சுவடுகள்

ரேஷன் கடையில் வாங்கி வைத்திருந்த கோதுமையை, அடுத்த வீதியில் இருக்கும் மாவு மில்லுக்குப் போய் அரைத்து முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தீபாவுக்கு குழப்பம் ஏற்பட்டது.
சுவடுகள்

ரேஷன் கடையில் வாங்கி வைத்திருந்த கோதுமையை, அடுத்த வீதியில் இருக்கும் மாவு மில்லுக்குப் போய் அரைத்து முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தீபாவுக்கு குழப்பம் ஏற்பட்டது. கணவன் வினோத்தும், மகள் ப்ரியம்வதாவும் எதிரில் மொபெட்டில் வந்து கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் வண்டியை அருகே கொண்டு வந்து நிறுத்தினான் வினோத்.
''என்னாச்சுங்க! கம்பெனிக்குப் போகலையா நீங்க? இவளும் வேற உங்க கூட இருக்கா!''
''இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு லீவ். அப்பா என்னை கூட்டிட்டு வந்துட்டாரு.. ஜாலி!'' எனக் குதித்தாள் ப்ரியம்வதா.
''என்னாச்சுங்க?''
''வண்டியில உட்காரு முதல்ல, வீட்டுல போய்ப் பேசிக்கலாம்.''
மாவுப் பையை மடியில் இருத்தியவாறு உட்கார்ந்தாள்.
இரண்டு நிமிடப் பயணத்தில் வீடு வர, அவசரமாய்க் கதவு திறந்தவள் உள்ளே நுழைந்ததுமே, ''இப்ப சொல்லுங்க.. என்னாச்சு'' எனப் பறந்தாள்.
''வந்து.. உங்க பழைய வீட்டுகிட்ட இருக்கிற சிவானந்தம் சாரை சத்திரம் வீதியில வெச்சு தற்செயலாப் பார்த்தேன். அவரு தான் விஷயம் சொன்னாரு.. உன் அப்பாவுக்கு பத்து நாள் முன்னாடி ஒரு விபத்து நடந்துடுச்சாம்.''
''அய்யய்யோ..''
''காலையில வழக்கம்போல ரவுண்டானாகிட்ட வாக்கிங் போயிருக்காரு. ஒரு காரோ, வேனோ வந்து பலமா மோதியிருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சுத் தான் அங்கிருக்கிறவங்கப் பார்த்திருக்காங்க. தலையில நல்ல அடி. ரத்தம் நிறைய போயிருந்ததாம்.''
''அடக் கடவுளே. போன வாரம் ஒரே கெட்ட கனவா வந்திட்டு இருந்தது.. இப்படியா நடக்கணும்!'' என்று தலையில் கை வைத்தபடி உட்கார்ந்துவிட்டாள் தீபா.
ப்ரியம்வதா அவளை பயமாகப் பார்த்தாள்.
''நேத்துவரை ஐசீயூவில தான் வெச்சிருந்தாங்களாம். நிலைமை சரியாகாதால கோயம்புத்தூருக்கு எழுதித் தந்துட்டாங்களாம். அங்கேயும் எதுவும் பண்ண முடியாம, வீட்டுக்கே திரும்ப அனுப்பிட்டாங்களாம். ரெண்டு நாளா படுக்கையில தான் எல்லாமாம். எப்ப வேணும்ன்னாலும் எது வேணும்ன்னாலும்..'' என்று முடிக்க முடியாமல், தலைகுனிந்தான்.
''அப்பா!'' என்று அழ ஆரம்பித்திருந்தாள் தீபா.
''அவரு சேதி சொன்னதும் பக்குன்னு ஆகிப் போச்சு எனக்கு. பழைய வீட்டுல போய் நம்மளை விசாரிச்சிருக்காங்க. அவங்க எதுவும் தெளிவா சொல்லாம குழப்பிட்டாங்கப் போலிருக்கு. போன் நம்பர் வேற மாத்தினோம்ல.. அதுவும் அவங்ககிட்ட சரியா போய்ச் சேரலை!''
அவள் இன்னும் அழுது கொண்டிருந்தாள்.
''தீபா இப்படி அழுதிட்டிருந்தா காரியம் இல்லை. நீ போய் புடவை மாத்திட்டு வா. நாம கிளம்புவோம். பழைய விரோதங்களை நினைச்சுப் பார்க்கிற நேரம் இல்லை இது! குட்டி, அப்பாகிட்ட வா யூனிஃபார்ம் கழட்டு. பச்சை கலர் கவுன் வாங்கித் தந்தேன்ல்ல. அதைப் போட்டுக்குவியாம்.''
''ஏன்ப்பா''
''நாம தாத்தா வீட்டுக்குப் போறோம் பாப்பா''
''தாத்தாவா. தர்சன் வீட்டுல இருப்பாரே தாடி வெச்சுட்டு, அவரை மாதிரியா. இத்தனை நாள் எங்க போனாரு.? நான் பார்த்ததே இல்லையே!''
''சும்மா பேச வைக்காதே குட்டி. ரெடியாகு. பஸ்ஸூல தூரமா போகனும், அப்போ கதை சொல்றேன். தீபா எந்திரிச்சு ரெடியாகும்மா!''
வினோத் தனது சட்டையை கழட்ட ஆரம்பித்திருந்தான்.
''பாரு என் கம்பெனியிலயும், பாப்பாவோட ஸ்கூலிலேயும் எதுக்கும் இருக்கட்டும்ன்னு நாலு நாள் லீவ் சொல்லியிருக்கேன். அங்க தங்கற திட்டத்தோடயே ட்ரஸ்களை எடுத்து வை, அதுக்கேத்த மாதிரி தயாராகிக்கோ!''
அவனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவளை இன்னும் பயமுறுத்தின.
''குட்டி அங்கே வந்துட்டு சும்மா தொணதொணன்னு கேள்வி கேட்டு தொல்லை பண்ணக் கூடாது. உடம்பு சரியில்லாதவங்களைப் பார்க்கப் போறோம். அமைதியா இருக்கனும், புரியுதா?''
''தீபா சில நிமிடங்களில் மாற்றுடையில் தயாராகி கையில் பேக்குடன் வெளியே வந்தாள். கிளம்பலாங்க!''
வெளியே வந்து பக்கத்து வீட்டு பிரகதி அம்மாவிடம் விசயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு வந்தாள்.
''ஏங்க ஒண்ணும் பயப்படற மாதிரி இருக்காதே. படபட ன்னு அடிச்சுக்குது. மயக்கம் வர்ற மாதிரி.''
''அதெல்லாம் அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது தீபா. சூலக்கல் அம்மாவுக்கு ஏதாவது வேண்டிக்கோ?''
'' வண்டியை பஸ் ஸ்டாண்டு நோக்கி திருப்பினான்.''
வினோத்தும், தீபாவும் காதல் மணம் புரிந்தவர்கள். தீபா கல்லூரி படித்த காலத்தில் அவன் பேருந்தில் அறிமுகம் ஆனவன். சாதாரணமாகப் பேச ஆரம்பித்து, ஒத்த ரசனை அடிப்படையில் ஈர்ப்பு ஏற்பட்டு, மனம் ஒன்றி காதலிக்க ஆரம்பித்தவர்கள்.
அவளது அப்பா நகரில் கொஞ்சம் பிரபலம். அடகுக் கடை, பழைய கார்கள் விற்பனை, செக்கு ஆலை என எல்லாவற்றிலும் செழிப்பான பணம் புழங்கியது. சுமாரான ஒரு கட்சியில் சின்னப் பதவியிலும் இருந்தார்.
தீபாவுக்கு அம்மா இல்லை. ஒரே அக்கா. சமீபத்தில்தான் அவளுக்கும் திருமணமாகி மும்பையில் இருந்தாள்.
வினோத்துக்கு ஓர் அண்ணனும், தங்கையும். அண்ணன் புறநகரில் கேபிள் போட்டிருந்தான். வினோத் நண்பனுடன் கூட்டு சேர்ந்து ஒரு ரெடிமேட் கடை ஒன்று வைத்திருந்தான். அப்பா இல்லை. அம்மா வீட்டு நிர்வாகம். அவர்களது காதல் முதலில் அவளது வீட்டுக்குத்தான் தெரிய வந்தது.
''நம்ம கௌரவம் என்ன, அந்தஸ்து என்ன'' என்று அவளது அப்பா வழக்கமான இயல்புடன் குதித்தார். ஆள்கள் வைத்து அவனை மிரட்டினார்.
வினோத் எதற்கும் அசரவில்லை. ஆனால் அவனது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு வந்தபோது தான் நொந்து போனான். அம்மாவின் பார்வை வேறு மாதிரி இருந்தது. வருகிறவள் எந்த அளவுக்கு தன் குடும்பத்தாருடன் ஒத்துப் போவாள், தன்னை அடக்கி விடுவாளோ, தன் மகளின் எதிர்காலம் இந்தக் காதல் திருமணத்தால் சீரழிந்து விடுமோ என்றெல்லாம் குழம்பி தீபாவை எதிர்த்தாள்.
''வேணாம்டா'' என்று அறிவுரை சொல்லி அவன் மனதை மாற்ற முயன்றாள்.
இருமுனைத் தாக்குதலில் இருவரும் விழி பிதுங்கி நின்றனர்.
தீபாவை அவளது அப்பா வீட்டு சிறை வைத்தார். கேரளத்தில் இருக்கும் தூரத்து உறவினருக்கு அவளை திருமணம் செய்து வைக்கும் ரகசிய முயற்சியும் நடைபெற்றது. ஆனால் இத்தனை எதிர்ப்பு தாண்டியும் அந்தக் காதல் உறுதியாக நின்றது.
ஒரு நள்ளிரவு நேரத்தில் வீட்டார் அசந்தச் சமயமாக கவனித்து காம்பவுண்ட் சுவர் எகிறிக் குதித்து அங்கிருந்து வெளியேறி விட்டாள் தீபா.
தயாராகக் காத்திருந்த வினோத் அவளை அழைத்துக் கொண்டு வால்பாறை மலைக்கு சென்றுவிட்டான். முருகன் கோயிலில் வைத்து எளிமையாக திருமணம் முடித்துவிட்டு, பத்து நாள்கள் நண்பனின் வீட்டில் தங்கியிருந்து விட்டு கோபச் சூடெல்லாம் தணிந்திருக்கும் என்ற எண்ணத்தில் ஊர் திரும்பினர்.
நேராக காவல் நிலையத்தில் தஞ்சம். நண்பனின் அப்பா வழக்குரைஞராக இருப்பது பேருதவியாக இருந்தது. தவிர தீபாவும் மேஜராகி ஆறு மாதங்கள் கழிந்திருந்தது.
காவல் துறை சூழல் புரிந்து, ''இது உங்க குடும்ப விஷயம், அமைதியா பேசி முடிவெடுத்துக்குங்க'' என்றபடி பின்வாங்கிவிட்டது.
சிலிர்த்தெழுந்த தீபாவின் அப்பா காவல் நிலையம் என்றும் பார்க்காமல் ''என் மகளோட மனசைக் கெடுத்து அவ வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியேடா பாவி..''என்று அவன் மேல் ஆக்ரோஷமாகப் பாய்ந்தார். விட்ட குத்திலும், அடித்த அடியிலும் அவனது உதடுகள் வீங்கி, கன்னம் பெருத்து அத்தனை காவலர்களும் ஒரு சேர முயற்சித்துத் தான் அவரை விலக்கி
அவனைக் காப்பாற்ற முடிந்தது.
''எனக்கும், உனக்கும் இனி எந்த உறவும் கிடையாது, எப்போ என்னை விரோதம் பண்ணிட்டு அவன் கூட ஓடிப் போனியோ அப்பவே நீ செத்துப் போயிட்டே'' என மகளைப் பார்த்து கர்ஜித்தார்.
வினோத்திடம் திரும்பி, ''டேய் இனி என் வாழ்நாள்ல உன்னை நான் சந்திக்கவே கூடாது. அப்படிப் பார்த்தா நம்ம ரெண்டுபேருல ஒருத்தர் தான் அப்புறம் உயிரோட இருப்பான்'' என்று பகிரங்கமாகவே அவனைப் பார்த்து உறுமினார்.
''அவரோட இடத்துல இருந்து பார்த்தா அந்தக் கோபம் நியாயமானது தான். என்னை மன்னிச்சுடு தீபா, அப்பான்ற உறவு உனக்கு இல்லாமப் பண்ணிட்டேன்! என்று கைகூப்பினான் வினோத்.
அவனது வீட்டிலிருந்து யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எந்தத் தகவலும் இல்லை. அதன் பின்னர், அந்த ஊரில் இருக்க விருப்பமும், மனசும் இன்றி தொலைவு தள்ளி வந்துவிட்டனர். யார் கண்ணிலும் பட்டு தேவையின்றி உறுத்த வேண்டாம் என்ற எண்ணம்.
நண்பனின் சிபாரிசில் ஒரு நிறுவனத்தில் அளவான சம்பளத்தில் வேலை கிடைத்தது. அழுந்தப் பற்றிக் கொண்டான். கொஞ்சம் திறமையாக உழைத்து, இரண்டு பதவிஉயர்வுகளைப் பெற்று ஓரளவுக்கு பொருளாதார நிலை உயர்ந்து. ப்ரியம்வதா பிறந்து, அவள் பள்ளிக்கும் போய், இதுவரை இரு வீட்டார் தொடர்பும் இல்லாத வர்களாகத் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது இருவருக்கும்!
இத்தனை வருடம் கழித்து சொந்த ஊர் திரும்ப இப்போது தான் வாய்ப்பு அமைந்துள்ளது. ஆனால் இப்படியொரு சங்கடமான சூழ்நிலையில்!
இரண்டு மணி நேர பேருந்துப் பயணத்தில் தீபா அடிக்கடி அழுதபடியே இருந்தாள். ஆறுதல் சொன்னால் இன்னும் அழுதாள். எனவே அமைதி காத்தான் வினோத்.
ப்ரியம்வதா அரட்டை அடித்து ஓய்ந்து போய், ஜன்னலோரம் வேடிக்கை பார்த்துவிட்டு, பிஸ்கட் சாப்பிட்டபடியே தூங்கிவிட்டது.
ஒருவழியாக ஊர் வந்து சேர இறங்கினார்கள்.
''சாப்பிட்டுட்டுப் போயிடலாம் தீபா. குட்டி வேற பசியோட இருப்பா!''
''எனக்கு எதுவும் வேணாம்!'' என முனகினவளை அழைத்துப் போய் மினி மீல்ஸ் வாங்கித் தந்தான். பாப்பா சப்பாத்தி சாப்பிட்டது. தனக்கு தயிர் சாதம் வாங்கிக் கொண்டான்.
வெளியே வந்து ஆட்டோ பிடித்தார்கள். திருநீலகண்டர் வீதி.
''இந்த ஊருல கால் வெச்சதுமே எனக்கு என்னென்னமோ ஞாபகம் வருதுங்க!'' என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் தீபா. அவளை ஆறுதலாய் அணைத்துக் கொண்டான் அவன்.
நகரை உற்றுப் பார்த்ததில் மாறுதல்கள் தெரிந்தன. சாலைகள் அகலப்படுத்தப்பட்டதில் நிறைய கடைகளைக் காணோம். சக்தி தியேட்டர் இடிக்கப்பட்டு மாலாக உருமாறியிருந்தது. டூ வீலர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருந்தது. கார்பரேட் நகைக் கடைகள் கண்ணில் பட்டன. ஜனங்கள் ஓடிக் கொண்டே இருந்தனர்.
புது ஊரைப் பார்க்கிற மாதிரி இருக்கு..
வீதியின் ஆரம்பத்திலேயே ஆட்டோ நின்றுவிட்டது. உள்ளே பைப் லைன் வேலை பார்க்கிறாங்க. ஆட்டோ போகாது.
''பரவாயில்லை.'' என்றபடி இறங்கிக் கொண்டார்கள்.
''எனக்கு பயமா இருக்குங்க.'' என்று அவனது கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
''பாரு தீபா, அங்கே நமக்கான வரவேற்பு எப்படியிருக்கும்ன்னு தெரியலை. எல்லாத்துக்கும் மனசை தயார் பண்ணி வெச்சுக்கோ. ரொம்பவும் பிரச்னை பண்ணினா இருக்க வேணாம். உடனே கிளம்பிடுவோம். இந்த சூழ்நிலையில கோபம் வேண்டாம். பொறுமையா இருப்போம்.''
''யாரது தீபா மாதிரி இருக்கு.. வீதியில் நுழைந்ததுமே ஒரு பெரியம்மா நெருங்கி வந்து அவளது கைகளைப் பிடித்துக் கொண்டது. எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து, இது யாரு உன் மகளா?''
கும்பல் சேர்ந்து ப்ரியம்வதாவை தூக்கிக் கொண்டார்கள். அவளை வேடிக்கை பார்க்க, நலம் விசாரிக்க ஆள்கள் சூழ்ந்து கொள்ள வினோத் திணறிப் போனான்.
''தீபா அப்புறம் நிதானமாக வந்து பேசிக்கலாம். முதல்ல அப்பா முக்கியம். வா!'' என்று அவளது கை பிடித்து இழுத்தான்.
''ஆமா முதல்ல அவரைப் போய் பார்த்துட்டு வா தீபா. பாவம் இப்பவோ, அப்பவோன்னு இழுத்துட்டு கிடக்கறாரு.. கடைசி மூச்சு இருக்கிற போதே அவர் முகத்தைப் பார்த்துடு.. சந்தோஷமா போய்ச் சேரட்டும்!''
அந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்த மாதிரி அழ ஆரம்பித்துவிட்டாள் தீபா. வேக நடையில் வீட்டை நெருங்கி, கேட் கடந்து, வாசலருகே வர வீட்டுக்குள்ளிருந்து நர்ஸ் பெண்மணி ஒருவர் வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு அழுதபடி பரபரப்பாக வெளியே வந்தார்.
''பெரியவர் நம்மளை ஏமாத்திட்டுப் போயிட்டாரு!'' என்று வாசலில் நின்றபடி பொது அறிவிப்பு செய்தார்.
''அய்யோ..'' என்றபடி கும்பலாக அலறல் ஓசையும், வயதான பெண்கள் மாரில் அடித்துக் கொண்டு உள்ளே ஓடுவதும் இருந்தனர்.
நடந்த அசம்பாவிதம் புரிய சில நொடிகள் ஆனது தீபாவுக்கு. சுதாரித்தபடி, '' அப்ப்பா...'' எனக் கதறினபடி வீட்டினுள் பாய்ந்தாள்.
வினோத் திகைத்துப் போய் நின்றிருந்தான்.
ஒரு நிமிடம் முன்னதாக வந்திருந்தால் கூட உயிர் தங்கியிருக்கும் அந்த முகத்தைப் பார்த்திருக்கலாமே. தவறவிட்ட குற்றத்துக்கு யார் பொறுப்பு? இனி காலம் முழுக்க இந்த குற்ற உணர்வு முள்ளாக உறுத்துமே.
''நம்ம ரெண்டு பேரும் இனி பார்த்துக்கவே கூடாது, மீறிப் பார்த்துக்கிட்டா ரெண்டு பேருல ஒருத்தர் உயிரோட இருக்கமாட்டாங்க.. ஸ்டேஷனில் வைத்து அவர் சொன்ன வார்த்தைகள் மனதில் கேட்டுக் கொண்டிருக்க.. வாழ்வின் நிலையாமை தந்த அயர்ச்சியைத் தாங்க மாட்டாதவனாய் அருகிலிருந்த தூணைப் பற்றினபடி தடுமாறி நிற்கிறான் அவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com