ஒத்திகை

படக்கென்று மாலையும் கழுத்துமாக எழுந்து நிற்கும் எனக்கு இன்னமும் பதற்றமும் படபடப்பும் குறையவில்லை.
ஒத்திகை
Updated on
5 min read


படக்கென்று மாலையும் கழுத்துமாக எழுந்து நிற்கும் எனக்கு இன்னமும் பதற்றமும் படபடப்பும் குறையவில்லை. இப்படித்தான் அடிக்கடி எழுந்துக் கொள்கிறேன். எங்க வீட்டு பெரியவர்கள் இப்போது எனக்கு பொய் வளைகாப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் என் வீட்டுக்காரருக்குத் தெரியாது. ஆதலால், வெளியில் சென்றிருக்கும் அவர் வந்து விடுவதற்குள் இந்தச் சடங்கு, சம்பிரதாயத்தையெல்லாம் விரைவில் முடித்துவிட்டால் பரவாயில்லையென்றுதான் தோன்றுகிறது.
இப்படிச் செய்வது அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஏனென்றால், இதற்குப் பிறகு யாராவது எதாவது சொல்லுவார்கள், அப்புறம் அதையே நினைத்து ஒவ்வொரு நாளும் வருத்தப்படுவேனென்று அவர் வேதனைப்படக் கூடும். அதுமட்டுமல்லாது, அந்த நேரத்தில் மற்றவர்கள் முன், நான் அசிங்கப்பட்டு, அவமானத்தில் கூனிக் குறுகிப்போய் நிற்பதைப் பார்க்கப் பார்க்க அவருக்கு அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டுதான் வரும். அதைப் பார்க்க என் மனமும் தாங்காது. அதற்காகத்தான் "அவ்வளவுதானா?' என்பதுபோல் அடிக்கடி எழுந்துக் கொள்கிறேன்.
"இப்படியெல்லாம் அடிக்கடி எழுந்திரிக்க கூடாதும்மா? ஒக்காரு?'என்று நலங்கு வைக்க வந்த எங்கப் பெரியம்மா என்னுடைய கையைப் பிடித்து மெதுவாக உட்கார வைத்ததும் படபடப்பாகத்தான் உட்காருகிறேன். அவர்களுக்கும் விஷயம் என்னவென்று தெரியும், இருந்தாலும், ஆறுதலுக்காக அப்படிச் சொல்கிறார்கள். உண்மையிலே மாசமாக இருந்து வளைகாப்பு செய்தால்கூட பரவாயில்லை! சந்தோஷ மிகுதியில் ஆற அமர உட்கார்ந்து சம்பிரதாயங்களையெல்லாம் சந்தோஷமாகச் செய்துக்கொள்ளலாம். அப்படியில்லாமல் செய்வது? எனக்கு ஒருமாதிரி கூச்சமாகத்தான் இருக்கின்றது. குனிந்த தலை நிமிரவேயில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு என்னை அப்படி செய்ய வைக்கிறது. யாரோ என் பக்கத்திலிருந்து என் முகத்தாடையை நிமிர்த்திவிடுகிறார்கள். எனக்கு எதிரிலிருப்பவர்களை நிமிர்ந்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது.
உச்சிவெயில் ஏறிக்கொண்டிருப்பதாலா அல்லது படபடப்பினாலா என்று தெரியவில்லை, வியர்த்து கொட்டுகிறது. அதை எனது தாயார் அடிக்கடி துடைத்துவிட்டுக்கொண்டே இருக்கிறார். அதில் அவரது கண்ணீர் துளிகளும் கலந்திருக்கலாம்.
சற்று நேரத்துக்கு முன்தான் என் நாத்தனாருக்கு இங்கு வளையலணி விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தக் கையோடு அதே இடத்தில், குழந்தையில்லாத எனக்கும் பொய் வளையலணி விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மண்டபத்திலே உட்கார்ந்திருப்பவர்களுக்கு இப்போது பார்வையெல்லாம் என் மேல்தான் இருக்கிறது.
"என்ன இது? இதுக்கு முன்னாடி யாருக்கு நடந்தது? இது யாரு? என்ன ரெண்டு தடவை பண்றாங்க?' என்று ஒவ்வொருவரின் பார்வையிலும் வெவ்வேறான சந்தேகக் கேள்விகள் என் பக்கம் நீள்கிறது. அப்படி சந்தேகப்படுபவர்கள் வெகு நேரத்துக்கு மனதை அடக்க முடியாமல், எப்படியும் அங்கம் பக்கத்தில் விசாரித்து தெரிந்துக் கொள்வார்கள்.
அதில் சிலர் "என்னமோ நடக்குது நமக்கென்ன...' என்று எழுந்து சாப்பாட்டுக் கூடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பற்றி எனக்கொன்றும் கவலையில்லை. என்னை பேராசைக்காரியென்று நினைப்பார்களா? இல்லை, குழந்தைப் பைத்தியமென்று நினைப்பார்களா? அல்லது, என் நாத்தானாருக்கு வளைகாப்பு நடப்பதால் பொறாமையில் எனக்கும் வளைகாப்பு செய்ய வேண்டுமென்று போட்டி போடுகிறேனென்று நினைத்துப் பார்க்கிறார்களா? ஒன்றுமே புரியவில்லை.
இதுபோன்று எந்த வளையலணி விழாவுக்குச் சென்று வந்தாலும், நீரில்லாமல் நாராய் மாறிப்போகும் வாழையைப்போல் எனது சோர்ந்துப்போன முகத்தைப் பார்த்து, எதனால் இப்படி இருக்கிறேனென்று கண்டுக்கொண்ட என் கணவர், ""நீ எதுக்கும் கவலைப்படாத கனகவல்லி! நிச்சயம் ஒரு நாள் ஒனக்கும் இதுபோல வளைகாப்பு செய்வாங்க. உன்னோட வலி வேதனை என்னான்னு எனக்குத் தெரியும். மத்தவங்களால அதைப் புரிஞ்சிக்க முடியாது. ஏன்னா? இந்த விஷயத்தைப் பொருத்தவரைக்கும் ஒனக்கென்ன கஷ்டமோஅதுல எனக்கும் பங்குண்டு'' என்று எப்போதுமே நம்பிக்கையூட்டிக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அவருடைய நம்பிக்கையாவது பொய்த்துவிடாமல் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன்.
சொல்லி வைத்ததுபோல் அந்த விசேஷத்துக்குப் போய் வந்த அன்றே, நம்முடைய நெருங்கின சொந்தத்துல யாருக்காவது வளைகாப்பு செய்யும்போது அதோட சேர்த்து ஒனக்கும் செஞ்சா ஒடனே கொழந்த இருக்கும்னு? அத்தைக்கு யாரோ சொன்னாங்களாம். அதை ஓங்கிட்ட சொன்னா? நீ எதாவது தப்பா நெனைச்சிப்பியோன்னு அவுங்க என்கிட்ட சொல்றாங்க. "ஐயோ! புள்ளைக்கு இன்னும் ஒன்னுமில்லையே' என்று மனதில்போட்டு மருகினாலும், அம்மா அதை வெளியேக் காட்டிக்கொள்ளாமல், கவலைத் தோய்ந்த குரலில், "நானே ஒனக்கு பொய் வளைகாப்பு செய்யறேம்மா? என்று சொல்லும்போது நடுங்கிய குரலில் கலங்கிப்போன கண்களோடு என் தலையை தடவிக்கொடுத்தாள்.
அம்மா சொன்ன விஷயத்தை என்னவரிடம் பேச்சுவாக்கில் சொல்லிப்பார்த்தேன். எப்படி நான் அப்படியெல்லாம் பொய்யா வேஷங்கட்டிக்கிட்டு நிக்கறது' என்று சொல்லும்போதே தொண்டைக் கட்டிக்கொண்டதுபோல் வார்த்தையே வெளியே வரவில்லை. சூழ்நிலையைப் புரிந்துக்கொண்டவர், என் தோள் மீது கை வைத்தவாறு, அம்மா அப்படி சொன்னாங்கன்னு கவலைப்படாத, அவுங்கெல்லாம் அந்தக் காலத்து மனுசாள் அப்படித்தான் இருப்பாங்க. ஒங்கத்தை சொன்னதைதான் அவுங்க ஒங்கிட்ட பகிர்ந்துக்கிட்டாங்க! அதுக்காக நீ வருந்தாத என்ன! என்று உற்சாக மூட்டுவார். அவர் கொடுக்கிற தைரியத்தில்தான் இன்னமும் நான் நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
நானும் ஒரு பெண்தான், என்னாலும் குழந்தையைப் பெற்றுத்தர முடியுமென்று என்மேல் நம்பிக்கை வைத்து என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, என்னை கெளரவமாக வைத்திருக்கும் என் குடும்பத்தாருக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கின்றேன். அப்படியிருக்கும்போது இங்கிருப்பவர்கள் என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக்கொள்ளட்டும், அதற்காக நாம் ஏன் கவலைப்படவேண்டுமென்று மனம் தெளிய நினைத்தாலும், இன்னும் அந்த சோடை போகவில்லை. இந்த நேரம் அவர் இங்கே இருந்திருந்தால் எல்லோர் முன்னும், நான் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு அவமானத்தில் கலங்கிப்போய் நிற்பதை, அவரால் தாங்க முடியாதென்றுதான், எனது மாமியார் அவரை நாட்டு மருந்துக் கடைக்கு அனுப்பி என்னமோ வாங்கி வரச்சொல்லியிருக்கிறார்கள். அவர் வெகு தூரம் சென்று வருவதற்குள். அவரது வரவுக்கு முன், எல்லா சடங்கு சம்பிரதாயங்களையெல்லாம் வேக வேகமாகச் செய்துவிட்டால் அவர் மனமாவது காயமாகாமலிருக்குமேயென்றுதான் நினைக்கின்றேன்.
"அரச மரத்தை சுத்தி வந்து எவளோ.. அடி வயித்த தொட்டுப் பாத்தாளாம். அப்படியிருக்குது.. இதுங்க கதை'என்று எனக்குப் பின்னிருந்து ஒரு பெண்மணியின் குரல் கேட்கிறது. அவர்கள் என் நாத்தனார் வீட்டு வகையறாக்கள் என்றுதான் நினைக்கின்றேன். அவர்கள் வீட்டுப்பெண்ணுக்கு செய்தப்பின்னர் எனக்கு இப்படிச் செய்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. வளைகாப்பு செய்திருக்கும் தன் பேத்திக்கு எதாவது ஆகிவிடப்போகிறதென்ற பயத்தில்தான் அப்படிச் சொல்கிறார்கள். எனக்கும் அந்தப் பயம் இருக்கத்தான் செய்கிறது. எனக்காக இந்தப் பரிகாரம் செய்யப்போய் அந்தப் பிள்ளைக்கு பிரசவத்தில் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாதென்று கடவுளையெல்லாம் வேண்டிக்கொள்கிறேன். அப்படி எதாவது, இயற்கையாக அவளுக்கு தொந்தரவு வந்தால்கூட, "எல்லாம் இவளால வந்தது !' என்று வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவுல் கிடைத்ததுபோல் எல்லோரும் என்னைத்தான் கருக்கிக் கொட்டுவார்கள். இப்படி யாராவது எதாவது சொல்லிவிடுவார்களென்றுதான் என் கணவரும், எதுக்குப்பா, தேவையில்லாம அவுங்க சாவனையெல்லாம் நம்ம வாங்கிக்கொட்டிக்கணும் என்றுதான் அச்சப்படுவார்.
அதற்காகத்தான் இப்போதுகூட என் நாத்தனார் உட்கார்ந்த நாற்காலியில் உட்காராமல், வேறு ஒரு நாற்காலியில் எங்கப்பாவின் வேட்டியைப்போட்டு அதன்மேல்தான் உட்கார்ந்திருக்கின்றேன். எனக்கு வளைகாப்பு செய்வதற்காகவே எல்லாப் பொருள்களும் புதிது புதிதாகவே எங்கம்மா வாங்கி வைத்திருக்கிறார்கள்.
"ஒங்கம்மாவுக்குத்தான் ஒன்னுந்தெரியலை! அவதான் படிக்காதவன்னா! ஒனக்கும்மா ஒன்னுந்தெரியாது? நீ படிச்சப் புள்ளதானே? இந்த நம்பிக்கையெல்லாம் நீ நம்பறியா? அப்ப நீ படிச்ச படிப்பெல்லாம் வேஸ்ட்தான் போ' என்று அந்தத் தரப்பில் என் காதில் விழுவதுபோல் சுடு சொற்களைச் சொல்லத்தான் செய்கிறார்கள். அது, முழுகாமல் இருக்கும் அந்த பெண் மீது காட்டும் அக்கரையில் இப்படியெல்லாம் நெருப்புத் துண்டுகளாக நெஞ்சில் வந்து விழத்தான் செய்கின்றன. ஏற்கெனவே இந்தப் பிரச்னை நெருப்புக்கட்டிகளாக மனதில் கனன்றுக் கொண்டிருக்கும்போது அவற்றை இன்னும் கிளறிவிடுவதுபோல்தான் அவர்களது வார்த்தைகள் இருக்கின்றன.
"அதற்கெல்லாம் இப்போது நான் பதிலளிக்க முடியாது. இந்த நேரத்தில் நான் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தால் ஆத்திரத்தில், அடுத்தவங்க செஞ்சிக்கிட்ட எடத்துலே, அப்படி ஒன்னும் எனக்கு வளைகாப்பு செய்யணும்னு அவசிமில்ல.' என்று மாலை மரியாதையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு போயிருந்திருப்பேன். ஆனால், நான் அறிவுக்கு இடம் கொடுக்கின்றேன். ஏதோ இந்தப் பரிகாரத்தில் ஒரு உண்மையிருக்க வேண்டும். அப்படியில்லாமலா.. நம் முன்னோர்கள் இப்படியொரு பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்? அதுவும் இன்றுவரை இப்பழக்கம் நடைமுறையில் இருக்கிறதென்றால், அவர்கள் என்ன நினைத்து ஆரம்பித்து வைத்தார்களோ! அது சிறப்பாக நடந்துக்கொண்டு இருக்கிறதென்றுதானே அர்த்தம். அப்படி நடக்கவில்லையென்றால் எப்படி இந்தப் பழக்கத்தை தொடர்ந்துக் கடைப்பிடிப்பார்கள்? என்று என் மனதை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். என்ன செய்வது? எதைத் தின்றால் பித்தம் தெளியும், என்கிற மனநிலையில்தான் இப்போது நானும் இருக்கிறேன்.
பெண்ணாகப் பிறந்த அத்தனைப் பேருக்கும் இருக்கிற சராசரியான ஆசைதான் எனக்கும் இருக்கிறது. அதுவே நாளாக நாளாக குழந்தை பெறுவது மட்டுமல்ல! மலடிங்கற பட்டத்தை துறப்பற்கே, என் மனம் படாத பாடுபடுகிறது. அதற்காக, இதுபோன்ற நம்பிக்கையான விஷயத்தையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? அப்படிச் செய்தால் உடனே உன்னுடைய பிரச்னையெல்லாம் சரியாகிவிடுமா? என்றுகூட கேட்கலாம்.
கடந்த பத்து வருடமாக நாங்கள் பார்க்காத டாக்டர் இல்லை. செய்யாத வைத்தியமுமில்லை. எங்கு சென்றாலும், இருவருக்கும் உடலளவில் எந்தப் பிரச்னையுமில்லை! அப்படியிருக்கும்போது இன்னும் ஏன் உங்களுக்கு குழந்தைப் பிறக்கவில்லையென்றுதான் தெரியவில்லையென்று மருத்துவர்களே ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள். இப்படியே ஒவ்வொரு டாக்டரிடமும் பார்த்துப் பார்த்து அதோடு சேர்ந்து எங்களது இளமையும் போய்விட்டது. அதனால்தான், பெரியவர்கள் சொல்லும் இதுபோன்று நம்பிக்கை வாய்ந்த விஷயத்துக்கும் வெட்கத்தைவிட்டு ஒத்துக்கொள்ளதான் வேண்டியிருக்கின்றது.
சிலர் எங்களிடமே, இதைப்போய் இவர்களிடம் சொல்கிறோமே அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்றெல்லாம் நினைக்காமலே, கல்யாணமாகி பத்தே மாசத்துல இவன் பொறந்துட்டான் அவளும் அப்படித்தான். எங்களுக்கெல்லாம் தொட்டாலே ஒத்திக்கும், பாத்தாலே பத்திக்கும் என்று தங்களுடைய திறமைகளை, அருமை பெருமையாக எடுத்துச் சொல்வார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் ரொம்ப பலசாலிகள் போலவும், எங்களைப் போன்றவர்கள் அதற்கு லாயக்கற்றவர்கள்போல்தான் பேசுவார்கள்.
அதுபோல் நினைப்பவர்களுக்கு மத்தியில், இப்போது இதுபோன்ற செயல்கள் ஏளனமாகத்தெரியும். ஏதோ விளையாட்டு காட்டுவதுபோல் எனக்கு முன் வந்து கைகட்டி நின்றுக்கொண்டு சிரித்தவாறு வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு என்னோட வலியும் வேதனையும் எங்கேத் தெரியப்போகிறது. அப்படித் தெரிஞ்சிருந்தால், இங்கே இந்த வளைகாப்பு செய்யப் போகிறார்கள் என்பதை முன்பே தெரிந்துக் கொண்டவர்கள். காலையிலே என்னிடம் வந்து, "என்னம்மா இன்னும் ஏம்மா புள்ளப் பெத்துக்காமயிருக்க?'' என்றார்கள்.
நான் என்னமோ திட்டம்போட்டு தள்ளி வைத்திருக்கின்றேன் என்பதுபோல் கேட்டார். அவர்களுக்கும் தெரியும் அப்படியில்லையென்று இருந்தாலும், "ஒரு கொழந்தைய பெத்தெடுக்க வக்கில்ல...இங்க வந்து இதை செய்ய வந்துட்டா' என்பதைத்தான் அவர் சொல்லாமல் சொல்கிறார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு மூத்தப் பெண்மணி, "ஏம்மா ரொம்ப கஷ்டப்படுற? ஒரு கொழந்தைய தத்துயெடுத்து வளத்துக்கேயன்?' என்று சொன்னார்.
இந்த யோசனையெல்லாம் குழந்தை வேண்டுமென்று கோயில், கோயிலாய், ஆஸ்பிட்டல், ஆஸ்பிட்டலாக அலைபவர்களுக்கு தெரியாதா? தெரியும்! தெரிந்தும் நமக்கென்று ஒரு குழந்தை! அது நம் குழந்தையாக இருக்காதாயென்றுதான், உடலில் தெம்பிருக்கும் வரை இதுபோன்ற முயற்சியை தொடர்ந்துக் கொண்டிருக்கின்றோம். அது புரியாமல், "இந்த ஆஸ்பத்திரிக்கு போ' அந்த ஆஸ்பத்திரிக்குப்போ' என்று இலவச ஆலோசனைகளெல்லாம் செய்வார்கள். அது இன்னும் ஆன்மாவை இரண்டாகப் பிளப்பதுபோன்று ஒரு வலி பிறக்கும். அதைவிட்டுவிட்டு அவர்களே வலிய வந்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது எந்த விதத்தில் நியாயம்?
"இங்கப் பாரும்மா' என்று என்னுடைய சிந்தனைகளையெல்லாம் கலைத்து என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள்.
அடுத்து வெள்ளி வளையல் போடுகிறார்கள். அதற்கடுத்து அங்கிருக்கும் எங்கள் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் இரண்டிரண்டு கண்ணாடி வளையல்களைப் போட்டுவிடுகிறார்கள். ஜல்ஜல்
என்னும் கண்ணாடி வளையல்களின் சத்தம் என் காதில் மழலையின் ஒலியாய் கேட்கிறது. சந்தனத்தை தொட்டு என் இரண்டு கன்னத்திலும் தடவுகிறார். குழவியை எடுத்து, ரெண்டு கையையும் சேத்து வையும்மா என்று என் பெரியம்மா சொன்னதும், இரண்டு கையையும் சேர்த்து வரம் வாங்குவதுபோல் காண்பித்ததும், அந்தக் குழவியைக் கைகளில் மூன்று முறை கொடுத்து வாங்கிக்கொண்டு கீழே வைத்து விட்டாள்.
பிறகு வாழைப்பழத்தை பிரித்து சர்க்கரையில் தொட்டு எனக்கு ஊட்டி விடுகிறார். இப்படியே எல்லோரும் செய்து முடித்ததும், ஒருவர் ஒரு சர்வ சட்டியில் மஞ்சள் சுண்ணாம்பு போட்டு ஆலம் கரைத்து, அதன்மேல் வெற்றிலையும், சூடம் வைத்து இப்படியும் அப்படியும் மூன்று முறை சுற்றியவர், அதிலிருந்த கரைசலை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் திலகமிட்டுவிட்டு வெளியே எடுத்துச் செல்கிறார்.
அப்போது அருகிலிருந்த பெரியம்மாதான், "மெதுவா எழுந்து நில்லும்மா' என்றார். எழுந்து நிற்க முற்படும்போது உண்மையிலே முழுகாமலிருப்பதுபோன்று எனக்கொரு கிறுகிறுப்பு ஏற்படுகிறது. உடனே பிள்ளையார் துண்டை என் இடுப்பில் கங்காரு பையைப்போல் கட்டிவிட்டு அதில் நிறைய வாழைப்பழங்களை போட்டுவிட்டனர்.
"ம்மா! இப்படியேப்போய் எல்லாப் புள்ளைங்களுக்கும் ஒவ்வொரு வாழைப்பழத்தை எடுத்துக்குடுடா?' என்று சொல்லி அனுப்புகிறாள். உண்மையாகவே நானும் உண்டானவள்போல்தான் அடிமேல் அடி வைக்கின்றேன்.
வாழைப்பழ வயிற்றோடு கண்ணில்படும் குழந்தைகளுக்கெல்லாம் ஆசை ஆசையாக ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். அப்போது நானே எதிர்பார்க்கவில்லை என் கண்முன்னே என்னவர் வந்து நிற்பதுபோல் தெரிகிறதேயென்று நிமிர்ந்துப் பார்க்கிறேன். சத்தியமாக அவரேதான். அடிவயிறே அரண்டுப்போகிறது. மூச்சு முட்டுகின்றது. என்னுடைய இந்த வளைகாப்பு கோலத்தைக்கண்டு கண்களில் கண்ணீர் முட்டி என்னைப் பாவமாகப் பார்கிறார்.
"நிச்சயம் ஒரு நாள் ஒனக்கும் இப்படி செய்வாங்கன்னு சொன்னீங்கல்ல! அதுக்கு இது ஒத்திகைமாதிரின்னு நெனைச்சுக்கோங்க' என்பதுபோல் அவரது கண்ணையே பார்க்கிறேன். வெகு நேரத்துக்கு என்னால் சாதாரணமாக இருப்பதுபோல் நடிக்கமுடியவில்லை.. நானும் பெண்தானே! இப்போது அவரைக் கட்டிக்கொண்டு ஓ..வென்று தேம்பித் தேம்பி அழ வேண்டும்போல்தான் தோன்றுகிறது. என்னால் வேறு என்ன செய்ய முடியும்! சொல்லுங்கள்?.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com