'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! -77

அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் அறையிலிருந்து நான் வெளியே வந்தபோது, வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் புதுவையின் முன்னாள் முதல்வர் எம்.ஓ. ஹெச். ஃபாருக். 
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! -77

அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் அறையிலிருந்து நான் வெளியே வந்தபோது, வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் புதுவையின் முன்னாள் முதல்வர் எம்.ஓ. ஹெச். ஃபாருக். 

""சற்று பொறுங்கள். அமைச்சரை சந்தித்துவிட்டு நானும் வந்துவிடுகிறேன். எனது வீட்டுக்குப் போகலாம். ரொம்ப நாளாச்சு நாம் சந்தித்து மனம் விட்டுப் பேசி...'' என்று அன்புக் கட்டளை பிறப்பித்தார் ஃபாரூக். 

துக்ளக் சாலையில் இருந்த அவரது வீட்டுக்கு வந்தோம். "ராஜோபசாரம்' என்று சொல்வார்கள். அது எப்படி இருக்கும் என்பது எம்.ஓ. ஹெச். ஃபாருக்கிடம் பழகியவர்களுக்குத் தெரியும். அவரை ஒருமுறை சந்தித்தவர்கள், நிரந்தர நண்பர்களாகி விடுவார்கள். அதேபோல, அரசியல் ராஜதந்திரம் என்பதும் அவருக்குக்கை வந்த கலை.

புதுவை மக்களவை உறுப்பினராக இருந்த அவரது வீட்டுக்கு வெளியே உள்ள புல்வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்தோம். புதுச்சேரி குறித்தும், அதன் அரசியல் குறித்தும் பழைய கதைகள், சம்பவங்கள் என்று நிறையச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார் புதுவையின் முன்னாள் முதல்வர்.

1967-இல், தனது 30-ஆவது வயதில் எம்.ஓ. ஹெச். ஃபாருக் புதுவை முதல்வரானபோது, ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை வியந்து பார்த்தது. ஒரு வருடம் மட்டுமே அவரால் பதவியில் தாக்குப் பிடிக்க முடிந்தது. அந்த ஒரு வருடத்தில் அவருக்குக் கிடைத்த அரசியல் அனுபவம், மீண்டும் இரண்டு முறை முதல்வராவதற்கும், பதவிக் காலம் முடியும் வரை முதல்வராகத் தாக்குப் பிடிப்பதற்கும் உதவியது எனலாம். புதுவை அரசியலில் முதன் முதலாக தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்து சாதனை படைத்தவர் ஃபாருக்.

மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர், சவூதி அரேபியாவிற்கான இந்தியத் தூதர், ஜார்க்கண்ட், கேரள மாநிலங்களின் ஆளுநர் என்று ஃபாருக் பின்னாளில் வகித்த பதவிகள் ஏராளம்.

நான் அவரிடம் பார்த்த தனித்திறமை ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? அவர் எந்தப் பதவிக்காகவும் யாரிடமும் போய் நிற்க மாட்டார். ஆனால், அந்தப் பதவி தன்னைத் தேடி வருவதற்கான வியூகங்களை வகுத்து வெற்றி பெற்றுவிடுவார். 

எங்கள் பேச்சு தமிழகம் குறித்துத் திரும்பியது. ஜெயலலிதா ஆட்சியின் மீது மத்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பது குறித்து நான் கேள்வி எழுப்பியபோது, ஃபாருக் சிரித்துக் கொண்டே, ""சரித்திரம் திரும்புகிறது...'' என்று சொன்னார்.

""நீங்கள் சொல்வது புரியவில்லை. அதென்ன சரித்திரம் திரும்புகிறது என்கிறீர்கள்?''

""ஆமாம், யோசித்துப் பாருங்கள். 1969-இல்காங்கிரஸ் பிளவுபட்டபோது, அன்றைய இந்திரா காந்தி அரசுக்கு, அப்போது தமிழக ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆதரவளித்தது. இந்திரா காந்தி தனது மைனாரிட்டி ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது திமுகவின் ஆதரவால்தான். 1971 மக்களவைத் தேர்தலின்போது சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு, இந்திரா காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து அன்றைய முதல்வர் கருணாநிதி வெற்றியும் பெற்றார்.''

""அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?''

""1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு தன்னை ஓர் அசைக்க முடியாத சக்தி என்று முதல்வர் கருணாநிதி கருதத் தொடங்கினார். அப்போது நான் திமுகவில் இருந்தேன். பாண்டிச்சேரி முதல்வராகவும் இருந்தேன். திமுகவின் பல செயல்பாடுகள் பிரதமர் இந்திரா காந்திக்கு எரிச்சலை ஊட்டின. மத்திய அரசைக் கோபப்படுத்தியது. அதனால் எனது புதுச்சேரி அரசும் பாதிக்கப்பட்டது.''

""இப்போது ஜெயலலிதா அரசும் அதேபோல நடந்து கொள்கிறது என்கிறீர்களா?''

""1971 வெற்றிக்குப் பிறகு, திமுகவும் அன்றைய முதல்வர் கருணாநிதியும் நடந்து கொண்டதுபோல, இப்போது 1991 வெற்றிக்குப் பிறகு அதிமுகவும் முதல்வர் ஜெயலலிதாவும் நடந்து கொள்கிறார்கள் என்று பிரதமர் நரசிம்ம ராவ் நினைப்பதில் என்னால் தவறு காண முடியவில்லை. தனக்கு ஆதரவளிப்பதால், அதையே சாக்காக எடுத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசையும், காங்கிரûஸயும் குறைத்து மதிப்பிடுகிறார். பிரதமர் மட்டுமல்ல, நான் உள்பட எல்லா காங்கிரஸ்காரர்களும்கூட அப்படித்தான் நினைக்கிறோம்.''

""தனிப்பெரும்பான்மையுடன் இருக்கும் ஜெயலலிதா அரசை என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? ஆட்சியைக் கலைத்துவிடவா முடியும்?''

""கலைக்க வேண்டும் என்று நினைத்தால் கலைக்கலாம். திமுக ஆட்சியைக் கலைக்கவில்லையா? ஆனால், பிரதமர் நரசிம்ம ராவ் கலைக்க மாட்டார். அதிமுக ஆட்சியைக் கலைப்பதால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடப் போவதில்லை. ஒருவேளை, திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், அது எங்களுக்கு சாதகமாக இருக்காது.''

""அப்படியானால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

""என்னிடம் கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? நான் புதுவை மக்களவையின் எம்.பி. அவ்வளவுதான். பிரதமர் நரசிம்ம ராவ் என்ன செய்வார், செய்யப் போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். தனது ஆட்சிக்கு அதிமுகவின் ஆதரவு தொடரவும் வேண்டும், அதே நேரத்தில் ஜெயலலிதா அரசின் மதிக்காத போக்கைத் தடுக்கவும் வேண்டும்.''

""அதற்காகத்தான் சுப்பிரமணியம் சுவாமி களத்தில் இறங்கி இருக்கிறாரோ?''

""அவர் காங்கிரஸ்காரர் அல்ல. அவரைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அந்த "அம்மா' சற்று தணிந்து போக வேண்டும். ஆனானப்பட்ட கருணாநிதி, எம்.ஜி.ஆராலேயே மத்திய அரசைப் பகைத்துக் கொண்டு ஆட்சி நடத்த முடியவில்லை. இந்த அம்மா எம்மாத்திரம். அதை அவருக்கு யாராவது எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இல்லையென்றால், பெரிய பிரச்னையில் சிக்கிக் கொள்வார்.''

எனது ராஜேஷ் பைலட், எம்.ஓ.ஹெச். ஃபாருக் சந்திப்பு நடந்த மூன்றாவது நாள், எனக்கு நெருக்கமான அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் என்னை அழைத்தார். கஸ்தூரிபா காந்தி மார்க்கிலுள்ள மத்திய அரசு அதிகாரிகளின் கர்ஸன் ரோடு அப்பார்ட்மென்ட்ஸ் குடியிருப்பில் இருந்த அவரது ஃபிளாட்டில் சந்தித்தேன். 

ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி, வழக்கத்தை விட அதிகமாகவே என்னை உபசரித்தார். என்னைப் பற்றி, எனது செய்தி நிறுவனம் பற்றி எல்லாம் அக்கறையுடன் விசாரித்தார். வரவேற்பறையில் அமர்ந்து சங்கீதம், சினிமா உள்பட என்னவெல்லாமோ பேசினோம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர் விஸ்ராந்தியாக (எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் ஓய்வாக) இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். 

 எங்களது பேச்சு தமிழகம் குறித்துத் திரும்பியது.

முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்வதுபோல, ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கினார். சசிகலாவின் கணவர் ம. நடராஜன் தில்லிக்கு வந்தால் யார் யாரை சந்திப்பார், எங்கெல்லாம் போவார் என்று விசாரிக்கத் தொடங்கியபோது, எனக்கு லேசாகப் பொறி தட்டியது. என்னை அவர் நட்பு ரீதியான சந்திப்புக்கு அழைக்கவில்லை என்பது புரிந்தது.

ஹவாலா மூலம் பெரும் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது குறித்து எனக்கு ஏதாவது தெரியுமா என்று விசாரிப்பதற்காகத்தான் அவர் என்னை அழைத்திருந்தார். பழைய தில்லியிலுள்ள சில ஹவாலா பணப்பரிமாற்ற ஏஜெண்டுகளை நடராஜன் சந்திப்பதுண்டா என்று தெரிந்து கொள்வதுதான் அவரது நோக்கம்.  

 ""எனக்குத் தெரிந்து அப்படி யாரையும் நடராஜன் சந்திக்கவில்லை'' என்று நான் சொன்னதை அவர் நம்பினாரா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பிறகு அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.

அடுத்த சில வாரங்களில் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக, டி.டி.வி. தினகரன், ம. நடராஜன் ஆகியோரை அமலாக்கத் துறை கண்காணிக்கத் தொடங்கியது என்பது எனக்குத் தெரியும். ஜெயலலிதாவையும், அவரது ஆட்சியையும் பலவீனப்படுத்துவது என்று பிரதமர் நரசிம்ம ராவ் முடிவெடுத்து விட்டார் என்பதும் உறுதியானது.

வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியுடனான எனது சந்திப்பு என்பது அறவே இருக்கவில்லை. அவர் உலக வர்த்தக நிறுவன மாநாட்டுக்கான முன்னெடுப்புகளில் மும்முரமாக இருந்தார். அது மட்டுமல்ல, அவர் அரசியல் நிகழ்வுகளிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கியும் இருந்தார். காங்கிரஸ் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள அக்பர் ரோடு அலுவலகத்துக்கு வருவதைத் தவிர, கட்சி ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் அவர் சம்பந்தப்படவில்லை. 

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் இந்தர் ஜீத். எனது "நியூஸ்கிரைப்' உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் முன்னோடியான "இன்ஃபா' நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார். அவரது தந்தையார் துர்கா தாஸ் மிகவும் பிரபலமான பத்திரிகையாளர். ஜவாஹர்லால் நேருவின் உற்ற நண்பர்.

பத்திரிகையாளராகவும் இருந்த இந்தர் ஜீத், புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் மாநில முதல்வர்களுக்கு ஒரு பாராட்டு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் 
உத்தர பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவும், ராஜஸ்தான் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத்தும் கலந்து கொள்ளவில்லை. மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங்,

ஹிமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், தில்லி முதல்வர் மதன்லால் குரானா ஆகிய மூவரும் வந்திருந்தனர்.

இந்தர் ஜீத்தின் நண்பர் என்பதாலும், அவர் மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்
தெடுக்கப்பட்டவர் என்பதாலும் பிரணாப் முகர்ஜி அந்த விருந்துக்கு வந்திருந்தார். தவிர்க்க இயலாது என்பதால், அவர் அந்த விருந்துக்கு வந்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை நெருங்கவும், ஓரிரு வார்த்தைகள் பேசவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இந்தர் ஜீத் ஏற்பாடு செய்திருந்த அந்த விருந்துக்குப் பெரும்பாலான ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், முக்கியப் பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர். கே.கே. கட்யால், வி.என். நாராயணன், பி.எஸ். உண்ணியாள், சந்தன் மித்ரா உள்ளிட்ட பலரையும் அங்கே பார்க்க முடிந்தது.

அநேகமாக எல்லாரும் போய்விட்ட நிலையில், என்னைப் போன்ற இளம் பத்திரிகையாளர்கள் சிலர் மட்டும்தான் அங்கே இருந்தோம். தாமதமாக வந்தார் ஆர்.கே. தவான். அவரும் இந்தர் ஜீத்தும் நெருங்கிய நண்பர்கள். தனிமையில் பேச வேண்டும் என்பதற்காகவே அவர் தாமதமாக வந்தாரோ என்னவோ, தெரியாது.

என்னை அவர் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அங்கே இருந்த ஏனைய பத்திரிகை நண்பர்களுடன் சற்று நேரம் சிரித்துப் பேசிவிட்டு, என்னைத் தனியாக அழைத்தார்.

""உனக்கு நான் ஒரு "டிப்ஸ்' தருகிறேன். அடுத்த சில மாதங்களுக்கு உனக்கு தில்லியில் வேலை கிடையாது. தமிழகத்தில் அரசியல் புயல் அடிக்கப் போகிறது. பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும். தேர் இஸ் கோயிங் டுபி பொலிட்டிகல் சேர்னிங்.'' 

""அப்படியென்றால் ஆட்சி கவிழுமா?'' 

""அதெல்லாம் தெரியாது. கட்சி பிளவுபடக் கூடும்... அதற்கு மேல் நான் எதுவும் சொல்லத் தயாராக இல்லை. நீ விசாரித்துத் தெரிந்து கொள்.'' 

சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 164 இடங்களும், காங்கிரஸூக்கு 60 இடங்களும் இருந்தன. அதிமுக பிளவுபட்டு 60 உறுப்பினர்கள் வெளியே வந்தால், காங்கிரஸூடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு உண்டு. அதிமுக பிளவுபடப் போகிறதா? ஜெயலலிதா ஆட்சி கவிழப் போகிறதா?

அதற்கு மேல், நான் ஏன் தில்லியில் இருக்கப் போகிறேன்; சென்னைக்குக் கிளம்பிவிட்டேன். 

நான் எதிர்பார்த்தது ஒன்று. ஆனால், நடந்தது வேறு. நான் சென்னைக்குத் திரும்பி இருந்த நேரத்தில், அங்கே தில்லியில் வேறு விதமான திட்டமிடல் நடந்து கொண்டிருந்தது பின்னால்தான் எனக்குத் தெரியவந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com