தாம்பத்யம்

அந்தச் சம்பவம் என்னை உறைய வைத்து விட்டது. அப்போது கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துகொண்டிருந்தேன்.
தாம்பத்யம்

அந்தச் சம்பவம் என்னை உறைய வைத்து விட்டது. அப்போது கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துகொண்டிருந்தேன்.

திருச்சியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் எனது கிராமம். அப்பா பள்ளி ஆசிரியர். அம்மா இல்லத்தரசி. மனம் ஒப்பிய தம்பதியர். அண்ணா, அக்கா, நான் என இனிய குடும்பம். பள்ளிப் படிப்பை நான் முடித்தபோது, தந்தை இறந்துவிட்டார்.
இரவு 2 மணிக்கு நெஞ்சு வலி வந்தது. காலையில் திருச்சிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் தீர்மானித்திருந்தனர். ஓர் ஆசிரியர் தனது தம்பிக்கு தொலைபேசியில் பேசி, காலை 6 மணிக்கு கார் கொண்டு வரச் சொன்னார். ஆனால் இரவு 3 மணிக்கெல்லாம் முடிந்து போய்விட்டது. உயிர் பிரியும் தருணம் அம்மா, அண்ணா, அக்கா, நான், பிற ஆசிரியர்கள் அனைவரும் அருகில் இருந்தோம்.

மாரடைப்போ என்னவோ; உயிர் பிரிந்துவிட்டது. குடும்பம் நிலைகுலைந்தது. அண்ணன் வேறு ஊரில் ஆசிரியராக இருந்தார். அதனால் பொருளாதாரப் பிரச்னை அதிகம் இல்லை. பள்ளியில் முதல் மாணவனாக நான் தேர்வு பெற்றிருந்ததாகச் செய்தி வந்தது. ஆனால் அதை அறிந்து மகிழ தந்தை இல்லை.

திருச்சி கல்லூரியில் என்னைப் பட்டப் படிப்பில் ஆங்கில இலக்கியப் பிரிவில் சேர்த்தனர். எனக்கு நோஞ்சான் உடம்பு. ஹாஸ்டல் சாப்பாடு ஏற்காது என திருச்சி- உறையூரில் வீடு வாடகைக்குப் பிடித்து அம்மா சமைத்துப் போட நான் கல்லூரிக்குச் சென்று வந்தேன்.

அப்போதுதான் அது நடந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை. கல்லூரி இல்லாததால் நான் எனது அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். இரவு 7 மணி இருக்கும். அம்மா கிராமத்துக்குப் போயிருந்தார். நான் மட்டும் இருந்தேன். அருகிலிருந்த மெஸ்ஸில் சாப்பிட்டு இரண்டு நாள்களை ஓட்டவேண்டும்.

ஹவுஸ் ஓனர் பக்கத்து வீட்டில் இருந்தார். அவர்கள் வீடு பெரிய வீடு, பெரிய ஹால், இரண்டு பெட்ரூம், பெரிய கிச்சன். ஹவுஸ் ஓனர் பெரியசாமி மின்துறையில் அதிகாரி. அவரது மனைவி கற்பகம் இல்லத்தரசி. இரண்டு பிள்ளைகள். பையன் கல்லூரிப் படிப்பு. பெண் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கற்பகத்தம்மா லட்சுமிகரமாக இருப்பார். பெரிய பொட்டு. வீட்டை மிக நேர்த்தியாக வைத்திருப்பார். நாற்காலிகள், அலமாரியில் அலங்காரப் பொருள்கள் எல்லாம் அதற்குரிய இடத்தில் இருக்க வேண்டும்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட போர்ஷன் ஒரு ஹால், சமையலறை, பாத்திரம் கழுவும் போர்ஷன், பாத்ரூம் என்று சிறிய அளவில் இருந்தாலும் எனக்கும் அம்மாவுக்கும் போதுமானதாக இருந்தது. அக்கா, அண்ணா வந்தால் படுக்கக் கொஞ்சம் நெருக்கடிதான். ஊரில் என் அத்தையே அண்ணாவுக்கும், அக்காவுக்கும் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தார். அப்பா இறந்த பின்னர்அண்ணன் உள்ளூருக்கே பணியிட மாற்றல் கேட்டு வந்துவிட்டார்.

எனது படிப்புக்காக அம்மா திருச்சி வந்துதங்கியிருந்தது பெரிய விஷயம். எங்களிடம் பிரியமாக இருந்த கற்பகத்தம்மா எங்களுக்கு ஒரு வரம்தான். ஆனால், கற்பகத்தம்மா வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாகத் தெரியவில்லை. பெரியசாமிக்கும் கற்பகத்தம்மாவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். ஏன் என்று எனக்கு அந்த வயதில் புரியவில்லை. என் அம்மாவுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அம்மா என்னிடம் அதுபற்றிக் கூறியதில்லை.

நான் அன்று படிப்பில் மூழ்கியிருந்தபோது, கற்பகத்தம்மா பதற்றத்துடன் எங்கள் வீட்டுக்குள் வந்தார்.

""தம்பி! கொஞ்சம் எங்க வீட்டுக்கு வா!''
அவர் குரலில் இருந்த கவலை என்னைத் துணுக்குறச் செய்தது.
""என்னம்மா? என்ன ஆச்சு?' என்று கேட்டேன்.
அவள் மீண்டும் அதை சொன்னார்.
""கொஞ்சம் வீட்டுக்கு வா!''

நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கற்பகத்தம்மாவைப் பின் தொடர்ந்து அவர்களது வீட்டுக்குள் நுழைந்தேன். பிள்ளைகள் இரண்டு பேரும் டியூஷனுக்காக வெளியே போயிருந்தார்கள்.

பெரியசாமி புத்தர் போல ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். வாய் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தது. கண்கள் சிவந்திருந்தன. அவர் எதிரே கற்பகத்தம்மாவின் சேலைகள் நாலைந்து கிடந்தன. அவை எரிந்துகொண்டிருந்தன. புகைமூட்டம், நெருப்பின் வாசனை அந்த ஹாலை நிறைத்திருந்தது.

""ஒழியட்டும்! எல்லாம் ஒழியட்டும்!'' என்று கத்தினார்.

கற்பகத்தம்மா அமைதியாகத் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

""இப்போ சேலைகள்; அப்புறம் நீ'' என்று கோபம் கலந்த குரலில் அவர் உரக்கக் கத்தியபோது, என் அடிவயிற்றில் ஏதோ வலி ஏற்பட்டதுபோல் உணர்ந்தேன்.

சட்டென்று சமையலறைக்குள் பாய்ந்து அங்கு குடத்தில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து வந்து எரிந்துகொண்டிருந்த சேலைகள் மீது ஊற்றினேன். பக்கத்தில் வாளியில் வைத்திருந்த தண்ணீரையும் கொண்டுவந்து ஊற்றியதும் நெருப்பும் புகையும் ஓரளவு மட்டுப்பட்டன.

அவர் அருகே சென்று, ""சார்... என்ன இது! வாங்க! பேசாம படுங்க'' என்று அவரது தோள்களை உலுக்கி எழுந்திருக்கச் சொன்னேன்.

""உனக்குத் தெரியாது. நீ போப்பா. எல்லாம் எரியணும்'' என்று முணுமுணுத்தார். அவர் உடல் நடுங்கியது. ஆ னால், ஏனோ என் சொல்லுக்குக் கட்டுப்பட்டார். அவரை அரவணைத்து அழைத்துச் சென்று பெட்ரூமில் இருந்த கட்டிலில் படுக்க
வைத்தேன்.ஆனால் வாய் ஏதேதோ முணுமுணுத்தபடியே இருந்தது. சரியாகப் புரியவில்லை. ஆனால் அவருக்கும் கற்பகத்தம்மாவுக்கும் கடுமையான சண்டை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

இப்படிப்பட்டகாட்சிகளை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. ஆதலால் என் உடலும் கடுமையாக நடுங்கியது.

""அம்மா! நீங்க பேசாம உக்காருங்க!'' என்று சொல்லி அவர்களைஅங்கிருந்த சோபாவில் உட்காரச் செய்து, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து குடிக்கச் சொன்னேன். அவரும் அதைக் குடித்த பின்னர் அயர்ச்சியோடு சோபாவில் வந்து உட்கார்ந்திருந்தார். ஒன்றும் பேசவில்லை.

இவர்களை இப்படியே விட்டுவிட்டுப் போகக் கூடாதென்று நானும் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.

அரை மணி நேரத்தில் பையன் வந்தார். எரிந்து சாம்பலாகிக் கிடந்த புடவைகளையும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துவிட்டு அவனது ரூமுக்குள் போய்விட்டார்.

நான் அவரது செயலைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்தேன். பின் மெல்ல நகர்ந்து என் வீட்டுக்குள் வந்துவிட்டேன். மெஸ்ஸூக்குப் போய் சாப்பிட வேண்டும். போய் சாப்பிட மனமில்லை. படுத்து விட்டேன்.

""ஒழியட்டும்! எல்லாம் ஒழியட்டும்'' என்ற ஆங்காரக் குரல் வீடு முழுக்க ஒலிப்பதுபோல் உணர்வு. புரண்டு புரண்டு படுத்தேன். கற்பகத்தம்மாவை நினைக்கப் பாவமாய் இருந்தது. பெரியசாமி மேற்கொண்டு எதுவும் எசகுபிசகாக செய்துவிடக் கூடாது என்றஅச்சம் எனக்குள் பரவியது.

சேலைகளைப் போட்டு எரித்ததுபோல் கற்பகத்தம்மாவையும்...' என்று எண்ணியபோது உடல் பதறியது. வியர்த்துக் கொட்டியது. என்னவோ நடக்கக் கூடாதது நடந்துவிடுமா என்று மனது தடக் தடக்கென்று அடித்துக் கொண்டது. படுத்திருக்க முடியவில்லை. மெல்ல எழுந்து கற்பகத்தம்மா வீட்டருகே சென்று
கதவில் காதை வைத்துக் கேட்டேன். ஆளரவம் ஏதுமில்லை. விளக்குகள் எரியவில்லை. பேசாமல் திரும்பிவந்து படுத்துக்கொண்டேன்.

மனம் சும்மா இருக்குமா? நான் படுத்திருந்தாலும் மன எண்ணங்கள் பெரிய சாமியையும் கற்பகத்தம்மாவையும் எரிந்துகொண்டிருந்த சேலைகளையும் சுற்றி சுற்றி வந்தன. அவர்களுக்குள் என்ன பிரச்னை? எல்லாவற்றையும் அழிக்கத் துடிக்கும் எண்ணம் பெரியசாமிக்கு ஏன்வந்தது? புரண்டு புரண்டு படுத்தேன்.

ஒரு கணவன்- மனைவிக்கு இடையேயான உறவு என்பது மெல்லிய திரைச்சீலை ஒன்றினால்தான் பிரிக்கப்பட்டிருக்கும். அது ஒன்றும் தகர்க்க முடியாத சீன நெடுஞ்சுவர் அல்ல. அந்தத் திரைச்சீலையை ஒதுக்கிவிட்டு ஒருவர் மற்றவரின் இடத்துக்குள் சென்றடைந்துவிட்டால், அந்தத் தடையை எளிதில் நீக்கிவிட்டு ஒன்றிணைந்துவிடலாம். ஆனால் இந்தக் காரியத்தை மூன்றாவது மனிதர் யாரும் செய்துவிட முடியாது. அவர்களே பரஸ்பர நேசிப்பையும் விட்டுக் கொடுத்து உறவாடும் அன்புணர்வையும் பெருக்கிக் கொண்டுதான் இதனை செயல்படுத்த வேண்டும்.

கற்பகத்தம்மாளுக்கும் பெரியசாமிக்கும் இடையிலான உறவில் விரிசல் எழ எது காரணமாக இருக்குமென என்னால் யூகிக்க முடியவில்லை. அது எனக்குத் தேவையுமல்ல என்று தோன்றியது. ஆனாலும் அவர்களிடையேயான பிணக்கின் கொடூரம் இரவு முழுவதும் என்னை வாட்டி எடுத்தது. இதனை எப்படியாவது முயன்று புரிய வைக்க வேண்டும் என்று என் மனம் புலம்பியது. ஏதோ ஒரு பாறாங்கல்லைத் தூக்கி என்தலையில் வைத்தது போல எனக்குள் பாரம் அழுத்தியது.

அந்த இள வயதில் இது பெருத்த பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது என்பது புரிந்துகொள்ள முடியாத புதிர்தான். அன்பும் நேசமும் கூடிய பெற்றோர்களிடம் வளர்ந்ததால் இந்தக்காட்சிகள் எனக்குள் இனம் புரியாத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

பெரியசாமியைவிடகற்பகத்தம்மா மிகவும் அழகுதான். அவர் முகத்துக்கு இப்படி ஒரு லட்சுமிகரமான சௌந்தர்யவதி மனைவியாக அமைந்தது அவர் செய்த புண்ணியம் என்றல்லவா சொல்ல வேண்டும்.அவருக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை நிரந்தரமான அழகு முகம் கொண்ட கற்பகத்தின்மீது சந்தேகப் பார்வையை ஏற்படுத்தியிருக்குமோ? எப்படியெல்லாமா தறிகெட்டு சிந்தனைகள் ஓடின. காலை 5 மணிக்குத்தான்அசந்து போய் தூக்கம் வந்தது.

காலை 8 மணிக்குதான் எழுந்தேன். கற்பகத்தம்மா வீட்டில் என்ன நடந்திருக்குமோ என மனம் துடித்தது. பெரிதாக ஓலம் ஏதும் கேட்கவில்லை என்ற ஆறுதல் தந்தாலும் அவர்கள் நிலை என்னவென்று அறிய விருப்பம். எழுந்தேன்.

என் போர்ஷனின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

ஸ்கூட்டரில் உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணிக் கொண்டிருந்தார் பெரியசாமி. குளித்து நீட்டாக பேண்ட் ஷர்ட் அணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து புன்னகையோடு இருந்தார். கற்பகத்தம்மாவும் குளித்து முழுகித் திலகமிட்டு லட்சுமிகரமாக ஸ்கூட்டர் பக்கத்தில் டிபன் பாக்ஸ் வைத்த பிளாஸ்டிக் பையோடு நின்றிருந்தார்.

"நான் வரட்டுமா' என்று சொல்லிவிட்டு டிபன் பாக்ஸ் பையை ஸ்கூட்டரில் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.

கை அசைத்து "டாட்டா' என்று சொன்னார் கற்பகத்தம்மா.

அசந்து நின்றேன் நான். கல்லூரி மாணவனாக எனக்கு அப்போதுதான் "தாம்பத்யம்' என்ற சொல்லுக்கு கொஞ்சம் அர்த்தம் புரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com