தோட்டத் தொழிலாளியின் மகளாகப் பிறந்து 25 ஆண்டுகளுக்கு முன் அஞ்சல் அதிகாரியாகத் தேர்வானதிலிருந்து இன்றுவரை அடர்ந்த வனப்பகுதியில் 5 கி.மீ. தொலைவு நடந்து சென்று பணியாற்றி வருகிறார் பாத்திமா ராணி.
தென்மாவட்டங்களின் ஊட்டி என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஒன்று நாலுமுக்கு. இங்கு 4 தலைமுறைகளுக்கு முன் தோட்டத் தொழிலாளியாகச் சென்ற குடும்பத்தில் 3-ஆவது தலைமுறையாகப் பிறந்தவர் பாத்திமா ராணி. தொடக்கக் கல்வியை நாலுமுக்கில் உள்ள தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைப் படிப்பை விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் பயின்ற பாத்திமா ராணி, தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் திருமணமானதால் படிப்பைத் தொடர முடியவில்லை.
இந்நிலையில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கோதையாறு கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு அழைப்பு வந்ததையடுத்து அதில் சேர்ந்துள்ளார். அந்தப் பணியில் சேர்வதற்கு அவரது பெயரில் உள்ள அசையா சொத்தை அடமானமாக கேட்டதையடுத்து, தனக்குச் சொந்தமான நிலத்தை பாத்திமா ராணி பெயருக்கு மாற்றி வேலையை உறுதி செய்துள்ளார் அவரது மாமனார்.
1997 ஏப்ரல் 5 -ஆம் தேதி பணியில் சேர்ந்த பாத்திமா ராணி, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நாலுமுக்கு பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கோதையாறு மேல்தங்கல் கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று பணியாற்றி வருகிறார்.
இந்தப் பணியில் சேர்ந்தது, குறித்தும் , வனப்பகுதியில் நடந்து சென்று வருவது குறித்தும் பாத்திமா ராணி கூறியது:
""அஞ்சலக அதிகாரி பணிக்கு அழைப்பு வந்ததும் எனது கணவர் ஜெயக்குமார், மாமனார், மாமியார் ஆகியோர் தைரியம் கூறி பணியில் சேர வைத்தனர். மேலும் சிறிது காலம் எனது கணவர் நாலுமுக்கிலிருந்து கோதையாறுக்கு என்னுடன் துணைக்கு வந்தார். அப்போது, வனமும், வனவிலங்குகளும் காரணமின்றி நம்மைத் துன்புறுத்தாது என்று எனக்கு மன தைரியத்தை ஏற்படுத்தினார் கணவர். அதன் பின் தனியாகவே நாலுமுக்கிலிருந்து கோதையாறு மேல்தங்கல் கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு இன்றுவரை தனியாக நடந்தே சென்று வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் பணிக்குச் செல்லும்போது மனதில் ஆண்டவரை ஜெபித்துக் கொண்டே செல்வேன்.
பணிக்குச் செல்லும் வழியில் காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை பலமுறை பார்த்துள்ளேன். ஒருமுறை புலிக்குட்டி ஒன்று பாதையில் தனியாக நின்று கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த நான், தாய்ப் புலியும் அருகில் புதரில் நிற்கலாம் என்று நினைத்து அப்படியே பின்வாங்கினேன். சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்து புலி சென்றுவிட்டதை உறுதிப்படுத்திய பின் அந்த இடத்தைக் கடந்தேன்.
நாலுமுக்கு துணை அஞ்சலகத்தில் இருந்து தபால்கள் பெற்று கோதையாறு மேல்தங்கலில் உள்ள மின் வாரிய ஊழியர்கள், வனத்துறையினர், காவல் துறையினருக்கு பட்டுவாடா செய்வது, அலுவலகப் பணிகளை மேற்கொள்வது எனது பணியாகும்.
நாலுமுக்கு துணை அஞ்சலகத்தில் பணி புரியும் உயரதிகாரிகளும், சக பணியாளர்களும் எனக்கு தைரியம் கொடுத்து உறுதுணையாக உள்ளனர். மேலும் கோதையாறு மேல்தங்கலில் தங்கியுள்ள அனைத்துத் துறைப் பணியாளர்களும் என்னை சகோதரியாக நினைத்து அன்பாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்வதால் நான் பணிக்கு 5 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து வருவதால் ஏற்படும் துன்பம் பெரிதாகத் தெரிவதில்லை. நானும் அவர்களுக்கு சேவை மனப்பான்மையுடன் விருப்பத்தோடு பணி செய்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தன்னம்பிக்கையோடு தங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நான் இந்தப் பணிக்கு வரும் போது பயமோ தயக்கமோ பட்டிருந்தால் இன்று தோட்டத் தொழிலாளியாகத்தான் இருந்திருப்பேன்.
எனவே பெண்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு சொந்தக் காலில் நிற்கும் திறனை வளர்த்துக் கொண்டால் எந்த இடத்திலும் பெண்களுக்குத் தோல்வியே இருக்காது என்றார்.