திரைக் கதிர்
By | Published On : 04th December 2022 06:00 AM | Last Updated : 04th December 2022 06:00 AM | அ+அ அ- |

பொங்கல் விருந்தாக "வாரிசு', "துணிவு' வெளியாகின்றன. விஜய்யின் "வாரிசு' தெலுங்கில் "வாரிசுடு' என்ற பெயரில் வெளியாகிறது. ஆந்திராவில் சங்கராந்திப் பண்டிகை வருவதால் நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதாக வந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. சிரஞ்சீவியின் "வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் "வீர நரசிம்ம ரெட்டி', அகில் அக்கினேனியின் "ஏஜென்ட்' ஆகிய படங்களுடன் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் "வாரிசு' படமும் வெளியாகிறது.
-------------------------------------------------------
பாலா - சூர்யா கூட்டணியில் "வணங்கான்' அதிக எதிர்பார்ப்புடன் படப்பிடிப்பு ஆரம்பித்தது. கன்னியாகுமரி, ராமேசுவரம் ஆகிய கடலோரப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் படப்பிடிப்பில் வாக்குவாதம், படப்பிடிப்பு பாதியில் நின்றது என்ற தகவல் பரவியது. உடனே தயாரிப்பாளரான சூர்யா தரப்பில் "ஜூன் மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்க உள்ளது' என அறிவித்தனர். இதற்கிடையே இயக்குநர் சிவா - சூர்யாவின் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு அதாவது சென்னை, கோவாவைத் தொடர்ந்து நேற்று மீண்டும் சென்னையில் துவங்கியிருக்கிறது. சிவா படத்தின் படப்பிடிப்பே மார்ச் வரை
இருக்கிறது என்கிறார்கள்.
-------------------------------------------------------
சென்னை பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் ரஜினியின் "ஜெயிலர்' படப்பிடிப்பும், அஜித்தின் "துணிவு' படப்பிடிப்பும் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டுமே அருகருகே நடந்து கொண்டிருக்கிறது. "ஜெயிலர்' யூனிட்டில் ரஜினியுடன் அனைத்து நடிகர், நடிகைகளும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. அதைப் போல "துணிவு' பேட்ச் ஒர்க் படபிடிப்பு என்றாலும் கூட, அஜித்தும் இருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்கள் பேட்ச் ஒர்க் போகலாம்
என்கிறார்கள்.
-------------------------------------------------------
ஐஸ்வர்யாராய் தனது மகளின் பிறந்தநாளையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்கு உதட்டோடு உதடாக முத்தம் கொடுப்பது போன்று போன்று இடம் பெற்று இருக்கிறது. அதோடு அதில், "எனது அன்பு... எனது வாழ்க்கை... ஐ லவ் யூ மை ஆராத்யா' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள புகைப்படத்தை சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவர், "இது இந்திய கலாசாரம் கிடையாது, வெட்கமாக இருக்கிறது!' என்று புகைப்படத்தைப் பார்த்து குறிப்பிட்டுள்ளார்.