வரப்பிரசாதம்

பிறந்த குழந்தையை யார் வாங்குவதென்று இரு குடும்பத்தாருக்கும் போட்டி நடந்து  கொண்டிருக்கின்றது. இப்போது அதுவா முக்கியம்? தாயும் சேயும் நன்றாக இருக்க வேண்டுமென்று தானே நினைக்க வேண்டும்?
வரப்பிரசாதம்


பிறந்த குழந்தையை யார் வாங்குவதென்று இரு குடும்பத்தாருக்கும் போட்டி நடந்து  கொண்டிருக்கின்றது. இப்போது அதுவா முக்கியம்? தாயும் சேயும் நன்றாக இருக்க வேண்டுமென்று தானே நினைக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, நானா நீயாவென்று போட்டி  போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

என்ன சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வதுபோல் தெரியவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு டாக்டர் வெளியே வந்தால், இவர்களுடைய போட்டியில், யாரிடம் கொடுப்பதென்று அவரும் குழம்பித்தான் போவார். 

"என் பையனோட புள்ள எங்களுக்குத்தான் முன்னுரிமை' என்று அம்மாவும் நினைத்திருக்கலாம். "இது, எம் பொண்ணோட குழந்தை! நாங்கதானே மொத பிரவசமும் பாக்கறோம்! அப்ப எங்களுக்குத்தான் முன்னுரிமை' என்று அவர்களும் நினைத்திருக்கலாம். யார் என்ன நினைத்தாலும் எது நடக்கும்மோ அதுதானே நடக்கும்! அதற்கு போய் இவர்கள் போட்டிப் போட்டுக் கொள்கிறார்கள். 

என்னுடைய அவஸ்தை தெரியாமல் இவர்கள் வேறு வறட்டு கெளரவம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அம்மா குறுக்கிட்டு, ""நம்ம வீட்டுப்புள்ளைய நான் வாங்காம... அப்பறம் யார்றா வாங்கறது? பரம்பரை பரம்பரையா... நம்ம குடும்பத்துல எந்த  கொழந்த  பொறந்தாலும், இந்தப்  பட்டுத் துணியிலதான் வாங்குவோம். அதெல்லாம் ஒனக்கு ஒன்னும் தெரியாது! நீ மொதல்ல இங்கிருந்து எட்டப் போ...''என்று என்னை எச்சரித்தவளின் கைகளில் பழைய பட்டுப் பீதாம்பரம் இருக்கின்றது. 

அம்மாவின் எச்சரிப்பு எனக்கல்ல. என் மனைவியின் வீட்டாருக்கு. அவர்களும் அம்மாவைப் போன்றே ஏதோ ஒரு பட்டு சம்பந்தமான துணியைத்தான் கையில் வைத்திருக்கின்றார்கள். இந்த நேரத்தில் யாரென்ன துணி வைத்திருக்கிறார்களென்பது பற்றியெல்லாம் கவனிக்க எனக்கு நேரமில்லை. இன்னும் சற்று நேரத்தில், நாங்கள் தவமாய் தவமிருந்து பெற்ற  பிள்ளையைப் பார்க்கப் போகின்றேன் என்ற சந்தோஷத்தில் நின்று கொண்டிருக்கின்றேன். இவர்கள் செய்யும் கலாட்டாவில் டாக்டர் என்ன சொல்லப் போகின்றாரென்றுதான் தெரியவில்லை. என்ன குழந்தையாக இருக்குமென்று அவரவர்களுக்குத் தெரிந்த அனுபவத்தை வைத்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். 

""வயிறு சின்னதாயிருந்ததால, அது ஆம்பள புள்ளதான்''  என்று என் மனைவி வீட்டார்  தரப்பில் ஒருவர் சொல்கிறார். 

""இல்லல்ல பொம்பள புள்ளதான்... அதுதான் பத்து மாசம் முழுசா இருந்து பொறக்குது பாருங்க''  என்று இன்னொருவர் சொல்கிறார். 

"நான் என்ன நினைக்கின்றேனோ, அதுதான் அங்கு நடக்கும்? இவர்கள் என்ன சொல்வது?' என்பதுபோல் எங்கம்மா என்னைப் பார்த்து முறைக்கிறார்கள். அவர்கள் பேசிக் கொள்வதற்கு நான் என்ன செய்ய முடியும்? எங்களுக்கு அது வம்சமோ, வாரிசோ எதுவாகயிருந்தாலும் பரவாயில்லை. இன்னும் பிள்ளையை காணோமேயென்று மனம் பரபரவென்றிருக்கின்றது. எப்போது அப் பிஞ்சு முகத்தைக் காணப் போகிறோமென்று தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றேன். இந்த நேரத்தில்தான் இவர்களுடைய ஈகோ பிரச்னை இங்கே தலை தூக்கி நிற்கின்றது. 

""நாங்க மட்டுமென்ன மட்டமான துணியா எடுத்தாந்திருக்கிறோம்'' என்று அவர்கள் தரப்பிலிருந்து  ஒரு பெண் குரல் உஷ்ணமாக ஒலிக்கின்றது. உடனே அந்தம்மாவை சமாதானப்படுத்தும்விதமாக இன்னொருத்தர், ""அட, விடும்மா... அவுங்களப் பத்திதான் தெரியுமில்ல...  பேசாமப் போயேன். நானே, புள்ளைய இன்னும் காணும், என்னமோ ஏதோன்னு பதறிப் போய் நின்னுக்கிட்டிருக்கறேன்'' என்று அவர்களும் படபடப்பான குரலில் மெதுவாகத்தான் சொல்கிறார்கள். 

நான் முன்னுக்கு நின்று கொண்டிருக்கின்றேன் என்பதால் என் மாமனார் வீட்டு உறவுகளெல்லாம் சற்று பின்னுக்குத் தள்ளித்தான் நிற்கின்றார்கள். இல்லையென்றால், அவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து முன்னேறினால், எங்கம்மா ஒருவரால், அவர்களையெல்லாம் எதிர்த்து நிற்க முடியாது. 

அது தெரியாமல், ""நீ இங்கிருந்து எட்டப் போ... எட்டப் போ...''  என்று என்னை விரட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

குழந்தையை என் மாமனார் வீட்டுத் தரப்பு முதலில் வாங்குவதுபோல், நான் எதாவது செய்துவிடப் போகிறேனென்றுதான், என்னை இங்கிருந்து பின்னுக்குத் தள்ளுவதிலே மும்முரமாக இருக்கின்றார். "நாம்தான் முதலில் நிற்கின்றோம்' என்கிற மகிழ்ச்சியில் சந்தோஷமாக அம்மா இருக்கிறார்கள். குழந்தையை வெளியே கொண்டு வரும் கதவு, திறக்கும்போதெல்லாம் எல்லாருடைய கண்களும் அந்தக் கதவின்மேல் முட்டி மோதி உள்ளே போய் வெற்றிடத்தையே கண்டு வருகின்றன.

அப்போது வெளியே வரும் ஒரு நர்ஸ் அம்மா,  ""இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்டரே, குழந்தைய கொண்டாந்து காட்டு வாங்கம்மா... அவசரப்படாதீங்க'' என்று சொல்லிவிட்டு கையில் ஒரு பேஷன் தட்டோடு வெளியே செல்கின்றாள். அவர்களோடே போய்,   "என்ன கொழந்தன்னு'  இரகசியமாக கேட்டு வந்து, ""பாத்தியாடா, நான் என்ன நெனைச்சனோ... அந்தக் குழந்தைதான் பொறந்திருக்கு!''  என்று சொல்வதற்காகத்தான் அம்மாவின் கால்கள் பின்னுகின்றன. அப்படிப் போகும்போது திடீரென்று டாக்டர் வந்து விட்டால், நாம் குழந்தையை வாங்க முடியாமல் போய்விடுமே! இது நம் பரம்பரைக்கே பெரிய இழுக்காகிவிடும். அப்படியே டாக்டர் வரவில்லை  என்றாலும், போய் வருவதற்குள் இடம் பறிபோய்விடுமே என்கிற கவலையில், நகர மனமில்லாமல் இங்கேதான் நிற்கின்றாள் அம்மா.

இவர்கள் பிரச்னை ஒரு பக்கமென்றாலும், குழந்தையை எப்போது பார்க்கப் போகின்றோமென்ற எதிர்பார்ப்பு என்னை மேலும் பதற்றமடையச் செய்கிறது. அந்தப் பதற்றத்தால் இருதயத் துடிப்பு வழக்கத்தைவிட இன்னும் அதிகமாகவே  துடிக்க  ஆரம்பித்து விட்டது.

""ரெடி, ஒன்...டூ... த்ரீ'' என்று சொன்னால் ஓடத் தயாராக இருப்பதுபோல், இரு தரப்பும் நிற்கின்றார்கள். "படக்'கென்று கதவை திறந்து கொண்டு ஒரு நர்ஸ் வந்ததும், டாக்டர்தான் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வருகிறாரென்று நினைத்து, இருவரும் முட்டி மோதிக் கொண்டு அந்த நர்ûஸ கீழே தள்ளி விடப் பார்த்தார்கள்.

அப்போது நிலைகுலைந்த நர்ஸ் அம்மா, ""கொஞ்சம் தள்ளி நில்லுங்கம்மா... எத்தனை தடவ சொல்றது, டாக்டர் வந்து கூப்புடுவாங்கன்னு'' என்று முகத்தை சுளித்துக் கொண்டு கத்தியவள், என்னைப் பார்த்ததும் அவர்களுக்கு எப்படி இருந்ததோ, ""அவுங்கதான் பொம்பளைங்க போட்டி  போட்டுக்கிட்டு வந்து நின்னுக்கிட்டிருக்கிறாங்க! நீ எதுக்குயா, இங்க வந்து நின்னுக்கிட்டிருக்கற? கூப்புடும்போது வர்றலாம்... அப்படிப் போய் நில்லு'' என்பது போல் எரிச்சலாகப் பார்த்துச் செல்கின்றாள். 

நர்ஸ் அம்மா  முறைத்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுக்குப் பொக்கிஷமாக தெரிகின்ற விஷயம், அவர்களுக்கு அது சாதாரணமாகத் தெரிகின்றது. குழந்தை  பிறந்து அரைமணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்னமும் என்ன செய்கிறார்களோ தெரியவில்லையே? எனக்கு இப்போது ஒரே பதைபதைப்பாக இருக்கின்றது. காலம் போன காலத்திலாவது பிள்ளையை பெறப் போகிறோமென்கிற சந்தோஷத்தில் கண்கள் கலங்குகின்றன. பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

ஆர்வக் கோளாறில், கதவைத் திறந்துதான் பார்த்துவிடுவோமா என்று கூட தோன்றுகிறது. துடுக்குத்தனமாக அப்படி எதாவது செய்யப் போய் அதுவே நமக்கு இடையூறாக மாறிவிடப் போகிறதென்று மனதிற்குள் நினைத்துக் கொள்கின்றேன். நம்முடைய ஆர்வம், அவர்களுக்கு தவறுதலான  புரிதலை ஏற்படுத்தி விடும். இது பிரசவ வார்டு என்பதால் உள்ளே யார்... யார்...  எப்படி  இருப்பார்கள்  என்றெல்லாம் சொல்ல முடியாது? உயிரைப் பணயமாக வைத்து மற்றொரு உயிரை உண்டாக்குகின்ற இடம்.  நாம் திறக்கும் நேரம் பார்த்து, டாக்டர் நம்மைப் பார்த்துவிட்டால் அவர்களுடைய கடுங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். நாம் என்ன கண்ணோட்டத்தில் பார்த்தோம் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

""யாருங்க, என்ன வேணும்? எதுக்கு இப்ப கதவைத் தொறந்தீங்க. இப்படித்தான் லேடீஸ் வார்டுல வந்து கதவைத் தொறந்து பாப்பாங்களா? படிச்சவர்தானே வெளிய போய் நில்லுங்க, போங்க'' என்று அனைவர் முன்னாலும் அசிங்கப்படுத்தி விடுவார்கள். அதற்கு அப்புறம் இங்கு கூட நிற்க முடியாதென்று நினைத்துக் கொண்டு துறுதுறு என்றிருந்த கைகளை இரண்டு பேண்ட் பாக்கெட்டுக்குள்ளும் திணித்துக் கொண்டேன். இப்போது பதற்றத்தைத் தணிக்க கண்களை அழுந்த மூடி அண்ணாந்து பார்த்தேன். அங்கே கற்பகரக்ஷôம்பிகை சுவாமி  படம் சிரித்த முகத்தோடு சுவரில் மாட்டி வைத்திருக்கின்றார்கள். அப்படத்திற்கு கீழே, "குழல் இனிது யாழ் இனிது தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்' என்று தெய்வப் புலவரின் வார்த்தைகள் என் கண்களில் பட்டு மின்னின. 

நான் என்னவோ, எங்கம்மாவிற்கு எதிராக ஏதோ திட்டம் தீட்டுகிறேனென்று நினைத்துக் கொண்டு, "கொஞ்சம் நவுராண்டா'' என்று அவர்களுக்கு பின்பக்கம் என்னை வருமாறு சோற்றுக்கை முட்டியால் தள்ளுகிறார்கள். குழந்தையை நான் வாங்கி விடுவேன் என்று அவர்கள் அப்படிச் செய்யவில்லை. டாக்டர் வந்ததும், அம்மா வாங்கப் போவதை மறைத்துக் கொண்டு, அவர்களை முன்னுக்கு விட்டு விடுவேன் என்றுகூட நினைத்திருக்கலாம். அவர்கள் ஆசையை ஏன் கெடுப்பானேயென்று ஓரடி பின் வாங்கினேன். நான் பின் வாங்கியதும் மாமனார் வீட்டுத்தரப்பு அம்மாவுக்கு இணையாக முன்னேறினார்கள். 

அம்மா ஒரு கணக்குப் போட்டார்கள். 

அவர்கள் ஒரு கணக்குப் போட்டு விட்டார்கள். இதற்கு நான் பொறுப்பாக முடியாது அம்மா என்பதுபோல், மேற்குப் பக்கம் திரும்பி நேரமென்னவென்று அதையும், என் கைக்கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்க்கின்றேன். நேரம் சரியாக மாலை மூன்று ஐம்பதாகின்றது. எதற்காகப் பார்க்கின்றேன் என்று தெரியவில்லை. இப்படியாக எந்த இலக்குமில்லாமல் கண்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மறுபடியும் அண்ணாந்து  பார்த்தேன். அந்த சாமி படத்திற்கு பக்கத்தில் ஒரு குழந்தை தலையைத் தூக்கிப் பார்த்து சிரிப்பது போல் ஒரு படம் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. அதையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். 

வீட்டில் எல்லா இடங்களிலும் இப்படி பல குழந்தைகளின் படங்களை ஒட்டி வைத்துப் பார்த்த எங்களுக்கு, இன்று எங்களுக்கும் ஒரு குழந்தை கிடைத்திருக்கின்றதே என்று நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் முட்டுகின்றன. இங்கே நின்றிருந்தால் அழுதாலும் அழுது விடுவேன் என்று அவர்களை விட்டு சற்று தூரம் தள்ளி வந்து நின்று கொண்டேன். 

""வாழ்த்துகள் சார்...'' என்று ஒருவர் என்னிடம் வந்து சொன்னார். யார் இவரென்று தெரியவில்லை. அந்த மருத்துவமனையில் பணிபுரிகிறவரா? என்னைப் போன்று தந்தையானவரா? இல்லை ஆகப்போகிறவரா? எதுவுமே தெரியவில்லை.  ஏதோ சாதித்த பெருமை என் முகத்தில் சிரிப்பாகப் பரவுகின்றது. புன்முறுவலோடு, ""நன்றிங்க'' என்பதுபோல் கையெடுத்துக் கும்பிட்டேன். பேச்சு வரவில்லை. தொண்டை அடைக்கின்றது. 

""எத்தனை மணிக்கு பொறந்ததாம்'' அவர் என்னை விடுவதாய் இல்லை.

குரலை செருமிக்கொண்டு, ""மூன்றைரைன்னு சொன்னாங்க''என்று  இழுத்தேன்.

""மணி நாலாவப் போவுது.  இன்னும் கொழந்தைய வெளியக் கொண்டாரல'' ஆச்சரியமாக என்னைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை. இருந்தாலும் அடி வயிறெல்லாம் கலக்குவது போலிருக்கின்றது. குழந்தைக்கு ஏதாவது பிரச்னையாக இருக்குமோ... இல்லை அவளுக்கும்...  அப்படியெல்லாம் இருக்காது. நானே மனதைத் தேற்றிக் கொண்டு என்னைக் கூப்பிடுவதுபோல் அம்மாயிருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கின்றேன். என்னுடைய கலங்கிய கண்களை மறைப்பதற்காக அப்படி நான் செய்கிறேனென்று அவருக்குத் தெரியாது. ஏதோ நான் பதற்றமாக இருப்பது தெரிந்து கொண்டு அவர் அங்கிருந்து நகர்ந்து கொண்டார். 

மறுபடியும் யாராவது வந்து எதையாவது கேட்டு இன்னும் என்னை சங்கடத்தில் ஆழ்த்திவிடப் போகிறார்களென்று  அங்கே போய் அவர்களுடனே நின்று கொள்ளலாமென்று நினைத்திருந்தேன். அங்கே சென்றால் இன்னும் பிரச்னைதான் அதிகமாகும். அதற்கு இதுவே தேவலாமென்று நினைத்து இங்கே நிற்கின்றேன். தள்ளி வந்தது கூட ஒருவிதத்தில் நல்லதாகத்தான் தோன்றுகிறது. இருவரும் சண்டை போட்டுக் கொண்டு, ""இங்க குடுங்க டாக்டர்... இல்ல இங்க குடுங்க டாக்டர்'' என்று கத்துவார்கள். 

ஒருவேளை மாமனார் வீட்டுத் தரப்பில் குழந்தையை வாங்கி விட்டார்களென்றால் அவ்வளவுதான் நான் தொலைந்தேன். 

""என்னடா? என்ன நெனைச்சிக்கிட்டிருக்கறீங்க. யார் வீட்டுப் புள்ளைய யார் வாங்கறது? கேப்பார் மேய்ப்பார் இல்லாம போயிடுச்சா! எங்கம்மாதான் வாங்கணும்னு நீ ஏன்டா சொல்லல? நம்ம குலக்கவுரவம் என்னாவறது? நீயெல்லாம் ஒரு புள்ளையா? என் மொகத்துலே முழிக்காதே'' என்று கத்தி குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் எங்காவது கோபித்துக் கொண்டு ஓடுவதுபோல் செய்துவிடுவார்கள். 

அதற்கு மாறாக எங்கம்மாவே குழந்தையை வாங்கி விட்டார்கள் என்றால், பத்தாண்டுக்குப் பின் பிள்ளைப் பேறு கிடைத்திருக்கின்றதென்றதும், மருமகளை உட்கார வைத்து பணிவிடை செய்ய வேண்டுமா என்றெண்ணிய அம்மாவிடமிருந்து, ""நாங்க இட்டுப்போய் ஒரு பத்து நாள் வச்சிருந்துட்டு அனுப்புகிறோம் அத்தாச்சி'' என்று சொல்லி மூன்று மாதத்திலே அழைத்துச் சென்றவர்கள், ஒன்பதாவது மாதம் வளையலணி விழாவிற்குத்தான் அழைத்து வந்தார்கள். வளைகாப்பு நடந்து முடிந்ததும் திரும்பவும் அவர்களே அழைத்துச் சென்று விட்டார்கள். 

""வீட்ல இருந்தா, எங்க வேலை செய்ய சொல்லுவாங்கன்னு அம்மா வீட்டுக்குப்போயிட்டா! குனிஞ்சி நிமுந்து வேலை செஞ்சாத்தானே கொழந்தையும் நார்மலாப் பொறக்கும். அதைச் சொன்னா, நான் என்னமோ வேலை வாங்குறேன்னு சொல்றாங்க'' என்று கேட்கும், பார்க்கும் உறவினர்களிடம் அம்மா அப்படித்தான் சொல்லி வந்தாள். அம்மா சொல்வதுபோல் திருமணமாகியதும் ஓராண்டுக்குள்ளே  கர்ப்பமாகிற இளவட்டங்கள், எப்போதும்போல் அவர்களுடைய அன்றாட வேலைகளைச் செய்து வந்தால் குழந்தை நார்மல் ஆகும்தான். இல்லை என்று சொல்லவில்லை. இங்கு பத்தாண்டுகளுக்குப் பின் கிடைத்திருக்கின்ற புத்திர பாக்கியமல்லவா? அதைப் போற்றி பாதுகாக்க வேண்டிய  பொறுப்பு தாய்வீட்டுக்கு மட்டும்தான் இருக்கும். அந்தப் பொறுப்புதான் இன்று அவளுடைய அம்மா, அக்கா, தம்பி பொண்டாட்டி, சித்தி, பெரியம்மா இன்னும் அக்கம் பக்கத்தார் என ஒரே கூட்டமாக வந்திருக்கின்றார்கள். 

இந்தப் பக்கம் எங்கம்மா மட்டுமே நிற்கின்றார்கள். என் உடன்பிறப்புகளுக்கு, ""அண்ணன் பொண்டாட்டி தானே, தம்பி பொண்டாட்டி தானே'' என்ற அலட்சியமிருப்பதால், அவர்களுக்கு இருக்கின்ற உணர்வு, என் குடும்பத்தாருக்கு சற்று குறைவுதான். அப்படியெல்லாம் மகளுக்கு பார்த்துப் பார்த்து செய்து விட்டு கடைசியில் அந்தக் குழந்தையைக் கையில் கூட வாங்கிப் பார்க்க முடியவில்லையே என்று அவர்கள் ஏமாந்து போய் நிற்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கேட்பதற்கு அவர்களுக்கும் உரிமையிருக்கின்றதல்லவா? சாமர்த்தியம் இருந்தால் யார் வேண்டுமானாலும் டாக்டரிடம் போராடி வாங்கிக் கொள்ளட்டும். அதற்குப் பிறகு போய் பார்த்துக் கொள்ளலாமென்று  நினைத்தாலும், மனம் மட்டும் அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றது. ஒர் இடத்திலே என்னால் நிற்க முடியவில்லை. 

இப்படியும் அப்படியும் நடக்கின்றேன். 

கிழக்குப் பக்கம் டாக்டரைப் பார்க்க வரிசை வரிசையாக தம்பதியர்கள் உட்கார்ந்திருக்கின்றார்கள். குபேர மூலையில் லேப் உள்ளது. அதில் ஒரு சிலர் பேப்பரோடு போவதும் வருவதுமாக இருக்கின்றார்கள். என்னுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வம் எல்லாவற்றையும் வரிசைப்படுத்தி வணங்கி நன்றியை சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நன்றி செலுத்துவதிலும் முழு கவனமில்லை. வைகுண்ட ஏகாதசி அன்று எப்போது சொர்க்கவாசல் கதவு திறக்குமென்று, அதையே பார்த்து நிற்கும் பக்தனைப்போல், நானும் இப்போது அந்தக்  கதவையே பார்த்து நிற்கிறேன். இங்கிருந்து  பார்த்தால் நேரடியாக கதவு தெரியாதபடி, ஆள் உயரத்திற்கு மரத்தடுப்பு ஒன்று அந்த கதவின் முன் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தடுப்பிற்கு அந்தப் பக்கம் நிற்பவர்கள் தலை மட்டும்தான் தெரிகிறது. 

அந்தத் தலைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டி உரசிக் கொண்டு வாயிற் கதவையே முட்டிக் கொண்டிருக்கின்றன. கிருக்கென்று சின்னதாக கதவு திறக்கும் சத்தம் கேட்டால்கூட, "வந்தாச்சா' என்று படபடத்த நெஞ்சோடு திரும்பிப் திரும்பி பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இங்கிருந்து  பார்த்தால் தடுப்பிற்குமேல் அந்த இரு கதவின் வலது பக்க கதவு மட்டும் அவ்வப்போது திறந்து திறந்து மூடுவது மட்டுந்தான் தெரிகிறது. யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று கூட சரியாகத் தெரியவில்லை. 

அவர்கள் எல்லாரும் சற்று நேரம் அமைதியாக ஏதோ குனிந்திருப்பதுபோல் தெரிகிறது. குழந்தையைப் பார்த்துவிட்டனர் போலும். இவர்கள் மட்டும் பார்த்துவிட்டு குழந்தையை டாக்டரிடம் கொடுத்து விட்டனரா? பின்பு ஏன் எந்த சத்தமுமில்லை? சரி, நாமும் போய் என்னவென்று பார்க்கலாமா? அப்படியிருந்தால் இந்நேரம் எங்கம்மாவாவது ""தம்பி இங்க வாடா'' என்று என்னைக் கூப்பிட்டிருப்பார்களே? என்று நினைக்கும்போதே, ""தள்ளுங்கம்மா... தள்ளுங்கம்மா... டாக்டர் கொழந்தையோட வர்றாங்க'' என்று சொல்லிக் கொண்டே நர்ஸ் அம்மா இரண்டு கதவையும் திறந்து கொண்டு வெளியே வருகிறார்.  

தங்கச் சூரியனை தாம்பாளத்தில் வைத்துக் கொண்டுவருவதுபோல், ஆடாமல் அசையாமல் டாக்டர் வெளியே வருகிறார். ஆயிரம் அல்லி மலர்களாய் என் முகம் சிவந்தது. ஆனந்தத்தில் மூச்சே அடைப்பது போலிருக்கின்றது...  சிறிது நேரம் இரு தரப்பினரும் முட்டி மோதிக் கொண்டிருக்க வேண்டும். அந்த மோதலை விரும்பாத டாக்டர்... 

""கொழந்தையோட அப்பா எங்கிருக்கீங்க?'' என்று டாக்டரின் ஓங்கிய குரலால் என் இதயம், என்னவோ ஏதோவென்று பதறியது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கைகால்கள் நடுங்குகிறது... ஏதோ ஒன்று உச்சந்தாலைக்கு விர்ரென்று ஓடுகிறது. உடைந்த  குரலில், ""தோ... வந்துட்டம்மா'' என்று வெறும் கையோடு... கத்திக் கொண்டே ஓடி குங்குமப் பூவையே குழந்தையாகப் பெற்றதுபோல் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொள்கிறேன். 

"தவமென்ன செய்தேனோ தங்கத்தை நான் வாங்க' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்து குழந்தையை வாங்கிப் பார்க்க என்னை நோக்கி கைகள் "நான்... நீ'  என்று போட்டி போட்டன. ஆயிரம் கைகள் நீண்டாலும் வாங்கிய வரப்பிரசாதத்தை அன்னையிடம் தானே கொடுக்க முடியும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com