ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உண்ணும் உணவு செரிக்க...!

"கிராணி' எனும் உபாதைக்கான அறிகுறிகள் இவை. உணவு சரிவர செரிப்பதில்லை எனக் கூறும் தங்களுக்கு லங்கணம் எனும் பட்டினியிருத்தல் என்ற சிகிச்சையை செய்ய வேண்டும்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உண்ணும் உணவு செரிக்க...!


என் வயது 31. உண்ணும் உணவு சரிவர செரிப்பதில்லை. வயிறு உப்புசம், உடல் எடை மற்றும் தெம்பு குறைதல், அஜீரணம், மன அழுத்தம், தோல் வரட்சி, தொண்டை மற்றும் வாய் வரண்டு போதல், காதினுள் இரைச்சல், உடலுறவில் நாட்டமின்மை போன்ற உபாதைகளால் அவதிப்படுகிறேன். இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?

-வாசுதேவன்,
சேலம்.

"கிராணி' எனும் உபாதைக்கான அறிகுறிகள் இவை. உணவு சரிவர செரிப்பதில்லை எனக் கூறும் தங்களுக்கு லங்கணம் எனும் பட்டினியிருத்தல் என்ற சிகிச்சையை செய்ய வேண்டும்.

அதாவது காலையில் உணவேற்காமல் பட்டினியிருந்து, பஞ்ச கோலம் எனும் திப்பிலி, திப்பிலி வேர், சவ்யம், கொடுவேலி வேர்ப்பட்டை மற்றும் சுக்கு ஆகியவற்றின் சூரணத்தை மூன்று சிட்டிகை அளவு எடுத்து, சிறிது சூடான தண்ணீருடன் கலந்து காலையில் சாப்பிட, உணவின் செரிமானப் பகுதியிலுள்ள அடைப்பு ஏதேனுமிருந்தால் அவற்றை அகற்றி, பசியை ஏற்படுத்தும் நீர்த்திரவங்களின் சுரப்பானது இரைப்பையின் உட்புற சவ்வுகளின் வழியாக மேம்படுத்தித் தரும். அதன்பிறகு பசி ஏற்படத் தொடங்கிவிடும்.

புழுங்கலரிசிக் கஞ்சியை வடித்து, கஞ்சித் தண்ணீரில் சிறிது உப்பு கலந்து, மோர்விட்டுக் குடிக்க, செரிமானக் கேந்திரம் முழுவதும் சுறுசுறுப்பாகிவிடும். செரிமான இறுதியில் இனிப்பான சுவையாக மாறிவிடும். மோரின் தன்மை பால் பித்த தோஷமானது கிளரி விடப்படாமல் அமைதியான முறையில் செயல்படும். மோரின் புளிப்பு, துவர்ப்பும் சுவையும் சிறிது சூடான தன்மையாலும் கப தோஷமானது அதிகப்படாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

கிராமப்புறங்களில் சுக்கு, கோரைக்கிழங்கு, அதிவிடயம் மற்றும் சீந்தில்கொடி ஆகிய நான்கு மருந்துகளையும் சம அளவில் எடுத்துப் பொடிப்பார்கள். அதில் 25 கிராம் பொடியில் 400 மி.லி. தண்ணீர் ஊற்றி, 100 மி.லி. காய்ச்சி வடிகட்டி, 50 மி.லி. காலையிலும், மீதியுள்ள 50 மி.லி. மாலையிலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுப்பார்கள்.

இந்தக் கஷாயம் பசியை நன்கு தூண்டி விடுவதுடன் நீங்கள் குறிப்பிடும் "கிராணி' உபாதையின் அத்தனை அறிகுறிகளையும் நீக்கி, குணப்படுத்திவிடும்.

இதைச் செய்து சாப்பிடுவதற்கு உங்களுக்கு நேரமும், பொறுமையும் இல்லாமலிருந்தால், விற்பனையிலுள்ள "தாளிசாதி வடகம்' எனும் கிரானூல்ஸ் (திரித்திரியாக) மருந்தை, சுமார் 5 கிராம் அளவில் ஒரு நாளில் 4-5 வேளைகள் சாப்பிடலாம்.

உணவிற்குப் பிறகு கோரைக்கிழங்கை முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அரிஷ்ட மருந்து இருக்கிறது. சுமார் 30 (முப்பது) மில்லி லிட்டர் காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.

நீங்கள் குறிப்பிடும் உபாதைகளுக்கு வட இந்தியாவில் ""பஞ்சாமிருதா பர்ப்படீ' என்ற பெயரில் ஒரு மருந்தைக் கொடுக்கின்றனர்.

250 மி.லி. மருந்தை சிறிது தேன், நெய்யுடன் கலந்து ஒரு நாளில் இரு வேளை எனச் சாப்பிட்டு, மறுநாள் அதே அளவில் மருந்தில் அதிகப்படுத்தி (500 மி.லி.) சாப்பிடச் சொல்வர். இப்படியாக ஒரு கிராம் வரும் வரை ஒவ்வொரு நாளும் கொடுத்து வருவதால், கிராணி, ருசியின்மை, மூலம், குமட்டல், பேதி, காய்ச்சல், காச நோய், ரத்தக் கசிவு உபாதைகள், கண் சார்ந்த உபாதைகள், உடலுறவில் விருப்பமின்மை போன்றவை குணமாகிவிடும்.

பசியைத் தூண்டு உடல் வலுவையும் கூட்டும். நம்மூர் பக்கங்களில் கிடைக்க வாய்ப்புண்டு.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com