'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 98

சோனியா காந்தியை சந்திக்க நாடாளுமன்றத்திலிருந்து புறப்பட்ட எம்.பி.க்களில் பலரும், தலைமை மாற்றத்தை விரும்பினார்களே தவிர, எந்தக் காரணத்துக்காகவும் தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 98

சோனியா காந்தியை சந்திக்க நாடாளுமன்றத்திலிருந்து புறப்பட்ட எம்.பி.க்களில் பலரும், தலைமை மாற்றத்தை விரும்பினார்களே தவிர, எந்தக் காரணத்துக்காகவும் தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை. அதுதான் அவர்களது பலவீனம். அந்த பலவீனம்தான் பிரதமர் நரசிம்ம ராவின் பலம்.

உத்தர பிரதேசத்தில் என்.டி. திவாரி முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டிருந்தார். முலாயம் சிங், கன்ஷிராம், கல்யாண் சிங் மூவரும் அரசியல் முக்கியத்துவம் பெற்ற பிறகு, அவருக்கும் காங்கிரஸூக்கும் அங்கே இடமில்லை என்றாகிவிட்டது. 

அர்ஜுன் சிங் தனது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தில் பழைய செல்வாக்கை இழந்திருந்தார். அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்த முதல்வர் திக்விஜய் சிங்கே, அர்ஜுன் சிங்கை ஆதரிக்கத் தயங்கினார். திக்விஜய் சிங், மாதவ் ராவ் சிந்தியா, கமல்நாத் என்று இளைய தலைமுறைத் தலைவர்களை ஊக்குவித்து அர்ஜுன் சிங்கையும், மோதிலால் வோராவையும் ஓரங்கட்டியிருந்தார் பிரதமர் ராவ்.

இன்னொரு முக்கியமான போட்டியாளர் சரத் பவார். மார்ச் மாதம் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சரத் பவாரின் தலைமையில் போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்தது. மனோகர் ஜோஷி தலைமையில் சிவசேனை - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது. முதல்வர் பதவியை இழந்த சரத் பவாருக்கு, கட்சியிலோ, அமைச்சரவையிலோ பதவி அளிப்பார் பிரதமர் என்கிற எதிர்பார்ப்பும் பொய்த்தது.

இத்தனை பின்னணிக்கும் இடையில்தான் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த சோனியா காந்தியை சந்திக்க 70 எம்.பி.க்கள் அவரது இல்லமான 10 ஜன்பத்துக்குச் சென்றனர். சோனியாவைக் கட்சிக்குத் தலைமை தாங்க அவர்கள் அழைத்தார்களா, இல்லை கட்சியில் நரசிம்ம ராவ், அர்ஜுன் சிங், சரத் பவார் கூட்டுத் தலைமையை உருவாக்க அவரது உதவியைக் கேட்டார்களா என்பது தெரியவில்லை.

""நாங்கள் பேசினோம்.  கட்சியின் நிலைமையை அவரிடம் எடுத்துச் சொன்னோம். அவர் கவலை தோய்ந்த முகத்துடன் நாங்கள் விடுத்த கோரிக்கைகளை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்'' என்பது மட்டும்தான் அந்த எம்.பி.க்கள் நிருபர்களுக்குத் தெரிவித்த தகவல்.

அர்ஜுன் சிங், என்.டி. திவாரி கூட்டிய மே 19, தல்கத்தோரா ஸ்டேடிய மாநாட்டுக்கு, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். ஏறத்தாழ 30,000 பேருக்கு மேல் குழுமியிருந்த அந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது. நரசிம்ம ராவ் கூட்டிய முந்தைய காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்ததுபோல, இதற்கும் சோனியா காந்தி பார்வையாளராக வருவார் என்று அந்தத் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். தலைவர்களும்தான்.

தொண்டர்கள் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த அளவு, தலைவர்கள் வரவில்லை. ஏறத்தாழ 800 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களில் 200  பேர்கூட வரவில்லை. அதேபோல, ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய எம்.பி.க்கள்தான் அன்றைய தல்கத்தோரா ஸ்டேடிய மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். தொண்டர்களிலும் சரி, பெரும்பாலானோர் இமாசல பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களிலிருந்துதான் வந்திருந்தார்கள்.

வாழப்பாடி ராமமூர்த்தியும், ரங்கராஜன் குமாரமங்கலமும்தான் அந்த மாநாட்டின் முக்கிய அமைப்பாளர்கள் என்பதால்,  தல்கத்தோரா ஸ்டேடியத்தில் ஹிந்தியைப் போலவே, தமிழும் பரவலாகக் காதில் விழுந்தது. நரசிம்ம ராவுக்கு எதிராக இருந்தார் என்றாலும், சரத் பவார் தன்னை அர்ஜுன் சிங், என்.டி. திவாரி அணியில் இணைத்துக் கொள்ளவில்லை.

சோனியா காந்தியை அந்த மாநாட்டுக்குப் பார்வையாளராக அழைத்து வந்து, அவரது முன்னிலையில், இந்திய தேசிய காங்கிரஸ்  (இந்திரா)  என்கிற கட்சியை அறிவிப்பது என்பதுதான் அவர்கள் திட்டம். சோனியா காந்தியை சம்மதிக்க வைத்து அழைத்துவர அர்ஜுன் சிங்கும், எம்.எல். ஃபோதேதாரும் 10, ஜன்பத்தில் காலையிலிருந்து காத்திருந்தனர். சோனியா காந்தி அந்தக் கூட்டத்துக்கு வர மறுத்துவிட்டார்.

சோனியா காந்தி வரவில்லை என்றதும் கூடியிருந்த தொண்டர்கள் கூச்சல் போடத் தொடங்கிவிட்டார்கள். "சோனியா காந்தி வருவதை நரசிம்ம ராவ் தடுத்துவிட்டார்' என்கிற அளவுக்கு அவர்களுக்கு ஆத்திரம் எழுந்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேறுவழியில்லாமல், அர்ஜுன் சிங் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இந்திய தேசிய காங்கிரஸ்  (இந்திரா) என்று கட்சியின் பெயர் வைக்கப்பட்டு, என்.டி. திவாரி அதன் தலைவராக அறிவிக்கப்பட்டார்.  உற்சாகமான கரவொலியில் தொண்டர்கள் தங்கள் ஆத்திரத்தைத் தனித்துக் கொண்டனர்.

சிறிது காலம் மட்டுமே பெயருக்கு செயல்பட்ட அந்தக் கட்சி, திவாரி காங்கிரஸ் என்றுதான் அறியப்பட்டதே தவிர, காங்கிரஸூக்கு மாற்றாக அதை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை.  ஆனால், அர்ஜுன் சிங், என்.டி. திவாரி, எம்.எல். ஃபோதேதார் மூவருமே சோனியா காந்திக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அந்தப் பிளவையும், புது கட்சித் தொடக்கத்தையும் சோனியா காந்தியால் மெளனமாகக் கடந்துபோக முடியவில்லை.

இதற்கிடையில் இன்னொரு எதிர்பாராத சம்பவமும் நடந்தது. ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நான்காண்டுகளாக சோனியா காந்தியை சந்திக்காமலே இருந்த சரத் பவார் திடீரென்று சோனியா காந்தியை "மரியாதை நிமித்தம்' சந்தித்தார் என்கிற செய்தி வெளியானபோது, பத்திரிகையாளர்கள்கூட அதை முதலில் நம்பவில்லை. மிகவும் ரகசியமாக அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று அதுகுறித்து தாரிக் அன்வர் என்னிடம் தெரிவித்தார்.

""காங்கிரஸ் குடும்பத்தில் ஒருவரான சோனியா காந்திக்குக் கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்டவும், வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தவும் "தார்மீக' உரிமை உண்டு'' என்று சரத் பவார் நிருபர்களிடம் வெளிப்படையாகச் சொன்னபோது, பிரதமர் நரசிம்ம ராவுக்கு எதிரானவர்கள் ஒருங்கிணைகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது.

தல்கத்தோரா ஸ்டேடியத்தில் நடந்த புதுக்கட்சி அறிவிப்பையும், சரத் பவாரின் சந்திப்பையும் தொடர்ந்து, கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தத் தனது தூதுவர் ஒருவர் மூலம் சோனியா காந்தி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்கிற செய்தி தலைநகரில் பரவியது. கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கப் போகிறது என்கிற அச்சம் பல காங்கிரஸ்காரர்களையும் தொற்றிக் கொண்டதை உணர முடிந்தது.

""ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், சோனியாஜி ஒற்றுமையை ஏற்படுத்தினால் அதை வரவேற்பதில் யாருக்கும் எந்தவிதத் தயக்கமும் இருக்காது'' என்று ரயில்வே துறை அமைச்சர் ஜாபர் ஷெரீப் அறிக்கை வெளியிட்டார். ஜாபர் ஷெரீபும், குலாம் நபி ஆசாதும் பிரதமர் நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரியவர்கள். அவர்கள் சோனியா காந்தி ஆதரவாளர்களும்கூட என்பதைத்தான் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.

இந்தப் பின்னணியில்தான் மே 21-ஆம் தேதி, "வீர் பூமி' எனப்படும் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி கூட்டம் நடந்தது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட நான்காவது ஆண்டு நிகழ்வுக்கு சோனியா குடும்பத்தினர், காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்லாமல், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும்கூட வந்திருந்தார்கள். 

அர்ஜுன் சிங், என்.டி. திவாரி உள்ளிட்ட "திவாரி' காங்கிரஸ் பிரமுகர்கள் சோனியா காந்தி குடும்பத்தினர் இருந்த பக்கத்தில் அமர்ந்து கொண்டனர். அஞ்சலி கூட்டத்துக்கு மூத்த அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் சோனியா காந்திக்கு வணக்கம் செலுத்தும்போது அவர்களுக்கும் "நமஸ்தே' போட வேண்டிய தர்மசங்கடம் உருவானது. சிலர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டனர். பலர் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர்.

பிரதமர் நரசிம்ம ராவ் வந்தபோது, வழக்கத்துக்கு அதிகமான சலசலப்பு காணப்பட்டது. அவர் நேராக சோனியா காந்தியிடம் சென்று வணக்கம் சொல்லிவிட்டு, அவர் அருகில் அமர நினைத்தபோது, சற்று தள்ளி அர்ஜுன் சிங், திவாரி எல்லோரும் இருப்பதைப் பார்த்துத் தயக்கத்துடன் நகர்ந்துவிட்டார். சோனியா காந்தியும் அவரை அருகில் அமரச் சொல்லவில்லை.

அதற்குப் பிறகு, பிரதமர் இருந்த பக்கத்துக்கே சோனியா காந்தி திரும்பவில்லை. வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்திப் புறக்கணிக்கிறார் என்பது அங்கே இருந்த அத்தனை பேருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது. பிரதமர் நரசிம்ம ராவ், அதை சற்றும் பொருள்படுத்தாமல், வழக்கம்போல மெளனமாக சிறிது நேரம் அஞ்சலி செலுத்திவிட்டு நகர்ந்தார். சோனியாவிடம் சென்று விடை பெற்றுக் கொள்ள அவர் நினைக்கவில்லையா அல்லது தவிர்த்தாரா என்று தெரியவில்லை. பாதுகாப்புக் காவலர்கள் புடைசூழ அகன்றுவிட்டார்.

அவர் கிளம்பியபோது, எனது பார்வை சோனியா காந்தியின் மீது பதிந்தது. அதுவரை பிரதமர் நரசிம்ம ராவ் இருந்த திசையை நோக்கித் திரும்பாத சோனியா காந்தி, அவர் தன்னிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் வெளியே செல்வதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஏதோ சொல்ல வந்த ஷீலா கெளலையும் சைகையால் தவிர்த்து விட்டார்.

அன்று மாலையில் 24, அக்பர் ரோட்டிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், ராஜீவ் காந்திக்கு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமரும் கட்சித் தலைவருமான பி.வி. நரசிம்ம ராவ் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் என்று பலரும் அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

எஸ்.பி. சவாண், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், பல்ராம் ஜாக்கர், சீதாராம் கேசரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பிரதமர் வருவதற்கு முன்பே வந்து காத்திருந்தனர். அவர்கள் பிரதமரின் வருகையை மட்டுமல்ல, சோனியா காந்தியின் வருகையையும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத்தின் பின்புற வாசல், காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான 24, அக்பர் ரோட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், எப்போது வேண்டுமானாலும் சோனியா காந்தியோ குடும்பத்தினரோ காங்கிரஸ் தலைமையகத்துக்கு நடந்தே வந்துவிடலாம். வருவார்கள். அன்றும் அப்படித்தான் சோனியா காந்தியின் வருகையை எதிர்பார்த்து அத்தனை பேரும் 10, ஜன்பத் திசையை நோக்கியபடி காத்திருந்தனர்.

பிரதமர் வந்ததும் நிகழ்ச்சி தொடங்க வேண்டும். சோனியாவின் வருகைக்காக சில நிமிடங்கள் காத்திருந்தார்கள். தன்னிடம் மரியாதைக்காகக்கூட விடைபெற்றுக் கொள்ளாமல் சென்ற பிரதமர் நரசிம்ம ராவை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, சோனியா காந்தி வரவில்லை.

சில நிமிடங்கள் பார்த்துவிட்டு, நிகழ்ச்சியைத் தொடங்கச் சொல்லிவிட்டார் பிரதமர் நரசிம்ம ராவ். கருத்து வேறுபாடுகள் தொடங்கிவிட்டதையும், இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்திருப்பதையும் கூடியிருந்த அனைவரும் புரிந்து கொண்டார்கள். யாரும் எதுவும் பேசவில்லை.

தனக்கு எதிரான சக்திகள், சோனியா காந்தியை முன்னிறுத்தித் தன்னிடம் மோதத் தயாராகிறார்கள் என்பதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாதவரல்ல பிரதமர் நரசிம்ம ராவ். தான் பணிந்து போவதான தோற்றம் ஏற்படுவதை நரசிம்ம ராவ் விரும்பவில்லை.

நான்கு  ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியில் நடைபெற்று வந்த பதவிப் போட்டியிலும், கோஷ்டிச் சண்டையிலும் தலையிடாமல் ஒதுங்கியே இருந்த சோனியா காந்தி, தன்னை புறக்கணித்துவிட முடியாது என்கிற செய்தியைப் பிரதமர் நரசிம்ம ராவுக்குத் தெரிவிக்கத் தீர்மானித்தார். தான் நினைத்தால் கட்சித் தலைமையைப் பெற முடியும் என்று பிரதமருக்கு உணர்த்த முடிவெடுத்தார்.

10, ஜன்பத்திலிருந்து சோனியா காந்தியின் பெயரில் ஒரு செய்தி அறிக்கை எல்லா பத்திரிகைகளுக்கும் ஒளி நகலாக (ஃபேக்ஸ்) அனுப்பப்பட்டது. 

பிரதமருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com