தபால் பைகளில் தமிழ்
By தி.நந்தகுமார் | Published On : 17th July 2022 06:00 AM | Last Updated : 17th July 2022 06:00 AM | அ+அ அ- |

தபால் துறையின் பைகளில் தமிழ் மொழியில் அஞ்சல் சேவை குறித்த விவரம் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது.
உலகின் மிகப் பெரிய அஞ்சல் துறையாக "இந்தியா போஸ்ட்' உள்ளது. தனியார் கூரியர் நிறுவனங்கள், பார்சல் சேவை நிறுவனங்கள் வந்தாலும், அஞ்சல் சேவையை யாராலும் வீழ்த்த முடியவில்லை.
தமிழகத்தில் மட்டும் 32 அஞ்சல் கோட்டங்கள் மூலமாக, 13 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. லட்சத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் தபால் விநியோகம் செய்ய வைத்திருந்த பைகளில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலேயே அஞ்சல் சேவை குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனின் முயற்சியால், தபால்காரர்கள் வைத்திருக்கும் பைகளில் தமிழில் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால் தபால் பைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டத்துக்கும் தபால் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தபால் பை முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பல்லாயிரக்கணக்கான தபால்காரர்கள் இனி தமிழில் அஞ்சல் சேவைகள் குறித்த பைகளோடு, இனி தபால் விநியோகிக்கச் செல்ல உள்ளனர்.