'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 78

தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த எனது 'நியூஸ்கிரைப்' அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 78
Updated on
5 min read

தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த எனது 'நியூஸ்கிரைப்' அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து திமுக தலைவர் மு. கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தமிழக அரசுக்கு  ஓர் அவசரத் தகவல் வந்திருப்பதாக என்னிடம் தெரிவித்தார் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர். கூடுதல் விவரங்களை நான் விசாரித்துத் தெரிந்து கொள்வதற்குள், அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க இருப்பதாகத் தகவல் வந்துவிட்டது. 
 கடந்த மூன்று ஆண்டுகளாகவே திமுக தலைமைக்கும், அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வை. கோபால்சாமிக்கும் (வைகோ) இடையேயான உறவில் விரிசல் விழுந்திருந்தது. அவரைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என்கிற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கட்சி மாநாட்டிலும் சரி, தொண்டர்கள் அதிகம்இல்லாமல் இருக்கும் மத்தியான வேளைகளில்தான் அவருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதையெல்லாம் வை. கோபால்சாமி எப்போதுமே வெளிக்காட்டிக் கொண்டதில்லை. 

பலிராம் பகத்
பலிராம் பகத்


 விடுதலைப் புலிகளால் திமுக தலைவர் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என்றும், அதன் பின்னணியில் வை. கோபால்சாமி இருக்கக் கூடும் என்றும் தாங்கள் சந்தேகிப்பதாக மத்திய உள்துறை தமிழக அரசை எச்சரித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு திமுக தலைவர் கருணாநிதிக்குப் பாதுகாப்பு அளிக்க முன்வந்தது. இந்தப் பின்னணியை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டது தமிழக அரசல்ல, திமுக தலைவர் கருணாநிதி! 
 அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இன்றுவரை பேசப்படுகிறதே தவிர, அதற்கான ஆதாரங்கள் குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை; தெரிந்து கொள்ள விழையவுமில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. 

மு.கருணாநிதி
மு.கருணாநிதி


 ஜெட் வேகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. வை. கோபால்சாமி  திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டதாகக் கருதி, வை. கோபால்சாமிக்கு ஆதரவாக பல முக்கியமான மாவட்டச் செயலாளர்கள் அணி திரண்டனர். தமிழகம் முழுவதும் வை. கோபால்சாமிக்குத் தொண்டர்களின் ஆதரவும், மக்கள் ஆதரவும் பெருகி வந்தன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வை. கோபால்சாமியை மக்கள் கருதுவதாகப் பேசப்பட்டது. 
 சென்னை மெரீனா கடற்கரையில், வை. கோபால்சாமிக்கு ஆதரவாகக் கூட்டப்பட்ட பொதுக்கூட்டமும் பேரணியும், திமுக தலைமையை மட்டுமல்ல, அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கூட கவலைக்குள்ளாக்கியது என்பதை இப்போது பலரும் மறந்தே போயிருக்கக் கூடும். அதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி மதிமுக பிரிந்தபோது, வை. கோபால்சாமிக்கு ஆதரவாக சென்னையில் நடந்த பேரணி போன்ற பிரம்மாண்டமானதொரு பேரணி தமிழகத்தில் நடைபெறவில்லை.  

ஜெ. ஜெயலலிதா
ஜெ. ஜெயலலிதா


முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எனக்கு அது குறித்துப் பல விடை கிடைக்காத ஐயப்பாடுகள் உண்டு. அன்றைய வை. கோபால்சாமி இப்போது வைகோவாகச் சுருங்கி, திமுகவுடைய கூட்டணிக் கட்சியாக மாறிவிட்டார். அவரும், திமுகவினரும் 1993 நிகழ்வுகளை மறந்திருக்கலாம், அல்லது மறக்கவும் மறைக்கவும் கூட நினைக்கலாம். 

 1. மத்தியில், பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் நடந்து கொண்டிருந்தது காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலையில் திமுகவுக்குத் தொடர்பு உண்டு என்று அப்போது அந்தக் கட்சி பரப்புரை செய்தது. தங்களது அரசியல் எதிரியாக, தங்களது தலைவரின் படுகொலைக்குக் காரணம் என்று கருதும் ஒருவரின் உயிரைப் பாதுகாப்பதில் காங்கிரஸýக்கு ஏன் அந்த அக்கறை? 

 2. லட்சக்கணக்கில் சென்னையில் குவிந்துவிட்ட வை. கோபால்சாமி ஆதரவாளர்களின் பேரணி, அண்ணா அறிவாலயத்தில் நுழைந்து அதைக் கைப்பற்றும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் அந்த நிகழ்வு நடக்காமல், அண்ணா அறிவாலயத்துக்குக் கடுமையான பாதுகாப்பை வழங்கிக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு. அது ஏன்? 

 3. காங்கிரஸின் உதவியுடன் வை. கோபால்சாமியைக் கட்சியிலிருந்து வெளியேற்ற திமுக தலைமை ரகசியத் திட்டம் தீட்டியதா?  இல்லை, வை. கோபால்சாமியைப் பகடைக் காயாக்கி திமுகவை உடைப்பதன் மூலம் தமிழகத்தில் தன்னை பலப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் நினைத்ததா? 

அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நான் சென்னையைவிட்டு நகரவில்லை. திமுகவில் ஏற்பட்ட பிளவு, வைகோ மதிமுக தொடங்கியது, திருச்சியில் நடந்த மதிமுக மாநாடு என்று தமிழக அரசியல் பரபரப்பாக இருந்தது. வெளிமாநில பத்திரிகைகள் தமிழக அரசியல் குறித்து ஆர்வத்துடன் இருந்தன. அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களும், நிருபர்களும் சென்னைக்கு வந்தால், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தாக வேண்டிய நட்புமுறை நிர்பந்தம் எனக்கு இருந்தது. 

 1994  பிப்ரவரி மாதம்வடமாநிலங்களில் கடுமையான குளிர் சற்று தணியத் தொடங்கிய நேரம். அதற்கு மேலும் நான் சென்னையில் இருக்க முடியவில்லை. நாகபுரி, புவனேஸ்வர், பாட்னா, லக்னெü என்று ஒரு சுற்றுச் சுற்றி தில்லிக்கு வந்துவிட்டேன். 

  தீன் மூர்த்தி லேனிலுள்ள பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் பேட்டிக்கு நேரம் தந்திருந்தார். அடுத்த நாள் காலையில் காரில் ஜெய்ப்பூருக்குச் செல்ல இருப்பதாகவும், பேட்டியை பயணத்துக்கு இடையில் வைத்துக் கொண்டால் என்ன என்றும் கேட்டபோது, மகிழ்ச்சியுடன் தலையசைத்தேன். ஜெய்ப்பூரில் எனக்கு இரண்டு சந்திப்புகள் காத்திருந்தன. 

மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் பைரோன்சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேட்டி எடுக்க வாய்ப்பாக அமையலாம். 

 அதைவிட முக்கியம், ராஜஸ்தான் ஆளுநராக இருக்கும் பலிராம் பகத்தை சந்திப்பது. எனக்கு நன்றாகத் தெரிந்தவர் என்பது மட்டுமல்ல, என்னிடம் தனி அக்கறை செலுத்தும் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதும் கூட அதற்குக் காரணம்.  

வை. கோபால்சாமி
வை. கோபால்சாமி


 ஜெய்ப்பூரிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நான் தங்குவதற்கு மக்களவை உறுப்பினரான ஜஸ்வந்த் சிங் ஏற்பாடு செய்திருந்தார்.  நான் பயணிப்பதற்கு ராஜேஷ் பைலட்டின் நண்பர் ஒருவர் எனக்குக் காரும் ஓட்டுநரும் தந்திருந்தார். 'ராஜஸ்தான் பத்ரிகா' நாளிதழின் நிருபர்கள் சிலர் எனக்கு ஏற்கெனவே பழக்கமானவர்கள். 

 ஜஸ்வந்த் சிங்குடனான பேட்டி மட்டுமல்ல, அவர் சொன்ன பலவித அரசியல் நிகழ்வுகளும் எனக்குக் கிடைத்த கிடைத்தற்கரிய தகவல்கள். ஜஸ்வந்த் சிங் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் பைரோன்சிங் ஷெகாவத் வந்திருந்தார். வாழ்த்துச் சொல்ல முடிந்தது. பேட்டிக்கு நேரம் கேட்க  வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஜஸ்வந்த் சிங் எனக்காகப் பரிந்துரைத்து, உதவியாளர்களிடம் முதல்வரின் பேட்டிக்கு உதவச் சொன்னார். பேட்டி கிடைக்கவில்லை, அது போகட்டும். 

  ஆளுநர் மாளிகையைத் தொடர்பு கொண்டு நான் ஜெய்ப்பூர் வந்திருக்கும் விவரத்தைத் தெரிவித்து, ஆளுநர் பலிராம் பகத்தைச் சந்திக்க நேரம் கேட்டேன். என்ன ஆச்சரியம், அடுத்த ஒரு மணி நேரத்தில் பதில் வந்தது. மாலையில் வந்துவிடும் படியும், இரவு உணவை ராஜ்பவனிலேயே முடித்துக் கொள்ளலாம் என்றும் அவரது ஏ.டி.சி. தெரிவித்தார். அதுதான் பலிராம் பகத். 
 பி.ஆர். பகத் என்று அறியப்படும் பலிராம் பகத் சாதாரண ஆளுமை அல்ல. முலாயம், லாலு பிரசாத் இவர்களுக்கு எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே, யாதவ் இனத்தைச் சேர்ந்த முக்கியமான தலைவர்களில் ஒருவர். விடுதலைப் போராட்ட கால  தலைவர்.

1952-இல் தொடங்கி, தொடர்ந்து ஐந்து முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977-இல் தோல்வியைத் தழுவினாலும் 1980, 1984 தேர்தல்களில் மீண்டும் தனது தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டவர். 
 ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மூவரின் அமைச்சரவைகளிலும் இடம் பெற்ற நேரு குடும்ப விசுவாசி. அவசர நிலைக் காலத்தில் மக்களவைத் தலைவராக இருந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, துணிந்து தனது அரசியல் கருத்துகளைத் தெரிவிப்பவர். அதனால் பல மூத்த தலைவர்களே இவரைக் கண்டு பயப்படுவார்கள். 

  சுமார் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு நான் அவரை சந்தித்தேன். முழு நேர அரசியல்வாதியான அவருக்கு ஆளுநர் மாளிகை என்பது ஒருவகையில்  தனிமைச் சிறையாக இருக்கிறது என்பதை அவருடன் பேசத் தொடங்கியதுமே புரிந்து கொண்டுவிட்டேன். 

 ''அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று, மூத்த தலைவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் வழங்கப்படும் ஓய்வுக்காலப் பணி. இரண்டாவது, அமைச்சர் பதவி வழங்க முடியாதவர்களுக்குத் தரப்படும் ஆறுதல் பரிசு. மூன்றாவது ஒன்று இருக்கிறது. யாருடைய வாயையாவது அடைத்து, அவர்களைப் பேசவிடாமலும் அரசியலில் ஈடுபடாமலும் இருக்கத் தரப்படும் தண்டனை. எனக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது அந்த மூன்றாவது காரணத்துக்காகத்தான்'' - என்னிடம் வெளிப்படையாகவே தெரிவித்தார் ஆளுநர் பி.ஆர். பகத். 

  பிரதமர் நரசிம்ம ராவ் மட்டுமல்ல, காங்கிரஸில் அப்போதிருந்த எல்லா தலைவர்களை விடவும் மூத்தவர் பி.ஆர். பகத். இந்தியாவின் எந்த ஒரு பகுதி குறித்தும் அவரிடம் கேட்கலாம். அந்தப் பகுதி அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாதது கூட அவருக்குத் தெரிந்திருக்கும். 

 ''காங்கிரஸ் இனி ஒருநாளும் தலைதூக்கவே முடியாதபடி செய்து விட்டவர்கள் வி.பி. சிங்கும், பி.வி. நரசிம்ம ராவும்'' என்று அவர் சொன்னதை என்னால் மறக்க முடியாது. 
''இனிமேல் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஒருநாளும் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணி வேண்டுமானால் அமைக்கலாம். அதுவும்கூட அதிக நாள்களுக்குத் தாங்காது.'' 
 ''அதற்கு என்ன காரணம்?'' 

 ''வி.பி. சிங் மரத்தை வெட்டிச் சாய்த்தார். பி.வி. நரசிம்ம ராவ் ஆணி வேரையே பிடுங்கி எறிந்துவிட்டார். வி.பி. சிங் 'வெனமஸ் பாய்சன்''. பி.வி. 
பாய்சனஸ் வெனம்!'' (வெனம் என்பது பாம்பு கடித்து ஏற்படும் விஷம். பாய்சன் என்பது உடலுக்குள் செலுத்தப்படும் விஷம்). 

 ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியுடனான தனது பல அனுபவங்களை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் பேச்சு தமிழகம் குறித்தும் திரும்பியது. ராஜீவ் காந்தி அமைச்சரவையில் சில காலம் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் என்பதால், இலங்கைப் பிரச்னை, தமிழக அரசியல் மாற்றங்கள் குறித்து அவருக்கு ஆர்வம் இருந்ததில் வியப்பில்லை. 

 வேறு பார்வையாளர்கள் யாரும் அன்று இருக்கவில்லை. இலங்கைப் பிரச்னை, இந்திரா காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையிலான அணுகுமுறை மாற்றம், விடுதலைப் புலிகள், ராஜீவ் படுகொலை உள்ளிட்ட எல்லா விஷயங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவு முடித்த பிறகும் கூட, எங்கள் பேச்சு தொடர்ந்தது.  
 ''நான் சொன்னதாக யாரிடமும் சொல்லாதே. நீ ஜெய்ப்பூர் வந்திருக்கிறாய். இலங்கை வடகிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதராஜ பெருமாள், ராஜஸ்தானில்தான் பாதுகாப்பாகத் தங்கி இருக்கிறார். உனது நண்பர்தான் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர். அவரிடம் அனுமதி பெற்று, நீ வரதராஜ பெருமாளை சந்தித்தால் உனக்குப் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்!'' 
 பலத்த பாதுகாப்புடன் மத்திய பிரதேசத்தில் வரதராஜ பெருமாள் இருப்பதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் ராஜஸ்தானில் இருக்கிறார் என்பது எனக்குப் புதிய செய்தி. ஆளுநர் மாளிகையிலிருந்து இரவு சுமார் பத்து மணிக்கு நான் விடைபெற்றபோது, வரதராஜ பெருமாளை சந்திப்பது குறித்து எனது மனது வட்டமிடத் தொடங்கியது.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com