நேர்கோடு சாய்ந்தால்..!

""என்ன சார்.  கப்பல் கவிழ்ந்த மாதிரி கன்னத்துல கையை வைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க?'' என்று கேட்டுக் கொண்டே வந்தார் பாலு.  அந்த அலுவலகத்தின் கடைநிலை ஊழியர்.
நேர்கோடு சாய்ந்தால்..!


""என்ன சார். கப்பல் கவிழ்ந்த மாதிரி கன்னத்துல கையை வைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க?'' என்று கேட்டுக் கொண்டே வந்தார் பாலு. அந்த அலுவலகத்தின் கடைநிலை ஊழியர்.

""ஒண்ணுமில்லப்பா'' என்று சொல்லிவிட்டு கோப்புகளில் மூழ்க முயன்றார் ராமநாதன். காலையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

""என்ன சார் இது. உங்க முகத்தைப் பார்த்தாலே அப்பட்டமா தெரியுது ஏதோ பெரிய கவலையில இருக்கீங்கன்னு. சொல்லுங்க என்னன்னு'' என்று அன்பு ஆணை பிறப்பித்தார் பாலு.

ஒப்புக் கொண்ட ராமநாதன், ""ஆமாம்பா.. பணப் பிரச்னைதான். என் அம்மாவுக்கு உடனடியா ஆபரேஷன் பண்ணியாகணும். இப்பத்தான் போன் பண்ணினா என் மனைவி. வயிற்று வலி ரொம்ப இருக்காம். டாக்டர்கிட்ட ஏற்கெனவே காட்டி இருந்தோம். கட்டி இருக்கு. மருந்து கொடுத்து கரையலேன்னா ஆபரேஷன் பண்ணனும்னு சொன்னார். இப்ப வலி அதிகமா ஆயிடுச்சாம். டாக்டர் உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாராம். சோதனையா கையில வெறும் இருநூறு ரூபாய்தான் இருக்குன்னா பாரேன். பி.எஃப். பைசா இல்ல. சேமிப்பும் இல்லை. என் ஃப்ரண்ட் மோகன்ராஜை கேட்டேன். அவன்கிட்டயும் இல்லை. பார்க்கிறேன்னு சொன்னான். சாயங்காலம் நான் நேரே ஆஸ்பத்திரி போகணும்'' என்று ராமநாதன் குரலுக்கு அவர் கவலை பக்கவாதம் வாசித்தது.

""கவலையே படாதீங்க சார். வழி பிறக்கும்'' என்று பாலு சொல்லிவிட்டு, ராமநாதனின் டேபிளில் ஒரு காபி கோப்பையை வைத்தார்.

"முதல்ல சூடா காப்பி குடிங்க சார். அப்புறம் இந்த புது ப்ராஜக்ட் சம்பந்தமா யாருக்கு ஆர்டர் கொடுக்கலாம்னு ரெகமண்ட் பண்ணி ஏஜிஎம் டேபிளுக்கு அனுப்பிட்டீங்களா?'' என்று ராமநாதனின் முகத்தைக் கூர்ந்து நோக்கியபடி பாலு கேட்டார்.

""அது விஷயமாத்தாம்பா ஃபைலை எடுத்து டேபிள்ல வைச்சு உட்கார்ந்தேன். கவலையிலே வேலை ஓடலை''

""முடிவு பண்ணிட்டீங்களா சார்?''

" "இல்லப்பா''

""ராமநாதன் சார்.. ..அப்ப கவலையை விடுங்க. உங்க அம்மா ஆபரேஷனுக்குப் பணம் ரெடி''

""என்னப்பா சொல்ற?''

""சார், இந்த மாடர்ன் டெக்னாலஜிஸ் பெயரை ரெகமண்ட் பண்ணி அனுப்புங்க சார்.பார்ட்டி வெயிட்டிங்க். பணத்தோட!''

திடுக்கிட்டார் ராமநாதன்.

"பாலு என்ன சொல்ற! லஞ்சமா? நான் மாட்டேம்பா? என்கிட்ட வந்து என்ன வார்த்தை சொல்ற! ஆளை விடு. கிளம்பு முதல்ல'' என்று ராமநாதனின் முகம் வியர்த்து வழிந்தது,

""சார், நீங்க நேர்மையானவரா இருந்தீங்க? என்ன பிரயோசனம். உங்க அம்மாவோட ஆபரேஷனுக்குப் பணம் கிடைக்கலை. இதான் நேர்மைக்கு கிடைக்கற பலனா? அவனவனப் பாருங்க. ஜாலியா பைசா பார்க்கறான். அதுவும் இல்லாம நீங்களா வலியப் போய் அவங்களைக் கேட்கறீங்களா என்ன? பாக்கெட்டுல பைசாவோட அவன் தான் சார் வந்து ரெடியா நிற்கறான். சொல்றதைக் கேளுங்க சார். அப்புறம் அம்மாவுக்கு ஒரு பிரச்னை வந்தபோது, ஒண்ணும் செய்ய முடியாத பாவியாயிட்டேனேன்னு நீங்க தனியாத்தான் சோகப் பாட்டு பாடணும். யோசிங்க! நீங்க ஒண்ணும் பண்ண வேணாம். அவங்க கம்பெனி பெயரை ரெகமண்ட் பண்ணி மட்டும் அனுப்புங்க! மீதியை நான் பார்த்துக்கறேன். நான் பணத்தை உங்க டேபிள்ல சத்தம் போடாம கொண்டு வைக்கறேன். சாயங்காலம் நேரே ஆஸ்பத்திரிக்குப் போய் அம்மாவுக்கு ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை பண்ணுங்க? உடனே ஃபோன் பண்ணி உங்க மனைவிகிட்ட பணம் ஏற்பாடு பண்ணியாச்சுன்னு சொல்லுங்க சார்'' என்று சொன்னபடியே ரிசீவரை அவர் கையில் திணித்தான்.

""வேணாம் பாலு. வந்து..'' என்று ராமநாதன் நடுங்கினார்.

""அட சும்மா டென்ஷன் ஆகாம இருங்க சார். ஒண்ணும் தப்பு இல்லை. இந்தாங்க போன் பண்ணிவீட்டுக்கு விஷயத்தை சொல்லுங்க'' என்று பாலு கொடுக்க, ரிசீவரை வாங்கிக் கொண்டார். அவன்மனம் திக் ..திக்... என்று அடித்துக் கொள்ள, அவர் கைகள் நம்பரை டயல் செய்ய ஆரம்பித்தன.

அரை மணி நேரத்தில் பாலு, வந்து, ராமநாதனின் டேபிளுக்கு மிக அருகாமையில்வந்து அவர் கையில் பணக் கட்டுகளைத் திணித்தார். அந்த நேரத்தில் அந்த அறையில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

""சார் பணம் பத்திரம். உங்க அம்மா ஆபரேஷனுக்கு. ஜாக்கிரதையா வைச்சுக்குங்க! அங்க பாருங்க!'' என்று கை காண்பித்தார் பாலு. சங்கர் நின்றிருந்தார். மாடர்ன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஊழியர். ""தாங்க்ஸ் சார்'' என்று தூரத்தில் இருந்த படியே சொல்லியபடி அந்த விடத்தைவிட்டு நகர்ந்தார்.

""என்ன பாலு இது. லஞ்சம் என்ற வார்த்தையை நினைக்கறதையே பாவம்னு நினைக்கறவன் நான். இன்னிக்கு நான் லஞ்சம்.. '

""சும்மா மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க சார்! யாருமே பண்ணாததையா நீங்க புதுசா பண்ணிட்டீங்க? நீங்க லஞ்சம் வாங்கலை சார். உங்க கஷ்ட நிலைமைதான் வாங்கிச்சு. அம்மாவுக்கு ஆபரேஷனுக்கு பணம் புரட்டலேன்னா நாம எல்லாம் வாழ்ந்து என்ன சார் பிரயோசனம்''

""நீ என்ன சொன்னாலும், அதுவும் இல்லாம இந்த மாடர்ன் டெக்னாலஜிúஸாட ஒர்க் க்வாலிட்டி அவ்வளவு திருப்திகரமா இல்லையேப்பா. அவங்க பழைய ரெக்கார்ட் சொல்லுதே''

""நீங்க வேற சார். நீங்க நல்ல கம்பெனின்னு சுந்தர் டெக்னோவுக்கே எல்லா ஆர்டரையும் கொடுத்தீங்கன்னா நம்மளை விட்டா ஆள் இல்லைன்னு அவன் ஆட ஆரம்பிச்சுடுவான். மாத்தி மாத்திதான் கொடுக்கணும். சரி சார் ஏஜிஎம் கூப்பிடறார். ஜாலியா இருங்கன்னு சொல்லி விட்டு சிட்டாய்ப் பறந்தார் பாலு.

பாலுவின் பர்ஸ் நிரப்பிய சந்தோஷத்தில்பாடிக் கொண்டே ""உல்லாசமாகவே உலகத்தில் வாழவே.. ..'' சென்றார்.

""என்ன ராமநாதன் சார். செளக்கியமா! வரலாமா'' என்று கேட்டபடியே அவர் எதிரே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார் சங்கர். அதே மாடர்ன் டெக்னாலஜிஸின் ஊழியர்.

""வாங்க.என்ன விஷயம்?''

""உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணிட்டீங்களா. அவங்க செளக்கியா இருக்காங்களா?''

""செளக்கியம். சரி என்ன விஷயமா வந்திருக்கீங்க?' சொல்லுங்க''

""வேற என்ன விஷயமா சார்.. உங்ககிட்ட வருவேன். நெக்ஸ்ட் ப்ராஜக்ட் எக்ஸக்யூட் பண்ற விஷயமா ப்ரபோசல் அனுப்பியிருக்கோமே! பாத்திருப்பீங்களே? இந்தத் தடவையும் எங்க கம்பெனிக்கு ஆர்டரை கொடுக்கச் சொல்லி ரெகமண்ட் பண்ணினீங்கன்னா''

" "வந்துநீங்க இப்படியெல்லாம் அது விஷயமா என்னைப் பார்க்க வரக் கூடாது. பேசக் கூடாது என்ன?'' என்று பதட்டமானார் ராமநாதன்.

""ஏன் சார் டென்ஷன் ஆகறீங்க? போன தடவை நான் கொடுத்த பணம் உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ண யூஸ் ஆகலையா? இதுல என்ன சார் தப்பு. நீங்க எங்க கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்தா நாங்க வேலையை முடிச்சுத் தர்றோம். ரெகமண்ட் பண்ணற உங்களுக்கு சின்ன அன்பளிப்பு. தட்ஸ் ஆல். நீங்க சொன்னா உங்க ஏஜிஎம் மறுத்து சொல்ல மாட்டாராமே. இதுலபாருங்க. நீங்களே ஆல் ரெடி எங்க கம்பெனி பெயரை சிபாரிசு செஞ்சிருக்கீங்களா?, இல்லையாங்கறதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டோம் சார். பணத்தைப் பிடிங்க. ரெகமண்ட்பண்ணுங்க சார். சிம்பிள்..'' என்று அநாயாச தோரணையில் புன்னகைத்தார் சங்கர்.

""சங்கர் ..நீங்க இப்படி..''

""அட நீங்க ஒண்ணு சார். ஒரு தடவை சம்திங் வாங்கியும் இன்னும் பதட்டம் போகலையே சார்.. உங்களுக்கு. பீ கூல் சார்.. ..'' என்று சங்கர் சொல்லியபடியே தன் பாக்கெட்டில் கை விட்டு, ஒரு கவரை எடுத்து ராமநாதனின் பாக்கெட்டில் திணித்தார்.

""போன தடவை கொடுத்ததைவிட கூடவே கொடுத்திருக்கோம் சார். எங்க கம்பெனி பெயரை ரெகமண்ட் பண்ணி அனுப்பிடுங்க. .தாங்க்ஸ் எஞ்ஜாய்.. ..'' என்று சொல்லி விட்டு ராமநாதன் பதிலுக்குக் காத்திராமல் அந்த அறையை விட்டுமின்னல் வேகத்தில் சங்கர் சென்றுவிட்டார்.

அந்த அறையில் நுழைந்தபடி, ராமநாதனின் நெருங்கிய நண்பர் மோகன்ராஜ் உள்ளே நுழைந்தார்.

""நீ எப்ப. மோகன். நீ எப்ப..வந்தே?'' என்று வார்த்தைகள் எல்லா நடனங்களையும் குழைத்து நடனமாடின. அவர் இதயத் துடிப்பு சத்தமாகக் கை தட்டியது. வியர்வைதான் பாராட்டு மழை.

ராமநாதன் அருகில் வந்து அமர்ந்தார் மோகன்ராஜ். அவர் முதுகில் ஆதரவாகக் கை வைத்தார்.

""வெளியே போய் டீ சாப்பிட்டுவிட்டு வரலாமா ராமநாதன்'' என்று மோகன்ராஜ் கேட்க, அனிச்சைச் செயலாய் அடுத்த சில நிமிடங்களில் டீக்கடை வாசலில் நின்றிருந்தார் ராமநாதன்.

""நீ எப்ப வந்தேன்னு கேட்டே இல்ல ராமநாதா?'' என்று இரண்டு டீக்களுக்கு ஆர்டர் செய்துவிட்டு மோகன்ராஜ் கேட்க, ராமநாதன் முகம் அதிர்ச்சியில் நிறம்மாறத் தொடங்கியது.

""ஆ.. .. ..ஆ.. ..மாம்''

" "சங்கர் உன் பாக்கெட்டில் அந்த கவரை.. .. ..''

""மோகன்ராஜ்... நான்...' அதற்கு மேல் ராமநாதனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவர் கண்கள் இருண்டு வர, தலை சுற்றி விழப் போக, அவரைத் தாங்கிப் பிடித்தார் மோகன்ராஜ்.
""ரிலாக்ஸ் ராமநாதா. ரிலாக்ஸ்'' என்று டீயின் சுவையை ரசித்தவாரே பேச ஆரம்பித்தார் மோகன்ராஜ்.
""எப்படி இருந்த நீ எப்படி ஆயிட்ட பார்த்தியாப்பா ராமநாதா?''
""ஐ ஆம் சாரி மோகன்.. சங்கர்தான் என் பாக்கெட்டுல பணத்தை வலிய திணிச்சுட்டுப் போனான். நான்''
" "அதான் பார்த்தேனேப்பா.. ..ஏம்ப்பா இதெல்லாம்...?'' என்று கேட்டுவிட்டு தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு ராமநாதன் முகத்துக்கு நேரே வந்து மோகன்ராஜ் நிற்க, ராமநாதனால் அவர் முகத்தை நேராக பார்க்க முடியவில்லை.
""என்னப்பா இது. நேர்மையா வாழ்ந்த நீ.. ..
இப்படி?''
""போன தடவை என் அம்மா ஆபரேஷனுக்கு பணம் தேவைன்னு நான் கவலையா இருந்தப்போ ப்யூன் பாலுதான் என்னை வற்புறுத்தி, இந்த சங்கர்கிட்ட லஞ்சம் வாங்கிக் கொடுத்து, நானா வாங்கலப்பா?''
""எனக்கு எல்லாம் தெரியும்பா ராமநாதா. நீ நியாயப்படுத்தறியோ இல்ல, வெறும்ன நடந்ததைச் சொல்லறியோ தெரியாது. உங்க அம்மா ஆபரேஷனுக்கு நீ பணம் கேட்டபோது என்கிட்ட சுத்தமா இல்லை. வேற இடத்துல தீவிரமா முயற்சி பண்ணினேன்.''
""அதுக்குள்ள. நீ சங்கர்கிட்ட பணம் வாங்கிக்கிட்டு மாடர்ன் டெக்னாலஜிûஸ ரெகமண்ட் பண்ணிட்டதா கேள்விப்பட்டு அதிர்ச்சி ஆயிட்டேன்.''
""உனக்கு எப்படி தெரிய வந்தது?'' என்று ராமநாதன் கேட்க, உணர்ச்சிகளோடு அவரைப் பார்த்தார் மோகன்ராஜ்.
""சுவர்களுக்கு காதுகள் மட்டும் இல்லை. கண்களும் உண்டுப்பா. போன தடவை ப்யூன் மூலமா உனக்குப் பணம் கொடுத்த அந்த சங்கர், இந்தத் தடவை உன் டேபிளுக்கே வந்து உன் பாக்கெட்டுலயே கை வைச்சுட்டான் பார்த்தியா ராமநாதா. ஒரு தடவை லஞ்சம் வாங்கினதும். உன் மதிப்பு, உன் கம்பீரம், உன்னைப் பார்த்து அவனுக்கு இருந்த பயம் எல்லாம் போயே போச்சேப்பா. அடுத்த தடவையெல்லாம் எப்படி நடந்துப்பான்னு யோசிச்சுப் பார்த்தியா?''
""நீ சொல்றது ரொம்ப சரி மோகன். இன்னிக்கு அவன் என் பாக்கெட்டுல பணம் போட்டபோது, என்னால தடுக்க முடியலை. ..என் மனசே லஞ்சத்தை ஏத்துக்க ஆரம்பிச்சுட்டதோன்னு தோணுது..'' என்று பெருமூச்சு விட்டார்
ராமநாதன்.
""உன் மனசெல்லாம் சங்கருக்கு ஒரு பொருட்டே இல்லப்பா. அதைப் பற்றி அவன் கவலையே படமாட்டான். நேர்கோடா நிமிர்ந்துஇருந்த நீ கொஞ்சம் சாஞ்சுட்ட. அப்புறம் உன்னை அப்படியேபடுக்க வைச்சுடுவாங்க ஜாக்கிரதை.இதோடு இதுக்குமுற்றுப்புள்ளி வை.''
" "இப்ப நான் என்ன செய்யறது. பெரிய தப்புப் பண்ணிட்டேனேப்பா. அம்மாவோட ஆபரேஷன்கறதுனால நான் தப்புப் பண்ணிட்டேன்.. ..என்ன செய்யறது நீயே சொல்லேன்'' என்று அழுத நிலையில் கேட்டார் ராமநாதன்.
அவரைப்பார்த்தார் மோகன்ராஜ்.
""உன் க்ளோஸ் ப்ரண்ட் உன்னைக் கைவிடுவேனா ராமநாதா. இப்ப அவன் கொடுத்த பணம் அப்படியே பத்திரமா இருக்கு இல்ல?''
""அப்படியேஇருக்கு''
""நீ உன் அம்மா ஆபரேஷனுக்கு பணம் கேட்டபோது, நான் எனக்குத் தெரிஞ்ச இடத்தில் கேட்டிருந்தேன்.இப்ப எனக்குக் கிடைச்சிருக்கு. இந்த ரெண்டு தொகையையும் சேர்த்து உடனே அந்த சரவணனைப் பார்த்து அவன் மூஞ்சியில் விட்டெறி. போன தடவை கொடுத்த பணத்தை உன் அம்மா ஆபரேஷனுக்கு கடனா வாங்கினதா நினைச்சுக்கச் சொல்லு. இனிமே உன்னைத் தேடி வரக் கூடாதுன்னு எச்சரிச்சுட்டு வா' என்று மோகன்ராஜ் சொல்ல, கலங்கிய கண்களுடன் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார் ராமநாதன். அந்த அழுகை அவர் நெஞ்ச அழுக்கையையும் கழுவிக் கொண்டிருந்ததைப் போல் தோன்றியது ராமநாதனுக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com