குகை

கடந்த ஆறு மாதங்களாகவே கதிரவனுக்கு மனசு சரியில்லை.  ஒரே குழப்பத்திலிருந்தான்.  
குகை

கடந்த ஆறு மாதங்களாகவே கதிரவனுக்கு மனசு சரியில்லை. ஒரே குழப்பத்திலிருந்தான். நிம்மதி கிடைக்குமா? என்ற ஆர்வத்தினால்தான் இந்த மலை மீது ஏறிக் கொண்டிருந்தான். ஏறுவதற்குச் சரியான படிக்கட்டுகள் இல்லை. ஒற்றையடிப்பாதை வழியாகத்தான் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சென்றுவருவது வழக்கம் என்று கீழே அடிவாரத்தில் இருந்த தேநீர்க் கடைக்காரர் கூறினார்.
மாலை மணி நான்கு இருக்கும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. 'சில்'லென்று மெல்லிய காற்று வீசத் தொடங்கியிருந்த்து. மலை என்று சொல்லும் அளவுக்கு அதிக உயரமில்லை. சற்றுப் பெரிய குன்று என்று வேண்டுமானால் சொல்லலாம். செம்மண் நிறப்பாறைகள்தான் அதிகம். ஆங்காங்கே பெரிய புளிய மரங்கள் இருந்தன. அதனால் குரங்குகள் கொஞ்சம் அதிகம். ஆனால் அவை இவனைப் பார்த்து அஞ்சவில்லை.
கமலா இப்படிச் சொல்வாள் என்று கதிரவன் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், கடந்த இரண்டு ஆண்டுப் பழக்கத்தை அவன் நம்பி இருந்தான். தான்அவளுக்கும் அவள் தனக்கும் என்றுதான் நினைத்திருந்தான்.
'யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். நீங்கதான் எனக்குப் புருஷன்' என்று சொல்லியிருந்தாள் அவள். அலுவலகம் முழுவதும் அவர்களது காதல் தெரிந்திருந்தது.
' திடீரென எனக்கு'வேற இதுல' கல்யாணம் ஆனா எனக்குப் பின்னாடி இருக்கற தங்கைக்குக் கல்யாணம் ஆகாதுன்னு சொல்றாங்க! அதனால் நாம விட்டுடுவோம்' என்று கமலா சொன்னதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சொன்ன 'வேற இது' எது என்றும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அவள் முடிவாகவே சொன்ன பிறகு அவன் வற்புறுத்தவில்லை. அதுவும் அலுவலகம் முழுவதும் தெரிந்து அவனை அனுதாபப் பார்வையில் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். கமலாவின் சொற்களைவிட இந்தப் பார்வைகள்தான் அவனைக் குத்திக் காயப்படுத்திக் கொண்டே இருந்தன.
வழியில் கிடந்த சிறிய பாறையில் உட்கார்ந்தான். கையில் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடித்தான்.
'இவன் ஏதாவது தின்னுவான் தமக்கும் கொடுப்பான்' என்னும் ஆசையால் இரண்டு குட்டிக் குரங்குகள் நெருங்கி வந்தன. ஆனால் அவையும் அவனைப் போல் நிராசைப்பட்டு ஓடிப் போயின.
கடந்த வாரம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயில் போனபோது, இந்த மலையைப் பற்றி ஒருவர் சொன்னார். இவன் சோகமான முகத்துடன் பித்துப் பிடித்தவன் போல் இருந்ததைப் பார்த்து அவராகவே நெருங்கிவந்து சொன்னார்.
'தம்பி. நீங்க ரொம்பக் குழப்பத்துல இருக்கீங்கன்னு தெரியுது. மனசை விட்டுடாதீங்க; நான் சொன்ன இடத்துக்குப் போயிட்டுவாங்க; திண்டிவனம் பக்கத்துல வீடூருன்னு ஒரு கிராமம் இருக்கு. இப்ப அங்க அணை கூடக் கட்டியிருக்காங்க. அங்க ஒரு சின்னமலை இருக்கு. அதுக்கு செம்மலைன்னு பேரு. அந்த மலை மேல ஒரு குகை இருக்கு அங்கப் போயிக் கொஞ்ச நேரம் அமைதியா உட்காந்துட்டுவாங்க! எல்லாம்சரியாயிடும்''
அம்மாவிடம்தான் சென்று வருவதாகச் சொன்னபோது, 'எப்படியாவது நீ சரியானா சரி' என்றார்.
காலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து திண்டிவனம் வந்து இறங்கி வழி விசாரித்துகொண்டு வந்தான். மலை அடிவாரத்தில் கடைக்காரரிடம் கேட்டபோது, 'மேலே யாரும் இல்லீங்க! கோயிலுன்னு ஒன்றும் கெடையாது. குகை மட்டுமே இருக்குன்னு நெறைய பேரு வராங்க. நானும் போனதில்லை. குகை இருக்கான்னுகூட எனக்குத் தெரியாது'' என்றார்.
கமலா விலகின அடுத்த வாரமே அவனுக்குக் கடுமையான காய்ச்சலும் வந்துவிட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு வாரம் அங்கேயே இருந்தான். அம்மாதான் கூடவே இருந்தார். அலுவலக நண்பர்கள் வந்து பார்த்தனர். அவர்களுடன் கமலாவும் வந்து பார்த்துவிட்டுச் சென்றாள். உடல்நிலை சரியாகி அலுவலகம் சென்றான்.
அங்கே அலுவலக மேலாளரின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவர் வடக்கு மாநிலத்திலிருந்து வந்தவர். எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவன் விடுப்பு எடுத்தால், தேங்கியுள்ள கோப்புகளை இரவு எட்டு மணி வரை அலுவலகத்தில் வேலை செய்து முடித்திருந்தான். அவரிடமிருந்து பாராட்டே இல்லை. அதுகூடப் பரவாயில்லை. ஒரே ஒரு சிறிய தவறுக்காக அனைவர் எதிரிலும், 'உன்னை ராஜஸ்தானுக்கு மாற்றிவிடுவேன்' என்று சத்தம் போட்டுச் சொன்னதுதான் அவனை மிகவும் பாதித்துவிட்டது.
மலையிலிருந்து ஆடுகளின் மேய்ச்சலை முடித்துகொண்டு சிறுவர்கள் கீழே இறங்கிக்கொண்டிருந்தனர். எல்லா ஆடுகளும் சற்றுப் பெரியவையாக இருந்தன. அவர்களுக்கு வழிகாட்டுவதுபோல அவை சென்றன. வந்த இருவரிடமும் அவன் கேட்டான்.
'ஏம்ப்பா. உன்ஆடுகளையும், இவன் ஆடுகளையும் எப்படி பிரிப்பீங்க?''
அவர்களில் ஒருவன் சிரித்துக்கொண்டே, 'நாங்கப் பிரிக்க வேணாங்கய்யா? ஊர் வந்ததும் அதுங்களே பிரிஞ்சு போயி தனித்தனியா அதுங்கப் பட்டிக்குப்போயிடும்'' என்றான். ஆடுகளின் மனத்தெளிவு கதிரவனுக்கு வியப்பாகஇருந்தது.
மேலாளரின் பேச்சைக் கேட்ட பிறகு கதிரவன் இல்லத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, பிறரிடம் பேசுவதையே குறைத்து விட்டான். அவன்அம்மாவும், 'என்னா ஏதாவது தகராறா? என்னா ஆச்சு? ஏன் எப்பப் பாத்தாலும் உம்முனு இருக்க?'' என்று துளைத்துவிட்டார்.
அவன், 'ஒண்ணும் இல்லம்மா' என்று சொன்னாலும் அம்மா, 'இல்லை நீ முன்ன மாதிரி இல்ல. எதையோ மறைக்கிறே?'' என்றார்.
அலுவலகத்திலும் தொழிற்சங்கத் தலைவர்கோபால், 'என்னா கதிரவன். யார்கிட்டயும் பேசறதே இல்லையாமே? ரொம்பப் போட்டுக் குழப்பிக்கறயா?. அப்படி எல்லாம் மாத்தினா நாங்க விட்டுடுவோமா?'' என்று சொல்லி தைரியம் கொடுத்தார். ஆனாலும் கதிரவனின் மனம் சரியாகவில்லை.
எருமை வந்து குளித்துப் போன குளம் போலக் கலங்கித்தான்இருந்தது. 'எல்லாவற்றையும் மறக்க வேண்டும்' என்றுதான் சில கோயில்களுக்குச் சென்றுவந்தான். ஆனால் அந்தக் கோயில்களில், 'ஏன் இங்குவந்திருக்கிறோம்?' என்று எண்ணும்போது பழைய நினைவுகள் வந்து அவனை மூழ்கடித்தன. மீண்டு மேலே வருவது கொஞ்சம் கடினமாகவே இருந்தது.
மீண்டும் நடக்கத் தொடங்கினான். இரண்டு குறு முயல்கள் புதர்களிலிருந்து வெளிவந்தவை இவனை எதிர்பார்க்காததுபோலச் சற்றுக் குழம்பி நின்று பின்னர், பட்டென்று ஓடி மறைந்தன. 'எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு நாளும் ஏதாவது உணவு கிடைத்துகொண்டுதான் இருக்கிறது' என்றுநினைத்துக்கொண்டான்
இன்னும் ஐம்பது மீட்டர்கள் உயரம்தான் என்று நினைத்து மேலே ஏறினான். மேலே செல்லச் செல்லக் கரடுமுரடான பாதையானது மாறி சற்றுச் சீராக இருந்தது. காற்று நடப்பதையே தடுத்துவிடும் போல இருந்தது. மேலே சமதளமாகப் பெரிய பாறை இருந்தது. அதன் செம்மை சூடாகிக் குறைந்திருந்தது. பாறையைச் சுற்றிலும் நிறைய வேப்ப மரங்கள் இருந்தன. மரத்தின் காய்கள் பழுக்கும் காலமாதலால் காக்கைகளும் மைனாக்களும் வந்து கத்திக் கொண்டிருந்தன. இருந்த ஒரே ஒரு நெல்லி மரத்தில் நான்கைந்து குரங்குகள் ஆடிக் கொண்டிருந்தன.
அந்த நெல்லி மரத்தின் அடியில் போய் நிற்கலாம் என்று அதன்அருகில் போனபோதுதான் மரத்தின் மறுபக்கம் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார். உடம்பின் மேல் சட்டையில்லை. ஒரே ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டிருந்தார். பச்சை நிறத்தில் வேட்டி அணிந்திருந்தார். அவர் பக்கத்தில் தோளில் மாட்டிக் கொள்ளும் ஒரு பை
இருந்தது.
அவர்அருகில் கதிரவன் போய் நின்றான். சத்தம் கேட்டு அவர் கண்ணைத் திறந்தார். பெரிய கண்கள். நெற்றியில் திருமண்அணிந்திருந்தார். கழுத்தில் பவழ மாலை இருந்தது. லேசாகச் சிரித்தார்.
கதிரவனைப் பார்த்து நீண்ட நாள்கள் பழகியதுபோல், 'வா, வந்து உட்கார்'' என்றார். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவர் உடனே, 'அப்படித் தெற்கைப் பாத்து உட்காராதே, கிழக்கைப் பார்த்து உட்காரு'' என்றார்.
அவர் சொன்னபடி கதிரவனும் செய்தான். மேலே பார்த்தான், வானம் மேகங்களே இல்லாமல் தெளிவாகஇருந்தது. கருடன்கள் இரண்டு வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எங்கேயோ மயில் அகவும் ஒலி கேட்டது. இருவரும் சற்றுநேரம் பேசாமல்இருந்தனர்.
'சாமி இங்க அடிக்கடி வருவீங்களா?'' என்று கேட்டான் கதிரவன்.
பதிலுக்குஅவர், 'என் பேரு சாமியில்லை; அழகம்பெருமாள். எல்லாரும்அழகுன்னுதான் கூப்பிடுவாங்க; ஆமா, பத்து நாள்களுக்கு ஒரு தடவை வருவேன்'' என்றார்.
கதிரவன், 'இங்க கோயிலு ஒண்ணும் காணலியே சாமி'' என்றான்.
'சாமின்னு சொல்லாத; சும்மாஅழகுன்னே கூப்பிடு!''
'எப்படி சாமி. நீங்க எவ்வளவு பெரியவங்க?''
உடனே அவர் நன்றாக வாயைத்திறந்துசிரித்தார். கையை மேலே தூக்கி வானத்தைக் காட்டினார். தொடர்ந்து, ' அங்க இருக்கறவனவிடவா நான்
பெரியவன்? யார் அவனைவிடப் பெரியவன்?'' என்றார்.
கதிரவனுக்கு உட்கார்ந்திருப்பவர் லேசான ஆளில்லை என்று புரிந்தது. அவர் உடனே, ' ஏன் கோயிலு இல்லைன்னு நெனச்சுகற? இந்தப் பாறை, அந்த மரம், தோ இருக்கற குரங்கு; அதோ பறக்கற கருடன்.. எல்லாம் கோயில்தான்? அதனதன் உள்ளே இருக்கற ஆத்மா எல்லாம் சாமிங்கதான்'' என்றார்.
கதிரவனுக்கு சட்டென்று ஓர் அறை விழுந்ததுபோல இருந்தது. கன்னத்தைத் தடவிக் கொண்டான். அழகம்பெருமாள் சிரித்தபடியே 'என்னா வலிக்குதா?'' என்று கேட்டார்.
கதிரவனும் பதிலுக்கு, 'உண்மையைச் சொன்னா வலிக்கும் அழகு'' என்று சொன்னான். அவர் பெயரைச் சொல்லி அழைத்தது அவனுக்கே வியப்பாக இருந்தது.
'சொல்றவங்க சொல்ற விதத்துல சொன்னா வலிக்காது'' என்றார்அழகு. அவர் கதிரவனைப் பார்த்து, 'நீங்க ஏன் இங்க வந்தீங்க?'' என்று கேட்டார்.
'இங்க ஒரு குகை இருக்காமே? அதைப் பார்க்கத்தான் வந்தேன்!''
'குகையெல்லாம் கிடையாது. சும்மா சொல்வாங்க; என்கிட்டயும் மொதல்ல அப்படித்தான் சொன்னாங்க. சரி. எதற்கு குகையைப் பார்க்க வந்தீங்க?'' என்று கேட்டார்.
கதிரவனுக்கு அவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆறு மாதங்களாகத்தான் படும் மன வேதனையைத் தெரிவித்தான். அதற்குக் காரணமான கமலா, மேலாளர் பற்றியும் சொன்னான். ஒரு குறுநாவல்போல் அவன் சொல்லி முடித்தான். அவர் எதுவும் குறுக்கே பேசவே இல்லை.
'ஓ! அதுக்குதான் குகையைத் தேடி தியானம் செய்ய வந்தீங்களா?'' என்று கதிரவன் பேசி முடித்ததும் அழகு கேட்டார்.
'ஆமாம் அழகு; சரிதான்?''
'சரியா சரியில்லியான்னு அப்பறம் பார்ப்போம்; நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க!'' எனக் கூறிய அழகு, 'சரி, கமலா விட்டுடுவோம்னு சொன்னதுக்கு நீங்க என்னா பதில் சொன்னீங்க? உங்க அதிகாரி குறை சொன்னதுக்கு என்ன சொன்னீங்க?'' என்று கேட்டார்.
கதிரவன் எதுவும் பேசவில்லை. தலையைக் குனிந்துகொண்டான். மெதுவான குரலில், 'நான் ஒண்ணும் சொல்லலீங்க!'' என்றான்.
அழகு பேசாமல் இருந்தார். தாடையைச் சொறிந்துகொண்டார். தலைமுடியை அவிழ்த்து உதறி மீண்டும் கட்டிக் கொண்டார். உரிமையுடன் அழைப்பதுபோல, 'தம்பி' என்றழைத்தார்.
'தம்பி, யாரோ சொன்னாங்கன்னு ஒண்ணுமே பேசாம இங்கக் குகையைத் தேடி வந்திருக்கீங்க; குகை இங்க மலை மேல இல்லை; இங்கதான் இருக்கு'' என்று தனதுஆள்காட்டிவிரலால் அவன் மார்பைக் குத்திக்காண்பித்தார். கதிரவன் வியப்புடன் அவரைப் பார்த்தான். அவர் பேச்சே புதிராக இருந்தது.
'ஆமாம் தம்பி, மனத்தைவிடப் பெரிய குகை எதுவும் இல்லை. அது உள்ளே எல்லாத்தையும் நாம போட்டு வச்சிருக்கோம். சில நேரம் அதைத் திறக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறோம். உள்ளே இருக்கறதெல்லாம் ஒண்ணா சேர்ந்து நம்மை குழப்புது. ஆட்டிப் படைக்குது. கடைசியில மன அழுத்தம், மாரடைப்புன்னு உண்டாகுது!''
'புரியலையே அழகு!''
'தெளிவா சொல்றேன். நீ எல்லார்கிட்டயும் பேச்சை நிறுத்தினது ரொம்பத் தப்பு.''
'எனக்குப் பேசப் புடிக்கலையே அழகு!''
'அது எப்படிப் புடிக்காமப் போகும்; இத்தனை நாளு பேசிக் கிட்டதான் இருந்தே. அவங்க ஏதாவது சொல்லிட்டா புடிக்காம போயிடுமா? பேச்சுதான் இந்தக் குகையைத் திறக்கற சாவி, கமலா சொன்ன உடனே நீ என்னா சொல்லியிருக்கணும் நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டேன். விலகிடுவோமுன்னு சொல்லியிருக்கணும். இல்லைன்னா நான் வந்து உன் வீட்டில் பேசறேன்னு சொல்லி இருக்கணும். இதே மாதிரிஆயிடுச்சுன்னு அம்மாக்கிடயாவது புலம்பியிருக்கணும். அதிகாரி குறை சொன்ன போதே என்ன குறைன்னு கேட்டிருக்கணும் இல்லைன்னா! அவரு சொல்ற குறை சரின்னா அதைச் சரி செஞ்சிருக்கணும் நல்லதைக் கொண்டு போயிக் காட்டி இதெல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டிருக்கணும். கூட வேலை பார்க்கறவங்கக் கிட்டயாவது சொல்லியிருக்கணூம். ஒண்ணுமே சொல்லாம நீ பாட்டுக்கு ஒரு குகையில போயி உட்காந்துக்கிட்டு வாயை மூடிக்கிட்டா ஆயிடுதா? உன்னால எத்தனை பேரு கழட்டப்பட்டிருப்பாங்கன்னு நெனச்சுப் பார்த்தியா?''
அவங்கக்கிட்ட சொல்லி அவங்களையும் துன்பத்துக்கு ஆளாக்கணுமா?' இல்லை. நமக்கு வேண்டியவங்கக் கிட்ட குகையைத் திறக்கற சாவிங்க இருக்கும். ஏதாவது ஒரு சாவி போட்டு குகையைத் திறக்கலாம். நான்அப்படித் தான். நான் என் கஷ்டங்களை உங்கிட்டக் காட்ட விரும்பலை. ஆனா மன அழுத்தமாயிருந்தா இங்க வந்து உரக்கக் கத்தி எல்லாத்தையும் சொல்லிடுவேன். மனம் நிர்மலமாயிடும்; தெளிவாயிடும்; மனசிலேந்து எல்லாத்தையும் வெளியிலக் கொட்டிட்டா மனம் காலியாகி லேசாயிடும்ல!''
கதிரவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அணில்கள் கீச்கீச்சென்று ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டிருந்தன. குரங்குகள் ஓடிப்பிடித்து ஆடின. பெயரே தெரியாத இரு குருவிகள் ஒலிகள் எழுப்பி ஒன்றை ஒன்று மூக்கை உரசி மகிழ்ச்சியுடன் இருந்தன. தொலைவில் ஆடு மேய்ப்பவர்கள் பாடும் கூச்சல் கேட்டது. லேசான புன்சிரிப்புடன் எழுந்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com