திரைக் கதிர்
By | Published On : 26th June 2022 04:51 PM | Last Updated : 26th June 2022 05:26 PM | அ+அ அ- |

விஜய்யின் 66-ஆவது படத்துக்கு "வாரிசு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இப்படத்துக்கு "வாரசுடு' என தலைப்பு. ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வம்சி பைடிப்பள்ளி எழுதி இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதாபாத்திரத்திலும் தனி முத்திரை பதித்தவர் நடிகர் சரண்ராஜ். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குநராக கால் பதிக்கிறார். படத்தின் பெயர் "குப்பன்'. சரண்ராஜ் மகன் தேவ் கதாநாயகனாக நடிக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இளம் விஞ்ஞானியை மையப்படுத்தி உருவாகி வெற்றி பெற்ற "ஐங்கரன்', கடந்த வாரம் "ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் கதையை போன்று தமிழகத்தில் ஏராளமான இளம் விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து, ஆஹா டிஜிட்டல் குழுமம் பாராட்டி, பரிசளித்து கெளரவித்தது.
எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலத்தின் 80- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. பாரதிராஜா, இளையராஜா தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் விழா நடக்கவுள்ளது.
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் "ஜென்டில்மேன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர், தற்போது படத்தின் இயக்குராக கோகுல் கிருஷ்ணாவை அறிவித்துள்ளார். மேலும் கதாநாயகிகளாக நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் பெயர்களையும் அறிவித்துள்ளார்.
ரஜினி - கமல் இணைந்து நடித்தால் அந்தப் படத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாக மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இவர் "பிரேமம்', "கோல்ட்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த நிலையில் விஜய் - அஜித் இணைந்து நடிப்பதற்கான கதையை இயக்குநர் வெங்கட் பிரபு வைத்திருப்பதாக அவரது தந்தை கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்படவுள்ள "எமர்ஜென்சி' எனும் படத்தில் கங்கனா ரணாவத் இந்திரா காந்தியாக நடிக்கவுள்ளார். இக்கதாபாத்திரத்திற்கான மேக்கப் மற்றும் வடிவமைப்பை ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஆர்ட்டிஸ்ட் செய்கிறார்.