இந்தியாவின் முதல் உடை வங்கி!
By பிஸ்மி பரிணாமன் | Published On : 03rd April 2022 06:00 AM | Last Updated : 03rd April 2022 06:00 AM | அ+அ அ- |

தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய ரத்த வங்கி, உணவு வங்கி, பொம்மை வங்கி என்று பல அமைப்புகள் நகரங்களில் உள்ளன. அந்தப் பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருப்பது, ஆடை வங்கி.
இந்த ஆடை வங்கி திருமணமாகப் போகும் ஏழைப் பெண்களுக்காகக் கேரளத்தில் செயல்படுகிறது. இந்தியாவில் இது போன்ற வங்கி வேறு எங்கும் இல்லை.
திருமணத்தின்போது உடுத்தும் உடைகளை இப்போதைய பெண்கள் அதற்குப் பிறகு உடுத்துவதில்லை. விலை உயர்ந்த பட்டுச் சேலை என்றாலும் சேலை கட்டும் பழக்கம் இளம் பெண்களிடையே குறைந்து வருவதால், கல்யாண பட்டுச் சேலை பெட்டியில் அல்லது வார்டரோபில் உறங்கும். தற்போது திருமணத்தின்போதோ, வரவேற்பின்போதோ லெஹன்கா, ஷராரா போன்ற வட நாட்டு உடைகளையும் பெண்கள் அணிகிறார்கள். அந்த உடைகளும், பட்டுச் சேலைக்கு இணையான அதிக விலையுடையதாக இருக்கின்றன.
வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் விலை உயர்ந்த திருமண உடைகளை ஏழைப் பெண்களுக்கு திருமண சமயங்களில் கொடுத்து உதவ ஒரு வங்கியை 44 வயதான நாசர் என்பவர் கேரளம் மலப்புரம் மாவட்டம் "தூத்தா' என்ற கிராமத்தில் தொடங்கியுள்ளார்.
""நினைத்த மாத்திரத்தில் தொடங்கியதல்ல இந்த உடை வங்கி. பல முறை சிந்தித்து... பல பெண்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகு தான் தொடங்கினேன். நான் சவூதியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பத்து ஆண்டு காலம் வேலை பார்த்தேன். பிறகு வேலையை விட்டுவிட்டு ஊர் திரும்பினேன். ஒருமுறை நண்பனுடன் சேர்ந்து மும்பை செல்ல ரயில் ஏறினேன். ஷோரனூர் ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. அப்போது நான் கண்ட காட்சி உலுக்கியது. அடடே கிழிந்த உடை அணிந்த ஒருவர் எச்சில் தொட்டியில் கிடைக்கும் மிஞ்சிய உணவுகளை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களிடம் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவு இருந்தது. ஓடிச் சென்று அந்த மனிதரிடம் உணவை நீட்டினோம். அதை அவர் பெற்றுக் கொண்டு ஆனந்த சிரிப்புடன் கையெடுத்துக் கும்பிட்டார். எங்களது ரயில் பயணம் தொடர்ந்தது.
குடும்பத்தையும், சுற்றத்தையும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவரத்தான் பல ஆயிரம் கி.மீ. தாண்டி வேறு நாடுகளுக்குப் போய் வேலை செய்கிறோம். ஒருவரது அடிப்படைத் தேவை பசி எடுக்கும் போது உண்ண உணவு வேண்டும் என்பதுதான். உணவு கிடைக்காத போதுதான் சிலர் எச்சிலிலையில் உள்ள உணவை உணவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவினால் என்ன என்று நண்பனிடம் கேட்டேன். நல்ல முடிவு என்று நண்பனும் ஆமோதித்தான்.
மும்பையிலிருந்து ஊர் திரும்பியதும் தூத்தா ரயில் நிலைய அதிகாரியிடம் பிச்சைக்காரர்கள் அல்லது உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களைக் கண்டால் எங்களை அழைக்குமாறு கேட்டு கொண்டோம். அப்படியே பல நாட்கள் எங்களுக்கு அழைப்பு வந்தது. அழைப்பு வரும்போது நாங்கள் தேவையானவர்களுக்கு உணவைத் தந்துவிட்டு வருவோம். பிறகு அவர்களை அழைத்துச் சென்று குளிக்கச் செய்து... உடை கொடுத்து அருகிலுள்ள அநாதை இல்லத்தில் கொண்டு சேர்ப்போம். நாள்கள் கடக்க ... இந்த வேலைகளை நானே செய்ய ஆரம்பித்தேன். எனது பையில் சவரம் செய்வதற்கான ரேசர், பிளேடுகள், கத்திரி, முதல் உதவிக்கான மருந்துகள், போர்வை, ஓர் உடை அனைத்தும் இருக்கும்.
இன்றைக்கு நான் டாக்சி ஓட்டுகிறேன். அதில் இந்த சாதனங்கள் அடங்கிய பை ரெடியாக இருக்கும். வழியில் பிச்சைக்காரர்களைப் பார்த்தால் சவாரி இல்லாத பட்சத்தில் அவர்களை சுத்தம் செய்து உடை உணவு கொடுத்து அநாதை இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பேன். இதுவரை நூற்றுக்கும் அதிகமான பேரை அநாதை இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்துள்ளேன்.
எனது சேவைகளை அறிந்த பலர் தங்கள் மகள்களின் திருமணத்திற்க்கு உதவி கேட்டு வரத் தொடங்கினார்கள். திருமணத்திற்காக பணமாகவோ, திருமண விருந்திற்கு அரசி அல்லது காய்கறியாகவோ, அல்லது மணப்பெண்ணிற்கு உடையாகவோ தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்த அளவிற்கு உதவ என்னிடம் மனம் இருந்தாலும் பணம் இல்லை. ஆனால் எனக்கு உதவ பல நல்ல இதயங்கள் இருந்தன.
திருமண விருந்துக்காகும் அரிசி, காய்கறி செலவுகளை விட திருமண உடைக்கு அதிகம் செலவாகும். எப்படியும் 15000 ரூபாய்க்கு குறையாது. பல பணக்கார, நடுத்தர வீடுகளில் திருமண உடையை அது பட்டுச் சேலை என்றாலும் சரி... லெஹன்கா, ஷராரா போன்ற உடைகள் இரண்டாவது முறை அவர்கள் உடுத்துவதில்லை. அத்தகையவர்களிடம் அதுமாதிரியான உடைகளை வேறு ஒரு மணப்பெண்ணுக்காக அன்பளிப்பாக கேட்டால் என்ன என்று தோன்றியது. அந்த சிந்தனையில் ஏப்ரல் 2020 - இல் தோன்றியதுதான் உடை வங்கி.
வாட்ஸ்ஆப், முகநூல் மூலம் விஷயத்தை விளக்கி, உதவுமாறு தெரிந்தவர்களிடமும், தெரியாதவர்களிடமும் தொடர்பு கொண்டேன்.
எனது வேண்டுகோளுக்கு எதிர்பார்க்காத அளவிற்கு உதவிக் கரங்கள் நீண்டன. பயன்படுத்தப்படாத திருமண உடைகள் குவிந்தன. உடனே...
திருமணத்திற்கு மணப்பெண்ணுக்கு உடை தேவைப்படுகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுமாறு செய்தியை வெளியிட்டேன்.
வந்த ஆடைகளை எங்காவது கிழிந்துள்ளதா என்று சரி பார்த்து ட்ரை க்ளீன் செய்து இஸ்திரி செய்து பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைத்தோம். வந்த உடைகளை வைப்பதற்காக ஓர் அறையைத் தயார் செய்தேன். அதை திருமண உடைகளின் ஷோ ரூம் ஆக்கினேன். மணப்பெண்ணுடன் அவர் வீட்டுக்காரர்கள்
வந்து கடையில் துணி வாங்குவது போல உடையை இலவசமாகப் பெற்றுச் செல்லலாம். அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்வது கிடையாது. நான் சவாரிக்குச் செல்லும் போது, எனது மனைவியோ மற்ற உறவினர்களோ திருமண உடை பெற வருகிறவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். யார் உடையைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் முகவரியை குறித்து வைத்துக் கொள்வோம். முதல் ஆண்டில் சுமார் நூறு பேர்களுக்கு திருமண உடை வழங்கியிருக்கிறோம்.
உடை அன்பளிப்பு அதிகம் வரத் தொடங்கியதால், உடைகளை வைக்க வாடகைக்கு இடம் பிடித்தோம். பலர் புதிய இடத்தின் வாடகை, மின் கட்டணம் ஆகியவற்றைக் கொடுக்க முன்வந்தார்கள். சிலர் உடைகளை வைக்க ஸ்டாண்ட் வாங்கி வழங்கினார்கள். உடைகளைப் பெற்றுச் செல்பவர்களிடம் உடைகளைத் திருப்பித் தர... மீண்டும் செலவு செய்து வர வேண்டாம் என்ன கூறிவிடுவோம். நாங்களே போய் திரும்பப் பெற்று வருவோம். இதுவரை சுமார் 300 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. உடை வங்கி குறித்த செய்திகள் அகில இந்திய அளவில் வரத் தொடங்கியதும் , பல நகரங்களிலிருந்து உடைகளை அனுப்பி உதவினார்கள். இத்தாலியிலிருந்து கூட என்னை அழைத்தார்கள். எல்லா மதத்தினருக்கும் பொருத்தமான உடைகள் எங்களிடம் உள்ளன. சுமார் 1000 உடைகள் எங்களிடம் உள்ளன. இந்த உடை வங்கி வெற்றிகரமாக இயங்குவதற்கு உதவும் நல்ல மனங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று உடைகள் வாங்க வருபவர்களிடம் சொல்வேன்... மதுரையிலும் உடை வங்கி ஒன்றை தொடங்கப் போகிறேன்'' என்கிறார் நாசர்.