வலியது அன்பு 

வலியது அன்பு 

""வழக்கம்போல காய்ச்சல்,  தலைவலி  வந்ததா , போனதாதுன்னு இல்லாம, கரோனா  உடலுக்குள்ள  ஒளிஞ்சிருந்து  என்னமோ பண்ணிருச்சு?''

""வழக்கம்போல காய்ச்சல், தலைவலி வந்ததா , போனதாதுன்னு இல்லாம, கரோனா உடலுக்குள்ள ஒளிஞ்சிருந்து என்னமோ பண்ணிருச்சு?'' என சாப்பிட்டுவிட்டு மனைவி, மகனோடு பேசிகிட்டே கைப்பேசியில் மின்னிய தற்போதைய செய்தியை குனிந்து வாசித்தேன்.
தின்ன உணவோடு, மாத்திரைகளுக்காக விழுங்கிய தண்ணீராலும் நிறைந்த வயித்தூரு கண்மாவில் எனது குனிதல் அழுத்தத்தில் அலையலையாய் எழுந்த காற்று மூச்சுத்தசையை அழுத்தியதால் மூளைக்கு ரத்தம் போவதில் சிறு தடங்கல் ஆனது. உட்கார்ந்த நேரத்திலேயே சிலநொடி சரிந்து விட்டேன்.
மகனும், மனைவியும் பதறி எழுந்து என்னைத் தூக்கி நிமிர்த்தினர்.
""என்னாச்சு, இப்ப எப்படி இருக்கு'' என்று பதறலும்,கதறலுமாய் துடித்தனர். அவர்களை அமைதிப்படுத்தினேன். என்ன ஆனதுங்கிறதை அவர்களது பேச்சின் எந்தப் புள்ளியில் நான் நழுவிச் சரிந்தேன் என்பதையும், பயப்பட ஒண்ணுமில்லைனும் சொன்னேன். அவுங்க பார்வையும், பாவனையும் என்னை நொந்துக்கிறாங்களா தைரியப்படுத்துறாங்களான்னு தெரியலை!.
உடனே மகன் மருத்துவரிடம் அழைத்துப் போனான். மருத்துவர் எனக்கு என்னவெல்லாம் பிரச்னைன்னு கேட்டார்.
மின்விசிறியின் கீழோ, குளிர்விப்பான் முன்னோ நின்று பேசும்போது பேச்சிலும், மூச்சிலும் சிறு தடங்கல் ஏற்படுகிறது. வெறும் வயிற்றில் நிமிர்ந்தோ, பின்னால் சாய்ந்தோ உட்கார்ந்தால், சாப்பிட்டவுடன் வயிறு அழுந்தக் குனிந்தாலோ உள்ளிருந்து காற்று அலையலையாய் புரண்டு தாக்கி ஒரு நொடிப் பொழுது சிறு மயக்கம் வந்து, பின் தெளியுது. அந்த விநாடிக்கு முந்திய கணத்தில் பேசியவை கூட நினைவில் இருக்கிறது. கரோனாவுக்கு முன் ஒரு விநாடி நான் சத்தமாகக் கடகடன்னு சிரிச்சாக்கூட வயித்திலிருந்து அடுக்கடுக்காய் வறட்டு இருமல் வந்து சிறுமயக்கம் ஏற்பட்டது. நான் வாயைத் திறந்து சிரிச்சா மனைவி, மகன்கள் பயப்படுவாங்க! மருத்துவரிடம் கேட்டப்ப "ஈஸ்நோபில்ஸ் பிரச்னை; இது ஆஸ்துமாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். நீங்கள் உடலுக்கு ஒவ்வாததைத் தவிருங்கன்னு உள்ளிழுப்பு மருந்து கொடுத்தார் .
ஒரு சின்ன சந்துக்குள் வர்றவனை மோதித் தள்ளிட்டு ரெண்டு பேர் வெளியேர்றது கணக்கா, இப்ப வயித்துக்குள்ளிருந்து ஓயாமப் புரண்டுவரும் ஏப்பமும்,வெளியேறுற மூச்சும், உள்ளே வரும் மூச்சுக்காற்றை தடுத்து மூச்சு திணறவைக்கிறது; மயக்கமும் வர்றமாதிரி தோணுது.ரத்தக்குழாயில் ஏற்பட்ட ஒரு அடைப்பின் பாதிப்பைக் குறைக்க எடுத்துக்கிற மாத்திரைகளால ஏற்படுற பிரச்னையோன்னு எனக்கு சந்தேகம் என்றேன். எனது சந்தேகம் மருத்துவரின் மெளனத்தில் தொங்கியது.
""என்ன கோளாறு டாக்டர்'' என்று மகன் பதற்றத்தோடு கேட்டான்.
"" பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை. முதலில் ஹார்ட்டுக்கு இசிஜி , எக்கோ எடுத்துப் பார்ப்போம்; தேவைப்பட்டா நுரையீரலையும் சி.டி. ஸ்கேன் பண்ணிப் பார்போம்..
விரலில் குத்துமதிப்பில் சர்க்கரை அளவு பார்த்தார்கள். கட்டுக்குள் இருந்தது. படுக்கவைத்து இசிஜி, எக்கோ பார்த்தார்கள். தண்ணீர் மோட்டார் சுச்சை அழுத்தினதும் முதல்ல ஹோன்னு காத்து அலறிகிட்டு வரும், அப்புறம் குபுக் குபுக்குன்னு தண்ணி சத்தம் கேட்கும். அப்படி எக்கோவிலும் கேட்டது. இதயத் துடிப்பும், ரத்தம் பீச்சிப் பாய்தலும் வயதுக்கேத்தபடி சரியாகத்தான் இருக்கிறது. நுரையீரல் மருத்துவரைப் பாருங்க ! அவர் சொல்றபடி நுரையீரல் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறது நல்லது'' என்றார் இதயமருத்துவர் .
மறுநாள் காலையில் வெறும் வயிற்றோடு மருத்துவமனைக்குப் போனோம்.நுரையீரலை சி.டி ஸ்கேன எடுக்க அழைத்துச் சென்று நடுக்கும் குளிர் அறையில் படுக்கச் செய்தார்கள். தந்த நிறத்தில் வளர்ப்புப் பிராணி போல ஓர் உலோக மிருகம் உறுமி என் வயிற்றுவரை வந்து சிலநிமிடங்கள் நின்றது.
ஒளித்தாள்களால் ஒத்தி நுரையீரலை பலவாகில் படமெடுத்து நகர்ந்தது. குளிர்ந்த அறையையும் மீறி வேர்வை பூத்து பிசுபிசுத்தது . ஸ்கேனை ஆய்ந்ததில், கரோனா தங்கிச் சென்ற இருபுற நுரையீரலின் கீழ்பகுதியிலும் கருப்பாக சிறு சுருக்கம். ""இதை மருந்தால் சரிசெய்து விடலாம்'' என்றார் நுரையீரல் மருத்துவ நிபுணர்.
""கரோனாவின்போது எடுத்துக் கொண்ட வீரிய மருந்துகளின் பாதிப்பா டாகடர் ?''
""இல்லை, அந்த மருந்துகளால்தான் நீங்க பிழைச்சீங்க! தீ பற்றின இடம் கருப்பா இருக்கிற மாதிரி கரோனா தாக்கின இடம் கருத்திருக்கு..'' என்று மழுப்பலாக புன்னகைத்தார்.
எதற்கும் மூளைநரம்பியல் மருத்துவரை ஆலோசித்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது நல்லது. மயக்கம் வருதலின் காரணமறிய மூளை நரம்பியல் மருத்துவரை அணுகினோம். அவர் எல்லா விவரங்களையும் கேட்டபின் ,எம்ஆர்ஐ எடுத்துட்டு வாங்க, இனி எந்தப் பாதிப்பும் இல்லாமத் தடுத்துறலாம்.
""நோயாளி உயர்நிலை அதிகாரியின் தந்தை என்பதால் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவை அடிக்கடி எடுத்தால் நோயாளியின் உடலுறுப்புகள் பாதிக்கும் என்பதையும் மீறி, மருத்துவமனையில் உள்ள அனைத்து இயந்திரங்களுக்கும் தீனி போடறாங்க. இதுவே வசதியில்லாத நோயாளி வந்திருந்தா என்ன நடந்திருக்கும். நோயிக்கேத்த வைத்தியங்கிறத விட , நோயாளி வசதிக்கேத்த வைத்தியமாயிருக்கும்' மனதுக்குள் பேசிக்கொண்டேன்.
நான் யோசிப்பதை உணர்ந்த மருத்துவர், ""பயப்படாதீங்க சார். பிரிவென்சன் இஸ் பெட்டர் தேன் க்யூர் என்பார்களே, அப்படி இதெல்லாம் ஒருவகையில் நோய்த்தடுப்பு முயற்சி தான்!'' என்றார்.
""நோய்த்தடுப்பு சிகிச்சைக்கு, நோயின்வலியே தேவலை, அதாவது மேலெடி ஈஸ் பெட்டர் தேன் ரெமெடி என்பார்களே அது மாதிரி தான்!'' என்று மெல்ல சிரித்தேன்.
மருத்துவரிடம் என் விவாதம் தொடருவதைத் தவிர்க்க , மகன் குறுக்கிட்டான்.
""கவலைப்படாதீகப்பா, எம்ஆர்ஐயும் எடுத்துப் பார்த்துருவோம்''
எம்ஆர்ஐ பிரிவுக்கு அழைத்துப் போனார்கள். குளிர்ப்பிரதேச அறையில் தந்தநிறத்தில் சுரங்கப்பாதை ஒன்று வாய் திறந்து காத்திருந்தது.
சுரங்கப் பாதையின் வாயிலில் கிடந்த தண்டவாளப் படுக்கையில் என்னைப் படுக்கச் செய்தார்கள். ரயிலில் போயிருக்கிறோம். நாம் படுத்துக்கொள்ள சுரங்கமே நம்மீது ஊர்ந்து வருவதுபோலிருந்தது. இயந்திரத்தின் உறுமலில் குளிர்மறைந்து பயம் நடுக்கியது.கைகள், கால்கள், தலை போன்றவை அசைக்க முடியாதபடி இறுக்கமாகப் பிணைக்கப்பட்டன . ஒரு குகையினுள் எரியும் நெருப்பின் மேல் பிணைக்கப்பட்ட கிரேக்கவீரன் நினைவில் வரவும் அரும்பிய வேர்வை மறைந்தது." நோயின்வலியை விட சிகிச்சையின் வலி கடுமையாகத்தான் இருக்கிறது.
""மகனின் அன்புக்கு கட்டுண்டோம் பொறுத்திருப்போம்'' என்று உதடுகளை இறுக்கிக் கொண்டேன்.
""ஓரளவு வாழ்ந்துட்டோம் உயிர்ப்பயம் இனி எதற்கு ? நடப்பதை எதிர்கொள்வோம். வர்றதைப் ரசிப்போம்'' என்று நினைத்தபடியே தெளிந்தேன்.
எதிரே கண்காணிப்பு அறையின் கண்ணாடி சாளரத்திலிருந்து மகன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் கவலையும் பயமும் கவிந்திருந்தது .
டீசல் ரயில் என்ஜின் போல் அந்த இயந்திரம் கனங் கனங்கென்ற ஓசையும் உறுமலுமாய் என்மீது ஊர்ந்து தலைக்கு மேல் நின்றது. சில விநாடிகளில் தலைக்கு மேல் மோர்சிங் வாசிப்பது மாதிரி "டுயுங் டுயுங் டுயுங் "ஓசை அலறியது. பின் ஹோவென்ற ஓலம்! இப்படி மாறி மாறி ஒலித்துக் கொண்டிருக்கையில் பின்னணியில் குழு இசை சேர்த்தது.
சுவர்க்கோழியின் "கீச்சொலி' போன்ற இயந்திரச் சிணுங்கல். இதற்கு இணையாக எனக்குள் அறிவில் தெளிவு; அகத்தில் அன்பினோர் வெள்ளம்; மனதில் உறுதி; வாக்கினில் இனிமை; நினைவில் நல்லது; கனவு மெய்ப்படவேண்டும் என்ற பாரதி முழக்கம் இதயத்துடிப்போடு இயைந்து முழங்கிக்கொண்டே இருந்தது.
கண்ணைத் திறக்ககக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார்கள். உள்ளே அச்சமே நரகம் என்று உச்சரித்துக் கொண்டிருந்த பாரதியின் துணிச்சலில் கண்களைத் திறந்தேன்;காந்தஒளிப் பொழிவு! என்னை மீறி இமைகள் இறுக்கமாக மூடிக்கொண்டன!. காதுகளின் கவனம் மோர்சிங் ஒலியிலும்,ஹோவென்று அலறலிலும், சுவர்க் கோழி கீச்சொலியிலும் திரும்பி இருந்தது. பயமகன்ற திளைப்பில் இருந்தேன். அந்த இயந்திரம் காந்தவொளியைப் பாய்ச்சி என் மூளையின் பகுதிகளை பலகோணங்களில் படமாக்கி விட்டது போலும்.! இயந்திரம் தொண்டையைச் செருமி நின்றது.
""சார் முடிஞ்சிருச்சு கண்திறந்து கவனமா இறங்குங்க.'' என்று உதவியாளர் குரல்கேட்டு கண் திறந்தேன். எதிரே கண்ணாடி சாளரத்திலிருந்த கவனித்த மகன் அனைத்தையும் கணினித்திரையில் கவனித்திருப்பான் போல ,முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது !.
என்னை அடுத்த சிறிய குளிர் அறைக்கு அழைத்துபோய் படுக்க வைத்தார்கள். டோப்ளர் டெஸ்ட் என்றார்கள்.கண்களை மூடி உடலை அசையாமல் படுத்திருக்கச் சொன்னார்கள். கண்மூடி இருந்தேன். தும்பிக்கைப் போன்ற ஒரு எந்திரம் டிரில்லர் மிசின் மாதிரி கோரவொலிஎழுப்பி கழுத்தை ஒளியால் மும்முறை தடவியது.
"உச்சி வெயிலின் கீழ் படுத்திருந்தவனுக்கு அந்திவெயில் என்ன செய்யும்' என்ற நினைவில் இருந்தேன்.
""சார், முடிஞ்சிருச்சு , மெல்ல எந்திரிங்க'' என்ற உதவியாளர் தோளை அணைத்து இறக்கினார்.
மூளை நரம்பியல் மருத்துவரை அணுகினோம்.
""பயப்படுற மாதிரி ஏதுமில்லை சார். வயதுக்கேற்ற சில மாற்றங்கள் தான் ! நுரையீரல் சம்மந்தமா கொடுக்கிற மருந்துகளை தவறாமா எடுத்துக்குங்க !''
இதைத் தெரிஞ்சிக்கவா இம்புட்டு பாடும் ரணமும் ? என்று கேட்ட மனம், "பரவாயில்லை ; இதுவும் ஓரனுபவம் தான்;இனி பயப்படாமல் இருக்கலாமில்ல ! ' ஆறுதல் பட்டுக் கொண்டது.
மூளை, நரம்பியல் மருத்துவரோ, ""ஒண்ணுமில்லைன்னா, ஏன், அடிக்கடி மயக்கம் வருதுன்னுதானே யோசிக்கிறீங்க? நீங்க குனியும்போதும், நிமிரும்போதும், முதுகெலும்பிலிருந்து மூளைக்குச் செல்லும் இந்த நரம்பின்மீது அழுத்தம் ஏற்பட்டாலும் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அழுத்தி ரத்தவோட்ட வேகம் குறைந்து இதுமாதிரி சிறு மயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை இன்னொரு எம்ஆர்ஐ ஸ்கேன் முதுகெலும்பையும் கழுத்தையும் இணைக்கும் இந்தப்பகுதியில் எடுத்தால் தெளிவாகத் தெரிந்துவிடும்!'' என்று சுவரில் மாட்டியிருந்த நரம்புமண்டல மனித படத்தில் பின்கழுத்துப் பகுதியைச் சுட்டிக்காட்டினார்.
நான் பார்த்தபோது அந்த படத்துக்கு மேலே சுவற்றில் பொருத்தப்பட்ட குழல்விளக்கின் அடியில் பதுங்கியிருந்த பல்லி, அருகில் வந்த பூச்சியை, நாக்கை நீட்டி பிடிக்க முயலும்போது அந்தப்பூச்சி பறந்து தப்பியது. எனக்கு சிரிப்பை மூட்டியது.
மருத்துவர், ""ஏன் சிரிக்கிறீங்க, தயங்காமச் சொல்லுங்க சார்'' என்றார்.
மருத்துவரிடம், ""அந்தப் பல்லி ஏமாந்ததைக் கூறமுடியுமா?'' எனது வலியை வேறமாதிரி சொன்னேன்.
""டாக்டர், நிலக்கடலைப் பருப்பை வறுக்கும் இரும்புச்சட்டியில் மணலைப் போட்டு மணலின் சூட்டிலே கடலைக் கருகாமல் புரட்டி புரட்டி வறுப்பார்கள். கடலையை நேரடியாக நெருப்பு தாக்காது; சுடுமணல் கடலையைத் தாக்கி வறுத்திடும்!.அப்படி இதுவரைக்கு எடுத்த மூணு ஸ்கேன்களின் வெப்பம் என்னுடலைத் தாக்காமல் நேரடியாக சம்பத்தப்பட்ட உறுப்புகளைத் தாக்கித் தடவி படமெடுத்துருச்சு. கொஞ்சம் உடம்புச் சூட்டை ஆத்திட்டு அடுத்தவாரம் வாறேன் டாக்டர் ''
""ஓ.கே. வெல். உங்க சௌகரியம்போல,இன்னிக்கு மாதிரி எம்டி ஸ்டமக்கில் நம்ம கிளினிக்குக்கு வந்திருங்க. உங்களுக்கு நோகாம, நொடிக்காம எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அக்குயூரட்டா டையகனைஸ் பண்ணி ட்ரீட்மெண்டை ஆரம்பிப்போம்! . ஓகே? ''
""நன்றிங்க.. டாக்டர்'' என்றபடி எழுந்தேன். மகனிடம் எனது பணமெடுப்பு அட்டையைக் கொடுத்து, ""இந்தாப்பா, பில்லுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்க!''
""பணம் தேவை இல்லைப்பா! என் காப்புறுதி இருக்குப்பா . பயன்படுத்திக்கலாம்'' என்று கையொப்பமிட ஆவணங்களைக் கொண்டுவரச் சொன்னான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com