ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முன்தலை வழுக்கை குணப்படுத்துவது எப்படி?

என் மகனுக்கு வயது 27. அமெரிக்காவில் நியூயார்க் சிட்டியில் வேலை. காலில் ஷூ போட்டு நடக்கும்போது, சுமாராக அவனால் நடக்க முடிகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முன்தலை வழுக்கை குணப்படுத்துவது எப்படி?

என் மகனுக்கு வயது 27. அமெரிக்காவில் நியூயார்க் சிட்டியில் வேலை. காலில் ஷூ போட்டு நடக்கும்போது, சுமாராக அவனால் நடக்க முடிகிறது. அதைக் கழட்டிவிட்டு நடக்கும் நடை தடுமாறுகிறான். சுலபமாக திரும்ப முடிவதில்லை. உடலிலுள்ள அத்தனை எலும்பு பூட்டுகளிலும் கடுமையான வலியால் அவதியுறுகிறான். புரதம் நிறைய உள்ள சிறுதானியங்களை அதிகம் சாப்பிடுகிறான். சைவ சாப்பாடு மட்டும்தான் சாப்பிடுவான். இது என்ன வகை உபாதை? எப்படி குணப்படுத்துவது?

லட்சுமி, மயிலாப்பூர்,
சென்னை.

'ஃபிப்ரோ மியாலஜியா' எனும் ஒரு வகை உபாதையால் நீங்கள் குறிப்பிடும் இதுபோன்ற அறிகுறிகள் அதிகம் தென்படும். மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் பல உத்தரவுகளையும் தசையினுள் சென்றடையும் நரம்பு மண்டலங்களால் செயல்படுத்த முடியாமல் போகும் இந்த உபாதைக்குக் காரணகர்த்தாவாக விளங்கும் பிராண- வியான வாயுக்களின் செயலற்றத் தன்மையால், தசைகளின் அங்க அசைவுகள் தொய்வடைகின்றன.

வாயுவின் ஆதிக்ய பூதங்களாகிய வாயு மற்றும் ஆகாயத்தின் வரவை சூடாறிய சிறுதானியங்களிலுள்ள புரதம் வழியாக செரிமான இறுதியில் சத்தாக உடல் உட்புற பரிமாண வளர்ச்சிக்காக எடுத்துச் செல்லப்படும் நிலையில், அதில் அடங்கியுள்ள வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, சூட்சுமம், அசையும் தன்மை போன்ற குணங்களை நரம்புகள் அடையும்போது, இவற்றின் எதிரான குணங்களாகிய நெய்ப்பு, கணம், சூடு, ஸ்தூலம் மற்றும் நிலைப்பு ஆகியவை குறைவதால், நரம்புகள் வலுவிழக்கின்றன.

வளர்ச்சியடைந்த குணங்களின் பிரதிபலிப்பானது உடலெங்கும் உரைப்படும் தருவாயில், பூட்டுகளில் வலி, தசைகளின் தன்னிச்சையான அசைவுகளின் மந்தமான தன்மை போன்றவை தலைதூக்கிவிடும்.

இதுபோன்ற தடுமாற்றத்தை தடுத்து நிறுத்தி, நாடி நரம்புகளிலும், தசைகளின் உட்புற ஸ்திரத்தன்மையிலும் வலுவூட்ட, வாயு- ஆகாயம் நிறைந்த வாயு உணவுப் பொருட்களுக்கு எதிரான நிலம்- நீர்- நெருப்பு ஆகியவை பொதிந்த உணவுப் பொருட்களை அவர் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

நீர்- நிலம் நிறைந்த இனிப்புச் சுவை, நெருப்பு- நிலம் நிறைந்த புளிப்புச்சுவைகளை அதிகம் உணவில் சேர்க்கப்பட வேண்டும். நீரும் நெருப்பும் நிறைந்த உப்பை சிறிய அளவில் தேவைக்கேற்ப உணவில் சேர்த்து, நெய்ப்பும், கனமும், நிலைப்பையும் பெறும் வகையில் உணவையும், மருந்தையும் அவர் பெறும்பட்சத்தில், உபாதையின் தாக்கத்தை பெருமளவு குறைத்துவிடலாம்.

மேற்குறிப்பிட்ட வகையில் குணமும் செயலும் நிறைந்த விதார்யாதிகஷாயம், விதார்யாதிக்ருதம், க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்து, தசமூலம் கஷாயம், இந்து காந்தம்க்ருதம் என மருந்துகள் பல உள்ளன. அவருடைய பசியின் தன்மை, நாடித்துடிப்பின் தன்மை, குடல்வாகு போன்ற அடிப்படை விஷயங்களை நன்கு ஊகித்து அறிந்த பிறகேகொடுக்க வேண்டியிருப்பதால், நீங்கள் அவரை ஆயுர்வேத மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவரின் அறிவுரையின்படி மருந்துகளைச் சாப்பிடுவது நன்மை.

உபாதையின் தீவிரம் கடுமையாக இருப்பதால், வெளிப்புறமாகவும் சில ஆயுர்வேத சிகிச்சைகள் செய்தால் உடல் குணமடைய வாய்ப்புகள் அதிகம். 'சிரோவஸ்தி' எனும் தலையில் மூலிகைத் தைலத்தை நிரப்பிவைக்கும் சிகிச்சை முறை, உடலெங்கும் வெதுவெதுப்பாக ஊற்றப்படும் 'தைலதாரா' மற்றும் 'நாடீஸ்வேதம்' எனும் நீராவிக்குளியல், ஆசனவாய் வழியாக செலுத்தும் மூலிகைத் தைலம் மற்றும் மூலிகைக் கஷாயம், 'நவரக்கிழி' எனும் பாலுடன் கலந்த மூலிகைச் சோற்றை உடலெங்கும் தேய்த்துவிடும் சிகிச்சை முறை, 'நஸ்யம்' எனும் மூக்கினுள் விடப்படும் தைல சிகிச்சை முறைகளும் அவருக்குச் செய்யப்பட வேண்டிய ஆயுர்வேத சிகிச்சைகளால் நல்லதொரு தீர்வானது ஏற்படலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com