சுனில் மதிவதனி

உதியன் குளம் மழையின் வரவையொட்டி உற்சாகமாய் கிடந்தது. கோடைக் காலங்களில் பத்தடி வரை குறைந்து குளத்தின் நான்கு கற்சுவர்களுக்குள் தண்ணீர் அடிமைபோல் கிடக்கும்.
சுனில் மதிவதனி

உதியன் குளம் மழையின் வரவையொட்டி உற்சாகமாய் கிடந்தது. கோடைக் காலங்களில் பத்தடி வரை குறைந்து குளத்தின் நான்கு கற்சுவர்களுக்குள் தண்ணீர்அடிமைபோல் கிடக்கும். மழைக்குப் பிறகு குளத்தின் தண்ணீர் மட்டம் உயர்ந்து மண் கரையை தொட்டு காற்றில் வரவால் லேசாக தளும்பிக்
கிடந்தது.
குளத்தின் மறுகரையில் ஊற்று தண்ணீர் புறப்பட்டு வாய்க்கால் வழியாக ஓடிவந்து குளத்தில் கலந்துவிடும். மழைக்காலங்களில் குளத்திலிருக்கும் நீர்வெளியேறி வாய்க்கால் வழியாக செல்வதால் ஊற்றுநீரும் குளத்துக்குத் திரும்பாமல் நேராகச் சென்றுவிடும்.
வாய்க்கால் கரையோரம் இருந்தது தர்மனுடைய வீடு. வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லை. முன்வராந்தா அதில் மூன்று அடி உயர சிமென்ட் இருக்கைச் சுவர் என ஓடு வேய்ந்த பழைய வீடாக இருந்தது.
தர்மனுக்கு வயது ஐம்பது கடந்திருந்தது. மீசையும் தலைமுடியும் கருப்பு வெள்ளை நிறத்தில் கலந்திருந்தன. ஒரு நேரமும் வீட்டில் இருப்பதில்லை, அருகிலிருந்த வாழைத்தோப்பிலும் தென்னந்தோப்பிலும் மண் பறித்துக் கொண்டோ, உரம் போட்டுக் கொண்டோ இருப்பார். தருமனின் மூத்த மகன் ராஜஸ்தானில் ராணுவத்தில் வேலை. இளைய மகள் குயிலி வீட்டில் இருந்தாள். ஐந்து வருடத்துக்கு முன்பு தர்மனின் மனைவியை புற்றுநோய் அபகரித்துக் கொண்டது.
தபால்காரர் தாணு சைக்கிளைவிட்டு இறங்கி கேரியரில் வைத்திருந்த கடிதங்கள் அடங்கிய கட்டைத் திறந்து ஒரு கடிதத்தை உருவி ""குயிலி'' என்று குரல் தந்து விட்டு காத்துநின்றார்.
குயிலி வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள். கறுப்பு நிற பர்தா அணிந்து முகத்தை மூடி இருந்தாள். அவள் உடம்பில் உள்ள கண்கள், கை விரல்கள், கால்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. மீதி உள்ள அவயங்களைப் பர்தா மறைத்திருந்தது. அவளுக்கு வயது இருபதா அதற்கும் குறைவா என்று எவராலும் கணித்து விட முடியவில்லை. தாணு கடிதத்தை நீட்ட குயிலி வாங்கிக் கொண்டாள்.
""உன் அண்ணன்கிட்டயிருந்து தான் கடிதம் வந்திருக்கு, இந்தக் காலத்தில யாரும் கடிதம் எழுதுறதில்ல, மொபைலில் பேசி முடிச்சிடுறாங்க...''
""எங்கிட்ட மொபைல் இல்லை, அதான் அண்ணன் கடிதம் எழுதுறாரு...!''
""உன் அப்பா கிட்ட கூட மொபைல் இல்லையா...?''
""தென்னம்தோப்புலயும், வாழைத்தோப்புலயும் வேலை பார்க்கிற அப்பாவுக்கு எதுக்கு மொபைல் போன்..!''
""குயிலி... இன்னைக்காவது உன் முகத்தை எனக்குக் காட்ட மாட்டியா...?''- தாணு கடிதம் தரும் போதெல்லாம் கேட்கும் கேள்விதான். குயிலி புன்னகைத்தபடியே வீட்டுக்குள் செல்வது அவனுக்கு தெரியாது.
அவள் இந்து குடும்பத்தில் பிறந்த பெண் தான் என்பதற்கு வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த சரஸ்வதியின் போட்டோ அடித்துச் சொல்லியது. பெயர் கூட குயிலி, முஸ்லிம் பெயர் இல்லை. பிறகு ஏன் முஸ்லிம்கள் அணியும் பர்தா உடை அணிந்து முகத்தை மூடிக் கொள்கிறாள்...?- தாணு தினமும் மனதில் கேட்கும் கேள்வி இதுதான், ஆனால் பதில் தான் தெரிந்து கொள்ள முடியவில்லை.
குயிலிக்கு குயிலின் குரல் போல் குரல் அத்தனை அழகு. அவள் ஒரு வார்த்தை பேசினால் கூட சுசீலாவின் குரல் போல இனிக்கும்.
அவளிடம் பேச்சுக் கொடுத்தால் எந்த விதத் தயக்கமின்றி மணி மணியாய் பேசுவாள். முகத்தை மூடி இருப்பது தான் ஒரு குறையாகவே தெரிந்தது.
தாணுவுக்கு வயது இருபத்தி எட்டு முடிந்திருந்தது. இன்னும் திருமணம் ஆகவில்லை. வசதியில் குறைவு, வருமானத்தில் குறைவு என்றாலும் கடிதங்களை பட்டுவாடா செய்யும் தபால்காரர் வேலை மிகவும் பிடித்திருந்தது. யாராவது மணிஆர்டர் அனுப்பினால் அதை கொடுத்துவிட்டு சந்தோஷத்துடன் பல்லிளித்து இனாம் பெற்றுக் கொள்ளும் தபால்காரர் அல்ல தாணு. ஐந்து காசு கூட இனமாக பெற்றுக் கொள்வதில்லை என்பதில் கறாராக இருந்தார்.
வாய்க்கால் ஓரம் தனிமையில் இருந்த குயிலியின் வீட்டில் கடிதங்கள் வந்தால் அவள் குரல் கேட்பதற்காக ஐந்து நிமிடம் செலவழிப்பான். மற்ற நேரங்களில் பம்பரமாய் சுழல்வான். தாணுவுக்கு எப்படியாவது பர்தா அணிந்திருக்கும் குயிலியின் முகம் பார்க்க வேண்டும் என்று ஆசை. கடந்த ஒரு வருட காலமாக முயற்சித்தும் பலனில்லை.
அவள் வீட்டில் தனிமையில் தான் இருக்கிறாள். அவளது அப்பா சற்று தூரத்தில் இருக்கும் தோட்டத்தில் இருப்பார். அன்று அவனுக்கு ஒரு துணிச்சல் வந்தது. எப்படியாவது அவள் முகம் பார்த்து விடவேண்டும் என்று. நடு வீட்டின் சுவரோரம் இருந்த ஜன்னல்
எப்பொழுதும் மூடியே இருக்கும். அன்று மின்சாரம் இல்லை என்று ஜன்னல் கதவை திறந்து வைத்திருந்தாள் குயிலி.
தாணு சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மெதுவாக ஜன்னல் அருகில் வந்து உள்ளே எட்டிப்பார்த்தான், குயிலி வீட்டுக்குள்ளே பர்தா அணிந்து தரையில் சம்மணமிட்டு பாய் முடைந்து கொண்டிருந்தாள். சட்டென்று முகத்தை ஜன்னலிலிருந்து விலக்கி முற்றத்திற்கு வந்து ""குயிலி...!'' என்று
அழைத்தான்.
கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் குயிலி. அன்று வந்திருந்த அவள் அண்ணனின் கடிதத்தை தந்து விட்டு சட்டென்று திரும்பிப் போனான்.
வழியில் இருந்த வாழைத்தோப்பில் வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு நின்றார் தருமன். சைக்கிளை நிறுத்திவிட்டு அவர் அருகில் வந்தான்.
""உங்க வீட்டில பாய் முடைவாங்கன்னு கேள்விப்பட்டேன்...என்ன பாய் முடைவீங்க...? பனையோலைப்பாயா...?''
""இல்ல தம்பி...கைத ஓலைப்பாய்...இந்த வாய்க்கால் கரையோரம் நிக்குற கைத ஓலையை வெட்டி முள்ளு சீவி அதை வெயிலில உலர வைத்து காஞ்சதுக்கப்பறம் சின்னதா கீறி, பாய் முடைவோம், வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லது, அதுவும் இல்லாம வாதநோய்காரங்க படுத்தாள் நோய் குணமாகும்...!''
""ஒரு பாய் என்ன விலை...?''
""முன்னூறு ரூபா...!''
"" எனக்கு ஒரு பாய் முடஞ்சி தருவீங்களா...?''
""தரலாம் ஆனா ஒரு வாரம் ஆகும், ஏற்கெனவே இரண்டு பேர் அட்வான்ஸ் கொடுத்துட்டு போய்யிருக்காங்க...!''
""எனக்கு அவசரம் ஒண்ணுமில்ல.. அடுத்த வாரம் கொடுத்தா போதும், அட்வான்ஸ் எவ்வளவு...?''
""நீங்க அட்வான்ஸ் கொடுக்க வேண்டாம், நான் என் மககிட்ட சொல்லி பாய் முடையச் சொல்றேன்...!''
தாணு சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தான். வழி நெடுகிலும் குயிலியும், கைத ஓலைப்பாயும் நினைவுக்கு வந்து கொண்டி
ருந்தன.
ஒரு வாரம் கழித்து தாணு குயிலியின் வீட்டுக்கு வந்தான். குயிலி கைத ஓலைப்பாயைச் சுருட்டி அவனிடம் நீட்டினாள். பாய் மொறுமொறுவென்று இல்லாமல் பஞ்சு போல இருந்தது. பாயின் மகிமைகள் அதிகம் இருந்தாலும் அதை முடைந்தது குயிலி என்றபோது பாயின் மதிப்பு மேலும் உயர்ந்தது.
""கைத ஓலையின் ஓரங்கள்ல முள் இருக்கும் அது உடம்பில குத்தினா அறுப்பை வளரும்ன்னு சொல்லுவாங்க... நீங்க எப்படி இதை வெட்டி எடுக்குறீங்க...?'' என்று கேட்டான் தாணு. குயிலி மெல்லச் சிரித்தாள்.
""கருவேல மரத்தில முள் இருக்கு, குத்துன்னா நல்லா வலிக்கும், இருந்தாலும் அதை வெட்டி வெயில்ல உலர வெச்சு விறகா எரிக்கிறாங்களே... அது மாதிரிதான் இதுவும், கைத முள் செடியில இருந்து அப்பா ஓலை வெட்டி அங்கேயே முள் சீவி வீட்டுக்கு கொண்டு வந்துடுவாரு, நான் அதை வெயிலில காயப்போட்டு காஞ்சதுக்குப் பிறகு பாய் முடைவேன்...!''
தாணு பாய் முடையும் அவள் விரல்களைப் பார்த்தான். நகத்தின் துவக்கத்தில் இருந்த வெள்ளைத் தோல்கள் உதிர்ந்து லேசாய் கறுத்திருந்தது. தாணுவின் பார்வை தனது கைகளில் படருவதை உணர்ந்த குயிலி கைகளை மடக்கிக் கொண்டாள்.
அன்று அவன் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி நிறைந்து இருந்தது. பாய்க்கான பணத்தை தந்துவிட்டு சைக்கிள் கேரியரில் வைத்து அதன் மீது கடிதக் கட்டுகளை வைத்து சைக்கிளை மிதித்தான். வழியில் இருந்த தென்னந்தோப்பில் தென்னை மரங்களுக்கு உரமிட்டு கொண்டிருந்தார் தர்மன்.
""என்ன...பாய் வாங்கியாச்சா...?''
""ஆமாங்கய்யா...!''
""இந்த பாய், பனையோலைப் பாய் மாதிரி சீக்கிரம் கிழியாது... பத்திரமாக வைச்சிருந்தா பல வருஷம் வரைக்கும் வரும்...!''
""உங்க மக முஸ்லிம் கிடையாது, பிறகு ஏன் பர்தாவால முகத்தை மூடி இருக்கிறா...?''- தாணு தைரியமாக கேட்டான்.
தருமனின் முகம் சுருங்கியது. எதுவும் பேசாமல் உரத்தை தென்னை மர மூட்டில் கொட்டி அதற்கு தடம் அமைத்தான்.
""சொல்ல மாட்டீங்களா...?'' திரும்பவும் கேட்டான் தாணு.
""போங்க தம்பி...அத உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல...''
""உங்க பொண்ண எனக்கு புடிச்சிருக்கு... எனக்கு கட்டி வைப்பீங்களா...?''- தாணுவின் கேள்வி அவரை என்னமோ செய்தது. செய்து
கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அவனை முறைத்துப் பார்த்தார். சட்டென்று அருகில் இருந்த வாய்க்காலில் இறங்கி கை கால் கழுவி பதில் எதுவும் சொல்லாமல் தனது வீட்டுக்கு நடந்தார். தாணு திகைத்தபடியே சைக்கிளை மிதித்துக் கொண்டு போனான்.
தருமன் வீடு வந்து சேர்ந்தான். அவன் கண்கள் லேசாக சிவந்து இருந்தது. தாணு அப்படி கேட்பான் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. எல்லோருக்கும் குயிலி ஓர் இளக்காரமாய் இருப்பதை நினைத்து வேதனைப்பட்டார். குயிலியை யாருக்காவது கட்டி வைக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் அவளை யார் கட்டிக் கொள்வார்கள்...? அவள் அணிந்திருக்கும் முகம் மூடிய பர்தாவின்
ரகசியம் தெரிந்தால் தலை தெறிக்க ஓடுவார்கள். மனதை ஒரு நிலைப்படுத்திவிட்டு வீட்டுக்குள்
நுழைந்தார்.
""சாப்பாடு எடுக்கட்டுமா...?'' கேட்டாள் குயிலி.
""வேண்டாம்மா...!'' அவர் கண்களில் கண்ணீர் உருண்டோடியது. குயிலி கவனித்தாள்.
""என்னாச்சுப்பா...ஏன் அழறீங்க...?''
""நான் கண்ண மூடுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை நடத்தணும்ன்னு ஆசை, அத நெனச்சாத்தான்...!''
அவர் சொல்லி முடிப்பதற்குள் தனது முகத்தை மூடியிருந்த பர்தாவை விலக்கினாள் குயிலி.
""இந்த மூஞ்சிய யாருப்பா வந்து கட்டிக்குவா...?" சிவந்த அவள் முகம் முழுக்க கருப்பு உண்ணிகள் சிறுசிறு கொப்பளங்களை போல இருந்தன. முகத்தில் பூத்திருந்த அந்த உண்ணிகள் கண்டால் யாருக்கும் முகம் சுளிக்கும். அவள் தேவதை தான் ஆனால் முகம் அவளுக்கு கண்றாவியாக இருந்தது.
அவள் சிறுமியாக இருக்கும் போது முகத்தில் ஆங்காங்கே சிறு சிறு கருப்பு புள்ளிகள் சின்ன மரு போல இருந்தது. காலம் போகப்போக அவள் வளர்ந்ததை போல உண்ணிகளும் வளர்ந்து கொண்டன. மற்ற பெண்களின் கேலிக்குப் பயந்து ஒன்பதாம் வகுப்புக்கு மேல் அவள் பள்ளிக்கூடம் செல்வதை தவிர்த்தாள். அவள் வயது ஏற ஏற தருமனுக்கு சங்கடங்கள் குவிந்தன.
திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஆண்களிடம் முகம் முழுக்க உண்ணிகள் இருக்கும் குயிலியை கட்டிக் கொள்வாயா என்று கேட்டால் ஒரே ஓட்டமாக ஓடி விடுவார்கள். அவள் வாழ்க்கை பர்தாவோடு முதிர் கன்னியாக வாழ வேண்டும் என்பது விதி. அதை மாற்ற எவரால் முடியும்?
தாணு விஷயம் தெரியாமல் கேட்டுவிட்டான். அவனுக்கு விஷயம் தெரிந்தால் ஒரே ஓட்டமாக ஓடி இருப்பான். அன்று ஏனோ மறுபடியும் வேலைக்குச் செல்ல அவருக்கு பிடிக்கவில்லை. வீட்டிலேயே இருந்தார்.
மறுநாள் காலை பதினோரு மணி வாக்கில் குயிலியின்வீட்டுக்கு வந்தான் தாணு.
""இன்னைக்காவது அந்த பர்தாவ கழட்டிட்டு முகத்தை காட்ட மாட்டியா...?'' வழக்கமான கேள்வியைக் கேட்டான்.
குயிலியும் வழக்கமான புன்னகையை பதிலாகத் தந்தாள்.
""உன்னோட உறவுக்காரங்க மூலமா விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன். உன் முகம் முழுக்க கருப்பு உண்ணிகள் நிறைந்து முகம் அலங்கோலமா இருக்கு, அதனாலதான் நீ பர்தா போட்டு மூடி மறைக்கிற விஷயம் எனக்குத் தெரியும். உன் அப்பாகிட்ட உன்னை எனக்கு கட்டி வைப்பீங்களான்னு கேட்டேன், அவர் பதில் சொல்லாம கிளம்பிப் போயிட்டார், நீயாவது சொல்லு...என்ன கட்டிக்க உனக்கு இஷ்டம் இருக்கா...?'' அவனது கேள்வியில் ஆடிப்போனாள் குயிலி.
சட்டென்று முகத்தை மறைத்திருந்த பர்தா துணியை விலக்கி காட்டினாள்.
""இந்த மூஞ்சிய பார்த்த பிறகுமா என்ன கல்யாணம் பண்ணிக்க விரும்புறீங்க...? நானே வெறுக்கிற இந்த முகத்தை யாருக்கும் காட்ட கூடாதுன்னு நினைச்சிருந்தேன், என்ன கட்டிக்க விரும்புறேன்னு சொன்னதால காட்டறேன், இதுக்கப்புறமும் என்ன கட்டிக்க ஆசை இருக்கா...?''
""கல்யாணம் பண்ணிக்க உடல் அழகும், முக அழகும் போதும்ன்னு நினைக்கிறவங்க மனசப் பாக்குறது இல்ல, நான் உன் மனசையும் உன் குரலையும் நேசிக்கிறேன், உன்னை கட்டிக்க எனக்கு பூரண சம்மதம். நீ சம்மதிப்பியா...?''
குயிலிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ""அப்பாகிட்ட பேசுங்க...!'' சொல்லிவிட்டு நாணத்தில் நெளிந்தபடி வீட்டுக்குள் ஓடி மறைந்தாள். அவள் அணிந்திருந்த பர்தா உடையை கழற்றிவிட்டு சாதாரண உடைக்கு மாறினாள்.
முகம் நிறைய புன்னகையோடு சைக்கிளை மிதித்தான் தாணு. வழிநெடுகிலும் ""அப்பாகிட்ட பேசுங்க'' என்ற குரல் மட்டும் சுசீலாவின் குரல் போல் கேட்டுக்கொண்டே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com