40 ஆண்டுகளாக பழைய மாடல் கார்கள், இரு சக்கர வாகனங்கள் என 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை விவசாயி சேகரித்துள்ளார். நல்ல நிலையில் இயங்கும் இந்த வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களும் அவரிடம் இருக்கின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட சீர்காழி அருகேயுள்ள திருவெண்காடு அக்ரஹாரத்தில் வசிக்கும் விவசாயி சுப்பிரமணியன் (56), இதற்காகத் தனது வீட்டின் பெரும்பகுதியை வாகன நிறுத்துமிடமாகவே மாற்றியுள்ளார்.
பல ஏக்கர் நிலம் விவசாயம் செய்து வரும் அவரை அந்தப் பகுதி மக்கள் " பழைய மாடல் பைக் சுப்பிரமணியன்' என்றே அழைக்கின்றனர். இவரிடம் இந்திய தயாரிப்பு வாகனங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த வாகனங்களும் இருக்கின்றன.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது:
""1982-ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக பழைய வாகனங்களைச் சேகரித்து வருகிறேன்.
இதற்காக, 80 ஆண்டு பழமையான வீட்டை அப்படியே வைத்துள்ளேன். இந்த வீட்டின் பக்கவாட்டில் சுமார் 30 அடி நீளத்துக்கு பெரிய தகரஷெட் அமைத்து வாகனங்களை நிறுத்தியுள்ளேன்.
லேம்பி, லேம்பட்ரா, விஜய் சூப்பர், கரடி ஜாவா, ஜாவா, இன்சைன், லெட்சுமி 48, ராஜ்தூத், பாபிதூத், ரெட்இந்தியன், மேச்சுலன் உள்ளிட்ட பல வாகனங்கள் உள்ளன.
சுமார் 170 பழைய இரு சக்கரவாகனங்கள் உள்ளன. 1950-ஆம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்கள் நிறைய உள்ளன.
அனைத்து வாகனங்களின் என்ஜின்களும் இயங்கக் கூடிய வகையில் இருக்கின்றன. இதற்குத் தேவையான உதிரிபாகங்கள் மட்டும் எனது வீட்டில் நான்கு பீரோக்களில் வைத்துள்ளேன்.
விவசாயப் பணிகள் போக, ஓய்வு நேரங்களில் பழைய வாகனங்களைத் தேடி பிடித்து வாங்குவேன். ஆந்திரம், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களிலும் பயணித்து, வாகனங்களை வாங்கி வருவேன். எனது வருமானத்தின் பெரும் பகுதியை இதற்கே செலவிடுகிறேன்.
எனது தந்தை 25-க்கும் மேற்பட்ட கார்கள் ,பைக்குகள் வைத்தருந்தார். பிற்காலத்தில் வறுமை ஏற்பட்டு அனைத்து வாகனங்களையும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது, சிறுவனாக இருந்த நான், செல்வம் வந்தவுடன் பழைய வாகனங்கள் வாங்கும் எண்ணம்தோன்றியது'' என்றார்.