தலைமுறை  மாற்றம்

தலைமுறை  மாற்றம்

காலையில் எழுந்தவுடன் வாசலில் கோலம் போட வந்த சுசீலா, அப்படியே கொஞ்சம் நேரம் வாசல் திண்ணையில் அமர்ந்து, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டார். திருமணமாகி முப்பத்தைந்து ஆண்டுகளில் முதல் முறையாக இன்று தான் அவர் தன் கணவர் ராமசுப்புவுடன் தனிக் குடித்தனம் தொடங்குகிறார். 
இருபது வயதில் திருமணமாகி புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்தபோது மாமியார், மாமனார், திருமணமாகாத  நாத்தனார், மைத்துனர் என்று வீடு கலகலப்பாக  இருந்தது. ஒரு சில ஆண்டுகளிலேயே திருமணமாகி நாத்தனாரும், வெளி ஊரில் வேலை கிடைத்து மைத்துனரும் வீட்டை விட்டுப் போவதற்கும், இவர்களுக்கு மகன் பிறப்பதற்கும் சரியாக இருந்தது. 
முப்பது ஆண்டுகளுக்கும் மேல் கூடவே இருந்த மாமனார் மாமியாரும், இவர்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடைபெறுவதற்காகவே காத்திருந்தது போல், ஓராண்டிற்குள் ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை விட்டு மறைந்தனர். 
அடுத்து, மகன் ரவிக்குத் திருமணமாகி மருமகள் வீட்டில் காலெடுத்து வைத்தாள். மாமியார் என்ற அந்தஸ்தை ஓராண்டு கூட முழுவதுமாக அனுபவிப்பதற்குள், மகனும் மருமகளும் பணியிட மாற்றம் என்று நேற்றைய தினம் மும்பைக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்கள். 
  சிந்தனையிலிருந்து விடுபட்ட சுசீலா கோலப்பொடி, துடைப்பம், வாளி இத்தியாதி சாமான்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். சமையல் அறைக்குள் நுழைந்த அவருக்கு சிறிது நேரம் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. 
இத்தனை ஆண்டுகளாக குறைந்தது நான்கு பேருக்காவது சமைத்துப் பழகிய சுசீலாவிற்கு இரண்டு பேருக்கு என்ன சமைப்பது, எப்படிச் சமைப்பது என்று மலைப்பாக இருந்தது. 
அன்று முழுவதும் அவருக்கு வீட்டு வேலைகளில் மனம் லயிக்கவில்லை. திருமணமான தினத்திலிருந்து இன்றுவரை, புகுந்தவீட்டில் தனக்கு ஏற்பட்ட சுவையான மற்றும் கசப்பான அனுபவங்களை மனம் அசைபோட்டுக்  கொண்டிருந்தது. திருமணம் தான் ஒரு பெண்ணின் வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்குகிறது! 
  சுசீலாவின் தந்தை மத்திய அரசுப் பணியில் இருந்ததால்,அவரை லக்னோ, தில்லி, சண்டிகர், கான்பூர் என்று ஊர் ஊராக மாற்றிக் கொண்டிருந்தார்கள். பல ஊர்களில் கல்வியைத் தொடர்ந்த சுசீலா பெரும்பாலும் வட இந்தியாவிலேயே தனது இளமைப் பருவதைக் கழித்தார். தமிழ் நாட்டிற்கு இரண்டாண்டுகளுக்கொருமுறை விடுமுறையில் வருவதுடன் சரி. வீட்டில் தமிழ் பேசினாலும், தென்னிந்திய உணவு சமைத்தாலும், சுசீலா மிகவும் விரும்பிச் சாப்பிடுவது என்னவோ சப்ஜியும், சப்பாத்தியும் தான். 
ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வளர்ந்த அவளை அவள் தாயார் சமையல் செய்யவோ, வேறு வீட்டு வேலைகள் செய்யவோ அனுமதித்ததில்லை. பட்டப்படிப்பு முடியும் வரை படிப்பு, விளையாட்டு (கல்லூரியில் பூப்பந்தாட்ட  வீராங்கனை), கல்லூரிகளுக்கிடையே நடைபெறும் விவாதங்களில் பங்கு பெறுவது என்று பட்டாம்பூச்சியாகத் திரிந்து கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் அவருடைய திருமணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பணி நிமித்தம் சென்னைக்குச் சென்றிருந்த சுசீலாவின் தந்தை தன் நண்பரின் மகன் ராமசுப்புவின்  கல்வி, அழகு, பதவி, ஆளுமை போன்ற குண நலன்களால் ஈர்க்கப்பட்டு அவனே தன் மகளுக்கு ஏற்ற துணை என்று திடீர் முடிவெடுத்தார்.
 ஆசை ஆசையாக மகளுக்கு வரன் தேடிய சுசீலாவின் தந்தை, மிகவும் பரந்த நோக்குள்ள ஒரு குடும்பத்தில், அதுவும் வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்த தன் மகளால் பழமை வாத கருத்துகள் கொண்ட, பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில் எப்படி குடித்தனம் நடத்த முடியும் என்று யோசிக்கவில்லை. வீட்டு வேலை ஒன்றுமே செய்யத் தெரியாமல் மிகவும் செல்லமாக வளர்ந்த சுசீலா, திருமணமான நாளிலிருந்தே மாமியாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக ஆரம்பித்தார்.  காலையில் நேரம் கழித்து எழுந்தால் கேட்கவே வேண்டாம், அன்று முழுக்க அவளுக்கு வசை மொழிதான்.  இவள் எழுந்து வருவதற்குள் மாமியார் பாதி சமையலை முடித்திருப்பார். 
''நீ குளிக்காமல் ஒன்றையும் தொடாதே'' என்று மாமியார் இவளை சமையல் அறைக்குள்  நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி, தானே 'மாங்கு மாங்கு' என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.
  சுசீலாவின் புகுந்த வீட்டில் எல்லாப் பண்டிகைகளையும் சாஸ்திர சம்பிரதாயத்துடன் கொண்டாட வேண்டும். பிள்ளையார் சதுர்த்தி என்றால் வெல்லக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை, உளுத்தம் கொழுக்கட்டை, வடை, பாயசம் என்று வகை வகையாகச் செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும். விரிவாக பூஜையெல்லாம்  முடித்து மதிய  உணவு சாப்பிட இரண்டரை மணிக்கு மேல் ஆகி விடும். அதுவரை பட்டினி கிடக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி என்றால் குறைந்தது பத்து பதினைந்து பலகாரங்களாவது செய்ய வேண்டும். மருமகளுக்கு இந்தப் பலகாரங்களையெல்லாம் செய்யத் தெரியவில்லை என்பதில் அவள் மாமியாருக்கு மிகுந்த வருத்தம்.
''உங்க அம்மா உனக்கு ஒரு வேலையும் செய்ய சொல்லிக் கொடுத்து வளர்க்கவில்லை. உங்க அம்மாவுக்காவது இதெல்லாம் செய்யத் தெரியுமா?'' என்று மருமகளையும் அவள் தாயாரையும் சேர்த்து வசை பாடுவார். 
 கூடவே, ''என் மகளை  நான் எப்படி பழக்கியிருக்கிறேன் தெரியுமா? எட்டு ஊருக்கு சமைப்பாள்''  என்று பெருமை பீற்றிக் கொள்வார். 'நின்றால் குற்றம்... உட்கார்ந்தால் குற்றம்' என்று சுசீலாவை அவள் மாமியார் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். சுசீலாவின் கணவர் ராமசுப்புவும் ஒன்றும் கண்டுக்க மாட்டார்
 நாம் எங்கே வந்து மாட்டிக் கொண்டிருக்கிறோம்? இதற்கு முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் உணர்ந்தார் சுசீலா. தனது கல்வி, விளையாட்டு வீராங்கனை எனும் சாதனை, பல்கலைக்கழக அளவில் சிறந்த பேச்சாளர் என்ற பெயர் என்று தன் திறமைகளைப் பாராட்டாமல் தனக்கு கொழுக்கட்டையும் வடையும் செய்யத் தெரியவில்லை என்று தனது குறைகளை மட்டுமே இந்த வீட்டில் காண்கிறார்களே என்று சுசீலாவின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. 
எல்லாவற்றிற்கும் மேல் எதற்கெடுத்தாலும் தனது பிறந்த வீட்டை குறை சொல்வது எப்படி நியாயமாகும்? எதற்காக நாம் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்? இந்த வாழ்க்கையை உதறி விட்டுப் போய்விடலாமா என்று எத்தனையோ முறை சுசீலா எண்ணியதுண்டு      ஆனால் அவசரப்பட்டு சுசீலா அப்படியேதும் முடிவெடுக்கவில்லை. நிதானமாக யோசித்த அவர், இதையே ஏன் ஒரு சவாலாக  எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சிந்திக்க ஆரம்பித்தார். பார்க்கப் போனால் சமையல் வேலை, வீட்டு வேலையெல்லாம், கற்றுக் கொள்ள முடியாத ராக்கெட் சயின்ஸ் இல்லையே! தன்னுடைய படிப்பையும் மற்ற திறமைகளையும் காட்டுவதற்கு பிறகு சந்தர்ப்பம் வராமலா போய்விடும்? இந்தக் குடும்பத்தில் ஒருவராக தன்னை இவர்கள் ஏற்றுக் கொள்ள 
வேண்டும் என்பதில் குறியாக இருந்த, சுசீலா, அதற்காக முனைப்புடன் பாடுபட்டார். காலையில் அலாரம் வைத்து எழுவது, சமையல் அறையில் மாமியாருக்கு உதவுவது, புதுப் புது பணியாரங்களைச் செய்து காட்டுவது என்று தன்னையே மாற்றிக் கொண்டார். ஒரே ஆண்டில் எந்தெந்த பண்டிகைக்கு என்னென்ன பணியாரங்கள் எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டு விட்டார். 
நவராத்திரிக்கு வரும் மகளிருக்கு சுண்டல், இனிப்புப் பலகாரம் என்று செய்து, வந்த விருந்தினரை மட்டுமல்லாது மாமியாரையும் அசத்தி விட்டார். சீக்கிரத்திலேயே அந்த வீட்டில் உள்ளோர் மனதில் அவர் இடம்பிடித்து விட்டார்.  தங்கள் இறுதிக் காலம் வரையில்  சுசீலாவின் மாமியார், மாமனார் அவருடனேயேதான் வாழ்ந்தார்கள்.  இளைய மகன் ரமேஷின் வீட்டிற்குக் கூட எப்போதாவதுதான் செல்வார்கள். அப்படியே சென்றாலும் ஒரு மாதத்திற்கு மேல் அங்கு தங்க மாட்டார்கள். 
 இப்பொழுது மகன் ரவிக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடையப் போகிறது.  இந்தத் திருமணம் பெற்றோர்களின் ஆசியுடன் நடைபெற்ற காதல் திருமணம். லட்சுமி என்ற பெயருக்கு ஏற்ற மாதிரி மகாலட்சுமியே வீட்டில் காலெடுத்து வைத்துள்ளதாக அகமகிழ்ந்து போனார் சுசீலா. எல்லாம் சில நாட்களுக்குத்தான். பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மருமகள், திருமணத்திற்கு முன்பே சில நிபந்தனைகளுடன் தான் புகுந்த வீட்டிற்குள்ளே நுழைந்தாள். வேளை கெட்ட வேளையில் இணைய தளத்தில் அலுவலக வேலை, தினமும் தொலைபேசியில் பல மணிநேரங்கள் மாநாட்டு அழைப்புகள், வீடியோ அழைப்புகள்,  ஜிம்மில் ஒரு சில மணி நேரங்கள், பொழுது போக்கிற்கு ஓடிடி- இல் திரைப்படங்கள் என்றிருக்கும் மருமகளுக்கு சமையல் அல்லது வீட்டு வேலைகள் செய்ய விருப்பமும் இல்லை; நேரமும் இல்லை என்று புரிய சுசீலாவிற்கு அதிக நாட்கள் ஆக வில்லை.   ஏதாவது சொன்னால், ''எங்க வீட்டில் இதெல்லாம் செய்து எனக்குப் பழக்கமில்லை'' என்று மருமகளிடமிருந்து முகத்தில் அடித்தாற்போல் பதில் வரும். 
 உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்கு சுசீலாவும் அவள் கணவரும் ஒரு வாரத்திற்கு தஞ்சாவூருக்குப் போயிருந்தார்கள். அந்த ஒரு வாரமும் ஸ்விக்கி, சோமேட்டோ என்று உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அடித்தது யோகம். அந்த ஒரு வாரமும் சமையல் அறையையே எட்டிப் பார்க்காது பீட்சா, பாஸ்தா, பிரியாணி, தந்தூரி மட்டன் என்று சாப்பிட்டே காலத்தை ஓட்டி விட்டார்கள் மகனும் மருமகளும். எப்போது வேண்டுமானாலும் தூங்குவது, எப்பொழுது வேண்டுமானாலும் எழுந்திருப்பது, நினைத்தபொழுது குளிப்பது, சாப்பிடுவது என்று ஓர் ஒழுங்கு முறையே இல்லாது ஏனோ தானோ என்று மருமகளும் மகனும் நடத்தும் குடித்தனம் சுசீலாவிற்கு எரிச்சலை உண்டு பண்ணியது. 
ஆனால் அவர்களிடம் சொல்லி பிழைத்துப் போக முடியுமா?   
  வீட்டிலுள்ள ஒருவருடனும் மருமகள் சகஜமாகப் பழகாததும்,  புகுந்த வீட்டு மனிதர்கள்    யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களை மதித்து பேச வேண்டியது அவசியம் என்று மருமகளுக்குத் தோன்றாததும் சுசீலாவிற்கு வேதனையளித்தது.   மொத்தத்தில் மருமகள் தன்னை அந்தக் குடும்பத்தில் ஒருவராக நினைக்காமல் ஏதோ அந்நிய மனுஷி போல் நடந்து கொள்வதும், புகுந்த வீட்டுடன் அனுசரித்துப் போக அவள் எந்த முயற்சியும் எடுக்காததும் சுசீலாவிற்கு ஆச்சரியமளித்தது.  
அதைவிட ஆச்சரியமளித்தது, ஏன் அதிர்ச்சியளித்தது, திருமணமாகி ஒரு வருடத்திற்குள் தங்களைப் பணியிடமாற்றம் செய்துவிட்டதாகச் சொல்லி மகனும் மருமகளும் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றது.  
கூட்டுக் குடும்பத்திலிருந்து தப்பிக்க பணியிடமாற்றம், அவர்களாகக் கேட்டுப் பெற்றதா அல்லது அலுவலகத்தின் ஆணையா என்ற ஆராய்ச்சில் சுசீலா இறங்க விரும்பவில்லை. அலுவலகத்தின் கட்டாயத்தின் பேரில் தான் அவர்கள் தங்களை விட்டுச் சென்று விட்டார்கள் என்று மனதை தேற்றிக்கொள்வதில் தான் குடும்பத்தில் எல்லாருக்கும் நிம்மதி.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com