'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 74

தில்லி கான் மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் அம்பாசிடர் ஹோட்டலில் ம. நடராஜன் தங்கியிருக்கிறார் என்கிற தகவலை, வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்திருந்தார்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 74

தில்லி கான் மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் அம்பாசிடர் ஹோட்டலில் ம. நடராஜன் தங்கியிருக்கிறார் என்கிற தகவலை, வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்திருந்தார். அவர் எதற்காக தில்லிக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவில்லை என்றால், எனது தலையே வெடித்துவிடும் போலிருந்தது. காலையிலேயே அவரை சந்திக்கச் சென்று விட்டேன்.

சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார் ம. நடராஜன். என்னைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியடையவில்லை. மாறாக சிரித்தபடியே வரவேற்றார்.

""காலையில் வாழப்பாடியாருடன் பேசினேன். நேற்று நீங்கள் அவர் வீட்டுக்கு வந்திருந்ததாகவும், நான் வந்திருக்கும் தகவலை உங்களுக்குச் சொன்னதாகவும் சொன்னார்.

அதனால் நீங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்த்தேன். இன்றைக்கு நீங்கள் வேறு வேலை எதுவும் வைத்துக் கொள்ளாதீர்கள். என்னுடன் இருக்கிறீர்கள்...''

""எதற்காக இந்த திடீர் தில்லி விஜயம்?

தமிழகத்தில்தான் எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லையே...''

""பிரச்னை எதுவும் இல்லை என்று உங்களிடம் யார் சொன்னது? நான் அதற்காக தில்லிக்கு வரவில்லை. வேறு ஒரு காரணத்துக்காக வந்திருக்கிறேன். நீங்கள் என்னுடன் இருங்கள். நான் சிலரை சந்திக்கப் போகிறேன். அதை செய்தியாக்கி விடாதீர்கள்.''

சிற்றுண்டி அருந்திவிட்டு, லாபியில் அமர்ந்தபடி சில பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் யாருக்காகவோ காத்திருக்கிறார் என்பது தெரிந்தது. அது பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.

வெளியே ஒரு கார் வந்தது. ""வாருங்கள், போகலாம்'' என்று என்னையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார். அருகே போய்ப் பார்த்தபோது, காரின் பின் சீட்டில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. பி.உபேந்திரா அமர்ந்திருந்தார். நாங்கள் காரில் ஏறிக் கொண்டோம்.

அருகில் மேக்ஸ் முல்லர் சாலையிலுள்ள இந்தியா இண்டர்நேஷனல் சென்டருக்குப் போனது அந்த கார். அங்கே போய், காபி ஷாப்பில் ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டோம்.

இருவருக்கும் நான் தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று நகர எத்தனித்தபோது, என்னை அமரச் சொன்னார் ம. நடராஜன். என்னை நன்றாகத் தெரிந்தவர் என்பதால் உபேந்திராவும், "கூச்சன்டி' என்று உட்கார வைத்துவிட்டார்.

ம. நடராஜன் தில்லி வந்திருப்பதன் நோக்கம் எனக்குப் புலப்படத் தொடங்கியது. வி.பி. சிங்கிடம் சொல்லி, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளமும், முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் நடராஜனின் முயற்சி. அதற்கு அவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பி. உபேந்திராவின் உதவியை நாடுவது தெரிந்தது.

""வி.பி. சிங்கும் சரி, உத்தரபிரதேச ஜனதா தளத் தலைவர்களும் சரி முலாயமுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்தான் அதற்குத்தயாராக இல்லை. தாங்கள் முலாயம் சிங்கை சம்மதிக்க வையுங்கள்'' என்பதுதான்பி. உபேந்திராவின் வேண்டுகோள்.

அடுத்த சுமார் அரைமணி நேரம், உத்தரபிரதேசத் தேர்தல் குறித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பி. உபேந்திரா கிளம்பிப் போனார். நாங்கள் அங்கேயே இருந்தோம். ம. நடராஜன் ஒரு நண்பரிடம் கார் அனுப்பச் சொல்லி இருந்தார். அதற்காகத்தான் காத்திருக்கிறோம் என்று நான் நினைத்தேன். ஆனால், அவர் இன்னொருவருக்காகக் காத்திருக்கிறார் என்பது, அந்த நபர் வந்தபோதுதான்தெரிந்தது. வந்தவர், ஜனதா தள மக்களவை உறுப்பினர் சந்திரஜித் யாதவ்.

எமர்ஜென்சி கால இந்திராகாந்தி அமைச்சரவையிலேயே இணையமைச்சராக இருந்தவர் என்பதால் எனக்கு முன்பே நன்கு அறிமுகமானவர். அவருடனான எனது நெருக்கம் ம. நடராஜனுக்கு நன்றாகவே தெரியும். உபேந்திரா சொன்ன அதே கருத்தைத்தான் சந்திரஜித் யாதவும் தெரிவித்தார்.

கூட்டணி அமையாமல் இருப்பது முலாயமுக்குத்தான் இழப்பு என்று வி.பி. சிங் கருதுவதாகத் தெரிவித்தார் சந்திரஜித் யாதவ். ""கிழக்கு, மேற்குஉத்தர பிரதேசத்தில் 200 இடங்களுக்கும் குறையாமல் ஜனதா தளம் வெல்லும் என்பது வி.பி. சிங்கின் எதிர்பார்ப்பு'' என்றார் அவர்.ம. நடராஜன் எதுவும் பேசவில்லை. நான் கேட்டேன்.

""வி.பி. சிங் கருதுவது இருக்கட்டும். உத்தரபிரதேச அரசியலின் நாடித்துடிப்பை 1970 முதல் அறிந்தவர் நீங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

சந்திரஜித் யாதவ் சிரித்தார்.

""இதுகுறித்து என்னிடம் இதுவரை யாரும் கருத்துக் கேட்கவில்லை. நீங்கள்தான் முதன்முதலில் கேட்கிறீர்கள். வி.பி. சிங் தேசிய அளவில் பெரிய தலைவராக இருக்கலாம். ஆனால், அடித்தட்டுஉத்தரபிரதேச வாக்காளர்களுக்கு அவரைவிட முலாயம் சிங்கைத்தான் நன்றாகத் தெரியும். அவர் முதல்வராக இருந்தது வரை, பாபர் மசூதியைக் காப்பற்றினார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். மண்டல் கமிஷனை வி.பி. சிங் அறிவித்தாலும், அவர் உயர் ஜாதி தாக்கூர் என்பதால், பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களில் ஒருவராக முலாயமின் தலைமையை ஏற்றுக் கொள்வார்களே தவிர, தாக்கூரான வி.பி. சிங்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.''

""இதை நீங்கள் அவரிடம் சொல்லி இருக்கிறீர்களா?''

""சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் விட்டுவிட்டேன். முலாயம்சிங்கும், ஜனதா தளம் இல்லாமல் தனித்து வெற்றி பெற முடியாது. அதிகபட்சம் 100 இடங்களில் வெற்றி பெறலாம், அவ்வளவுதான்.''

அதுவரையில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த ம. நடராஜன் இடைமறித்தார்.

""முலாயம் சிங்கும், கன்ஷிராமும் இணைந்தால்?''

""அது எப்படி சாத்தியம்? உத்தரபிரதேச தலித்களின் முதல் எதிரியே, ஆதிக்க ஜாதியினரான யாதவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான். தலைவர்கள் இணைந்தாலும் தொண்டர்கள் இணைய மாட்டார்கள். அது வேலைக்காகாது (இட் வில் நாட் வொர்க் அவுட்).''

ம. நடராஜன் சிரித்தார். எனக்கு அப்போதுதான் பொறி தட்டியது. ம. நடராஜனின் தில்லி விஜயத்துக்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று ஊகித்து விட்டேன். ஏற்கெனவே அதற்கான அடித்தளத்தை முலாயம் சிங் யாதவ் தனது ஈட்டாவா மக்களவைத் தொகுதியில் சோதனையோட்டம் பார்த்து விட்டார் என்பதும் நினைவுக்கு வந்தது.

1988இல் வி.பி. சிங்கிற்கு எதிராக லக்னெளவிலும், 1989இல் ராஜீவ் காந்திக்கு எதிராக அமேதியிலும் மக்களவைக்குப் போட்டியிட்டு கன்ஷிராம் தோல்வியைத் தழுவினார். அந்தப் போட்டிகள் அவரை தேசிய அளவில் அடையாளம் காண உதவின என்றாலும், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உதவவில்லை. 1991இல் முலாயம் சிங் அவருக்குத் தனது மறைமுக ஆதரவை வழங்க முன்வந்தார். முலாயம் சிங்கின் செல்வாக்குக் கேந்திரமான ஈட்டாவா தொகுதியிலிருந்து 1991 மக்களவைத் தேர்தலில் கன்ஷிராம் வெற்றி பெறக் காரணம் முலாயம் சிங் யாதவ் என்பது வெளியில் தெரியாத உண்மை.

நான் அதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த போது, சந்திரஜித் யாதவும், ம. நடராஜனும் "வி.பி. சிங் முலாயம் சிங் யாதவ், கன்ஷிராம்' மூவரையும் சந்திக்க வைக்க முடியுமா என்பது குறித்துத் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். பி. உபேந்திரா போன்ற பொதுவான ஒருவரை விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி, மூன்று பேரையும் அதற்கு அழைத்து சந்திக்க ஏற்பாடு செய்வது என்று அவர்கள் தீர்மானித்தனர்.

""நீங்கள் சொல்வதைப் பார்த்தால், மீண்டும் ஒன்றுபட்ட ஜனதா தளத்துக்கு உயிர் கொடுக்கப் போகிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆனால், எனக்கென்னவோ இது நடைமுறை சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. சமாஜவாதி கட்சியும்,

பகுஜன் சமாஜ் கட்சியும் வேண்டுமானால் இணைந்து போட்டியிடுவது சாத்தியமாகலாம். மூன்று கட்சிகளும் கூட்டணியாக இணையும் என்று தோன்றவில்லை. வி.பி.சிங்கை முலாயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றால், கன்ஷிராமை வி.பி.சிங் ஏற்றுக்கொள்ள மாட்டார்'' என்றேன் நான்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ம. நடராஜனின் நண்பர் காருடன் வந்து விட்டார். நாங்கள் கிளம்பினோம். காரில் ஏறியதும் ம. நடராஜன் என்னிடம், ""உங்களுக்கு அமர்சிங்கை நன்றாகத் தெரியுமே... அவரை இப்போது சந்திக்க முடியுமா?''

""நன்றாகத் தெரியும். அதற்காக முன்கூட்டியே அனுமதி பெறாமல் அவரை சந்திக்க முடியாது. போன் செய்து கேட்டுவிட்டு வேண்டுமானால் போகலாம்...''

காரில் வந்த நண்பரிடம் பண்டாரா பார்க் போகச் சொன்னார். அப்போது எல்.கே. அத்வானியின் வீடு பண்டாரா பார்க்கில்தான் இருந்தது. அங்கேதான்
ம. நடராஜன் போகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

அந்த கார் போய் நின்றது, அத்வானி வீட்டுக்கு அடுத்த வீடு. ""நீங்கள் இங்கேயே காரில் இருங்கள், வந்து விடுகிறேன்'' என்று கூறிவிட்டு ம. நடராஜன் அந்த நண்பருடன் அந்த வீட்டுக்குள் போனார்.

சுமார் 15 நிமிஷங்களுக்குப் பிறகு இருவரும் திரும்ப வந்தார்கள். நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவரே பேசினார்:

""முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கை சந்திக்கச் சென்றிருந்தோம். அவர் சென்னையில் கவர்னராக இருந்தபோது நான் சந்திக்க முடியவில்லை. சந்தித்தால் அந்த அம்மாவுக்குப் பிடிக்காது. சந்தேகப்படுவார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் மரியாதை நிமித்தம் சந்திக்கப் போனேன். அவ்வளவுதான்.''

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பவர் பீஷ்ம நாராயண் சிங் என்பது எனக்குத் தெரியும். அதனால், நடராஜன் சொன்னதை நான் நம்பவில்லை. என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியாத வேறு ஏதோ காரணமாகச் சந்தித்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

ராஜீவ் காந்தி படுகொலையின்போது, பீஷ்ம நாராயண் சிங் தமிழக ஆளுநராக இருந்தார். சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதால், பீஷ்ம நாராயண் சிங் அவரது ஆதரவாளர் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில், பீஷ்ம நாராயண் சிங்கின் நியமனத்துக்கு ராஜீவ் காந்திதான் காரணம். பாராளுமன்றத் துறை அமைச்சராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் இந்திரா காந்தியின் முழு நம்பிக்கையைப் பெற்ற காங்கிரஸ்காரர். ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அவர் இருந்தார் என்பதும் எனக்குத் தெரியும்.

""இப்போது நாம் ஒருவரைச் சந்திக்கப் போகிறோம். அவரை நீங்கள் தில்லியில்
எதிர்பார்த்திருக்கவே முடியாது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வியூகம் வகுப்பது அவர்தான்'' என்கிற பீடிகையுடன் ஓட்டுநரை கெளடில்யா மார்க்கிற்குப் போகும்படி சொன்னார் ம. நடராஜன். "தமிழ்நாடு இல்லத்துக்கு அவர் போகமாட்டாரே... பிறகு ஏன் கெளடில்யா மார்க்கிற்கு போகச் சொல்கிறார்...' என்கிற யோசனையில் நான் ஆழ்ந்தேன்.

தமிழ்நாடு இல்லத்தைத் தாண்டி, அதன் எதிர்வரிசையில் ஏனைய சில மாநிலங்களின் விருந்தினர் மாளிகைக்கு இடையில் அமைந்திருந்த ஒரு பங்களாவில் அந்தக் கார் நுழைந்தது. "ஸ்பிக் கெஸ்ட் ஹவுஸ்' என்கிற பெயர் பலகையிலிருந்து, அந்த நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை அது என்பது புரிந்தது. உள்ளே நுழைந்தோம்.

ம. நடராஜன் சொன்னது போலவே, அவரை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன்பு அவரை நான் நேரில் சந்தித்ததும் இல்லை. கொள்கைரீதியான முனைப்புடன் உத்தர பிரதேசத் தேர்தலில் கூட்டணி அமைவதற்காக, அவர் அங்கே வந்து தங்கியிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

1993 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை ஏற்படுத்தி, ஒரே நேரத்தில் காங்கிரûஸயும், பாஜகவையும் வீழ்த்திய அந்தத் தலைவர் அரசியல்வாதி அல்ல. அவரது பங்களிப்பு தேசிய அளவிலும் பேசப்படவில்லை; தமிழகத்திலும் உணரப்படவில்லை. அதனால்தான் இங்கே அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com