'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 95

திருப்பதி பத்மாவதி விருந்தினர் விடுதி வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் என்.டி. ராமா ராவும், அவரது மனைவி லெட்சுமி சிவபார்வதியும் அமர்ந்திருந்தனர்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 95


திருப்பதி பத்மாவதி விருந்தினர் விடுதி வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் என்.டி. ராமா ராவும், அவரது மனைவி லெட்சுமி சிவபார்வதியும் அமர்ந்திருந்தனர். தனது கைத்தடியைப் பற்றியபடி, அதில் தாடையை வைத்துக் கொண்டு என்.டி.ஆர். அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்து நான் நிஜமாகவே நிலைகுலைந்துதான் போனேன்.

என்.டி. ராமா ராவ் என்ன சாதாரணமான ஒருவரா?  இங்கே எம்.ஜி.ஆரைப் போல, தெலுங்குத் திரையுலகில் முடிசூடா மன்னனாகக் கோலோச்சியவர். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது பங்களா வாசலில் தினந்தோறும் குறைந்தது இருபது, முப்பது பேருந்துகளாவது ஆந்திராவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து நின்று கொண்டிருக்கும்.

திருப்பதிக்குப் போய் ஏழுமலையானை தரிசிப்பதுவரைதான் அவர்கள் பக்தர்கள். அதற்குப் பிறகு அந்த பேருந்து சென்னை நோக்கிப் பயணிக்கும்போது அவர்கள் என்.டி.ஆரின் ரசிகர்களாகி விடுவார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் என்.டி.ஆரின் முகத்தைப் பார்க்கத் தெருவில் காத்திருப்பார்கள். அதில் நான் இன்னொரு வேடிக்கையையும் பார்த்திருக்கிறேன்.

அந்த நேரத்தில் என்.டி.ஆரை வைத்துத் திரைப்படம் தயாரித்துக் கொண்டிருப்பவர்கள் ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்தும் அவரைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நேரத்துக்கு சிற்றுண்டி, உணவு, சாயா, தண்ணீர் எல்லாம் கூடக் கொடுப்பார்கள். திருவிழாக் காலத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதுபோல அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்.

""இதனால் உங்களுக்கு என்ன லாபம்'' என்று எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் நான் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்னை சிரிக்கவும் வைத்தது, சிந்திக்கவும் வைத்தது.

""என்ன லாபம் என்றா கேட்கிறீர்கள்? இவர்கள் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகிறார்கள். தங்களது ஊருக்குத் திரும்பிப் போனால், அவர்கள் ஏழுமலையான் தரிசனம் பற்றிப் பேச மாட்டார்கள். மெட்ராஸூக்குப் போய் என்.டி.ஆரைப் பார்த்தது பற்றியும், அவர்களுக்கு சாயா, பலகாரம் எல்லாம் தந்து உபசரித்தது பற்றியும் கதைகதையாய் சொல்வார்கள். அதைக் கேட்பவர்கள் எல்லோரும், எனது திரைப்படம் திரையிடும்போது தவறாமல் திரையரங்கங்களுக்கு வந்துவிடுவார்கள். ஒருவருக்கு சாப்பாடு போட்டால், நூறு டிக்கெட் முன்கூட்டியே விற்றதுபோல...'' - இதுதான் அவர் சொன்ன பதில். 

மாடி பால்கனியில் என்.டி.ஆர். வந்து நின்று கைகூப்பி வணங்கும்போதும், வாழ்த்தும்போதும் அங்கே ஏற்படும் ஆரவாரத்தைப் பார்க்க வேண்டுமே... இன்னொரு நடிகனுக்கு அப்படியொரு செல்வாக்கு ஏற்பட வழியே இல்லை. சிலர் சூடம் கொளுத்தி அவருக்கு தீபமேற்றி காட்டுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த என்.டி. ராமா ராவ் சோர்ந்து போய், கவலையில் தோய்ந்து அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்து நான் திகைக்காமல் எப்படி இருக்க முடியும்? அவரை ஆறுதலாக முதுகில் தடவிக் கொடுப்பதும், துண்டால் அவரது முகத்தைத் துடைத்து விடுவதுமாக இருந்தார் லெட்சுமி சிவபார்வதி.

சற்று அருகில் நெருங்கி நான் சென்றபோது நிமிர்ந்து பார்த்தார். வணக்கம் சொன்னேன்.

"பிரதர்...' என்று தனது கனத்த குரலில் அவர் அழைத்தபோது, அதில் பழைய அதிகார தோரணை இல்லை. மனதுக்குள் நொறுங்கிப் போயிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது. 

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இதேபோல ஆட்சி இழந்து அவர் போராடிய நாள்கள் நினைவுக்கு வந்தன. அப்போது அவருக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது சோ சார்தான்.

தில்லியில் ஜனாதிபதியை சந்திக்கத் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்துக் கொண்டு என்.டி.ஆர். வந்தபோது, அந்த ஜனநாயக மீட்புப் போராட்டத்துக்கு சோ சார் தலைமை தாங்கினார் என்றே கூற வேண்டும். அவரது ஆலோசனைப்படிதான் என்.டி.ஆருக்கு ஆதரவாக எல்லா நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. அப்போது நான் பத்திரிகையாளர்களில் ஒருவனாக அங்கே, இங்கே அலைந்து செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தேன். 

வரலாற்றை இப்போது திரும்பிப் பார்த்தால் அதிசயமாக இருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கியவர் என். பாஸ்கர ராவ்தான். அதற்குப் பிறகுதான் என்.டி. ராமா ராவ் அதில் இணைந்தார் என்பது பலருக்கும் தெரியாது. அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு நிலவியது. 1983-இல் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியைப் கைப்பற்றியபோது, பாஸ்கர ராவ் என்.டி.ஆர். அமைச்சரவையில் நிதியமைச்சரானார். அவர் அதற்கு முன்னர், சென்னா ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையிலேயே இடம் பெற்ற அனுபவசாலியும்கூட.

1983 தேர்தலில், என்.டி.ஆரின் இரண்டாவது மருமகனான சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். என்.டி.ஆர். முதல்வரான பிறகு, அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்ததும், அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து பாஸ்கர ராவ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதும் பிரச்னைக்கு வழிகோலியது. 

1984 ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல்வர் என்.டி. ராமா ராவ் அப்போதுதான் இதய அறுவை சிகிச்சை முடித்து அமெரிக்காவிலிருந்து திரும்பி இருந்தார். அந்த நேரத்தில் அவரால் பழைய உற்சாகத்துடன் இயங்க முடியாது என்பதைத் திட்டமிட்டு, ஆளுநர் ராம்லாலும் பாஸ்கர ராவும் காயை நகர்த்தினர். 

பாஸ்கர ராவ் நீட்டிய ஆதரவாளர்கள் பட்டியலை ஏற்றுக்கொண்டு, ராமா ராவைப் பதவி நீக்கம் செய்து அவரை முதல்வராக நியமித்தார் ஆளுநர் ராம்லால். என்.டி. ராமா ராவ் ஹைதராபாதிலிருந்து முதலில் வந்தது சென்னைக்குத்தான். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சோ சார் தலைமையில் பேருந்துகளில் அந்த எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு பெங்களுரிலிருந்து ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த நெடும்பயணத்தில் பங்குகொண்ட பத்திரிகையாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

வழிநெடுக மக்கள் அந்த ஊர்வலத்துக்கு அளித்த ஆதரவை இப்போது நினைத்தாலும் பிரமிப்பு மேலெழுகிறது. அந்த பேருந்துகள் ஹைதராபாதை நெருங்காமல் இருப்பதற்குக் காவல் துறையால் ஆங்காங்கே ஏற்படுத்திய தடைகள், அதை சோ சார் தலைமையில் என்.டி.ஆர். ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முறியடித்தது போன்ற காட்சிகள் ஆவணமாக எடுக்கப்படாதது மிகப் பெரிய துரதிருஷ்டம்.

தேசிய அளவில் உருவான எதிர்ப்பால், ஆளுநர் ராம்லால் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சங்கர் தயாள் சர்மா ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டார். மீண்டும் சட்டப் பேரவையைக் கூட்டி என்.டி. ராமா ராவ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அப்போது வழிகோலியவர் சங்கர் தயாள் சர்மா. அது மட்டுமல்ல, தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, 1989 வரை அடுத்த ஐந்து ஆண்டுகள் என்.டி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆந்திர ஆளுநராக இருந்தவரும் சங்கர்தயாள் சர்மாதான். அதனால், அவர்களுக்குள் நல்ல நட்புறவும், புரிந்துணர்வும் உண்டு.

உள்ளே குடியரசுத் தலைவர் சர்மாஜி பூஜையில் இருப்பதாகச் சொன்னார்கள். நான் விவரம் கேட்டு வந்து என்.டி.ஆரிடம் தெரிவித்தேன். தனக்கருகில் இருந்த மனைவி லெட்சுமி சிவபார்வதியிடம் என்னை தில்லி பத்திரிகை நிருபர் என்றும், சோ சாரின் சிஷ்யர்களில் ஒருவர் என்றும் அறிமுகப்படுத்தினார். 

""பாஸ்கர ராவ் முதுகில் குத்தியபோது, எனக்கு உதவ சோ உள்பட எல்லா நண்பர்களும், தலைவர்களும் வந்தார்கள். இப்போது எனது சொந்த உறவுகளே என்னை மோசம் செய்து விட்டார்கள். ஆனால் யாரும் எனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை...'' தனது மனக்குமுறலை எல்லாம் என்னிடம் சொல்லத் தொடங்கினார் அவர். 

என்.டி.ஆரின் கோபத்திலும், ஆதங்கத்திலும் நியாயம் இருந்தது. ஐந்து வருடம் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு 1994 டிசம்பர் மாதம் என்.டி.ஆர். தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை மீண்டும் கைப்பற்றி இருந்தது. தனது உடல்நிலையையும் பொருள்படுத்தாமல் தனது சைதன்ய ரதத்தில் லெட்சுமி சிவபார்வதியுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் தொகுதி தொகுதியாகச் சுற்றுப்பயணம் செய்து அவர் ஈட்டிய வெற்றிதான் அது.

தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு என்.டி. ராமா ராவுக்கு ஏற்பட்ட தனிமையை லெட்சுமி சிவபார்வதி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பது உண்மை. அதேபோல, என்.டி. ராமா ராவ் மீது அதிகரிக்கும் லெட்சுமி சிவபார்வதியின் ஆதிக்கத்தை அவரது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எம்.எல்.ஏ-க்களுக்கும் முதல்வருக்கும் இடையில் அவர் இருப்பது பலருக்கும் பிடிக்கவில்லை என்பதும் நிஜம்.

எப்படி பாஸ்கர ராவும், ஆளுநர் ராம்லாலும் ரகசியமாகத் திட்டமிட்டு, ராமா ராவைப் பதவியிலிருந்து அகற்றினார்களோ அதேபோலத்தான் ஆளுநர் கிருஷ்ணகாந்தின் உதவியுடன் என்.டி. ராமா ராவை பதவியிலிருந்து அகற்ற சந்திரபாபு நாயுடுவும் திட்டம் தீட்டினார். அந்த உதவிக்காக சந்திரபாபு நாயுடு கிருஷ்ணகாந்துக்குச் செய்த கைமாறுதான் குடியரசுத் துணைத் தலைவர் பதவி!

ஒரே வாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்வுகள், முதல்வர் ராமா ராவை நிலைகுலைய வைத்தன. அவருக்கே தெரியாமல் சட்டப் பேரவை கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சந்திரபாபு நாயுடு தன்னைத் தலைவராக தேர்ந்தெடுத்துக் கொண்டார். அந்தத் தீர்மானத்தை ஆளுநரிடம் சென்று சமர்ப்பித்திருந்தார் அவர்.

இதெல்லாம் தெரியாமல், சந்திரபாபு நாயுடு உள்பட நான்கு அமைச்சர்களை நீக்குவதாகவும், சட்டப் பேரவையைக் கலைக்கப் பரிந்துரைப்பதாகவும் கூறி அதற்கான கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார் முதல்வர் என்.டி. ராமா ராவ். அவரை சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து அகற்றி சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தை நீட்டினார் ஆளுநர் கிருஷ்ண காந்த்.

தாங்கவொணா ஆத்திரத்துடனும், என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்துடனும் எதுவுமே பேசாமல் குனிந்த தலையுடன் ஆளுநர் மாளிகையிலிருந்து என்.டி.ஆர். திரும்பியதாக அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

மனம் தளராத என்.டி.ஆர். தனது சைதன்ய ரதத்தில் மக்களை சந்திக்கக் கிளம்புவதாக அறிவிக்கிறார், கிளம்புகிறார்.

இதற்குள், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி சந்திரபாபு நாயுடு சார்பில் ஆளுநருக்குக் கடிதம் கொடுக்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கூடியிருக்கும் ஹோட்டல் முன்னர் தனது சைதன்ய ரதத்தை நிறுத்தி, அதன்மீது நின்றபடி "கட்சிக்கு துரோகம் செய்யாதீர்கள்; என்னுடன் வாருங்கள்' என்று அழைப்பு விடுக்கிறார் என்.டி.ஆர். உள்ளே இருந்து ஒரு செங்கல் அவரை நோக்கிப் பறந்து வருகிறது. நல்லவேளை அவர்மீது விழவில்லை. அதற்கு மேலும் அவமானத்தைத் தாங்கிக் கொள்ள அவரால் முடியவில்லை.

நெஞ்சுவலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அவர். அவரை நலம் விசாரிக்க ஆளுநர் கிருஷ்ண காந்த் வந்தார். என்.டி. ராமா ராவ் எதுவும் பேசவில்லை. தனது ராஜிநாமா கடிதத்தை எடுத்து நீட்டுகிறார். அவரும் சிரித்தபடி வாங்கிக் கொள்கிறார். சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறார்.

திரைப்படம் போல அந்த நிகழ்வுகள் எனது மனக்கண்ணில் ஓடி மறைகின்றன. நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருக்கிறார் என்.டி. ராமா ராவ். அருகில் விழியில் கண்ணீர் வடிய லெட்சுமி சிவபார்வதி.

பரபரப்பு ஏற்படுகிறது. கதவு திறந்தது. என்.டி.ஆரை வரவேற்க சங்கர் தயாள் சர்மாவே நேரில் வந்துவிட்டார். உடைந்துபோய் குடியரசுத் தலைவர் சர்மாஜியைக் கட்டிப் பிடித்தபடி ராமா ராவ் கதறிய காட்சி இப்போதும் என் கண்முன்னே விரிகிறது.

எப்படிப்பட்ட, எப்பேற்பட்ட என்.டி. ராமா ராவுக்கா இப்படியொரு கதி? எனக்கே அழுகை வந்துவிட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.