தயாரிப்பாளராகும் நாயகிகள்!
By டெல்டா அசோக் | Published On : 31st July 2022 06:00 AM | Last Updated : 31st July 2022 06:00 AM | அ+அ அ- |

ஒரு படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனாலும், ஃபிளாப் ஆனாலும் லாபமடைவதும் பாதிக்கப்படுவதும் தயாரிப்பாளர்கள்தான். சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு பல சவால்கள் இருக்கின்றன. இன்னொரு தயாரிப்பாளரின் படத்தில் பல நிர்பந்தத்தோடு நடிப்பதற்குப் பதில் நாமே படத்தைத் தயாரிக்கலாமே எனப் பல ஹீரோக்கள் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளனர். தொடர்ந்து, ஹீரோயின்கள் பலரும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஹீரோயினாக இருந்து தயாரிப்பாளர் ஆனவர்களின் பட்டியல் இது!
அனுஷ்கா ஷர்மா
2008-ஆம் ஆண்டில் "ரப்னே பனா தி ஜோடி' மூலம் முதல் படத்திலேயே ஷாரூக்கானுக்கு ஜோடியாக அறிமுகமானவர், அனுஷ்கா ஷர்மா. வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கும் இவர், அமீர்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் எனப் பல முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். பிறகு, தான் நடித்த "என் எச் 10' படத்தின் மூலமாக "கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். பின், "ஃபில்லௌரி', "பரி' எனத் தன்னை மையப்படுத்திய கதைகளை மட்டும் தயாரித்து வருகிறார், அனுஷ்கா ஷர்மா.
பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, தற்போது யுனிசெஃப் அமைப்பின் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், ஹாலிவுட் படங்களிலும், அமெரிக்க சீரிஸ்களிலும் பிஸியாக இருக்கும் இவருக்கு மராத்தி, அஸாமி படங்கள் மீது ஆர்வம் அதிகம். "பர்பிள் பெப்பில்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி மராத்தி, அஸாமி, போஜ்பூரி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இதுவரை ஒன்பது படங்களைத் தயாரித்துள்ளார்.
நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிறிய பட்ஜெட் படங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். "அறம்' படமே நயன்தாரா தயாரித்ததுதான் என்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால் இப்போது "ரவுடி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் இவர் தயாரிக்கும் படங்களுக்கு சிறந்த வரவேற்பு.
ஸ்ருதிஹாசன்
பாடகி, நடிகை, இசையமைப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. "லென்ஸ்' படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் இராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் "தி மஸ்கிட்டோ பிலாஸபி' என்ற படத்தைத் தனது "இஸிட்ரோ மீடியா' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடவிருக்கிறார். இதே நிறுவனத்துக்காக ஸ்ருதி கூடிய விரைவில் ஒரு படத்தைத் தயாரித்து நடிக்கவிருக்கிறார்.
காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு எனப் பிஸியாக இருந்த காஜல் அகர்வாலுக்கும் இப்போது சரியான பட வாய்ப்புகள் இல்லை. திருமணமாக கூட இருக்கலாம். "குயின்' ரீமேக்கான "அந்தகன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சொந்தமாகத் தொழில் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்த காஜலுக்கு, இப்போது தயாரிப்பில் ஆர்வம் வந்திருக்கிறது. இதனால், தான் நடிக்கும் படங்களைத் தானே தயாரிக்கவும் இருக்கிறார்.
நஸ்ரியா
தமிழிலும் மலையாளத்திலும் "சார்மிங்' பெண்ணாக இருந்து ரசிகர்களைக் கவர்ந்த நஸ்ரியா, ஃபஹத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்குப் "பை பை' சொன்னார். சிறிய இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருப்பவர், அஞ்சலி மேனன் இயக்கத்தில் "கூடே' என்ற படத்தில் நடித்து வருகிறார். தவிர, தன் கணவர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் "வரதன்' என்ற படத்தையும், அறிமுக இயக்குநர் ஒருவரின் இயக்கம் மூலமாக "கும்பலங்கி நைட்ஸ்' என்ற படத்தையும் தயாரிக்கிறார்.
ஐஸ்வர்யா லெட்சுமி
நடிகையும் மாடலிங் அழகியுமான ஐஸ்வர்யா லட்சுமி "மாயநதி' படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானர். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் "கட்ட குஸ்தி' படத்தில் நடித்து வருகிறார்.
நடிகையாக இருக்கும் இவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள பன்மொழிப் படமான "கார்கி' மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார் ஐஸ்வர்யா லெட்சுமி. தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா லெட்சுமி.