ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிட்டால்...?

எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் அடிக்கடி பீட்ஸா, பாஸ்தா, தஹிபூரி, ஐஸ்கிரீம், சமோஸா, குளிர்பானங்கள் போன்ற உணவு வகைகளையே அதிகம் சாப்பிடுகிறான்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிட்டால்...?

எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் அடிக்கடி பீட்ஸா, பாஸ்தா, தஹிபூரி, ஐஸ்கிரீம், சமோஸா, குளிர்பானங்கள் போன்ற உணவு வகைகளையே அதிகம் சாப்பிடுகிறான். கறிகாய்கள், கீரைகள், பழங்களை அவன் விரும்புவதில்லை. அவனை எப்படி திருத்துவது? இதனால் அவனுக்கு என்ன வகையான உபாதைகள் ஏற்படலாம்?  எப்படி குணப்படுத்துவது?

-சாய் பிரியா,
சென்னை.

மைதா பொருட்களை சூடாறிப் போன நிலையில் சாப்பிடுவதால், வயிற்றிலுள்ள பசியின் தன்மையானது மந்தமாவதுடன் குடல் புழுக்களை உற்பத்தி செய்யும் இருப்பிடமாகவும் மாற்றிவிடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.
இதுபோன்ற பிள்ளைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் மற்றும் கிருமிகளால் பசியின்மை, நீர்ப்பேதி, வயிற்று வலி, தோலின் நிறம் மாறுதல், நாக்கிலும் நிறம் மாற்றம், காய்ச்சல், சோர்வு மற்றும் தலைசுற்றுதல் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். 

பசியின் தன்மை குறையாதிருக்கவும், குடல் கிருமிகளை அழித்து வெளியேற்றவும் வாயுவிடங்கத்தின் சூரணத்தை ஐந்து கிராம் எடுத்து பத்து மில்லி தேனுடன் கலந்து, காலை, மாலை உணவிற்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடுவது நல்லது.

அதுபோல, பத்து மில்லி எலுமிச்சை பழச்சாறில், முற்றாத இளம் பாக்குப் பிஞ்சை அரைத்து உருண்டையாக்கி சிறிய அளவில் சேர்த்து சாப்பிடுவதும் நல்லதே.

மோரில் சிறிது முருங்கை இலை, மிளகு, திப்பிலி, வாயுவிடங்கம் (வகைக்கு ஐந்து கிராம்) சேர்த்து கஞ்சி போலக் காய்ச்சி, துவர்ச்சியை உப்புடன் சாப்பிட, குடலில் வேண்டாத புழுக்கள், கிருமிகள்அனைத்தும் அழிந்து வெளியேறும். புழுக்கள் அழியவும், கிருமிகள் வெளியேறவும், பசியின் தன்மை கெடாதிருக்கவும். வீட்டிலேயே செய்து சாப்பிடக் கூடிய சில எளிய குறிப்புகள்:
சோம்பு விதையுடன் இந்துப்பு கலந்து மென்று சாப்பிடுவது. இதில் விதை ஐந்து கிராமும், உப்பு இரண்டு கிராம் என்ற விகிதத்தில் சாப்பிடுவதை சில நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அதையும் காலையில் மலம் கழிக்கும் முன் சாப்பிடுவது நல்லது.

பத்து மில்லி  வெற்றிலைச் சாற்றுடன் ஓமத்தூள் ஐந்து கிராம், இரண்டு கிராம் கல்லுப்பு பொடித்துச் சேர்த்து, காலை உணவிற்கு அரை மணி முன் சாப்பிடுதல்.

வேப்பிலைக் கொழுந்து ஐந்து கிராம், ஓமம் ஐந்து கிராம், இரண்டு கிராம் இந்துப்பு சேர்த்து அரைத்து உருண்டையாக்கி, மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது.

முருங்கை இலை ஈர்க்கையுடன் (இலை நீக்கிய குச்சி) கருவேப்பிலை ஈர்க்கையுடன் சேர்த்து இடித்து, இரவு முழுவதும் வென்னீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வடிகட்டி, அந்தத் தண்ணீரை மட்டும் பருகுதல்.

பிள்ளைகள் சாப்பிட மறுத்தாலும் வீட்டிலுள்ள பெரியவர்கள் தங்களுக்குக் குடலில் புழுக்கள்உள்ளதாக உணர்ந்தால், பதினைந்து முதல் முப்பது மில்லி வரை பசுவின் சிறுநீரை காலையில் பருகி வரலாம்.

கேன்சர் கட்டிகள், கொழுப்பு உபாதைகள், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் போன்றவையும் இதனால் குணமடையும்.

கடுக்காய், நல்லெண்ணெய், கடுகெண்ணெய், பனம்பழம், சுத்தி செய்யப்பட்ட சேராங்கொட்டை, பசுவின் சிறுநீர், வெற்றிலைச் சாறு, வாய்விடங்கம், சோம்பு, ஓமம், கல்லுப்பு, இந்துப்பு, குப்பை மேனி இலைச்சாறு, வேப்பிலைக் கொழுந்து, கருவேப்பிலை, நிலவேம்பு போன்றவை குடல் கிருமிகள், புழுக்களை அழிப்பதில் தோல்வி அறியாதவை.

பிள்ளையிடம் தொடர்ந்து அறிவுரைகளைக் கூறி, அவர் சாப்பிடும் உணவுப் பண்டங்களின் வாயிலாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை விளக்கி, சிறிது சிறிதாக அதன் பழக்கங்களிலிருந்து வெளிவரச் செய்து நல்ல உணவு வகைகளை சாப்பிடும்படி செய்ய வேண்டியது தாயாராகிய உங்களுக்கு சாத்தியமே.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com