'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!  76

1993 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய திருப்புமுனையாகத்தான் அமைந்தன. மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட அது காரணமானது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!  76

1993 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய திருப்புமுனையாகத்தான் அமைந்தன. மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட அது காரணமானது. அதுமட்டுமல்ல, நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 1996 வரை தொடரவும், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் முதன்முறையாகத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யவும் அந்த முடிவுகள் உதவின.

உத்தரபிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் நான்காவது இடத்தைத்தான் பெற முடிந்தது என்றாலும், பாஜகவும் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஜனதா தளம் காங்கிரûஸ விட ஏழு இடம் குறைவாகத்தான் வெல்ல முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸ் கட்சியில் தனக்கு எதிரான என்.டி. திவாரி பலவீனமடைந்தது, பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகப் பெரிய வெற்றி.

தேர்தல் நடந்த, பாஜக ஆட்சியில் இருந்த நான்கு மாநிலங்களில், ராஜஸ்தானை மட்டும்தான் பாஜகவால் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. அதை பாஜகவின் வெற்றி என்று சொல்வதைவிட, முதல்வர் பைரான்சிங் ஷெகாவத்தின் வெற்றி என்றுதான் கூற வேண்டும். ராஜஸ்தானிலும், 199 இடங்களில் 76 இடங்களை வென்று காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உயர்ந்திருந்தது.

உத்தரபிரதேசத்தைப் போலவே, பாஜகவின் கோட்டை என்று கருதப்பட்ட மத்திய இந்திய மாநிலமான மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் அடைந்த வெற்றி அசாதாரணமானது. 320 இடங்களில் 174 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, பிரதமரின் வெற்றியாகவே கருதப்பட்டது.திக்விஜய் சிங் முதல்வரானார்.

பாஜக ஆட்சியில் இருந்த ஹிமாசல பிரதேசத்திலும், 68-இல் 52 இடங்களை வென்று வீரபத்திர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அயோத்தி பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அரசியல் அத்தியாயமே முடிந்துவிட்டது என்கிற கணிப்பைப் பொய்யாக்கி பாஜக ஆட்சியில் இருந்த நான்கு மாநிலங்களில் இரண்டு மாநிலங்களைக் காங்கிரஸ் கைப்பற்றி, ஒரு மாநிலத்தில் கணிசமான வாக்கு வங்கியுடனும், இடங்களுடனும் எதிர்க்கட்சியாக உயர்ந்தபோது, பிரதமர் நரசிம்ம ராவ் மீதான நம்பிக்கையும் கட்சியில் உயர்ந்தது.

புதிதாக உருவான தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்று முதல்வர் மதன்லால் குரானா தலைமையில் ஆட்சி அமைந்தது. ராஜஸ்தான், தில்லியில் ஆட்சி, உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களை வென்ற கட்சி, மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சி என்கிற அளவில் பாஜக சமாதானம் அடைய வேண்டி வந்தது.

பிரதமர் நரசிம்ம ராவ் தேர்தல் புயலைச் சந்தித்துக் கொண்டிருந்தார் என்றால், தமிழக அரசியலிலும் குழப்பம் தொடங்கியிருந்தது. அப்போது தில்லிக்கும் சென்னைக்கும் இடையே நான் எத்தனை முறை பயணித்தேன் என்பதை இப்போது குறிப்புகளிலிருந்து பட்டியலிட்டுப் பார்த்தால், தலை சுற்றுகிறது. தொடர்ந்து, சென்னைக்கு வருவதும் போவதுமாக நான் இருந்ததை டைரிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் ஆளுநராக இருந்த மாரி சென்னா ரெட்டி, மே மாதம் திடீரென்று தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவுடன் சுமுகமான உறவு வைத்துக் கொண்டிருந்த ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் மாற்றப்பட்டது, பல சந்தேகங்களை எழுப்பின. இத்தனைக்கும் நரசிம்ம ராவ் தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு அதிமுகவின் 12 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. அப்படி இருக்கும்போது, மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட அந்த முடிவு, ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக ஏற்கெனவே சுப்பிரமணியன் சுவாமி விமர்சனங்கள் செய்யத் தொடங்கி இருந்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் நடத்திய போராட்டமும், அவர் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலில் நடத்திய தாக்குதல்களும், மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அரசியல் சாசனப் பொறுப்பு வகிக்கும் சேஷனுக்கு எதிரான செயல்பாடுகள் உள்துறை அமைச்சகத்தை கடும் கோபத்துக்கு உள்ளாக்கின.

ஜெயலலிதா அரசின் மீதான நரசிம்ம ராவ் அரசின் அதிருப்திக்கு இவை மட்டுமல்ல காரணங்கள். காங்கிரஸ் எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே எழுந்தது. அது நரசிம்ம ராவின் காதில் எட்டியதும் காரணமாக இருக்கலாம்.

உள்துறை இணையமைச்சராக இருந்த ராஜேஷ் பைலட்டின் அலுவலகத்திலிருந்து, அமைச்சர் என்னை சந்திக்க விரும்புவதாக செய்தி வந்தது. ராஜேஷ் பைலட் அரசியலுக்கு வந்தது முதலே எனக்கு நண்பர் என்பதால், அவரை சந்திக்க அக்பர் ரோடு 10-ஆம் இலக்க பங்களாவுக்குச் சென்றேன்.

ராஜேஷ் பைலட்டைப் பற்றி இங்கே சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு தலைசிறந்த தலைவராக உருவாகி இருக்க வேண்டிய ஒருவர் அகால மரணமடைந்தது தேசத்திற்கு மிகப் பெரிய இழப்பு.

தில்லியை அடுத்த பைதிபுரா கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்வர் பிரசாத் சிங்கின் வளர்ச்சி அசாதாரணமானது. குஜ்ஜார் என்கிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞரான ராஜேஷ்வர் பிரசாத், சிறு வயதிலேயே விமான ஓட்டியாக வேண்டும் என்று கனவு கண்டார். தில்லியில் சிறிய பால்பண்ணை வைத்திருந்த மாமாவுக்கு உதவியாக, வீடுகளுக்குப் பால் கொடுத்தபடியே விமானப் படையில் சேர்வதற்கு முயற்சி எடுத்து வந்தார் அவர்.

அவரது கனவு பலித்தது. விமானப் படையில் பைலட் ஆபீசராகத் தேர்வு செய்யப்பட்டார். அந்த கிராமத்தில் இருந்து முதன்முறையாக ஒருவர் விமான ஓட்டியானதால், ராஜேஷ்வர் பிரசாத் சிங்கை எல்லோரும் ராஜேஷ் பைலட் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

விமான ஓட்டியாக அவர் பயிற்சி எடுத்தபோது அவருக்கு ராஜீவ் காந்தியின் அறிமுகம் கிடைத்தது. சஞ்சய் காந்தியும் அவருக்கு நெருங்கிய நண்பரானார். ஆனால், அந்த நட்புக்கும், அவரது அரசியல் பிரவேசத்துக்கும் தொடர்பு கிடையாது என்பதுதான் நிஜம். அவர் அரசியலுக்கு வந்ததற்குக் காரணம், அவரது மனைவி ரமாவும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த
இந்திரா காந்தியும்.

ரமா பைலட் காங்கிரஸ் கட்சியின் மகிளா பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். 1980 தேர்தலில் போட்டியிட அவர் விண்ணப்பித்திருந்தார். 21, அக்பர் சாலையில் வேட்பாளர் தேர்வு நடந்து கொண்டிருந்தது. தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருந்த ராஜேஷ் பைலட், அங்கிருந்த புல் தரையில் காத்திருந்தார். அப்போதுதான் நான் அவருக்கு அறிமுகமானேன்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவி ரமா பைலட் அவசர அவசரமாக வெளியே வந்தார். மேடம் அவரைக் கூப்பிடுவதாகத் தெரிவித்தார். ராஜேஷ் பைலட் அவருடன் அக்பர் சாலை காங்கிரஸ் அலுவலகத்திற்குள் சென்றார். அங்கேதான் விதி அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தது.

ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தியின் விமான ஓட்டி நண்பர் என்று மட்டுமே அதுவரை நினைத்திருந்த ராஜேஷ் பைலட், மகிளா காங்கிரûஸச் சேர்ந்த ரமாவின் கணவர் என்று இந்திரா காந்திக்கு அப்போதுதான் தெரியும். இந்திரா காந்தி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.

""பேட்டா, நீ ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? வேலையை ராஜிநாமா செய்துவிட்டுத்தேர்தலில் நிற்கிறாயா?'

இந்திரா காந்தியின் கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ""அதை மறுக்கவோ, வேண்டாம் என்று சொல்லவோ எங்கள் இருவருக்குமே தோன்றவில்லை..'' என்று பின்னொரு சமயம் ராஜேஷ் பைலட் என்னிடம் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் பைலட்டுக்கு 1980 தேர்தலில் இந்திரா காந்தி ஒதுக்கிய தொகுதி ராஜஸ்தானில் உள்ள பரத்பூர். அதுவும் பரத்பூரின் முன்னாள் மகாராணியை எதிர்த்து.

அவர் வெற்றி பெற்றார் என்பது மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து ராஜஸ்தானிலுள்ள தெளஸா தொகுதியைத் தனதாக்கிக் கொண்டு, வெற்றி பவனி வந்தார் ராஜேஷ் பைலட். அவருக்குப் பிறகு அந்தத் தொகுதியில் அவரது மனைவியும், இப்போது மகன் சச்சின் பைலட்டும் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள் என்றால் அவரது செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

தனிப்பட்ட முறையில் அன்று அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் தொடங்கிய எங்கள் நட்பு, அவர் விபத்தில் மரணமடைந்தது வரை தொடர்ந்தது. அவர் குறித்துப் பகிர்ந்துகொள்ள நிறைய செய்திகள் இருக்கின்றன. நான் தில்லியில் கார் வாங்க வேண்டும் என்று தீர்மானித்தபோது, என்னை மாருதி ஜிப்சி வாங்கும்படி சொன்னது அவர்தான். நான் சென்னை வரும்போது அந்த ஜிப்சியை அவரது பங்களாவில்தான் நிறுத்திவிட்டு வருவது வழக்கம். 30 ஆண்டுகளாகியும் இப்போதும் அந்த ஹரியாணா பதிவு ஜிப்சியை நான் விற்காமல் வைத்திருக்கிறேன்.

தமிழர்கள் மீது ராஜேஷ் பைலட்டுக்கு அதீத நம்பிக்கை உண்டு. அவரது நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த செல்வராஜ் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

எங்களது தொடர்பு விட்டுப்போய்விட்டது.

ராஜேஷ் பைலட்டின் வீட்டிற்கு நான் போனதும் என்னை அவர் அவரது தனி அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் உட்காரக் கூட இல்லை. அவர் எனது தோள்களைப் பற்றிக் கொண்டே கேட்டார்:

""தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது?

ஜெயலலிதா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்?'' அதற்குப் பிறகு அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட பல செய்திகளை நான் இப்போது பதிவு செய்ய முடியாது. இப்போது மட்டுமல்ல, எப்போதும்.

சென்னா ரெட்டி ஏன் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது எனக்குப் புரிந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com