பார்ட் 2 சீசன்

அப்போது  வந்த கிளாசிக் படங்களுக்கு இப்போது விடாப்பிடியாக சீக்குவல் எடுக்க களத்தில்  நிறைய இயக்குநர்கள் குதிக்கிறார்கள்.  
பார்ட் 2 சீசன்

அப்போது வந்த கிளாசிக் படங்களுக்கு இப்போது விடாப்பிடியாக சீக்குவல் எடுக்க களத்தில் நிறைய இயக்குநர்கள் குதிக்கிறார்கள். இந்த முயற்சியில் வெற்றி - தோல்வி கலவையாக கிடைத்தாலும், அதற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உருவாகியே உள்ளது. அப்படி என்னென்ன படங்களுக்கு பார்ட் 2 விவாதங்கள் நடக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்!

கண்ட நாள் முதல்

இப்போது "கண்ட நாள் முதல்' படத்துக்கான மீட் பற்றி சுட்டுரையில் செய்தி வந்ததால் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தற்போது பிரசன்னா, லைலா, கார்த்தி, இயக்குநர் பிரியா என அந்தப் படத்தின் டீம் மீட் நடந்திருக்கிறது. "கண்ட நாள் முதல்' பார்ட் 2 எடுப்பது பற்றியும் பேசியுள்ளோம் என லைலா, பிரசன்னா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

""இவ்வளவு வருடங்கள் கழித்து நாங்கள் ஒன்றாகச் சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அப்போது நடித்த நாள்கள், பழகிய தருணங்கள் என பல விஷயங்களை நினைத்துப் பேசி மகிழ்ந்தோம். இப்போதும் நினைவிருக்கிறது. நான் முதலிலேயே "அழகிய தீயே' பார்த்ததும், பிரசன்னாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்து விட்டேன். லைலாவை எனக்கு பொதுவாகவே பிடிக்கும். அதனால் அவருக்கு இந்த ரோல் கொடுத்தேன். கார்த்தி எனக்கு நல்ல நண்பர் என்பதால் அவரையும் ஓ.கே. செய்து விட்டேன். அதற்குப் பிறகுதான் பிரகாஷ்ராஜ் கிட்ட சொன்னேன். அப்படி எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டம் செய்து எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் அந்தப் படத்தை எடுத்து முடித்தோம். இப்போது இந்தப் படத்தின் அடுத்த பார்ட் குறித்து பேசியிருக்கிறோம். நிகழ்ந்தால் ரசிகர்களுக்கு நல்ல சினிமா காத்திருக்கிறது'' என்றார் இயக்குநர் ப்ரியா.

96

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த காதல் காவியம் "96'. ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்த இப்படம் பெரிய ஹிட் அடித்தது. படத்தின் டீசர் வெளிவந்த நாளிலிருந்தே படத்துகான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. தவிர, இதில் த்ரிஷாவின் மஞ்சள் சுடிதார், பெண்கள் மத்தியில் பெரியளவில் ரீச் ஆனது. பள்ளிக்கூட நட்பு மற்றும் காதலை அடிப்படையாக வைத்து இப்படத்தை கொடுத்திருந்தார் பிரேம். விஜய் சேதுபதியின் நீண்டகால நண்பர்தான் பிரேம்குமார். தமிழில் ஹிட் அடித்த இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனது. த்ரிஷா தமிழில் நடித்திருந்த கேரக்டரில் தெலுங்கில் சமந்தா நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக இருக்கும் "96' படத்தின் பார்ட் 2 தயாராக இருக்கிறது என தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் உலவுகின்றன. அதற்கான முதற்கட்டப் பணிகளில் இருக்கிறது இயக்குநர் பிரேம் அணி.

வெந்து தணிந்தது காடு

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது சிலம்பரசன் நடித்த "வெந்து தணிந்தது காடு'. கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் சில வருடத்துக்குப் பிறகு வெளியான படம். ஜெயமோகன் கதை, ஏ.ஆர்.ரஹ்மான் இசை பெரிய திட்டமிடல்களுடன் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்போது இந்தப் படத்துக்கான இரண்டாம் பாகம் குறித்த விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. "" கதையை பார்க்கும் போதே 5 வருடங்கள் கழித்து என்ன ஆகும்? அவன் என்ன செய்வான்? என்ற கேள்வி அனைவருக்கும் வரும். அதற்கு பதில் தான் இரண்டாம் பாகம். எனென்றால் 2.30 மணி நேரத்தில் அனைத்தையும் சொல்ல முடியாது. அதை தாண்டியும் எடுக்க முடியாது. எனவே இதற்கு இரண்டாம் பாகம் வேண்டும் என்று முடிவெடுத்தோம். இக்கதை இப்படி முடியாது இதற்கு இது முடிவு இல்லை என்று கூறினேன். அதற்கு சிம்பு, இல்லை இப்படியே முடிக்கலாமா? என்று கேட்டார். உங்களுக்காக வேண்டுமானால் இப்படியே முடிப்பது போல் படத்தை எடுப்போம் ஆனால் அது காட்சிப்படுத்தபடாது. பார்ப்பவர்களுக்கு இரண்டாம் பாகம் வரும் என்று ஒரு எண்ணம் வரும் என்றேன். அது இப்போது அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ளது'' என்றார் கௌதம் வாசுதேவ்மேனன்.

அழகி

தமிழ் சினிமாவில் தங்கர்பச்சானின் "அழகி' படம் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. மண் வாசனை, அழியாக் காதல், இளையராஜாவின் இசை என அந்தப் படத்துக்கு இப்போதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்தப் படத்தின் பார்ட் 2 பற்றி அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. இந்த முறையும் அந்தச் செய்தி கிளம்பியுள்ளது. ""படத்துக்கு "அழகி'ன்னு பெயர் வைத்திருந்தேன். ஆனால், அது வேற யாரோ மலையாள இயக்குநரிடம் இந்தப் பெயர் இருந்தது. ரொம்ப போராடி படத்தோட டைட்டிலும் வாங்கினேன். ஏன்னா, ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் ஒரு தேவதை மாதிரியான "அழகி' இருந்துக் கொண்டுதான் இருப்பாள். ஹிந்தியில படத்தை ரீமேக் செய்யச் சொல்லி கேட்டார்கள். நந்திததாஸ் கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்க வந்தார். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஏன்னா, நகல் எடுக்க முடியாத படைப்பு "அழகி'. பெரிய தொகையை சம்பளமாக தருகிறேன் என்று சொல்லியும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். மொழி தெரியாத இடத்துல பணம் தருகிறார்கள் என்று படம் எடுக்க முடியாது. அழகி பார்ட் 2 பற்றிய திரைக்கதை இல்லாமல் எப்படி இருக்கும். அதுவாகவே அது நடக்கும். நடக்கும் போது பார்க்கலாம்'' என்றார் தங்கர்பச்சான்.

ஆயிரத்தில் ஒருவன்

"ஆயிரத்தில் ஒருவன்' பார்ட் 2 பற்றி சரியான தகவல் சொல்ல மிகச் சரியானவர் இயக்குநர் செல்வராகவன்தான். அவரிடம் பலமுறை "எப்ப சார் ஆயிரத்தில் ஒருவன் பார்ட்-2 எடுக்கப் போறீங்க'ன்னு கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கிளைமாக்ஸில் கார்த்தி தூக்கிட்டு வருகிறக் குழந்தை பெரியவன் ஆனதுக்குப் பின்பு.... என திரைக்கதையை அவர் வடிவமைத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் தனுஷை வைத்து கதையை ஆரம்பிக்க போகிறார் செல்வராகவன். அந்தப் படம் ஏற்கெனவே இன்டர்நேஷனல் தரத்தில் இருக்கிற படம். இப்போது தனுஷ் மிகப்பெரிய இன்டர்நேஷனல் ஸ்டார். இன்னும் அந்தப் படம் பெரிய திட்டமாக மாறும் என்கிறார்கள். இந்த மாதிரி படங்களுக்கு பட்ஜெட்தான் பிரச்னையாக இருக்கும். மீண்டும் அந்தப் படத்தில் கார்த்தி, பார்த்திபன் இருக்க வேண்டும் என்றுநிறைய பதிவுகள் வருகின்றன. தனுஷ், கார்த்தி, பார்த்திபன் என எல்லோருமே இதில் இருக்க வேண்டும் என்ற பதிவுகளும் சுட்டுரையில் வலம் வருகின்றன. எல்லாம் செல்வராகவன் கைகளில்...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com