'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 73

லாதூர் நிலநடுக்கம் பகுதியிலிருந்து நான் சென்னை திரும்பிய அடுத்த வாரமே மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 73
Updated on
4 min read

லாதூர் நிலநடுக்கம் பகுதியிலிருந்து நான் சென்னை திரும்பிய அடுத்த வாரமே மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அயோத்தி பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆட்சியிலிருந்ததால் கலைக்கப்பட்ட உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம் மாநிலங்களுடன், அதுவரை ஒன்றியப் பிரதேசமாக இருந்த தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு, அதன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. வடமாநிலங்களில் தேர்தல் நடக்கும் நேரத்தில், நான் சென்னையில் முடங்கிக் கிடக்க முடியாது என்பதால், தில்லிக்குக் கிளம்பி விட்டேன்.

தில்லியில் நல்ல குளிர். தில்லி கோடைதான் சகிக்க முடியாது. தில்லி குளிர் அப்படியல்ல. குளிரில் தில்லி நடுங்கிக் கொண்டிருக்கும்போதுதான், பொதுவாக தலைநகரத்தில் அரசியல் சூடு பிடிக்கும்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்ததால், தேர்தல் முடிவுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன. "நியூஸ்கிரைப்' சந்தாதாரர்களான தினசரிகள் அனைத்துமே தேர்தல் நிலவரம் குறித்த கட்டுரைகளையும், பேட்டிகளையும் எதிர்பார்த்தன. அதனால், தில்லியில் இறங்கியது முதலே சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் ஆட்சி கலைக்கப்பட்டு, அத்தனை கட்சிகளும் ஓரணியில் எதிர்த்து நிற்கும் சூழ்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் அத்தனை மாநிலங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் களமிறங்கி இருந்தது பாஜக. சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றி பாஜகவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமாக இருந்தது காங்கிரஸூக்கு. காங்கிரஸூக்கு என்பதைவிட பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு என்பதுதான் உண்மை.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தோற்கடித்துத் தனது பதவியையும், ஆட்சியையும் பிரதமர் நரசிம்ம ராவ் தக்க வைத்துக் கொண்டார் என்றாலும், பொதுவெளியில் அவர் பலவீனமாகத்தான் தெரிந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பின்னடைவை எதிர்கொண்டால், அதுவே கட்சியின் பிளவுக்கும், அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கும் காரணமாகிவிடும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு மட்டுமல்ல, காங்கிரஸ்காரர்களுக்கே நன்றாகத் தெரிந்திருந்தது.

நரசிம்ம ராவ் எப்போது பலவீனப்படுவார் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர்களான அர்ஜுன் சிங்கும், என்.டி. திவாரியும் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், என்.டி. திவாரியை உத்தர பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கினார் பி.வி. நரசிம்ம ராவ். அதுவே கூட அவரது பலவீனமாகக் கருதப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் ஏனைய நான்கு மாநிலங்களையும் விட, உத்தரபிரதேசத்தில் என்ன நடக்கும் என்பதில்தான் அனைவரின் கவனமும் குவிந்திருந்தது. மக்களவைக்கு 84 உறுப்பினர்களை (அப்போது) அனுப்பும் மாநிலம் என்பது மட்டுமல்ல, பாஜகவின் செல்வாக்குக்குக் காரணமான மாநிலமாகவும் உத்தர பிரதேசம் திகழ்ந்தது (இப்போதும் திகழ்கிறது).

உத்தரபிரதேச அரசியலில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு நான் சிலரைத் தேடிச் செல்வதுண்டு. அங்கேபோய், அந்தத் தலைவர்களை சந்திக்காமல், அவர்கள் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு, வருவோர் போவோரிடம் பேச்சுக் கொடுத்தாலே போதும், ஓரளவுக்குக் களநிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அஜீத் சிங், அமர் சிங், சந்திரஜித் யாதவ், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆகிய நான்கு பேரின் வீட்டு வரவேற்பறைகளும் எப்போதுமே தகவல் சுரங்கங்கள். அமர் சிங் வீட்டு வரவேற்பறை என்பது சற்று வித்தியாசமானது. முப்பது ஆண்டு
களுக்கு முன்பே "ஹை டெக்' வரவேற்பறையாக இருக்கும். சாமானியத் தொண்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இரண்டாவது, மூன்றாவது கட்டத் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள்.

சந்திரஜித் யாதவ் வீட்டில் அதிக அளவில் தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். அப்படியே இருப்பவர்களும் யாதவர்களாகவும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அரசியலில் கொட்டை போட்ட அனுபவசாலிகள்.

அஜீத் சிங் வீட்டு வரவேற்பறையில், ஜாட் இனத்தவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். மேற்கு உத்தர பிரதேச ஜாட்டுகளின் ஆதரவைப் பெற்றவர் என்றாலும், கிழக்கு உத்தர பிரதேசத்திலிருந்து அவரது தந்தை முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் பலரும் அவரைத் தேடி வருவார்கள்.

எல்லா தரப்புத் தொண்டர்களையும் சந்திக்க வேண்டுமென்றால் அது சந்திரசேகர்ஜியின் 3, செளத் அவென்யூவில்தான் பார்க்க முடியும். அங்கே போனால், எந்தத் தொகுதியில் எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும், எந்தக் கட்சி வெற்றி பெறும் உள்ளிட்ட விவாதத்தில் தொண்டர்களும், தலைவர்களும் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.

தில்லிக்கு வந்த பிறகு, நேரம் கேட்டுப் பெற்று வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை இரண்டு தடவைகள் நான் சந்தித்தேன். பரபரப்பாக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க இருந்த நிலையில், அதுபற்றி ஏதாவது கேட்பார், பேசுவார் என்று எதிர்பார்த்தேன். பேசவில்லை. அரசியல் நிகழ்வுகளில் அவருக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது எனக்குத் தெரிந்தது.

வழக்கம்போல் "எப்போது வந்தாய்?', "எங்கே தங்கி இருக்கிறாய்?', "உனது செய்தி நிறுவனம் நன்றாக நடக்கிறதா?' போன்ற கேள்விகளைக் கேட்டாரே தவிர, தமிழக அரசியல் குறித்தோ, தில்லி நிகழ்வுகள் குறித்தோ எதுவுமே பேசாதது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் அதைப் பற்றிக் கேட்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதால், நானும் வந்துவிட்டேன்.

கேரளா ஹெளசில் முதல்வர் கருணாகரனைப் பார்க்கப் போயிருந்தபோதுதான், பிரணாப் முகர்ஜியின் அந்த வித்தியாசமான அணுகுமுறைக்கான காரணம் தெரிந்தது. முதல்வர் கருணாகரன் தங்கியிருந்த அந்த அறைக்குள் நுழைந்ததும், வழக்கம்போல சிரித்தபடி வரவேற்றார்.

""என்ன பிரணாப் ரொம்ப பிஸியாக இருக்கிறாரோ? சந்தித்தாயா?''

""சந்தித்தேன். நீங்கள் சொன்னதுபோல ரொம்ப பிஸியாக இருப்பார் போலிருக்கிறது. அதிகம் எதுவும் பேசவில்லை. நானும் இங்கிதம் தெரிந்து, தொந்தரவு கொடுக்காமல் வந்துவிட்டேன்.''

""ஹா... உன்னிடம் பேசிக் கொண்டிப்பதற்கு அவருக்கு எப்படி நேரமிருக்கும்? மொராக்கோவில், உலக வர்த்தக நிறுவனத்தின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தியா சார்பில் "காட்' ஒப்பந்தம் குறித்துப் பேசுகிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அவர் எப்படி உன்னிடம் பேசிக் கொண்டிருக்க முடியும்? நானே கூட அவரை சந்திக்கப் போவதில்லை.''

கருணாகரன் சொன்னபோதுதான், வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியின் நிர்வாக நெருக்கடி எத்தகையது என்பது தெரிந்தது. முதல்வர் கருணாகரனே அவரை சந்திப்பதைத் தவிர்க்க நினைக்கும் நிலையில், எனக்கு இரண்டு முறை சந்திக்க அவர் "அப்பாயிண்ட்மென்ட்' கொடுத்தார் என்றால், சென்னையிலிருந்து வந்திருக்கும் எனது மனதைப் புண்படுத்த வேண்டாம் என்பதற்காகத்தான் என்பது புரிந்தது.

கருணாகரன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு கேட்டார்:

""உத்தரபிரதேசத்தின் நிலைமை எப்படி இருக்கிறதாம்?''

""பாஜகவின் கைதான் ஓங்கி இருக்கிறது என்கிறார்கள். ஏனைய கட்சிகள் எல்லாம் சேர்ந்தால்தான், பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என்கிறார் அஜீத் சிங். காங்கிரஸூடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஜனதா தளமும், முலாயம் சிங் யாதவ் தொடங்கி இருக்கும் சமாஜவாதி கட்சியும் தயாராக இல்லை. அதுதான் பாஜகவின் பலம். இதுதான் அஜீத் சிங்கின் கணிப்பு.''

சுற்றுமுற்றும் பார்த்தார் கருணாகரன். அவர் தில்லிக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்தால், என்னைப்போல சில பத்திரிகையாளர்களும், அவருக்கு நெருக்கமான காங்கிரஸ்காரர்களும் கேரளா ஹெளசில் குவிந்து விடுவார்கள். அன்றைக்கும் அதுபோல, ஆறேழு பேர். அந்த அறையில் இருந்தார்கள்.

எனக்குத் தெரிந்து கே. கருணாகரன் போல ஓர் அரசியல் தீர்க்கதரிசியும், ராஜதந்திரியும் கிடையாது. எந்தவொரு அரசியல் நீக்கத்தையும் துல்லியமாகக் கணித்து விடுவார். முதுமையும், அவருக்கு நேர்ந்த கார் விபத்தும்தான் அவரது அரசியல் பாதையில் தடையை ஏற்படுத்தின. நாங்கள் அனைவரும் உத்தரபிரதேச நிலவரம் குறித்துக் கருணாகரன் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

""நான் சொன்னதாக யாரும் எழுதிவிடாதீர்கள். உத்தரபிரதேசத்தில் நடப்பது, பெரிய தலைவர்கள் நடத்தும் நிழல் யுத்தம்...''

கருணாகரன் என்ன சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை.

""நரசிம்ம ராவ், வி.பி. சிங், அத்வானி, சந்திரசேகர் நால்வரும்தான் போட்டியாளர்கள். இவர்கள் எப்படி ஒன்று சேர முடியும்? சந்திரசேகரும் அவரது சீடர் முலாயம் சிங் யாதவும், காங்கிரஸூடனும், ஜனதா தளத்துடனும் கூட்டு தேவையில்லை என்று தீர்மானித்திருப்பது சரியான முடிவு. அது பாஜகவுக்கு பலம் சேர்க்காது. பலவீனப்படுத்தும்!''

கருணாகரனின் கணிப்பு வித்தியாசமாகத் தெரிந்தது. பிற கட்சிகள் பிரிந்து இருப்பது பாஜகவுக்கு பலவீனம் என்று கருணாகரன் எப்படி சொல்கிறார் என்று தெரியாமல் விழித்தேன். மற்றவர்கள் யாரும் பேசவில்லை. புரிந்ததோ புரியவில்லையோ, அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினார்கள்.

""நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. அது எப்படி பாஜகவுக்கு பலவீன
மாகும் என்கிறீர்கள்?''

""காங்கிரஸூடன் சமாஜவாதி கட்சி கூட்டணி வைத்தால், முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காது. ஜனதா தளம் பலம் பெற்றுவிடும். ஜனதா தளத்துடன் முலாயம் சிங் இணைந்தால், வி.பி. சிங்தான் பலம் பெறுவார். முலாயம் அதற்குப் பிறகு வளர முடியாது. ஜாதி பலம் இல்லாத வி.பி. சிங்கை வளர்த்து விடுவதில் முலாயம் சிங்குக்கு என்ன லாபம்?''

""தனியாக நின்றால் முலாயம் சிங்கிற்கு அதனால் என்ன லாபம்? பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து விடுமே...''

""சமாஜவாதி கட்சி, ஜனதா தளம், காங்கிரஸ் மூன்றுமே இணைந்தால், சிறுபான்மை முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரித்துவிடும் என்கிற பயம் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு ஏற்படும். ஜாதிப் பிரிவுகளைக் கடந்து ஹிந்துக்கள் பாஜக பின்னால் அணிதிரள்வார்கள். பாஜக மேலும் வலுவடைந்துவிடும் என்று முலாயமும், சந்திரசேகரும் கணக்குப் போடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.''

""முலாயம் சிங்கிற்கு அதனால் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது?''

""அதை இப்போதே சொல்ல முடியாது. முஸ்லிம்கள் காங்கிரஸூக்கு வாக்களிக்க மாட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகள் யாதவ் சமுதாயத்தைச் சேர்ந்த முலாயமுக்குத்தான் கிடைக்கும். முற்பட்ட தாக்கூர் ஜாதி வி.பி. சிங்கிற்குக் கிடைக்காது. பாஜக வரக்கூடாது என்பதற்காக முஸ்லிம்கள் முலாயம் சிங்கிற்கு ஆதரவளிக்கக் கூடும்.''

""அது மட்டுமே போதுமா, ஜெயிப்பதற்கு?''

""தெரியாது... பொறுத்திருந்து பார்ப்போம்.''

கேரளா ஹெளசிலிருந்து வெளியேறியபோது எனக்குச் சற்று தெளிவு பிறந்திருந்தது. அங்கிருந்து பொடிநடையாக நடந்து லீ மெரிடியன் ஹோட்டலுக்கு அருகேயுள்ள வாழப்பாடி ராமமூர்த்தியின் 21, ஜன்பத் சாலை வீட்டுக்கு வந்தேன். கதகதப்பாக "ஹீட்டர்' போடப்பட்டிருந்த வரவேற்பறை இதமாக இருந்தது.

""வாங்கய்யா, நண்பர் நடராஜன் தில்லி வந்திருக்கார் தெரியுமா?'' என்று கண்ணைச் சிமிட்டியபடி வரவேற்றார் வாழப்பாடியார்.

ம.நடராஜன் தில்லிக்கு வந்திருப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் நடக்கும் நேரத்தில் காரணம் இல்லாமல் அவர் வந்திருக்கமாட்டார் என்று எனது உள்ளுணர்வு கூறியது.

1993 உத்தரபிரதேச தேர்தல் முடிவு தமிழகத்தால் தீர்மானிக்கப்பட்டது என்று சொன்னால் யாராவது நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com