பாரம்பரிய நெல்... பட்டதாரி பெண்!
By கே.பி. அம்பிகாபதி. | Published On : 27th February 2022 06:00 AM | Last Updated : 27th February 2022 06:00 AM | அ+அ அ- |

பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து மீள் விதை உருவாக்கம் செய்யும் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவரின் செயல், இயற்கை ஆர்வலர்களை ஈர்த்துவருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சரவணகுமரன். இவரது மனைவி சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான சிவரஞ்சனி வழக்கொழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் முனைப்புக்காட்டி வருகிறார்.
இவருக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட ஒரு பின்னணி உள்ளது.
குரவப்புலம் கிராமத்துக்கு அருகேயுள்ளது கருப்பம்புலம். இந்த ஊரைச் சேர்ந்த சிவாஜி-விஜயலெட்சுமி தம்பதிதான் சிவரஞ்சனியின் பெற்றோர். நடுத்தர குடும்பம். விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம். ஆனால், இங்குள்ள மற்ற விவசாயிகளில் இருந்து இவர்கள் மாறுபட்டவர்கள்.
பாரம்பரிய நெல் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகளைப் பயிரிடுவதில் ஆர்வம் உள்ளவர்கள். வேதாரண்யம் பகுதியை பொருத்தவரையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரளவுக்கு நல்ல வருமானம் தரும் பயிர் என்றால் அது புகையிலை சாகுபடியாகதான் இருந்தது. இந்த தம்பதிக்கும் அப்போது புகையிலை கை கொடுத்தது. ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட விழிப்புணர்வால் புகையிலையின் கேடுகளை உணர்ந்து புகையிலை சாகுபடி செய்வதை நிறுத்திக் கொண்டனர். மேலும் புகையிலைக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
உற்பத்தி செய்யும் நெல் போன்றவற்றை கொள்முதல் நிலையங்களுக்கு கொடுக்காமல் ஆர்வமுள்ள விவசாயிகளிடம் விதையாக மறு உற்பத்திக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே 170 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வைத்தனர்.
இவர்களுடைய மகள் சிவரஞ்சனி படித்தது பொறியியல் பட்டம் என்றாலும், கணவர் சரவணகுமரனுடன் பெற்றோரின் வழியில் பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரித்து வருகிறார்.
அவரின் தேடல்களில் இதுவரை கிடைத்திருப்பவை 1250 ரகங்கள். இதில், தமிழக நெல் ரகமான 174 உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்கொழிந்த பாரம்பரிய நெல் ரகங்களும் அடங்கும்.
குரவப்புலம் கிராமத்தில் தனக்கென சொந்தமாக உள்ள 2 ஏக்கர் நிலத்திலும் மாப்பிள்ளை சம்பா, குழிவெடிச்சான், சூரக்குறுவை, காட்டுயானம், சிகப்புக்கார், சிகப்பு கவுனி, கறுப்பு கவுனி, இலுப்பைப்பூ சம்பா, கறுங்குறுவை, வாழைப்பூ சம்பா என அனைத்து விதைகளையும் விதை மீள் உருவாக்கத்துக்காக பயிர்செய்து சிவரஞ்சனியும் அவர் கணவரும் பாதுகாத்து வருகின்றனர்.
""பாரம்பரிய நெல் ரகங்கள் யாவும் மருத்துவ குணமுடையவை. சித்த மருத்துவரான எனது கணவர் இந்த பணியில் எனக்கு பேருதவியாக இருந்து வருகிறார்.
மேலும், தேசிய அளவில் 22 ஆயிரத்துக்கும் மேலான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. இவற்றில் பெருமளவான எண்ணிக்கையை மீட்டெடுக்கும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்ற சிவரஞ்சனியிடம் மேலும் பேசினோம்:
பாரம்பரிய விவசாயம் என்பது தற்போது இயலாத தொழிலாக கருதப்படும் நிலையில் நீங்கள் ஆர்வம் காட்டுவது எப்படி?
சமூகத்தில் இந்த மன நிலை மாறவேண்டும். வேளாண்மையை மேம்படுத்துவது காலத்தின் அவசியம். அது லாபம் தரும் தொழிலாக இல்லாவிட்டாலும், ஆரோக்கியமானதாக மாற வேண்டும்.
விவசாயம் மட்டுமே நம்மை பாதுகாக்கும் என்ற நிலை வந்துள்ளது. படித்தவர்கள் நம்பிக்கை வைத்து கண்டிப்பாக இதைக் கையில் எடுக்க வேண்டும். படிக்காதவர்களின் அனுபவ அறிவோடு, வானிலை அறிவியல், வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும்.
அதிக மகசூல் உள்ளிட்ட பல சிறப்புகளை கொண்ட நெல் ரகங்கள் வந்த பின்னரும் பாரம்பரிய நெல் ரகங்கள் மீது கவனம் அவசியமா?
பாரம்பரிய நெல் ரகங்களில் பல, மருத்துவ குணம் மிகுந்தவை. சர்க்கரை போன்ற பல நோய்களைத் தவிர்க்கும் என்பதால் அவற்றைப் பயிரிடுவது அவசியமானது.
இந்த முயற்சிகளுக்கு ஆதரவு, வரவேற்பு எப்படி இருக்கிறது?
எனது பெற்றோர், கணவரின் பெற்றோர் என குடும்பத்தினர் அனைவருமே பாரம்பரிய விவசாயத்தின் மீது ஆர்வமும், புரிதலும் உடையவர்கள். பொதுவாகவே பாரம்பரிய நெல் ரகங்கள் மீது சமூகத்தில் விழிப்புணர்வு அதிகரித்து வருவது ஆதரவாக அமைந்துள்ளது.
அண்மையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் வேளாண்துறை அதிகாரிகள், நிபுணர்கள் இங்கு வந்து நாங்கள்
பயிரிட்ட பாரம்பரிய நெல் வகைகளை நேரில் பார்வை யிட்டுச் சென்றுள்ளனர். அதேபோல, பல விவசாய சங்கத்தினர், ஆர்வலர்கள், முன்னோடிகள் வந்து பார்த்துச் செல்வது, எதிர்காலத்தில் எங்கள் நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இந்தப் பணியை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்
வலியுறுத்தியுள்ளார்.