியை நரசிம்ம ராவ் நம்பவில்லை.
பிரதமர் நரசிம்மராவின் அமெரிக்க அரசு முறைப் பயணம் ஏற்படுத்திய பரபரப்பும், அதனால் இந்தியா அடைந்த லாபங்களும் ஏராளம். கால்நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில் இப்போது அதுகுறித்து மறந்துவிட்டது என்றாலும், அந்த விஜயம் ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதிவாக வேண்டிய ஒன்று. அதன் பின்னணியில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன என்பது குறித்து நான் அறிந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த தினேஷ் சிங்கின் உடல்நிலை சரியாக இல்லாமல் இருந்ததால், பிரதமர் அலுவலகம்தான் நரசிம்ம ராவின் அமெரிக்க விஜயம் குறித்த எல்லா ஏற்பாடுகளையும் நேரடியாக கவனித்து வந்தது. அப்போது வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஜெ.என். தீக்ஷித் என்கிற மணி தீக்ஷித்தின் பங்கு கணிசமானது. மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தார்த்த சங்கர் ரே, அப்போது அமெரிக்காவின் இந்தியத் தூதுவராக இருந்தார்.
அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுக்கு இந்தியப் பிரதமர்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்கள் என்பது மட்டும்தான் வெளியில் தெரியும். அதற்குப் பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பு, முன்னேற்பாடுகள், ஆலோசனைகள், முன்பே இருதரப்பினரும் பேசி வைத்திருக்கும் முடிவுகள் குறித்து வெளியில் தெரியாது.
ராஜீவ் காந்தியில் தொடங்கி பல பிரதமர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் எனக்குத் தெரியும். உயரதிகாரிகளும், வெளியுறவுத் துறை அமைச்சர்களும் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் பல தகவல்களைப் பொதுவெளியில் பதிவு செய்வது பத்திரிகை தர்மமல்ல என்பதால் தவிர்க்கிறேன்.
பிரதமர் நரசிம்ம ராவின் அமெரிக்க விஜயத்துக்காகக் குறைந்தது நான்கு மாதங்கள் வெளியுறவு அமைச்சகமும், அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகமும் இரவு பகலாக இயங்கின. அவரது விஜயத்துக்கு ஒரு மாதம் முன்பு இந்தியா வந்தார் அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலர் ஸ்ட்ரோப் டல்போட். அரசியல் ரீதியாகப் பல சவால்களை எதிர்கொள்ளும் இந்தியப் பிரதமருக்கு தர்மசங்கடம் ஏற்படும் விதத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதாக அவர் உறுதி அளித்தார் என்று நான் தெரிந்து கொண்டேன்.
பிரதமரின் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில், பிரதமர் என்ன உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, அவரது ஒவ்வொரு அசைவு குறித்தும், நிகழ்வு குறித்தும் நரசிம்மராவுக்கு விளக்கப்பட்டது. பிரதமர் சந்திக்கும் ஒவ்வொருவர் குறித்த விவரங்களையும் தெரிவித்து, அவர்கள் என்னென்ன கேள்விகளை எழுப்புவார்கள், அதற்கு என்ன விதமான பதிலளிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை விவாதித்து முடிவெடுக்கப்பட்டன.
குறிப்பாக, பிரதமரும் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் நிகழ்வு குறித்து, விவரமாகவும், வெவ்வேறு கோணங்களிலும் ஆராயப்பட்டன. யார் யாரைப் பிரதமர் அமெரிக்காவில் சந்திக்க வேண்டும் என்பதில் தொடங்கி, யார் யாரிடம் என்னென்ன பேச வேண்டும் என்பதுவரை திட்டமிடப்பட்டன.

இங்கே தில்லியில் இப்படியென்றால், அங்கே வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகமும் முழு வீச்சில் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இந்தியாவின் நண்பர்களான உறுப்பினர்கள், பிரதமரின் விஜயத்துக்கான செயல்திட்டத்தை வகுத்தனர். இருதரப்பும் ஆக்கபூர்வ பிரச்னைகளை மட்டுமே பேசுவது என்றும், பிரச்னைக்குரிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது என்றும் தீர்மானித்திருந்தார்கள்.
அமெரிக்காவைப் பொருத்தவரை, "பெருவர்த்தக நிறுவனங்கள் (கார்ப்பரேட் லாபி) சொல்வதை வெள்ளை மாளிகை எதிரொலிக்கும்' என்பது எழுதப்படாத விதி. கோகோ கோலா, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யக் காத்திருந்த நிலையில், பிரதமரின் விஜயம் வெற்றி பெறுவதற்கு அவை வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தன. பிரதமரின் ஆறு நாள் விஜயத்தில் நியூயார்க், ஹூஸ்டன், வாஷிங்டன் நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நரசிம்ம ராவுக்கு முன்பு ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி என்று நான்கு பிரதமர்கள் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தனர். ஒவ்வொரு பிரதமரின் அரசுமுறைப் பயணமும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் பெற்றது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 1956 விஜயத்தின்போது அதிபராக இருந்தவர் ஐசன்ஹோவர். அப்போதுதான் இந்தியாவுக்கு நிதியுதவியும், பிஎல் 480 கோதுமை உதவியும் அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்டது. 1962-இல் அவர் இரண்டாவது முறை அமெரிக்காவுக்குச் சென்றபோது, அதிபராக இருந்தவர் ஜான் கென்னடி. அவர் நேருவை மதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இதுவரை நிகழ்ந்த இந்தியப் பிரதமர்களின் அமெரிக்க விஜயத்திலேயே மோசமான விஜயம் அதுதான்.
1966-இல் பிரதமரான இந்திரா காந்தியை, அவர் சோவியத் யூனியன் ஆதரவாளர் என்பதால், ஆரம்பம் முதலே அமெரிக்கா சந்தேகத்துடன்தான் பார்த்தது. அதிபர் நிக்சனுக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் பரஸ்பரம் பிடிக்கவில்லை என்றேகூடச் சொல்லலாம். வங்கதேசப் போரில், நிக்சன் தலைமையிலான அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
1982-இல் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது அமெரிக்க அரசுமுறைப் பயணம் மிகப் பெரிய வெற்றி என்று கூற வேண்டும். அதிபர் ரொனால்ட் ரீகனின் அணுகுமுறை இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. தாராப்பூர் அணுசக்தி நிலையம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் அப்போதுதான் கையொப்பமாகின.
1977-இல் ஜனதா கட்சி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அணுசக்தியை பயன்படுத்தி ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம்
என்கிற உத்தரவாதத்தை அளித்தும்கூட, அமெரிக்கா இந்தியாவுக்கு யுரேனியம் தரவில்லை. மொரார்ஜி தேசாயின் விஜயத்தின்போது, அமெரிக்க அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். அமெரிக்க - இந்திய உறவு வலுப்பட்டது என்பதுதான் அந்த விஜயத்தின் ஒரே பயன்.
மிகவும் பரபரப்பாகச் பேசப்பட்ட இந்தியப் பிரதமரின் அமெரிக்க விஜயம் என்பது ராஜீவ் காந்தியின் விஜயம்தான். அப்போதும் ரொனால்ட் ரீகன்தான் அதிபர். அமெரிக்காவில் ராஜீவ் காந்தி அளித்த பேட்டி சர்வதேச அளவில் பேசப்பட்டது. இந்திய - அமெரிக்க உறவு வலுவடைந்ததற்கு அடித்தளமிட்ட விஜயம் அது.
மேலே குறிப்பிட்ட பின்னணியில்தான், 1994-இல் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் அமெரிக்க அரசுமுறைப் பயணம் அமைந்தது. இந்தியாவைத் தனது சந்தையாக்கப் பல அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆவலுடன் காத்திருந்த நேரம் அது. அதனால், பிரதமர் - அதிபர் சந்திப்புக்கு அமெரிக்கா அதீத முக்கியத்துவம் அளித்தது.
இத்தனை முன்னேற்பாடுகளுக்குப் பிறகும், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு வைத்த கோரிக்கையைக் கேட்டு அவர் பதறிவிட்டார். வழக்கம் போல எந்தவித முகபாவமும் இல்லாமல் அதிபர் கிளிண்டனையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், "முடியாது' என்பதுபோலத் தனது தலையை அசைத்தபோது, அதிபர் கிளிண்டன் அதிர்ந்தார்.
அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் அன்றைய இந்திய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் என்று உடனிருந்த தூதரக உயரதிகாரி ஒருவர் என்னிடம் பின்னாளில் தெரிவித்தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...