ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக  உப்பு: சாப்பிடுவது நல்லதா?

என் தாத்தாவுக்கு வயது 74.   வீட்டில் எப்போது சாப்பாடு சாப்பிட்டாலும் உப்பு ஜாடியை பக்கத்தில் வைத்துகொண்டு சாதம், பருப்பு, பொரியல்,  சாம்பார், ரஸம், மோர் என்று எல்லாவற்றிலும் உப்பைப் போட்டுகொண்டு சாப்ப
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக  உப்பு: சாப்பிடுவது நல்லதா?

என் தாத்தாவுக்கு வயது 74.   வீட்டில் எப்போது சாப்பாடு சாப்பிட்டாலும் உப்பு ஜாடியை பக்கத்தில் வைத்துகொண்டு சாதம், பருப்பு, பொரியல்,  சாம்பார், ரஸம், மோர் என்று எல்லாவற்றிலும் உப்பைப் போட்டுகொண்டு சாப்பிடுகிறார். தேவையான அளவு உப்பைப் பாட்டி உணவில் சேர்த்திருந்தாலும், தாத்தா மேலும் உப்பைப் போட்டுச் சாப்பிடுவது எதனால்?

-ஸ்ரீதர்,
ஆத்தூர்.

மனிதர்களுடைய உடலானது பஞ்ச மஹா பூதங்களின் சேர்க்கையாலும், ஆன்மாவின் உறவாலும் ஒன்று சேர்க்கப்பட்டு உருவானது என்று சரகர் எனும் முனிவர் தான் இயற்றிய "சரகஸம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில் குறிப்பிடுகிறார். 

மரணத்தின்போது, ஆன்மா வெளியேறிவிடுவதால், உடலை பூத உடல் என்று குறிப்பிடுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். உப்புச் சுவையில் பஞ்ச மஹா பூதங்களின் சேர்க்கையானது நிச்சயமாக இருந்தாலும், நீர் மற்றும் நெருப்பின் அம்சம் அதிக அளவில் உறைந்திருக்கிறது.  

உண்ணும் உணவை செரிப்பதற்காக நாக்கு முதல் சிறுகுடல் வரை, உட்புற சவ்வுகளிலிருந்து ஊறிவரும் திரவாம்சங்களில் இந்த இரு பூதங்களின் சேர்க்கையானது அதிகமிருப்பதால்தான் உணவை நெகிழ வைப்பதில் நீரின் அம்சமும், வேக வைத்து சத்தான பகுதியைப் பிரிப்பதற்காக, நெருப்பின்அம்சமும் ஒருசேர சேர்ந்து போராடுகின்றன. இவை இரண்டும் இல்லாமல் போனால், வயிற்றில் உணவானது கிணற்றில் விழுந்த கல் போல அமைதியாக இருக்கும்.

உங்கள் தாத்தா, தான் அறியாமலேயே இந்த இரு மஹா பூதங்களின் வரவை, பசித் திரவங்களில் துரிதப்படுத்துவதற்காகவே உப்பை உணவில் அதிகம் சேர்க்கிறார். அறுசுவைகளில்,  பசித் திரவத்தைத் தூண்டிவிடுவதில் உப்புக்கு நிகராக எதுவும் இல்லாததால், நாம் உப்பைச் சீரான அளவில் உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கிறோம்.

உப்பினால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. உடல் உட்புறக் குழாய்களில் ஏற்படும் இறுகிய அடைப்புகள், பெருங்குடலின் மலப்பையில் ஏற்படும் மலக்கட்டு ஆகியவற்றை உப்பு சேர்க்கையைக் கொண்ட அஷ்ட சூரணம், ஹிங்குவசாதி சூரணம், ஹைச்வாநரம் சூரணம் போன்ற மருந்துகளால் நாம் இந்த நன்மைகளைப் பெறுகிறோம்.

நெய்ப்பு எனும்  எண்ணெய்ப் பசையை உடலில் உருவாக்க உப்பு உதவுகிறது. நீர்- நெருப்பு சேர்க்கையினால் வியர்வையை விரைவில் உருவாக்கி, வியர்வைக் குழாய்களின் வழியாக வெளியேற்றும் திறன் அதற்கு உள்ளதால், உடல் உட்புற அழுக்குகள் வெளியேற்றப்படுகின்றன.

நாக்கிலுள்ள ருசி கோளங்களில் தன் ஊடுருவும் தன்மையினால், உள்நுழைந்து அடைப்புகளை அகற்றி, ருசி அறியும் தன்மையை மேம்படுத்தும்.

உட்புறக் குழாய்களில் படிந்துள்ள கனமான பூச்சுகளைச் சுரண்டி, உடைத்து வெளியேற்றும்.

இத்தனை நல்ல குணங்கள் உப்புக்கு இருந்தாலும், அதனுடைய அதிக அளவின் உபயோகமானது வாத ரக்தம் எனும் பூட்டுகள் சார்ந்த உபாதை, தலைவழுக்கை, நரை, தோல் சுருக்கம், நாவறட்சி, குஷ்டம் எனும் தோல் உபாதை, "விஸர்ப்பம்'  எனும் கடுமையான தோல் அலர்ஜி போன்றவற்றை உருவாக்கும் என்பதால், உப்பை நாம் எப்போதும் குறைந்த அளவில் பயன்படுத்துவதே நன்மையாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com