'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 118

தில்லியிலிருந்து சென்னை செல்லும் அந்த விமானத்தில் நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 118

தில்லியிலிருந்து சென்னை செல்லும் அந்த விமானத்தில் நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். முன்வரிசைகளில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் அவர்களுக்குள் விவாதித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். 

கடந்த ஒரு மாதத்தில் பரபரப்பாக நகர்ந்த பல்வேறு சம்பவங்களும் என் நினைவில் பின்னோட்டமாக வந்து சென்றன. தமிழக அரசியலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட மாதம் 1996 மார்ச் எனலாம். மூன்று மாதத்தில் பொதுத்தேர்தல் வர இருக்கும் நேரத்தில், மீண்டும் ஜெயின் ஹவாலா வழக்கு பூகம்பமாக வெடித்திருந்தது.

ஜெயின் ஹவாலா வழக்கில் எல்.கே. அத்வானி, கல்பநாத் ராய், அர்ஜுன் சிங், ஆரிஃப் முகமது கான், யஷ்வந்த் சின்ஹா, தேவிலால், வி.சி. சுக்லா, பல்ராம் ஜாக்கர், மாதவ்ராவ் சிந்தியா ஆகியோரைக் கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தபோது, அதிர்வலைகள் ஏற்பட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? 

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜெ.எஸ். வர்மா, எஸ்.பி.  பரூச்சா, எஸ்.சி. சென் அடங்கிய  டிவிஷன் அமர்வு, விசாரணையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டுவிட்டது. ''ஹவாலா வழக்கு விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும் தங்களிடம் தவிர வேறு யாரிடமும் இனி தெரிவிக்க வேண்டியதில்லை. இனி யாரிடமிருந்தும் உத்தரவுகளையோ, ஆலோசனைகளையோ பெற வேண்டிய அவசியமும் இல்லை'' என்று சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்ட பிறகு பிரதமர் நரசிம்ம ராவ் வெறும் பார்வையாளராக மட்டுமே தொடர வேண்டிய நிலைமை.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், மோதிலால் நேரு மார்க்கிலிருந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்தபோது, ஜெயின் ஹவாலா டைரி வழக்கில் அரசியல் தலைவர்களைக் கைது செய்தது பற்றி அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன். அவர் கோபப்படுவார் என்று நினைத்த எனக்கு, மிகவும் தெளிவாக அவர் சொன்ன பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதை குறித்து வைத்திருக்கிறேன் - 

''நான் என்னுடைய கட்சிக்காரர்கள், அமைச்சர்களைக் காப்பாற்றவில்லை என்று பலருக்கும் என் மீது குறையோ கோபமோ இருக்கலாம். இருக்கலாம் என்ன,  இருக்கிறது. எனது சகாக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் விசாரணையை அனுமதிக்கவும் முடியவில்லை, வழக்கை மூடி மறைக்கவும் முடியவில்லை. என்னால் எதுவுமே செய்திருக்க முடியாது. உச்சநீதிமன்றம் எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் எடுத்துக் கொண்டபோது நான் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வழியில்லை என்கிற துரதிருஷ்டம் ஏற்பட்டுவிட்டது.''

பிரதமர் நரசிம்ம ராவுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தியதில் வயலார் ரவி சொன்னது போல ஜோதிடர் இருந்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஆளுநர் சென்னா ரெட்டி மிகப் பெரிய பங்கு வகித்தார் என்பது எனக்குத் தெரியும். இலை மறைவு, காய் மறைவாக நடந்துவந்த சமரசப் பேச்சுவார்த்தைகளை, தீர்மானமான கூட்டணியாக மாற்றியதில் மிகப் பெரிய பங்கு வகித்தது ரஜினிகாந்தின் முடிவு என்பதுதான் வேடிக்கை.

ரஜினிகாந்த் அப்போது அமெரிக்காவில் இருந்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆங்காங்கே அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டத் தொடங்கி இருந்தனர்.
ரஜினிகாந்த் - ஆர்.எம்.வி; ரஜினிகாந்த் - மூப்பனார்; ரஜினிகாந்த் - திருநாவுக்கரசு படங்களுடனான போஸ்டர்கள் அவரது அரசியல் பிரவேசத்துக்கான முன்னறிவிப்பாகப் பார்க்கப்பட்டன. அந்த சூழ்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ரஜினிகாந்தின் அறிக்கை வந்தது.

அவசர அவசரமாக அழைக்கப்பட்ட நிருபர்கள் கூட்டத்தில், நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கையை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா வாசித்தார். ஓர் ஆவணப் பதிவாக இருக்கும் என்பதால், 1996 மார்ச் 5-ஆம்தேதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை அப்படியே இங்கே தருகிறேன் - 

''என்னை  வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கங்கள். இந்த அறிக்கையின் மூலம் நான் உங்களுக்கு சில விளக்கங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தத் தேர்தலில் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், நல்லாட்சி அமையப் பாடுபடும் அனைத்துக் கட்சிகளுக்கும் என்னுடைய ஆதரவு உண்டு என்றும், 1995 டிசம்பர் 12, 13 தேதிகளில் தொலைக்காட்சி மூலம் நான் மிகத் தெளிவாகக் கூறியிருந்தேன்.

அப்படியிருந்தும் சமீப காலமாக சிலர், ஒரு தனிப்பட்ட அணிக்கு நான் ஆதரவு தரப்போகிறேன், பிரசாரத்துக்கு வரப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதனால், சில பத்திரிகைகளில் சில உண்மையில்லாத தகவல்கள் வந்து கொண்டிருப்பதனால், மக்களுக்கும், பல அரசியல் கட்சியினருக்கும் 'நான் ஆதரவு தருவேனா? பிரசாரத்துக்கு வருவேனா?' என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தக் கட்டத்தில் இதைத் தெளிவுபடுத்துவது என்னுடைய கடமை.

எம்.ஜி.ஆர். விசுவாசிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து காங்கிரஸூடன் கூட்டணி அமைத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொன்னது நான்தான். ஆனால், எந்தக் காரணத்திற்காக அந்த ஆலோசனை சொன்னேனோ அது நிறைவேறவில்லை. இருந்தாலும் இந்தக் கூட்டணி அமைந்தால் ஒரு புது அணி உருவாகும். அவர்கள் புதுக் கொள்கைகளுடன் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இத்தனை நாள் நான் காத்துக் கொண்டிருந்தேன்.

'இந்தப் புது அணி உருவானால் நான் ஆதரவு தர முடியாது. பிரசாரத்துக்கு வர முடியாது. என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதைப் பார்த்து எனக்கு உங்கள் மீது நம்பிக்கை வந்தால், என்னுடைய ரசிகர்களை இந்தப் புதிய அணிக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டுக் கொள்வேன்' என்றும் நான் ஆரம்பத்திலிருந்தே பிரதமர் நரசிம்ம ராவிலிருந்து, மூப்பனார், ஆர்.எம்.வி., எஸ். திருநாவுக்கரசு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சொல்லிக் கொண்டே வந்தேன்.

பொய் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. யாருக்கும் பயப்படுவதும் வழக்கமில்லை.

சமீபத்தில் நடந்த சில விஷயங்கள் என் மனதை பாதித்தது. மத்திய ஆளுங்கட்சி கூட்டணி பற்றித் தெரிவிக்கும் என்று காத்துக் காத்து சலித்துப் போனேன். இனியும் காத்திருக்க எனக்கும் பொறுமை இல்லை. கூட்டணி சேருவதும், சேராததும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் கையில் உள்ளது.

இதன் மூலம் ஆர்.எம்.வீ., எஸ். திருநாவுக்கரசுக்கும், எம்.ஜி.ஆர். முன்னணி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒருவேளை காங்கிரஸூடன் கூட்டணி ஏற்பட்டால் நீங்களாகவே மக்களைச் சந்தித்து உங்களுடைய கொள்கைகளையும், மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறீர்கள் என்பது பற்றியும், வேட்பாளர்கள் யார் என்பது முதற்கொண்டு சொல்லி மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பத்திரிகை விளம்பரங்களிலோ, பிரசாரங்களிலோ, சுவரொட்டிகளிலோ என்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் தயவுசெய்து உபயோகிக்கக் கூடாது என மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் பொதுச்சொத்து. ஒருவேளை நான் நேரடியாக அரசியலுக்கு வர நேர்ந்தால், மக்களிடம் நான் ஆதரவு கேட்பேன், பிரசாரத்திற்குப் போவேனே தவிர மற்றவர்களுக்காக மக்களிடம் ஆதரவு கேட்பதும், பிரசாரத்துக்கு வருவதும் நியாயமும் இல்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை!''

ரஜினிகாந்தின் இந்த அறிக்கையால் மூப்பனார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், ஆர்.எம்.வி., திருநாவுக்கரசு உள்ளிட்ட எம்.ஜி.ஆர். விசுவாசிகளும் நிலைகுலைந்தனர். ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கும் இல்லை, அவர் பிரசாரத்துக்கு வரப்போவதில்லை என்றபோது, அதனால் மகிழ்ச்சி அடைந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியுமாக இருக்கக் கூடும். 

ரஜினியின் அறிக்கை 5-ஆம் தேதி வெளியானது முதல், நரசிம்ம ராவ் - ஜெயலலிதா சந்திப்புக்கான வேலைகள்  மும்முரமாக நடந்தன. அதில் ஆளுநர் சென்னா ரெட்டியின் பங்குதான் மிகமிக அதிகம். ஒருசில ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களும், வயலார் ரவி சொன்னது போல ஜோதிடர்களும்கூட அதில் ஈடுபட்டனர்.

மார்ச் 8-ஆம் தேதி ஹைதராபாதில் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன் ஷ்ரவண் குமாரின் திருமணம். இம்பீரியல் கார்டனில் கோலாகலமாக நடந்த அந்தத் திருமணத்தில், குடியரசு துணைத் தலைவர் கே.ஆர். நாராயணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரவைச் சேர்ந்த மத்திய - மாநில அமைச்சர்கள் என்று வி.வி.ஐ.பிக்களின் படையெடுப்பு காணப்பட்டது. தமிழகத்திலிருந்து மத்திய இணையமைச்சர் கே.வி. தங்கபாலுவும், ஜி.கே. மூப்பனாரும் வந்திருந்தனர்.

ஆளுநர் சென்னா ரெட்டியும் மனைவியும் குறிப்பிடத்தக்க விருந்தினர்கள்.

அதற்கு முன்னால் பிரதமரின் இல்லத்தில் நடந்த எந்த நிகழ்விலும் பங்கு கொள்ளாத தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, பிரதமர் பேரன் திருமணத்தில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்திருந்ததுதான் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. திருமண நிகழ்வு என்கிற சாக்கில், பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது. அங்கேயே மே மாதம் நடக்க இருந்த தேர்தலுக்கான அச்சாரம் போடப்பட்டு விட்டது எனலாம்.

''காங்கிரஸூடனான கூட்டணிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் தயாராக இருக்கிறதா?'' என்று வெளிப்படையாகவே கேட்டார் அதிமுக மக்களவை கட்சித் தலைவர் பி.ஜி. நாராயணன். அவர் சொன்னது உண்மை. பிரதமர் நரசிம்ம ராவ் அவசரப்பட்டு அதிமுக கூட்டணி முடிவை எடுக்கவில்லை.

ஒருபுறம் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று மூப்பனார், சிதம்பரம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், எம்.பி.க்கள் வள்ளல் பெருமான்,  ஜெயமோகன், கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். இன்னொருபுறம், இணையமைச்சராக இருந்த கே.வி. தங்கபாலு, எம்.பி.க்கள் இரா. அன்பரசு, ராஜேஸ்வரன், மணிசங்கர் அய்யர், ஜீவரத்தினம், மரகதம் சந்திரசேகர், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள், திமுகவுடன் கூட்டணி கூடாது என்றும், அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினர்.

அவர்களிடம் பிரதமர் நரசிம்ம ராவ் மிகத் தெளிவாக இரண்டு கருத்துகளைக் கூறினார் -

''ரஜினிகாந்தை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது எந்த விதத்திலும் கட்சியின் பலத்திற்கோ, வெற்றிக்கோ உதவாது. யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தருவதில்லை என்று ரஜினிகாந்த் முடிவெடுத்த பிறகு, அவரை நம்பி நாம் முடிவெடுக்க முடியாது.

அடுத்தபடியாக, திமுகவுக்கு ஈழப்புலிகளுடனும், ராஜீவ் காந்தி கொலையாளிகளுடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் விசாரணையில் இருந்து தெரிகிறது. அதனால், அவர்களுடன் கூட்டு சேர்வதும் சாத்தியம் இல்லை. அது நமது தலைவர் ராஜீவ் காந்திக்குச் செய்யும் துரோகம். அப்படிச் செய்தால் அதை அவரது ஆன்மா மன்னிக்காது!''

1996 மே மாதம் தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைந்ததற்கு முக்கியமான காரணங்கள் இவை இரண்டும்தான். பிரதமர் நரசிம்ம ராவின் தனிப்பட்ட விருப்பம் அல்ல. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com