ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாய் துர்நாற்றத்தை போக்க...

நான் சர்க்கரை நோய்க்காக கடந்த 10  ஆண்டுகளாக மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். அவற்றுடன் தைராய்டுக்கான மாத்திரையும் சாப்பிடுகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாய் துர்நாற்றத்தை போக்க...

நான் சர்க்கரை நோய்க்காக கடந்த 10  ஆண்டுகளாக மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். அவற்றுடன் தைராய்டுக்கான மாத்திரையும் சாப்பிடுகிறேன். இரவில் தூங்கும்போது வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. காலையில் பல் துலக்கிய பிறகு, துர்நாற்றம் இல்லை. இந்தக் குறை எதனால் ஏற்படுகிறது?

-வி.மீனாட்சி, தஞ்சாவூர்


"விஸ்ரம்' எனும் துர்கந்த அல்ல, துர்நாற்ற வீச்சம்  குணத்தை பித்தத் தோஷம் மட்டுமே கொண்டுள்ளது. இரவில் உண்ட உணவை செரிப்பதற்காக, பித்தத் தோஷத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசான தன்மை, துர்கந்தம், நீர்த்தன்மை ஆகியவற்றை செலுத்தும்போது அதிலுள்ள நெருப்பும் காற்றும் மேல்நோக்கும் தன்மையை இயற்கையாகவே பெற்றிருக்கிறது. இதனால் வாயினுள் துர்நாற்றம் நிரம்புகிறது.

இந்த இரு பூதங்களுக்கு எதிரான நிலம், நீரின் அம்சம் நிறைந்த உணவு வகைகளை நீங்கள் இரவு உணவாக அருந்தினால் துர்நாற்றம் ஏற்படாது. ஆனால் இவற்றால் சர்க்கரை உபாதையும், தைராய்டு உபாதையும் மேலும் அதிகரித்துவிடும் என்பதால்,  அவற்றை உங்களால் ஏற்க இயலாது.

கைவசம் உள்ள ஒரே உபாயம், பித்தத்தின் இந்த இயற்கையான மேல் நோக்கிச் செல்லும் குணத்தைக் கீழ் நோக்கி செலுத்தி, மலம் வழியாக வெளியேற்றுவதுதான்.

திரிபலையில் அடங்கியுள்ள கடுக்காய்,  நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணத்தை சுமார் 200 மி.லி. தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து, 100 மி.லி.யாக வற்றியதும் வடிகட்டி, இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பாக வாயினுள்விட்டுக் கொப்பளித்து, உள்ளுக்குள் குடித்துவிடலாம். இதனால் மறுநாள் காலையில் ஏற்படும் மலக்கழிவில் பித்தத் தோஷத்தின் துர்க்த குணச் சீற்றமானது விரைவில் வெளியேறிவிடும்.

புளிப்பாகி மேலே பொங்கி வரும் இட்லி, தோசை மாவு போன்றவற்றை இரவில் நீங்கள் பயன்படுத்தக் கூடாது. வயிற்றினுள் நடக்கும் செரிமானத்தில் அவற்றின் புளிப்புத் தன்மையால் பித்தச் சீற்றம் ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மாற்றாக, கோதுமை, ரவை, உப்புமாவோ, சப்பாத்தியோ சின்ன வெங்காயத்துடன் சேர்க்கப்படாத  பச்சைப்பயிறு கூட்டு தொக்கு சாப்பிடுவதற்காகப் பயன்படுத்தலாம். 

வெள்ளை அவலை தண்ணீரில் அலசியபிறகு உப்புமாவாகக் கிளறி இரவில் உண்டவுடன் நூறு அடியாக நடப்பதையும் இடது பக்கமாகச் சரிந்து படுப்பதையும் வழக்கமாகிக் கொள்ளவும். 

ஆயுர்வேதப் பற்பொடிகளால் இரவில் பல் துலக்குவதையும், வெந்நீர் விட்டு வாய் கொப்பளிப்பதையும் நீங்கள் செய்துவருவதால் நன்மை பெறலாம்.

பிஞ்சு கடுக்காய், சூரத்தாவரை, விதை, ரோஜாமொக்கு, சுக்கு ஆகியவற்ரை பெருந்தூளாகச் சம அளவில் எடுத்துப் பொடித்து, சுமார் 200 மி.லி. வெந்நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை வடிகட்டிக் குடிப்பதால் பித்தச் சீற்றத்தைக் கீழடக்கி, ஆசன வாய் வழியாக வெளியேற்றுவதே நல்லது.

ஆயுர்வேத மருந்துகளால் சங்கபஸ்பம்  எனும் கேப்ஸ்யூல் மருந்தை இரவு மட்டும் ஒன்று கணக்கில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வரலாம். வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் கசப்பு, துவர்ப்பு வகை உணவுகளால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இரு வகை உபாதைகளையும் குணப்படுத்திக் கொள்வதுடன் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com