'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! 100

ஒருவர் பின் ஒருவராக உள்ளே போய் ஆர்.கே. தவாணை சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! 100

ஒருவர் பின் ஒருவராக உள்ளே போய் ஆர்.கே. தவாணை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு தவாண்ஜியே வெளியே வந்து விட்டார். உள்ளே வரச் சொல்லி சைகை செய்தபடி அவர் தனது அலுவல் அறைக்குள் நுழைந்தார். நான் பின் தொடர்ந்தேன்.
"ஆட்சி கவிழக்கூடும் என்று பேசிக் கொள்கிறார்களே...''
"காங்கிரஸ் கட்சி பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையில் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. பிறகு ஏன் இப்படி ஒரு கேள்வி எழ வேண்டும்?''
"சோனியாஜி அரசியலுக்கு வருவார் என்று பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. அவருக்கும் பிரதமருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதனால்தான் கேட்கிறேன்.''
"இது பேட்டியெல்லாம் கிடையாது. நான் சொல்வதாக நீ எதையும் போட்டுவிடாதே. தனிப்பட்ட முறையில் உனக்குச் சொல்கிறேன், எதுவும் நடக்கப் போவதில்லை. தனது ஆதரவாளர்களுக்காக அவ்வப்போது ஏதாவது சொல்வாரே தவிர, சோனியாஜி உடனடியாக அரசியலுக்கு வரப்போவதில்லை.''
"அப்படியானால், பரபரப்பாகப் பேசப்படுவதெல்லாம் பொய்யா?''
"பரபரப்பாகச் பேசப்படுவது என்பது தவறு. பரபரப்புக்காகப் பேசப்படுவது என்பதுதான் சரி. காங்கிரஸýடனான நேரு குடும்பத்தின் தொடர்பு அறுந்துவிடக் கூடாது என்கிற அளவில்தான் சோனியாஜியின் செயல்பாடுகள் இருக்கும். ஆட்சி கவிழ்வதை அவரே விரும்பமாட்டார்.''
"கட்சி நிதியில் பெரும் மோசடி நடந்திருப்பதாகவும், சீதாராம் கேசரியிடம் அது குறித்துக் கேட்க நரசிம்ம ராவ் தயங்குவதாகவும் கூறப்படுகிறதே?''
"அதைப்பற்றியெல்லாம் நான் உன்னிடம் எதுவும் சொல்ல முடியாது.''
இடையில் வந்த தொலைபேசி அழைப்புக்குப் பிறகு ஆர்.கே. தவாண் இன்னொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
"பண்டிட்ஜி (ஜவாஹர்லால் நேரு) இருக்கும்போது கட்சி நிதி குறித்து அவர் கவலைப்பட்டதே கிடையாது. அந்தந்த மாநில முதலமைச்சர்களும், பிரதேசக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களும் அதைப் பார்த்துக் கொண்டார்கள். தேர்தல் நேரத்தில், பம்பாய் பிரதேச காங்கிரஸ் தலைவர் எஸ்.கே. பாட்டீல் பிரசாரத் தேவையை ஒருங்கிணைப்பார்.
இந்திராஜியின் அணுகுமுறை வேறு. ராஜீவ்ஜியின்தலைமையின்போதுதான் பிரச்னை ஏற்பட்டது...''
"எதனால்?''
"கட்சி நிதி, நன்கொடைகள் குறித்தெல்லாம் அவருக்குப் புரிதல் இருக்கவில்லை. அமைச்சர்கள் அவரவர் பங்குக்கு சம்பாதித்தார்கள். கட்சிக்கு எதுவும் கொடுக்கவில்லை. அருண் நேரு போன்றவர்கள் விளம்பர நிறுவனங்களின் துணையோடு பிரசாரம் செய்ய முற்பட்டனர். கட்சியின் மாநிலத் தலைவர்களை நம்பவில்லை. நம்பகமான பழைய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, அரசியல் அனுபவம் இல்லாத புதியவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.''
"வி.பி. சிங், அருண் நேரு போன்றவர்கள் வெளியேறிய பிறகு, நீங்கள், பிரணாப் முகர்ஜி போன்றோர் கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றீர்களே, அப்படி இருந்துமா நிலைமையை மீட்டெடுக்க முடியவில்லை?''
"நிலைமை அதற்குள் கைமீறிப் போய்விட்டது. காங்கிரஸ் ஜெயிக்காது, பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்பது போன்ற கருத்தாக்கம் பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. அதனால், தேர்தலை சந்திக்கவேகூட காங்கிரஸிடம் போதிய பணம் இருக்கவில்லை. நன்கொடைகள் குறைந்துவிட்டன. 1989, 1991 தேர்தல்களை எதிர்கொள்ள நாங்கள் சிரமப்பட்டோம் என்பது சிலருக்குத்தான் தெரியும்.''
"இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?''
"எனக்குத் தெரியாது. நான் பொருளாளர் அல்ல. கிளம்புவோம்.''
அதற்கு மேல் அவர் பேசவில்லை. இந்த அளவுக்கு அவர் பேசியதே அதிகம். அதைவிட வியப்பு என்னவென்றால், போஃபர்ஸ் ஊழலில் ரூ.68 கோடி கையூட்டுப் பெற்றதாகக் கூறப்படும் காங்கிரஸ் கட்சியில் நிதி நெருக்கடி நிலவியது என்பதுதான். ஒன்று, போஃபர்ஸில் எந்தவிதக் கையூட்டும் பெறவில்லை. அல்லது, அப்படியே பெற்றிருந்தாலும் அது கட்சிக்கு வரவில்லை.
தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய வை. கோபால்சாமியால், திமுகவில் பெரிய பிளவை ஏற்படுத்த முடியாவிட்டாலும், தொண்டர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பெரும் மாற்றம் ஏற்படுத்த
முடிந்திருக்கிறது.
இடதுசாரி கட்சிகளின் ஆதரவு மதிமுகவுக்குக் கிடைத்ததை மிகப் பெரிய அரசியல் மாற்றத்திற்கான அடையாளமாக அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள். மதிமுக - இடதுசாரிக் கூட்டணி, ஆளும் அதிமுகவுக்கு மறைமுகமாக உதவக்கூடும் என்று திமுகவே கருதியது என்பதுதான் நிஜம்.
வட மாவட்டங்களை மையமாகக் கொண்டு வளர்ந்து வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும், ஒரு வகையில் திமுகவின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதுதான் பரவலாகக் காணப்பட்ட எதிர்பார்ப்பு. டாக்டர் ராமதாஸின் பின்னால் வன்னியர்கள் ஒருங்கிணைவதால், திமுக பலவீனப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் அதிமுகவுக்கு சாதகமாக மாறியது.

பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை பலவீனப்படுத்தி இருந்தாலும், எதிர்க்கட்சிகள் பிளவுபட்டிருப்பதும், திமுக பலவீனப்பட்டிருப்பதும் ஆளும் அதிமுகவை பாதுகாத்தன எனலாம்.
அதிமுகவின் கூட்டணிக் கட்சியாக 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 60 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், திமுக உள்ளிட்ட ஏனைய கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்த நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்துடன் இருந்தது காங்கிரஸ்தான். அதிமுகவுடனான காங்கிரஸின் உறவு ஏறத்தாழ முறிந்து விட்டிருந்தது எனலாம்.
வாழப்பாடி ராமமூர்த்தி தன்னை அர்ஜுன் சிங், என்.டி. திவாரி ஆகியோருடன் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, அவர் அகற்றப்பட்டு குமரி அனந்தன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே நரசிம்ம ராவ் அரசுடனும், ஆளுநர் சென்னா ரெட்டியுடனும் சுமுகமான உறவு இல்லாமல் இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, குமரி அனந்தனை மாநிலத் தலைவராக காங்கிரஸ் தலைமை நியமித்தது மேலும் ஆத்திரத்தைக் கிளப்பியது. குமரி அனந்தனின் அறிக்கைகள்தான் அதற்குக் காரணம்.
தில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே விமானத்தில் தா. பாண்டியன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய சிபிஐ என்கிற கட்சியை நடத்தி வந்த நேரம். காங்கிரஸ் சின்னத்தில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகி இருந்தார். காலியாக இருந்த இருக்கைகளில் நாங்கள் அருகருகே அமர்ந்து தமிழக அரசியல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
"ஜெயலலிதா ஆட்சி எப்படி இருக்கிறது?''
"ஊழல் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேளுங்கள். காங்கிரஸ் கட்சி நல்லதொரு வாய்ப்பை நழுவவிடுகிறது. நரசிம்ம ராவ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மக்களின், குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தின், வெறுப்பை சம்பாதித்துத் தந்திருக்கின்றன. அதிமுகவின் இப்போதைய கெட்ட பெயருக்கு, காங்கிரஸ் மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும்...''
"தேர்தல் வந்தால் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''
"ஜெயலலிதாவே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று நினைக்கிறேன். அதற்குக் காரணம், அவரது செல்வாக்கு அல்ல. திமுக துவண்டுபோய் பலவீனமாக இருக்கிறது. மதிமுக, பாமக போன்ற கட்சிகள் பலமுனைப் போட்டியை ஏற்படுத்தப் போகின்றன. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், வாக்குகள் மேலும் பிளவுபடும். அதெல்லாம் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் சாதகமாக மாறும் என்று நான் நினைக்கிறேன்.''
"திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்படுமா?''
"ஏற்படலாம். கலைஞர் தயாராக இருப்பார். அப்படி கூட்டணி ஏற்பட்டால்தான், திமுக மீண்டும் தலைதூக்க முடியும். ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டாலும் வியப்பில்லை. இப்போது எதுவும் சொல்ல முடியாது.''
நாங்கள் இருவரும் விமானம் சென்னையைத் தொடுவதுவரை பேசிக் கொண்டிருந்தோம். விமான நிலையத்திலிருந்து அண்ணா நகரிலிருந்த எனது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, எனக்குக் கிடைத்த தகவலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரனை, ஜெயலலிதா சுவீகாரம் எடுத்துக் கொள்வதாக அறிவித்தது போதாதென்று, அவரது திருமணத்தை விமரிசையாக நடத்தத் தீர்மானித்திருந்தார்.
சத்தியமூர்த்தி பவனில் அடுத்த நாள் குமரி அனந்தனை சந்தித்தேன். எனது பள்ளி நாள்களிலிருந்து அறிமுகமான அரசியல் தலைவர் அவர். நான் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, அவர் டுடோரியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்தார்.
இலக்கியக் கூட்டங்களிலும், காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலும் பேசுவார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே பெருங்கூட்டம் கூடும். அந்தக் கூட்டங்களில் நானும் பலமுறை கலந்துகொண்டு அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். சிறுவனாக அவருக்கு நான் அறிமுகமானதாலோ என்னவோ, இன்றுவரை என்மீது தனிப்பிரியமும், அக்கறையும் வைத்திருப்பவர் குமரி அனந்தன்.
"அந்த அம்மாவுக்கு ஏன் இப்படி எல்லாம் தோன்றுகிறது? ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு அவர் நடத்தப்போகும் இந்தத் திருமணம்தான் காரணமாகப் போகிறது. வாரிசு இல்லாமல் இருந்ததுதான் பெருந்தலைவர் காமராஜர், எம்ஜிஆரின் பலம். ஜெயலலிதாவுக்கும் அந்த பலம் இருந்தது. அதை இப்போது இழக்கப்போகிறார்.''
"முதல்வராக இருப்பவர் தனது வீட்டில் ஒருவருக்குத் திருமணம் செய்து பார்க்க நினைப்பது தவறா?''
சாதாரணமாகக் கோபம் வராத குமரி அனந்தனுக்கு அப்படியொரு கோபம் வந்துவிட்டது. அவருக்கு மேலும் எரிச்சலூட்ட விரும்பவில்லை நான். அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரும்கூட இந்த அறிவிப்பை எதிர்க்கவில்லை என்றாலும், அம்மாவிடம் திருமணத்தை அதிக ஆடம்பரமில்லாமல் வீட்டில் நடத்தும்படி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதாக என்னிடம் குமரி அனந்தன் சொன்னார்.
என்னதான் நினைக்கிறார் நடராஜன் என்று தெரிந்து கொள்ள, பெசன்ட் நகர் கலாúக்ஷத்ர காலனி வீட்டுக்குச் சென்றபோது, அவர் வெளிநாடு போயிருப்பதாகச் சொன்னார்கள்.
வரலாறு காணாத அளவில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக முதல்வர் ஜெயலலிதா சுதாகரனின் திருமணத்தை நடத்த இருக்கிறார் என்பது ஊடகங்களில் தலைப்புச் செய்தி மட்டுமல்ல, மக்கள் மத்தியில் சுவாரஸ்யமான சம்பவமாகவும் மாறிவிட்டது. சாவி சாரின் "வாஷிங்டனில் திருமணம்' தொடரில் காணப்பட்டதுபோல, சுதாகரன் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.
ஆளுநர் சென்னா ரெட்டி, தலைநகர் தில்லி சென்றிருப்பதாகவும், பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் செய்தி கிடைத்தது. தில்லிக்குப் போய் அவரை சந்திப்பதால் அடுத்த அரசியல் நகர்வு குறித்து தெரிந்து கொள்ளலாம் என்பதால், நானும் கிளம்பிவிட்டேன்.
இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் ஒரு நிகழ்ச்சி. அதில் குடியரசு துணைத் தலைவர் கே.ஆர். நாராயணன், ஆளுநர் சென்னா ரெட்டி, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் முதல் ஆளாக ஆஜராகி இருந்தேன்.
கூட்டம் முடிந்து கிளம்பும்போது, இரவு வீட்டில் வந்து சந்திக்கும்படி பிரணாப்தாவும், அடுத்த நாள் தமிழ்நாடு இல்லத்தில் சந்திக்கும்படி ஆளுநர் சென்னா ரெட்டியும் அழைப்பு விடுத்தனர். சென்னா ரெட்டி அழைத்ததுகூடப் பெரிதாகத் தெரியவில்லை. பிரணாப் முகர்ஜி அடையாளம் கண்டு அருகில் அழைத்து இரவு வரும்படி சொன்னபோது, ஏதோ காரணம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
(தொடரும்)

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com