பேல்பூரி

பயம் தெரியும். பயப்படத் தெரியாது.
பேல்பூரி

கண்டது


சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓர் கிளீனிக் முன் எழுதி வைக்கப்பட்டிருந்தாவது:

ஆண்கள் அமரும் பகுதிக்கு- வண்டுகள்
பெண்கள் அமரும் பகுதிக்கு- மலர்கள்

-ஆர்.ரவி,
தஞ்சாவூர்-1.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த காரில் எழுதியிருந்தது:

""உழைப்பில் எறும்பாய் இருங்கள்;
உறுதியில் இரும்பாய் இருங்கள்''

-வி.ஜெயலட்சுமி,
 கல்லாவி.

நன்னிலத்தில் நின்றிருந்த காரின் பின்புறம் எழுதியிருந்தது:

""பயம் தெரியும். பயப்படத் தெரியாது''

-சி.முருகேசன்,
மாப்பிளைக்குப்பம்.

கேட்டது

தென்காசி பேருந்து நிலையம் அருகே இருவர் பேசிக் கொள்ள கேட்டது

""உங்க வீடு வாடகைக்கு கிடைக்குமா!''
"" எவ்ளோ காலம் இருப்பீங்க. அட்வான்ஸ் தந்தா மட்டும் போதும்!''
""மூணு வருஷம் இருப்போம்!''
""அப்டீன்னா மூணு வருஷ வாடகையை மட்டும் அட்வான்ஸா தாங்க போதும்!''

- கு.அருணாசலம்,
தென்காசி.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இரு இளைஞர்கள்)

""மச்சி உன்கிட்ட கூகுள் பே இருந்தால் என் அக்கவுண்ட்டில் ஆயிரம் ரூபாய் போட்டுவிடேன்.''
""மாப்ளே! கூகுள் பே மட்டுமில்லை. ஃபோன் பே, பேடிஎம் எல்லாம் இருக்கு. ஆனால் அக்கவுண்ட்டில பணம்தான் பத்து ரூபாய் கூட கிடையாது.''

-க.சரவணகுமார்,  
திருநெல்வேலி-1.

(கொக்கிரக்குளத்தில்  உள்ள அரசு அலுவலம் அருகே இருவர்)

""அவனவன் காரியம் ஆக ஆயிரமாயிரமாய் லஞ்சம் தர்றாங்க.. நீங்க ரூ.500 தர்ற யோசனை பண்றீங்களே..''
""லஞ்சம் வாங்குறதும் தப்பு கொடுக்கறதும் தப்பாச்சே. அதான் யோசிக்கிறேன்''
""நீங்க ஏன் லஞ்சமுன்னு நினைக்கறீங்க.. தர்மம் 
பண்றத நினைச்சி கொடுத்திட்டு போங்க..''

-கோ.வினோத்து,
கிருஷ்ணாபுரம்.

யோசிக்கிறாங்கப்பா!

சோறே கிடைக்காத ஊரிலும் 
கிடைத்த சோறை குறை சொல்ல 
இரண்டு பேரு இருப்பானுக. 

-நாஞ்சில் சு. நாகராஜன்,  
பறக்கை. 

மைக்ரோ கதை


புடவை கட்டிச் செல்லாத அந்தக் கல்லூரி மாணவிகள் மத்தியில் தினமும் வண்ண வண்ண சேலைகளைக் கட்டி, தலைநிறைய பூவுடன் ஒரு பட்டாம்பூச்சி மட்டும் தினமும் அந்தக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கிச் செல்வதை மூன்று மாதங்களாகக் கவனித்து வருகிறான் கதிரவன்.

அவளைப் பார்க்கும்போதெல்லாம்... "இப்படிப்பட்ட குடும்பப் பாங்கான பொண்ணுதான்டா நம்ம குடும்பத்துக்கு வேணும்'னு அம்மா அடிக்கடி கூறுவது நினைவுக்கு வரும். இன்று எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று துடித்தான்.

மாலை அவள் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது மெல்ல நெருங்கி "மேடம் ஐ.. லவ்..யூ...' என்று சொல்லி முடிப்பதற்குள் "பளார்' என அவள் கன்னத்தில் விட்ட அடியில் அவனுக்குத் தலைசுற்றியது. அவளை நிமிர்ந்து பார்ப்பதற்குள்...

""இன்னாடி பிரச்னை?  யாரு இந்த ஆளு?'' என்று முறுக்கு மீசையை முறுக்கிக்கொண்டே கேட்டவனிடம், ""பாரு மச்சான்... இதுக்குத்தான் நான் பொம்பள புள்ள காலேஜுல வேல செய்ய மாட்டேன்னு சொன்னே... நீதான் அந்தக் காலேஜுல ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு நல்ல சம்பளம் தராங்கன்னு கொண்டுபோய் சேர்த்துவுட்ட... வேலைக்கு பளிச்சுன்னு சேல கட்டிக்கிட்டு போக முடியலையே... உம் பொஞ்சாதிக்கே ஐ லவ் யூ சொல்றான் மச்சான்... இந்த ஆளு... இன்னானு கேளு...''

அதைக் கேட்ட கதிரவன் மயங்கியே விழுந்துவிட்டான்.

""தாத்தா... என்ன மயங்கிட்டீங்க... லோ சுகராயிடுச்சா... சாக்லேட் வேணுமா...'' பேரன் கேட்டபோது, கதிரேசன் பயணித்த அந்தப் பேருந்து, அந்தக் கல்லூரியைக் கடந்து போய்க் கொண்டிருந்தது.

-இ.கி.ம.

எஸ்எம்எஸ்


உயிரும் நட்பும் எப்படி பிரியும், எப்போது பிரியும் , 
எவராலும் கணித்துவிட முடிவதில்லை.

- ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.


அப்படீங்களா!


உலகின் செல்வந்தர்கள், தங்களின் ஆடம்பர வீட்டுக்கு அடுத்தபடியாக அதிக பணம் செலழிப்பது சொகுசு கார்களுக்குதான். அப்படி பல நூறு கோடிகளைக் கொடுத்து கார்களை வாங்குவது நெடுந்தூரம் பயணம் செய்யவா? அல்ல ! தங்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தவே பயன்படுத்துகின்றனர். 

நவீன தொழில்நுட்பமும், சொகுசு வசதிகளும் உள்ள உலக முன்னணி கார்களின் அதிபட்ச விலையே ரூ. 500 கோடியே தாண்டாதபோது, 1955-இல் பென்ஸ் கார் நிறுவனம் உருவாக்கிய கார் சுமார் ரூ.1,100 கோடிக்கு ஏலம் சென்றுள்ளது. இதுதான் உலகத்தில் விலை உயர்ந்த காராக மாறியுள்ளது. 

"மெர்சிடிஸ் பென்ஸ்- 300 எஸ்எல்ஆர் உலஹன்ட் கோப்' என்ற அந்த கார் வகையை பென்ஸ் நிறுவனம் இதுவரை இரண்டு மட்டுமே தயாரித்துள்ளது.

1950-களில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஸ்போர்ட்ஸ் கார் வகைகளில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த 300 எஸ்எல்ஆர் கார் உலகின் அதிவேகமான கார்களில் ஒன்றாக இருந்தது.

தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள கார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த காரை பென்ஸ் நிறுவனம் ஏலம் நடத்தி சுமார்  ரூ.1,100 கோடிக்கு விற்றுள்ளது. இந்த காரை ஏலம் எடுத்த நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏலத்தில் பெற்ற பணத்தை சுற்றுச்சூழல் அறிவியல், காற்று மாசைத் தடுப்பதற்காக ஆய்வில் ஈடுட்டுள்ள இளம் ஆராய்ச்சியாளர்களின் பணிக்கு பயன்படுத்தப்படும் என்று பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது விலை உயர்ந்த காரைவிட மிகவும் உயர்ந்த சேவையாகும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com