பேல்பூரி

அலங்காரத் தட்டு
பேல்பூரி

கண்டது

தூத்துக்குடி நகரில் உள்ள ஒருபகுதியின் பெயர்

அலங்காரத் தட்டு

- எஸ்.மோகன், கோவில்பட்டி.

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிறுத்தத்தில்உள்ள பூக்கடையின் பெயர்

சித்தப்பா

-மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்

கும்மிகுளம்

- அதிரை பிளை சாகுல்,
போரூர்.

கேட்டது

(சிதம்பரம் செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஓர் எண்ணெய் கடையில்..)

""கடலை எண்ணெய் என்ன விலைங்க.?''
""ரூ.260''
""எப்போ குறையும்..''
""அளந்து ஊத்தறப்பதான்!''

-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

(விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே)

""சாமிகிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடுன்னு வேண்டிக்கப்பா.?''
""சாமி.. எங்கப்பாவுக்கு நல்ல புத்தியைக் கொடு!''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

(திருச்சி தில்லை நகரில் இருவர் பேசிக் கொண்டது)

""அந்த டாக்டர் நல்லா பார்க்கறாருன்னு எதை வெச்சி சொல்றே?''
""நான் எதுவும் சொல்லாமலேயே உனக்கு "காய்ச்சல்-சளி, இருமல்'-ன்னு சரியா சொல்லிட்டாரே?''
""அட மக்கு. இது "காய்ச்சல்-சளி, இருமல்'- சீசன்ஆச்சே!''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!


அப்பா இறந்தவுடன் சொத்துகளைப் பிரித்துக்கொள்ளும்
பிள்ளைகளுக்குத் தெரியவில்லை.
அப்பாவின் சொத்தே அம்மாதான் என்று!

-துரை ஏ.இரமணன்,
துறையூர்.

மைக்ரோ கதை


ஒரு தோட்டத்தில், தென்னங் கன்றின் அருகே வாழைக்கன்று நடப்பட்டது. இரண்டும் பேசிக் கொண்டன.

""நீ இங்கே எத்தனை வருஷமா இருக்தே'' என்று கேட்டது வாழைக்கன்று.

""ஓர் வருஷமா இருக்கேன்!'' என்றது தென்னங்கன்று.

""ஒரு வருஷமுன்னு சொல்றே. உயரம் கம்மியா இருக்கே. ஏதேனும் வியாதியா?'' என்று வாழைக்கன்று கேட்க, தென்னங்கன்று மௌனமாக இருந்தது.

வாழைக்கன்று வேகமாக வளர, தென்னங்கன்று மெதுவாகவே வளர்ந்தது.

சிறிது காலம் கழிந்தது. வாழைக் கன்று குலை தள்ளியது. ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்து காய்களைப் பறித்தான். இன்னொருவன் வந்து, குலை தள்ளிய வாழை மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

தென்னை மரம் புன்னகைத்தது. இந்தப் புன்னகையில் ஓர் அர்த்தம் இருப்பதாக வாழை மரம் உணர்ந்தது.

-எஸ்.ஆர்.கணேசன்,
குஜிலியம்பாறை.

எஸ்எம்எஸ்


உன்னை கொல்லும் ஆயுதம் -கோபம்;
உலகையே வெல்லும் ஆயுதம்- மௌனம்

-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

அப்படீங்களா!

ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் ஆளில்லா விமானம், மெட்ரோ ரயில் என தற்போது ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸிகளை உருவாக்குவதில் உலகம் முழுவதும் போட்டி ஏற்பட்டுள்ளது. 2024-இல் காரை ஓட்டுவதற்கு ஸ்டீரிங், பிரேக் பெடல்கள் இல்லாத ரோபோ டாக்ஸிகள் உருவாக்கப்படும் என்று முன்னணி தொழிலதிபரும் டெஸ்லா கார் நிறுவனத் தலைவருமான எலான் மாஸ்க் தெரிவித்திருந்தார்.

இந்த ரோபோ டாக்ஸிகளால் தற்போது சாதாரண டாக்ஸிகளுக்காகும் செலவில் பாதியாக குறையும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சீனாவின் முன்னணி இணைய தேடுதல் நிறுவனமான பாய்டூ ஆளில்லா காரான ரோபோ டாக்ஸியை உருவாக்கிஉள்ளது.

முன்பக்கத்தில் உள்ள ஸ்டீரிங்கை கழற்றிவிட்டு காரை தானாக இயக்கும் அளவுக்குநவீனமயம் படுத்தப்பட்டுள்ளது. காரை சுற்றி 12 நவீன கேமராக்களும், 8 லிடார் கண்காணிப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ரேடாரைப்போன்று இந்த லிடார் கருவிகள் லேசர் மூலம் இயங்குகிறது.

இந்த வகை டாக்ஸிகளை அடுத்த ஆண்டு முதல் சாலைகளில் இயக்குவதற்காக சீன அரசிடம் பாய்டூ நிறுவனம் அனுமதிக்காக காத்திருக்கிறது. ரோபோ டாக்ஸியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த செலவைவிட, தற்போது 37,031 டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 லட்சம்) வரையில்தான் காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பாய்டூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர்களில் சென்று திரைப்படங்களை படம் பிடித்த காலம் போய், தற்போது சிறிய ட்ரோன்களில் பொருத்தப்பட்ட கேமரா அதனை செய்து முடித்துவிடுகிறது. இதைப்போல் ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இல்லாமல் டாக்ஸிகள் இயங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com