இப்படியும்...

எல்லாம் முடிந்துவிட்டது. அப்பாவை ஒரேயடியாக வழியனுப்பி வைத்தாயிற்று. இரண்டே நாள் - மருத்துவமனையில். ஹார்ட் அட்டாக். மும்பையிலிருந்து தம்பி ரமேஷ் வந்துவிட்டான்.
இப்படியும்...

எல்லாம் முடிந்துவிட்டது. அப்பாவை ஒரேயடியாக வழியனுப்பி வைத்தாயிற்று. இரண்டே நாள் - மருத்துவமனையில். ஹார்ட் அட்டாக். மும்பையிலிருந்து தம்பி ரமேஷ் வந்துவிட்டான். அவன்தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டான். பாஸ்டனிலிருந்து கணவருடன் கிளம்பி வந்தாள் கீதா .

அப்பா, கோபாலகிருஷ்ணன் பல காலம் வக்கீலாகவும் பின்னர் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றிய பின் சென்னைக்கு வந்தார். படிப்படியாக உழைத்து உயர்ந்தார்.

நான்கு வருடங்களுக்கு முன், திருமணமாகிக் கணவருடன் கீதா பாஸ்டனுக்குக் கிளம்பியபோது முதல் முதலாக அப்பா கண்கலங்கி நின்றதைக் கண்டு இவளும் நொறுங்கிப் போனாள்.

ரமேஷ் தொலைத்தொடர்புத்துறையில் என்ஜினியரிங் முடித்தவுடன் வீட்டுக் கூட்டை விட்டு மும்பைக்குப் பறந்த முதல் பறவையானான்.

கோபாலகிருஷ்ணனுக்கு வக்கீல் பணியிலேயே நல்ல பெயர். எத்தனை போட்டிகள் வந்தாலும் இவர் நிதானமாக, யோசித்தே தனது வழக்குகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். பணம் வருகிறதே என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொள்ளவில்லை. நேர்வழியிலே இவரது வக்கீல் பயணம் நேர்ந்தது. எப்போதும் வீட்டில் இயல்பாகவே பழகுவார் ; ஆனால் வழக்கு பற்றி மட்டும் வீட்டில் எதுவும் யாரிடமும் பேசமாட்டார்.

நீதிபதியாகவும் அவரது பணி நேர்வழியே. நீதிபதியான பின் சற்றே அவர் வாழ்க்கையின் போக்கில் ஒரு குறுக்கம் நேர்ந்தது... முன்பே கூட அவர், "தாம் தூம்' என்று பந்தா காண்பிக்காத வாழ்க்கையே வாழ்ந்தார். சொந்த ஊர் பூதலூரில் இவர்களுக்கு நல்ல விவசாய பூமி. வைதேகிக்கு கோமல் பக்கம். வாழ்க்கை வளப்பமே ; என்றாலும் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நீரோடை வாழ்க்கை .

கீதா பத்து நாள் முன்புதான் அப்பாவுடன் "சாட்'டில் பேசினாள் .
இரு நாளைக்கொருதரம் "ஜூமி' ல் அம்மாவுடன் பேசிவிட்டாலும் அப்பாவுடன் பேசுவது வாரத்தில் சில நாட்கள் மட்டுமே.

அப்பா போய் ஒரு வாரமாகிறது. கீதாவும் ரமேஷும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டாலும் அம்மாவை எப்படி நிலைப்படுத்துவதென்ற கவலையும் சேர்ந்து கொண்டது. அம்மா உடலாலும் தளர்ந்தாள். நெருங்கிய உறவில் சிலபேர் மட்டுமே இப்போது வீட்டில். கீதாவுக்குத் துணையாக ரமேஷின் மனைவி நிரஞ்சனா. பூதலூரிலிருந்து பண்ணையாள் கந்தசாமியும் அவன் மனைவி வேலாயி இருவரும் ஒத்தாசையாக இங்கே.

சாயங்காலம் வீட்டுத் தோட்டத்தில் கீதா மட்டும் தனியே அமர்ந்திருந்த நிலையில் வேலாயி வருகிறாள். "ரொம்ப நாளைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் கீதாவிடம் மகிழ்ச்சியோடு பேச முடியாமல் போய் அவரையும் தேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே ஐயா' என்று புலம்பினாள் வேலாயி. கீதாவின் கால்மாட்டில் அமர்ந்து, ""தாயி ! இந்தப் பாவியாலதான், ஐயா கடேசி வரை அம்மா கூட பேசாமலே போய்ச் சேர்ந்தாரு ! எல்லாக் கொடுமைக்கும் நாந்தேன் காரணம்... அம்மா அவ்வளவையும் தம் மனசுக்குள்றயே போட்டுப் பொதைச்சுக்கிட்டாங்க'' நெருப்புக் கங்கு உள்ளங்காலில் மிதிபட்ட சூடாய் வேலாயியை நிமிர்ந்து பார்த்தாள் கீதா .

உள்ளிருந்து வந்த ரமேஷ், "" வேலாயி, நீங்க கொஞ்சம் ராத்திரி டிஃபனுக்கு நிரஞ்சனாவைக் கேட்டுக்கிட்டு எதாவது செஞ்சிடுங்க'' என்று அவளைக் கத்தரித்து அனுப்புகிறான். சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த கீதாவின் தோள் தட்டி, ""நீ வா கீதா, மாடிக்கு'' என அழைத்துச் செல்கிறான்.

நிரஞ்சனாவிடம், "" நான் அக்காவோட மாடியில் பேசிக்கிட்ருக்கேன். அம்மா படுத்துக்கிட்டுருக்காங்க ; பார்த்துக்கோ. நான் அரைமணியில் கீழே வந்துடுவேன்''
என்கிறான். கீதாவுக்கு ஒன்றும் புரியவில்லை .

மாடியில் அறையின் பின்னே, திறந்தவெளி. ஏற்கெனவே நாற்காலிகள் காத்திருக்கின்றன. அமர்கின்றனர்.

"" என்ன ரமேஷ், வேலாயி என்னமோ சொல்றாங்களே ? அப்பா அம்மா கிட்டே பேசவேயில்லையாமே? என்ன நடந்துச்சு ? என்ன ? போன வாரம் கூட நான் அப்பாகிட்டே பேசினேன். மறுநாளே அம்மாகிட்டயும் பேசினேன்... யாருமே எதுவுமே சொல்லலையேடா''
""முதல்லே நீ கொஞ்சம் ஸ்ட்ரெயின் பண்ணாதே. அம்மா மாதிரி உனக்கும் மனக்கவலையோட உடம்பும் கஷ்டப்படக் கூடாதுக்கா... நான் சொல்லப்போறதை நிதானமாக் கேட்டுக்கோ. சந்தேகம் எதுவும் இருந்தா, பிறகு கேளு. சரியா ?''
"" ம், சொல்லு, ரமேஷ்?''
""கீதா ! கல்யாணத்துக்குப் பிறகு நீ சந்துருவோட பாஸ்டன் கிளம்பிய சில நாள்லே ...''
ரமேஷ் மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினான் :
""கீதா நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள்... பூதலூரிலிருந்து நம்ம பண்ணையாள் கந்தசாமி, அப்பா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, பகல் நேரத்தில் வீட்டுக்கு வர்றார். வந்தவர், நேரடியா, அம்மாவின் காலில் விழுந்து கதறுகிறார். வேலாயியின் சிறிய தாயார் மகன் - தம்பி முறையாம் - பாஸ்கர் ஒரு கொலை வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கிறான். அவனுக்கு இரு குழந்தைங்க. அவன் தன்னோட ஊர்க்காரர் ஒருத்தரை உணர்ச்சி வேகத்தில கொன்னுட்டானாம். பின் விளைவுகள் பற்றியும் பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் யோசிக்காமக் கொலையைச் செய்துட்டானாம். அந்த வழக்கு அப்பாகிட்டே வந்திருக்கு. இன்னும் நான்கு நாளில் அப்பா தீர்ப்பு வழங்கப் போறாங்கன்னு சொல்றான். பாஸ்கரது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு இயன்றவரையில் அவனுக்குத் தண்டனையைக் குறைத்துக் கொடுக்கச் சொல்லி, அப்பா கிட்டே அம்மா சொல்லவேணும்ன்னு அழுது புலம்புறான் .
பொறுமையா எல்லாத்தையும் கேட்டுகிட்டிருந்த அம்மா,
"நான் இந்த விஷயத்தில் ஐயாகிட்டே ஏதும் சொல்லமுடியாது; அவர் எப்போதுமே எந்த வழக்கு பத்தியும் வீட்டில பேச மாட்டாரு. அவுங்ககிட்டே நாங்களும் எப்பவுமே எதுவும் கேட்டுக்க மாட்டோம். அவரு வக்கீலா இருந்ததிலிருந்தே இப்படித்தான். கந்தா, இது பத்தி நான் ஐயாகிட்டே பேசமுடியாது'ன்னு சொல்லிட்டாங்க.
"என்னவோம்மா... ஆயுசு பூரா உங்க நிலத்தில்தான் பழியாக் கிடக்கிறேன்; உங்களுக்குத்தான் ஊழியம் பார்க்குறோம் நானும் பொஞ்சாதியும். எல்லையம்மன் மாதிரி உங்களை நம்பித்தான் வந்தேன். வீட்டிலே பொஞ்சாதி வேலாயி கூட அம்மாவைத் தானும் வந்து பாத்து கால்லே விழறேன்னு சொன்னா; நாந்தான் வேணாம்னு சொல்லித் தனியா வந்திருக்கேன். என் பாரத்தை உங்ககிட்டே இறக்கி வைச்சுட்டேன். நீங்க கருணை காமிச்சா அந்தப் பச்சைப் புள்ளைங்களுக்கு அப்பன் கிடைப்பான் ; இல்லேன்னா விதிவிட்ட வழி'
அம்மா மறு பேச்சு ஏதும் பேசாம, அவனை
அழைத்து கைநிறைய உணவுப் பண்டங்களையும் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பியிருக்காங்க .
கந்தசாமியோ அவன் கையில் மடித்து வைத்திருக்கிற கேஸ் பேப்பர்ங்களை அம்மாவின் காலடியில் வைச்சுட்டுக் கிளம்பத் திரும்பியிருக்கான் .
அம்மா ஆவேசமாகி, "கந்தசாமி ! முதல்லே இங்கிருந்து இந்தப் பேப்பர் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போய்ச் சேர். கொலை செஞ்சவன் பேரை மட்டும் சொல்லு ?' ன்னு அதட்டலாக் கேட்கிறாங்க .
கண்ணீரைத் துடைச்சுக்கிட்டே, "அம்மா ! பாஸ்கர்'மா... நீங்கள்லாம் அந்தப் பயலைப் பார்த்திருக்க முடியாது. அவன் அசலூரு. பொஞ்சாதிக்குத் தம்பி முறையாகுது... சின்னாத்தா மவன்... உங்களைத் தொந்தரவு செஞ்சதுக்கு மன்னிச்சுக்குங்கம்மா... நீங்க எதுவும் தப்பா நினைக்கக் கூடாதுன்னுதான் கிளம்புற அவசரத்திலே ஊர்லேர்ந்து எதுவும் கொண்டாரலை' ன்னு சொல்லி, காசித் துண்டைக் கக்கத்தில் மடித்து வைச்சுக்கிட்டுக் கிளம்பியிருக்கான் கந்தசாமி .
அன்றிரவு. உணவு மேசையில எல்லாத்தையும் எடுத்து வைசிச்சிட்டு, அம்மா, அப்பாவோட அறைக் கதவை லேசாகத் தட்டி, "வாறீங்களா, சாப்பிட்டுடலாம். மணி ஏழரையாகுது' ன்னு கூப்பிட்டாங்க .
" வர்றேன் வைதேகி'ங்கிறார் அப்பா .
அவருக்குப் பிடித்த ரவா இட்லியும் தேங்காய்ச் சட்னியும் .
இரண்டுபேரும் எதிரெதிரே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறாங்க .
அப்பா எப்பவுமே, என்ன பிடித்திருந்த உணவாயிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாதானே எடுத்து வைச்சுச் சாப்பிடுவாங்க. உணவை யாருமே வீணடிக்கக் கூடாதுன்னு நமக்கெல்லாம் கண்டிப்பா சொன்னவர்தானே? அம்மா இரண்டாவது இட்டிலியை அவரோட தட்டில் வைக்க, எடுத்தபடி பேச ஆரம்பிக்கிறாங்க .
""காலையிலே ஊர்லருந்து கந்தசாமி வந்திருந்தான்''
""எங்கே காணோம் ? போய்ட்டாரா ? என்ன விசேஷம் ?''
""ஒண்ணுமில்லேங்க... அவன் பொஞ்சாதி வேலாயியோட தம்பி முறையாகிற பாஸ்கர்ங்கிறவனோட கேஸ் உங்ககிட்டே வந்திருக்குதாம்... நாலு நாளில் நீங்க''
அவ்வளவுதான். அப்படியே எழுந்துட்டாரு அப்பா. நாற்காலியைப் பின்னுக்கு நகர்த்தி, கையில் தட்டை எடுத்தபடியே பாத்திரம் கழுவுமிடம் போய்ட்டார். தட்டையும் கையையும் கழுவினார் .
அம்மா பதறினாங்க :
""என்னங்க...என்னங்க... என்னை மன்னிச்சுடுங்க'' ன்னு கதறியிருக்காங்க .
அப்பா, தன் அறைக்குள்ள போய்த் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டாங்க. அப்பா எப்பவுமே அவங்க அறைக்கதவைத் தாழிடவே மாட்டாங்கள்ல. அதோட அப்பாவின் பேச்சு அம்மாகிட்டே முடிஞ்சுது. ஹம்... அப்புறம் அப்பா இறக்கும் வரை அம்மாகிட்டே பேசவேயில்லை !
இது நடந்து நாலு மாசம் கழிச்சு நான் இங்கே சென்னைக்கு வந்தப்போதான் எனக்கே தெரியும். நானும் அப்பாகிட்டே, "நீங்க அம்மாவை மன்னிச்சுடுங்கப்பா' ன்னு கெஞ்சினேன். பதிலே பேசலை அப்பா. புத்தர் கை உயர்த்திய மாதிரி மேல்நோக்கி உயர்த்தினார். ஆனா, அப்போ, அப்பாவோட கண்களிலும் நீர் திரண்டு நின்னுச்சு. ஹும்... சுமார் நாலு வருஷம்... ஒரே வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்காமலேயேதான் வாழ்ந்திருக்காங்க... வாழ்க்கை இப்பிடித்தான் நகர்ந்துச்சு...
உன்கிட்டேயும் சொல்லி உன்னையும் அப்பாகிட்டே இதுபத்திப் பேசி கொஞ்சம் அவங்களை அம்மாகிட்டே பேசீடச் சொல்லலாம்னு நினைச்சு அம்மா கிட்டே சொன்னப்போ, அப்பவே அம்மா சொல்லீட்டாங்க. "நீ இதை கீதாகிட்டே சொல்லாதே. எப்போ அவ இங்கே வர்றாளோ அப்போ தெரிஞ்சுக்கட்டும் போதும். என் பாவம், கவலை என்னோட போகட்டும்'ன்னுட்டாங்க. அவுங்களை மீறி நானும் இதை உன்கிட்டே அப்புறம் சொல்ல விரும்பலை''
கீதா குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
""புரிஞ்சுக்கவே முடியலை ரமேஷ் ! இந்தக் காலத்திலே இப்பிடியுமா ? யாரோ செஞ்ச தப்புக்காக யாரோ தண்டனை அனுபவிக்கணுமா ? இதென்ன நீதி ? சொல்லு. எனக்குப் புரியலை''
ரமேஷ், கீதாவின் தலையை நிமிர்த்திக் கண்ணீரைத் துடைக்கிறான்.
""கீதா, நாம யாரை நொந்துக்க ? இப்பிடியும் ஒரு மனசு... வேறென்ன நாம் சொல்ல?'' வேப்ப மர காற்று இதமாகத்தான் வீசிற்று, தன் கசப்பை வெளிக்காட்டாமல் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com