Enable Javscript for better performance
ஏணி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  ஏணி

  By உஷாதீபன்  |   Published On : 31st July 2022 06:00 AM  |   Last Updated : 31st July 2022 06:00 AM  |  அ+அ அ-  |  

  kadhir7

   

  சிவராமனுக்கு மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவர் வார்த்தைகளை இங்கே யாரும் மதிப்பதில்லை. அவரது இருப்பை எவரும் உணர்வதில்லை. அவரவர் பாடு அவரவருக்கு என்று ஏதோ நடந்து கொண்டிருந்தது அந்த வீட்டில்!
  நாற்காலிக்குக் கீழே தன் காலடியிலேயே கிடந்த அந்தச் சாம்பல் நிறப் பூனை கூட இன்று வெளியில் சென்று படுத்துக் கொள்கிறது. அங்கிருந்து எட்டிப் பார்த்துத் தலையைத் திருப்பிக் கொள்கிறது. மனதில் இருந்தது தேடும்போது கிடைக்கவில்லை.
  வைத்த இடத்தில் வைத்த பொருள் இருந்தால்தானே? பூதமாய் இருக்கும் பெரிய பொருள் கூட குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் போய்விடுகிறது. அதுவும் தான் தேடும்போது அது இருப்பதேயில்லை. எங்குதான் போகுமோ?
  மனதுக்குள் குமுறி அழாத குறைதான். வாய் விட்டுக் கேட்க முடிவதில்லை. கேட்டால் ஒழுங்கான பதில் வருவதில்லை. தன் மதிப்பைத் தானே குறைத்துக் கொள்ள வேண்டுமா? அடுத்தவர் மதித்தால்தான் அது இருக்கிறது என்று அர்த்தமா? வெடித்தால் கோபம்தான் கொப்பளிக்கும். ஆனால் சிவராமனுக்கு இப்பொழுதெல்லாம் அழுகைதான் வந்தது. ஒன்றை நினைக்கும்முன்பே கண்கள் கலங்கி விடுகின்றன. சுய பச்சாதாபம். சொல்ல முடியாமை. சொன்னாலும் காது கொடுத்து வாங்கி, அதைச் செய்ய நேரமில்லை எவருக்கும். தனக்குள் அழுது கொண்டிருக்கிறார் அவர். உடல் நலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் அதைப் போட்டு வைத்திருக்கிறார்.
  ஆனாலும் அவர் காரியங்களை இன்றுவரை அவரேதான் செய்து கொள்கிறார். மெத்தையைத் தூசி தட்டுவது, நாற்காலி, மேஜைகளைத் துடைப்பது, அலமாரியைச் சுத்தம் செய்து, வெளியே எடுத்த புத்தகங்களைத் திரும்ப அடுக்குவது என்று! வேலைக்காரப் பெண் தரையைக் கூட்டுவது அவருக்குப் போதவில்லை. அது கூட்டி முடித்துப் போனபின்புதான் அங்கங்கே தலைமுடி சுற்றிச் சுற்றிப் பின்னிக்கொண்டு தரையில் வட்டமிடுகிறது. எடுத்துப் போட்டு மாளவில்லை. அதை அதனிடம் சொல்லவே தயக்கம் இவருக்கு. அது ஏதாச்சும் எடக்கு மடக்காகப் பதில் சொல்லி வைக்கப் போக! ஏண்டா கேட்டோம் என்று துக்கப்படவா? மற்ற அறைகளின் முடிக்கற்றைகளெல்லாம் தன் அறைக்கு வந்து விடுகிறதோ என்று தோன்றியது இவருக்கு. வரத்தான் செய்கிறது. சந்தேகமில்லை.
  அது கிடக்கட்டும்.. எது எப்படியிருந்தென்ன? இந்தப் பாழாய்ப்போன ஃபேனை மட்டும் துடைத்துச் சுத்தமாக்குவதற்கு இன்னும் வேளை வரவில்லையே? ஒட்டடைக் குச்சி கொண்டு சுவரில், உத்திரத்தில் படிந்திருக்கும் ஒட்டடைகளை, தூசிகளைக் கூட வாயில் துணியைக் கட்டிக் கொண்டு அகற்றி விடுகிறார்தான். இந்த சீலிங் ஃபேனைத் துடைக்க மட்டும் இன்றுவரை வாய்க்கவில்லை. என்னவோ ஒரு மனத் தயக்கம்.
  நடு அறையில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று பண்ணி விடுவோம் என்றால் மனதின் மூளையில் சிறு பயம். ஸ்டூலில் ஏறி நின்றாலும், கையை உயர்த்தித்தான்
  ஃபேனின் காற்றாடிகளைத் துடைத்தாக வேண்டும். கையை உயர்த்தும்போது தலையையும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. தலை ஏன் அப்படி சுற்றுவது போல் பிரமை ஏற்படுகிறது? கண்கள் ஏன் மேல் நோக்கிச் செருகுகின்றன? தலை கிறுக்கிக் கீழே விழுந்து வைத்தால்..?
  முடிந்தது கதை. பிறகு நொண்டிக் கழுதைதான். அந்தச் சிரமத்தை யாருக்கும் வைக்கக் கூடாது. தனக்கும் கஷ்டம். மற்றவர்களுக்கும் சிரமம்...உபத்திரவம்...வேதனை.
  இப்படி சாத்தியமில்லை என்றே நாளும் பொழுதும் ஓடி விட்டது, ஃபேனும் பிசினாய் மசி போல் ஒட்டிக் கொண்டு அழுக்கு அடைந்து கிடக்கிறது. அடைந்திருக்கும் அழுக்கே அதன் வேகத்தைக் குறைக்கிறதோ என்கிற அளவுக்கு சந்தேகமும் வந்துவிட்டது. அதன் நிறமே மாறி விட்டது. அறைக் கதவை அடைத்தால் ஒரு மாதிரி வாடை வருகிறது. அது அந்த அடைஅழுக்கு நாற்றம்தானோ?
  பாதுகாப்பாய் முதலில் நம்மை நிறுத்திக் கொண்டு அந்த வேலையைச் செய்தாக வேண்டும். தான் செய்தால்தான் உண்டு. நிச்சயம் வேறு யாரும் அதைச் செய்துவிடப் போவதில்லை. மகனோ, மருமகளோ, மனைவியோ யாரும் எதையும் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்கள் அறையில் உள்ளவைகளைச் சுத்தமாய் வைத்துக் கொள்ளவே அவர்களுக்குத்
  துப்பில்லையே?
  அதென்ன வீடாகவா கிடக்கிறது? எத்தனை சதுர அடிக்கு வீடு வாங்கி என்ன புண்ணியம்? கண்டதையெல்லாம் வாங்கிக் குவித்தால் அது பங்களாவாய் இருந்தாலும் பத்தாதுதான். அவர்கள் செய்தது அவர்களுக்கே வினையாய்! வாங்கின பொருளெல்லாம் குவிந்து கிடக்க, தொடர்ந்து வைத்திருப்பதா, தூக்கி எறிவதா?
  தூக்கி எறிஞ்சிடலாம். இவர் மனையாள் வாசுகிதான் சொல்வாள் இதை.
  "" நீ அடிக்கடி இதைச் சொல்றதப் பார்த்தா ஒருநாள் என்னையும் உங்களை அறியாமத் தூக்கி எறிஞ்சிடுவேள் போல்ருக்கே...
  இவர் பேச்சு அவர்களுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் தோன்றுவதைச் சொன்னால்தான் மனசு ஆறுதல்படுகிறது. தூசியெல்லாம் அடிக்க முடியாது....ஆளக் கூப்பிட வேண்டிதான்....''
  ""அதானே பார்த்தேன்...எங்க களத்துல இறங்கிடப் போறாங்களோன்னு...?''
  ""காச விட்டெறிஞ்சா ஆச்சு....செய்திட்டுப் போறான்.....கூப்பிட்டுவிட்டா செய்றதுக்கு வரிசைல நிக்கறது ஆட்கள்...!''
  வார்த்தைகளைக் கேட்டீர்களா? எப்டீ.? விட்டெறிஞ்சா.!...-என்ன திமிர் பாருங்க...? சம்பாதிக்கிற காசுக்கான மரியாதையைக் கேளுங்க? இவனுங்களுக்கெல்லாம் இப்டி இஷ்டத்துக்குச் சம்பளம் கொடுக்கிறதே தப்புங்கிறேன்....கஷ்டப்பட்டு பணம் சம்பாதிச்சாத்தான் அதோட அருமை தெரியும்ங்கிறேன்.
  தெனம் ஏழெட்டு மணி நேரம் வேலை செய்துதாம்ப்பா இந்தக் காசைச் சம்பாதிக்கிறோம்...சும்மா ஒண்ணும் வந்திடலை!
  அப்போ? சிக்கனமா செலவு செய்யணும், சிறுகச் சிறுகச் சேமிக்கணுங்கிற எண்ணமே இருக்கிற மாதிரித் தெரிலயே...சேவிங்க்ஸ் பாங்குல பணத்தைத் தூங்க வச்சு என்னடா புண்ணியம்? எவனாவது சைபர் க்ரைம் திருடன் சுருட்டிட்டுப் போகவா? அப்பப்ப எடுத்து எஃப்.டி.ல போடுங்க....அப்பத்தான பாதுகாப்பு...? எத்தனவாட்டிடா சொல்றது உங்களுக்கு? ஆபீஸ் வேலையத் தவிர வேறே எதுவுமே செய்ய மாட்டீங்களா? திங்க, தூங்க, ...இதானா தினசரித் தியானம்?
  மத்த எல்லாத்துக்கும் உங்களுக்கு ஆள் வேணுமா? சுயமா செயல்பட மாட்டீங்களா? ஆபீஸ் போக வேண்டிது...சனி...ஞாயிறானா வெளில ஊர் சுத்திட்டு ஓட்டல்ல கண்டதைத் தின்னுட்டு வீட்டுல வந்து விழ வேண்டிது....அன்றாடம் கை வெளங்கி சமைக்கவே துப்பில்லையேடா உங்களுக்கு? அதையும் வெளியில்லே வாங்கித் தொலையுறீங்க? எவனோ, என்னைக்கோ பண்ணினதை ஃப்ரெஷ் டுடேன்னு உங்ககிட்ட வந்து கதவத் தட்டி நீட்டறான். ஈஈன்னு இளிச்சிண்டு மதிப்பா வாங்கி முழுங்கிறீங்க...உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா...!.
  எனக்காக இதச் செய்யுங்கோன்னு உங்ககிட்டயெல்லாம் ஒண்ணு சொல்றதுக்கே எனக்குக் கூச்சமா இருக்கு....இந்த வயசுல என் வேலையை நான் பார்த்துண்டாலே ரொம்ப மதிப்பாக்கும்னு நினைக்க வேண்டியிருக்கு...
  என்னென்னவோ நினைத்துக் கொண்டார். இன்று எப்படியும் அந்த ஃபேனைத் துடைத்து சுத்தம் செய்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார். வீட்டில் மொத்தம் ஆறு ஃபேன்கள் ஓடுகின்றன. அதில் ஒன்று 24 மணி நேரமும்... கேட்டால் சிரித்துக் கொள்கிறார்களே தவிர தாக்கம் உணரப்படுவதில்லை.
  ஆள் இல்லாத எடத்துல எதுக்கு வேஸ்ட்டா ஃபேன் ஓடுது?
  ஒண்ணுக்குப் போகப் போனேன். அதான் உடனே வந்திடுவனே...அதுக்குள்ள ஒரு தரம் அணைச்சுப் போடணுமா? - மனையாளே இப்படிச் சொன்னால்? மூத்த தலைமுறை என்று பெயர். அவளுக்கே நம் சுட்டிக் காட்டல் எரிச்சல் படுத்துகிறது. பிறகு மற்றவர்களைச் சொல்லி என்ன பயன்? நாம் வழிகாட்டியாய் இருக்க வேண்டாமா? ஒரு இடத்தை விட்டுக் கடக்கும்போது அங்கு ஓடும் ஃபேனை அணைக்க வேண்டும் என்பதை ஒருவர் சொல்லியா தெரிய வேண்டும்? சொல்பவன்தான் பகையாளி. நல்லது செய்தால் மதிப்பில்லை இந்நாளில்! எத்தனை முறைதான் எழுந்து போய் அணைப்பது? அதுக்குள்ளயும் அணைச்சாச்சா? தரித்திரம்...! இந்த வார்த்தை அந்த செயலுக்கா அல்லது எனக்கா?
  ச்சே...!.. இந்தப் பெரிசு தொல்லை தாங்க முடிலப்பா...!..பேசாம இடம் மாத்திர வேண்டிதான்.....- கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் என்னவளும்...! எனக்குக் காதில் விழாது என்ற நினைப்பு.! நல்ல பசங்கதான் ஆனாலும் சமயத்துல இப்படியும் முனங்குறாங்களே?அவ என்ன பெரிசில்லையா? சிறிசா? ஒருவேளை நச்சு நச்சென்கிறவர்கள்தான் பெரிசோ? நல்லதை எடுத்துச் சொல்ல வேண்டாமா? நாம சொல்லாம வேறே யார் சொல்லுவா? ரோட்டுல போறவனா வந்து சொல்லுவான்?
  அவளுக்கு பிள்ளைப் பாசம் கண்ணை மறைக்கிறது. கிருஷ்ணா ராமா....கிருஷ்ணா ராமா......!
  போகட்டும்... இன்று துவங்கிய வேலையை முடிக்கப் பார்ப்போம்.
  ஏற்றி விட்ட ஏணி தட்டுத் தடுமாறி எழுந்து
  நின்றது.
  ஏணி என்ற அந்தச் சொல் எதையோ உணர்த்தியது இவருக்கு. ஊறுகாய், ஊறுகின்ற காய், ஊறிய காய்...வினைத்தொகை. ஏணி...ஏற உதவும் ஏணி, ஏற்றி விட்ட ஏணி....! - தனக்குத்தானே உள்ளூரச் சிரித்துக் கொண்டார்.
  நாலு எட்டு வைப்பதற்குள் எட்டி கதவு நிலையைப் பிடித்துக் கொண்டது. கதவுக்கு வெளியே அந்த ஃப்ரிட்ஜ்ஜின் பின்னால் சுவரில் சாத்தி வைத்திருந்த அலுமினிய ஏணி எங்கே? கொண்டு வந்து சாத்தி நிறுத்திய பிறகு இவர்களுக்கு அது பயன்பட்டதா ஒரு நாளாவது? அந்த அபார்ட்மென்டுக்குப் பயன்படட்டும் என்றே வாங்கியிருப்பார்களோ? ரொம்ப
  தாராளம்தான்...!
  ""அது கீழ போயிருக்குப்பா.....'' - ரமணனின் பதில். வாசுகி பிள்ளையை நோக்கினாள். அவன் உதட்டில் விரல் வைத்தான்.
  அதுவா நடந்து போயிடுச்சோ....? எப்ப மேல வரும்? கேட்கத் தோன்றியது இவருக்கு. அது அவனுக்கே தெரியாது..
  இப்ப எதுக்கு அதைத் தேடிண்டு? எப்டிப் போச்சோ அப்டியே திரும்ப வரும். தேமேன்னு உட்காருங்கோ....!
  ரூபாய் மூவாயிரம் கொடுத்து ஏணி வாங்கிய பின்பாவது வேலை நடைபெறும் என்று பார்த்தால் பிறகும் வேலையாள் வந்துதான் அதைச் செய்தாக வேண்டும். இவர்களே செய்வதாய் இல்லை. உடம்பு வணங்காது. அதாவது வேலையாளுக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். தாங்கித் தடுக்கிடுகிறார்கள். அது கிடக்கட்டும். வாங்கிய பலனுக்கு முதலில் நம் வீட்டு வேலைகளை முழுவதுமாய் முடித்துக் கொண்டு பிறகு இரவல் கொடுக்கக் கூடாதா?
  பாத்திரம் தேய்த்துக் கூட்டும் வேலைக்காரம்மாதான் அதையும் செய்தது. தினமும் ரெண்டு ஃபேன் என்று துடைக்க ஆரம்பித்து நாலு ஃபேன் துடைத்து முடிப்பதற்குள் அதற்கு உடம்புக்கு முடியாமல் ஆகிப் போனது. நமக்கு ஓட்டடையும் தூசியும் ஆகாதென்றால் அதற்கு மட்டும் ஒத்துக்குமா? அதுவும் மனித ஜீவன்தானே?இந்தச் சாக்கில் லீவு போடாவிட்டால் பிறகு எப்பதான் போடுவதாம்?
  ஒரு வாரம் ஆச்சே...அந்தம்மா வரக் காணலை....சம்பளம் குறைப்பேளா மாட்டேளா...? குறுகுறுத்த மனதுக்கு ஒத்தடமாய் இதைக் கேட்டு வைத்தார் சிவராமன்.
  சம்பளம் குறைக்கிறதாவது? அதல்லாம் அந்தக் காலம்...! பண்ணினா வேலையை விட்டு நின்னுடுவா....இன்னிக்கு அவாளுக்குத்தான் கிராக்கி...மேன்யூவல் லேபருக்குத்தான் இன்னைக்கு மதிப்பு! இந்த ஏரியாவுல அங்கங்கே பொழுது விடிஞ்ச ஜோர்ல மொபெட்டும், சன்னியுமா குறுக்கும் நெடுக்கும் பறக்கிறதே...அதெல்லாம் யாருன்னு நினைச்சேள்...எல்லாம் இவாதான். ஒவ்வொருத்தர் கைலயும் பத்துப் பதினைஞ்சு வீடாக்கும். மாசம் இருபதாயிரம் சம்பாதிக்கிறா. நடந்து போய் ஆகாது. சர்ரு...சர்ருன்னு பறந்துண்டிருக்கா..நிக்க நேரமில்லை அவாளுக்கு..நீங்க புதுசா எந்த வேலை சொன்னாலும் அதுக்குத் தனிக் காசு....அதுவும் சொன்ன நாள்ல நடக்காது. அவாளுக்கு ஒழியறபோது வந்து செய்து கொடுத்திட்டுப் போவா.... கருணை
  வைக்கணும்....!
  நின்று போனது அந்தப் பணி. அடுப்படியும், இவர் அறையும்தான் மிச்சம்.. கண்டு கொள்ளவேயில்லையே யாரும்? மறந்தே போயாச்சு போலிருக்கு...!
  படியிறங்கிக் கொண்டிருந்தார் சிவராமன். மொத்தம் ரெண்டு மாடிதான். கீழே கார் பார்க்கிங். அவர் எப்பொழுதும் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதில்லை. பயம். ஒருமுறை அதில் ஆசையாய் நுழையப் போக அன்று பார்த்துக் கரன்ட் போனது. சின்ன விஷயத்துக்குக் கூட மனுஷனுக்கு யோகம் இருந்தாத்தான் நடக்கும். கிரகம். உள்ளே வகையாய் மாட்டிக் கொண்டார். லைட் இல்லை. இருக்கும் குருட்டு வெளிச்சத்தில், பதற்றத்தில், என்னென்னவோ பட்டனை அமுக்கி அமுக்கிப் பதறிப் போனார். வியர்த்து வடிந்து விட்டது நிமிஷத்தில். வெளியே யாருக்கும் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. எமர்ஜென்ஸி பெல் வீச்சு வீச்சென்று அடித்துக் கலக்கியும், யாரும் அதை நுணுகிக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அதான் ஒவ்வொரு வீட்டிலும் அணைக்காத டி.வி. சதா சர்வகாலமும் காது கிழிய அலறிக்கொண்டேயிருக்கிறதே...! அதை மீறி யாருக்குத்தான் காதில் விழும்?
  உள் கதவு, வெளிக் கதவு என்று சாத்தியிருந்த நடு இடுக்கு வழியே தெரிந்த கோடு போன்ற இடைவெளியில் சற்றே காற்று வர அதனருகில் மூக்கை வைத்து கஷ்டப்பட்டு மூச்சை இழுத்துக் கொண்டார். சாதாரணமாய் இருந்திருந்தால் கூடச் சமாளித்திருக்கலாம். மனதில் தோன்றிய பயம்...மூச்சே நின்று விடும்போல் உணர வைத்து நெஞ்சு படபடத்து மரண பயம் வந்து விட்டது. கீழே போனாரே மனுஷன்...என்னஆனார்? யாருக்கேனும் பிரக்ஞை வேண்டுமே? ஊறீம்....தன்னைப்பற்றிய எண்ணமேயில்லையே எவருக்கும்? யார் செய்த புண்ணியமோ...கீழ் வீட்டுப் பையன் பார்த்துவிட, எமர்ஜென்ஸி கீயைக் கொண்டு வந்து கதவைத் திறக்க, இரண்டடி பள்ளத்தில் இருந்தார் இவர்.
  ""அப்டியே இருங்க அங்கிள்...பயப்படாதீங்க...நா தூக்கிடறேன்...'' என்றவாறே பக்கத்தில் கையைக் கொடுத்து ஒரு இழு இழுத்தானே பார்க்கலாம்.
  ""நா என்ன இளந்தாரியா...இந்த வேகத்துல இழுக்கிறான்? மடப்பய மவன் ...பார்த்துத் தூக்க வேண்டாம்...?'' - நினைத்துக் கொண்டாரேயொழிய சொல்ல முடியுமா? பாழாய்ப் போன கரன்ட் அன்று மாலை வரை வரவேயில்லையே? காலில் முட்டிக்குக் கீழே சிராய்ப்புகள். யாருக்கும் தெரியாமல் தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டுக் கொண்டார் சிவராமன். கக்கத்தில் கை வைத்துத் தூக்கினானே...அங்கே ஷேவ் பண்ணி வருஷமாச்சே...! என்ன நினைத்துக் கொண்டானோ? கருமாந்திரம்!
  லிஃப்ட்டுக்கு பேட்டரி போடுங்கோ...போடுங்கோன்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு...யாரும் ஒத்துக்கலை...கரன்ட் எப்பயாச்சும்தானே போறது... எதுக்கு பேட்டரிங்கிறா? எட்டு வீட்டுல இருக்கிறவங்ககிட்டே ஒத்துமையில்லை! தன் பேச்சு எடுபடாது என்று தெரியும்தான். போதாக்குறைக்கு பக்கத்து அபார்ட்மென்ட்களில் பேட்டரிகள் திருடு போய்விட்டன என்று வேறு தகவல் வர அந்தப் பேச்சு அத்தோடு சமாதியாகிப் போனது.
  எப்பொழுதாவது கீழே போக நேரும்போது படிகளையே பயன்படுத்தினார் சிவராமன். காலுக்கும், கால் முட்டிகளுக்கும் கொஞ்சமாவது இயக்கம் இருக்கட்டும் என்று அதைச் செய்தார். இப்பொழுது முதல் மாடிக்கு வந்து விட்டார். நாலு வீடுகள் எதிர் எதிராக. ஒவ்வொருவராகக் கதவைத் தட்டினார். இல்லை.. இல்லை.. என்றார்கள்.
  நீங்க ஏன் வந்தீங்க தாத்தா என்றது பேத்தி போல் இருந்த ஒரு குட்டிப் பெண். நாலு வீட்டிலும் இல்லையென்றால் பிறகு எங்கேதான் போயிற்று? ஒருவேளை மேலேயுள்ள மற்ற மூன்று வீடுகளிலும் கேட்டுவிட்டுப் படியிறங்கியிருக்க வேண்டுமோ? அதிலும் ஒரு வீடு பூட்டியல்லவோ கிடக்கிறது. மீதி இரண்டு. அவர்கள் யாரும் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. புதிய வீட்டிற்கு இப்பொழுதுதான் புதிதாய் வந்தவர்கள்.
  இதென்னடா வம்பாப் போச்சு...? மூவாயிரம் போட்டு வாங்கின அலுமினிய ஏணியை எங்க போச்சுன்னு தெரியாம, தனக்கும் பயன்படாம, அதுபத்தின நினைப்பே இல்லாம இப்டி இருக்காங்களே? எங்ககிட்ட இல்லையேன்னு வேணுமின்னே சொன்னா? யாருக்குத் தெரியும்? நாமளே சிரமப்பட்டுச் செய்திடுவோம்னு முனைஞ்சாலும் காரியம் ஆக மாட்டேங்குதே? இதென்ன கஷ்டகாலம்..?
  மனம் நொந்தவராய் வந்ததுதான் வந்தோம்...கீழே கார் பார்க்கிங்கில் சற்று உலாவுவோம்...அது எப்படித்தான் இருக்கிறது என்று முழுசாகக் கொஞ்சம் அளப்போமே...என்று பதவாகமாய் தரைத் தளத்தை நோக்கிக் கீழே இறங்கினார்..
  ஈரம் பாலித்திருந்தது கார் பார்க்கிங் ஏரியா. அடிக்கும் நெருப்பு வெயிலுக்கு அஞ்சாமல் படிந்திருக்கும் பசுமையான சொத சொத ஈரம். சாலையில் நாலடி தோண்டினால் தாங்க முடியாத உப்புத் தண்ணீர். வற்றாத, எந்தக் கோடையினாலும் வற்ற வைக்க முடியாத சதுப்பு நிலக் கசடுகளடர்ந்த பிசின் ஈரம் பாலித்த இடம். அந்தப் பகுதியின் பல இடங்களில் குளங்களாய்த் தேங்கி நிற்கும் அடர்த்தியான நீர்த்தடங்கள். கொழ கொழவென்று மிதக்கும் துர்நாற்றப் பாசி படர்ந்த பச்சைத் தண்ணீர். என்னென்னவோ செத்து வேறு மிதக்கிறது. மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நகர்ந்தாக வேண்டும். அவ்வளவு கம கம மணம்.
  செப்டிக் டாங்க் நிரம்பி வெளியே கசடு கசிந்து கொண்டிருந்தது. வாடை ஆளைத் தூக்கியது. கார்ப்பரேஷன்காரன் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். அதற்குள் க்ளீன் பண்ணியாக வேண்டும். மாதாமாதம் உண்டாகும் அதற்கான செலவு. காற்றின் போக்கில் அடிக்கும் நாற்றத்தில் துண்டால் வாயையும் மூக்கையும் இறுக்கப் பொத்திக் கொண்டார் சிவராமன்.
  கண்ணில் பட்டது அந்தக் காலி அறை. செக்யூரிட்டி கிடையாது. ரூம் மட்டும் இருக்கிறது. இன்னும் சில்லரை வேலைகள் பாக்கியிருக்கிறதே...! வெறுமே கதவைச் சாத்தி வைத்திருக்கும் அதற்குள் மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தார். .
  அட....ஏணி இங்கிருக்குதே!? கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டார். பார்வை என்ன இத்தனை மங்கிக் கிடக்கிறது? மூக்குக் கண்ணாடி இல்லாமயே வந்தாச்சா? அட ராமா...! ரொம்பத் தப்பாச்சே...! சரியாப் போச்சு....அநாதை மாதிரில்ல கிடக்கு? எவனாச்சும் லவுட்டிட்டுப் போயிட்டா? கேட்க நாதியில்லையே...? நல்லவேளை...என் கண்ணுல பட்டது.....பொழைச்சிது.....! அத்தனையையும் அவரே சொல்லிக் கொண்டு இரு கைகளாலும் அணைத்துத் தூக்கினார். நாலே நாலு படிகளானாலும் இணைத்திருக்கும் ஸ்டான்டோடு சேர்த்து கனக்கத்தான் செய்கிறது. அலுமினிய ஏணி இத்தனை கனமா? இதத் தூக்கிட்டு எவன் இரண்டு மாடி ஏறுவது? நினைத்த கணத்தில் லிஃப்டில் நுழைந்தார். கதவைச் சாத்தி பட்டனைத் தட்டினார்.
  இன்னைக்கு எப்டியும் வேலையை முடிச்சிப்புடணும்....இதுக்கு மேலே தாமதப்படுத்தக் கூடாது. திடீரென்று ஒரு வேகம் வந்தது. அந்த ஃபேன் அழுக்குக்கே திரும்பக் கரோனா வந்தாலும் போச்சு..! - சொல்லிக் கொண்டே லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்து ஏணியைத் தூக்கிக் கொண்டு சரசரவென வீட்டிற்குள் நுழைந்தார்.
  அறைக்குள் கொண்டு வைத்ததுதான் தாமதம். அந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த வாசுகி. ""இதெங்கிருந்து கிடைச்சது உங்களுக்கு? நீங்க பாட்டுக்குத் தூக்கிண்டு வந்திருக்கேள்?'' என்றாள் படபடத்தவாறே!
  ""என்னடீ சொல்றே? கீழே செக்யூரிட்டி ரூம்ல அநாதையாக் கெடக்குடீ இந்த ஏணி...!...ரூமே வெறுமேத்தான் சாத்தி வச்சிருக்கு. பூட்டலை... எவனாச்சும் திருடிண்டு போனான்னா? அதுக்கு ஒரு பூட்டுப் போட நாதியில்லையா இங்கே? ''
  ""ஐயோ ராமா....உங்களுக்கென்னத்துக்கு இந்த வேலை? இந்த ஏணி நம்மளுது இல்லை. அழுக்கும் பிசுக்குமா.. அரதப் பழசா....யாரோடதோ? பார்த்தாலே தெரில...?''
  ""கர்மம்...கர்மம்...இப்டியா நெஞ்சுல அணைச்சிண்டு செல்லமாத் தூக்கிண்டு வரணும்....! முதல்ல ஒரு குளியலைப் போடுங்கோ...ஏதேனும் வியாதி தொத்திக்கப் போறது. கரோனா காலம் இன்னும் முழுசா தீரலையாக்கும்...! நீங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும்....
  ஞாபகமிருக்கட்டும்.''
  ""நான்தான் பூஸ்டரே போட்டாச்சே...என்னை இனிமே எதுவும் அண்டாது...என்ன சொன்னே? நம்மளோடது இல்லையா? பின்ன யாரோடது....? அப்போ நம்மது என்னாச்சு...ஏற்கனவே காணாமப் போயிடுத்தா...?''
  ""ஆமா..கண் காணாமப் போயிடுத்து...சொத்தை அள்ளிண்டு போயிடுத்து...இந்த வாய்க்கு ஒண்ணும் குறைச்சலில்லே...?. எதுத்த வீடு பூட்டிக் கெடக்கே...அங்கே மாட்டிண்டிருக்கு நம்ம ஏணி....சொல்லாமக் கொள்ளாம அவா ஊருக்குப் போயிட்டா...அவாளும் மறந்து போயிட்டா.. நமக்கும் ஞாபகமில்லே.....வந்தாத்தான் ஆச்சு....இதைச் சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்...சொல்ல வச்சுட்டேள்...அவா திரும்ப வந்துதான் ஆகணும்...போறுமா?''
  அந்தப் போறுமா? என்ற சொல்லைக் கேட்க காது இல்லை சிவராமனுக்கு. அதற்குள் தூக்கி வந்த ஏணியின் மறுபக்க ஸ்டான்ட் கழன்று இரண்டாய்ப் பிரிந்து ஒன்று அவர் மேலேயும் இன்னொன்று தரையிலும் எனத் தடாலென்ற பெருத்த சத்தத்தோடு சரிய, ஐயையோ..என்னாச்சு....என்னாச்சுப்பா....? என்ற பதற்றத்தோடு மடியில் வைத்திருந்த கணினியைத் தலையணையில் தூக்கிப் போட்டுவிட்டு விழுந்தடித்து ஓடி வந்தான் பையன் ரமணன்.
  இந்த மனுஷனால என்னெல்லாம் பாடு? என்று பல்லைக் கடித்துக் கொண்டே தன் பங்குக்குப் பதறியவளாய் செய்வதறியாது பிரமித்து நின்றாள் வாசுகி.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp