ஒத்தையா?, ரெட்டையா?

''மாப்பிள்ளை உங்கக் கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லலாமா?,  வேணாமான்னு தெரியலை?''
ஒத்தையா?, ரெட்டையா?

''மாப்பிள்ளை உங்கக் கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லலாமா?,  வேணாமான்னு தெரியலை?''
கல்யாணம் முடிந்தவுடன்,  நான் தனியாக  அவரிடம் மாட்டும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தவர்போல, ஒரு கையை என் தோளிலும், கைக்குட்டையை அவர் தோளிலும் போட்டபடி  மாமனார் திடீர் புதிர் ஒன்றை தொடுத்து,  என் பக்கம் உருட்டினார்.
''ஏன்?  ஒத்தையா, ரெட்டையா போட்டுப் பாருங்களேன்!'' என்று கொழுப்பு ஜூஸில் தோய்த்தெடுத்த என் வார்த்தைகள்,  இதுவரை வெளிவராத பல சுவாரசியமான தகவல்களுக்கு வழிவகுக்கும்'' என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
''அந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது மாப்பிள்ளை?''
''எந்த விஷயமுன்னு சொல்லாமலேயே என்னை உருட்ட ஆரம்பிச்சிட்டீங்களே! விஷயத்தைச் சட்டுன்னு சொல்லுங்க மாமா!''
''உருட்டு வரைக்கும் வந்துட்டீங்க! இன்னும் கொஞ்சம்கிட்ட வாங்க!''
''கிட்ட வந்தா, உங்ககிட்ட மூக்குப்பொடி நெடி தாங்க முடியலை. நீங்க 'மூக்குப்பொடியார்'  என்கிற விஷயத்தைக் கல்யாண பேச்சுவார்த்தையின்போது,  ''மூடி மறைச்சுட்டீங்களே. மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இருக்காங்கறதை வாய் கிழிய விசாரிச்ச நீங்க,  உங்களுக்கு பொடி பழக்கம் இருப்பதை மூக்கை மூடி மறைச்சுட்டீங்களே!''
''மூடி வைக்கலைன்னா,  அதன் காரம்,  மணம்,  குணம் எல்லாம் காணாமல் போயிடும்!'' என்று துளியும் கூட இடைவெளிவிடாமல்,  தன் மொக்கையான அம்புகளை மாமா என் மீது தொடுத்துகொண்டிருந்தார்.
அவருடைய மொக்கை அம்புகளைக் கழுத்தில் மாலையாகப் போட்டு,  'அதில் எப்படி உருண்டு விளையாடுவது' என்பதை நான் யோசிக்க ஆரம்பித்தேன். 
யோசிப்பதற்கு அவர் நேரம் கொடுக்க விரும்பாததுபோல், அவசரப்பட்டார்.
''ஐயோ மாப்பிள்ளை. நான் அந்த கிட்ட சொல்லலை. இன்னும் கொஞ்சம்  உருண்டு வாங்கன்னு சொன்னேன்.''
''என்னை எதுக்கு உருள சொல்றீங்க? கல்யாணம் முடிஞ்சவுடன்,  மண்டபத்திலேயே அங்கப் பிரதட்சணம் செய்வதா வேண்டிக்கிட்டீங்களா?''
''போங்க மாப்பிள்ளை! எப்ப எதில் விளையாடறதுன்னு உங்களுக்கு தெரியலை.'' என்று 
கோபத்தில் சிவந்த முகத்துடன்(?)
மாமா முகத்தை திருப்பிக் கொண்டதுபோல் தெரிந்தது. ஆனால்,  என் யூகிப்பு,  தவிடுபொடியாகி நெடி பரப்ப துவங்கியது என்பது அடுத்த சில விநாடிகளில் தெளிவாகியது.
தோளில் தொங்கிய கைக்குட்டையால் மூக்கை மறைத்து, கட்டை விரலுக்கும்,  ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மறைத்திருந்த மூக்குப்பொடியை,  மூக்கின் இரு துவாரத்திலும் மாறி மாறி உள்ளுக்கு இழுத்து,  விரல் நுனியில் ஒட்டியிருந்த மீதி பொடியை வீணாக்காமல், அந்த சிறிய டப்பாவுக்குள் அடைத்தவரின் மூக்கு லேசாகச் சிவந்திருந்தது.. 
ஆக, மாமாவின் முகத்திருப்பதலுக்கான முழுக் காரணம் அந்தப் பொடியான சமாச்சாரம்தான்.  என்னைப் போல் அவரை யாராவது குழப்பினால், கைக்குட்டையால் மூக்கை மறைத்து கொள்வார் போன்ற உண்மைகள் புரிந்தன.
''நீங்க இப்படி பொடி வச்சு பேசினா எனக்கு தும்மல் வருது. நேரடியா விஷயத்தை சொல்லுங்க? கேட்டுக்கறேன்!''
''எனக்கு சுற்றி வளைச்சு பேச தெரியாது(?)'' என்று சொன்னவர்,  என்னை வெயிட்டிங்கில் போட்டுவிட்டு,  யாரையோ தேடி,  மண்டபத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு,  புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தார்.
சுற்றி வளைச்சுன்னு பேச்சு வந்தவுடன்,  '' என்னோட ஆட்டோ டிரைவர் ஞாபகம் வந்துடுச்சு.  அவர் சாப்பிட்டாரான்னு விசாரிக்கத்தான் தேடி போனேன்''  என்றவர்,  காதில் மாட்டியிருந்த மாஸ்க்கை வெகு சிரத்தையாக முன் தலை வரை உயர்த்திவிட்டுக் கொண்டு,  மண்டபமே அதிரும்படி தொடர் தும்மல் போட ஆரம்பித்தார்.
அந்தத் தும்மல்களுக்கு எதிர்வினையாக,  'கெட்டி மேளம்! கெட்டி மேளம்' என்று எங்கோ ஒரு மூலையிலிருந்து தொடர் கட்டளை குரல். அதைத் தொடர்ந்து, மேளதாளங்கள், ஆங்காங்கே கண்ணயர்ந்து உட்கார்ந்திருவர்கள்,  திடீரென்று விழித்து, தூக்கக் கலக்கத்தில் கையில் முகாமிட்டிருந்த அட்சதையை மணமேடையை நோக்கி தூவுதல்'' போன்ற நிகழ்வுகள் வேகமாக அரங்கேறி அடங்கின.
''லேசா கண் அயர்ந்த நேரத்தில்,  கல்யாண மண்டபத்தில்,  அபசகுனமா தும்மல் சத்தம் கேட்டுது. அதான், என்னையும்அறியாமலேயே கெட்டி மேளமுன்னு கத்திட்டேன்'' என்று ஒரு பெரியவர்,  கூடுதல் உருட்டு உருட்டி ,தன் பங்குக்கு குழப்பத்தைக் கூட்டினார்.
''ஆக,  இனிமேல் நீங்க எந்த சுப நிகழ்ச்சிக்குப் போனாலும்,  உங்க பூகம்ப தும்மலை மறைக்க,  கூடவே,  ஒரு மேள வாத்தியகோஷ்டியைஅழைச்சுக்கிட்டு போகணும்னு புரிஞ்சிருக்குமே மாமா?''
''அதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியுது மாப்பிள்ளை'' என்றுஅவரை பெரிதாகக் கெளரவப்படுத்திவிட்டது போல், மாமா வெட்கபட்டார்.
''ஏதாவது பத்திரிகை ஆபீஸில் வேலை செய்தீங்களா மாமா?''மூக்கை கிளறியவரின் வாயை கிளற, ஒரு துணை கேள்வியை கேட்டு வைத்தேன்.
''ஒருகாலத்தில், காரசாரமா செய்திகளை வெளியிட்டுக்கிட்டிருந்த  'பொடி'ன்னு ஒரு பத்திரிகையில் ப்ரூஃப் ரீடராக ஒர்க் பண்ணியிருக்கேன். எழுத்தெல்லாம் பொடி பொடியா இருக்கும்.  அப்பத்தான் மூக்குப்பொடி போட ஆரம்பிச்சேன். அந்த வேலையைவிட்டாலும்,  பொடியைவிடமுடியலை!''
''நல்லவேளை! காரம் இன்னும் கொஞ்சம் 
தூக்கலா இருக்கணுங்கறதுக்காக,  அந்தப் பத்திரிகையின் பெயரை,  'மிளகாய் பொடி'ன்னு மாற்றாம இருந்தாங்க.  அப்படி மாற்றியிருந்தா,  நீங்களும் மிளகாய் பொடிக்கு மாறி இருப்பீங்க!  'செம்மூக்கு மாமா'ன்னு உ ங்களைப் பற்றி பரணி பாட எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கும்!''
''உங்களுக்கு கதை எழுதற அளவுக்கு கற்பனை சக்தி இருக்கும்போல தெரியுது. அதனால, ஆபீஸிலிருந்து லேட்டா வருவதற்கு காரணம் கேட்டால்,  நல்ல,  நல்ல கதைகளா என் மகளிடம் அளந்துவிடுவீங்கப் போலிருக்கு. கதைன்னா,  அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அதையெல்லாம், தொகுத்து, ஒருபுத்தகமா வெளியிட்டுடலாம். அந்தப் புத்தகத்துக்கு 'அகாதெமி' விருது கிடைச்சாலும் கிடைக்கும். ஆமா நான் பத்திரிகை ஆபீஸில் வேலை பண்ணதை நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க?  உங்களுக்கு ஜோசியம் தெரியும்னு நினைக்கிறேன்.  என் ஜாதகப்படி, சனி எங்கே உட்கார்ந்து இருக்கான்னு பார்த்து சொல்லுங்களேன்!''
''ஆ.. நாக்கை நீட்டுங்கப் பார்க்கலாம்''
''ஆ... டாக்டருக்கும் படிச்சிருக்கீங்களா மாப்பிள்ளை?''
''ம்ஹூம்.. சனி உங்க நாக்கில மண்டியிட்டு உட்கார்ந்திருப்பதை கன்ஃபர்ம் செய்துகொண்டேன்.''
''ராகு ஐந்தில், கேது ஆறில்னு நீங்கச் சத்தமா பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்கலைன்னு
நினைச்சீங்களா?''
''ராகு கேதுங்கறது என் ஃப்ரண்ட்ஸ் பேரு. மண்டபத்தில், அவங்களுக்கு ரூம் அலாட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.  எல்லாவற்றையும் அரைகுறையா கேட்டுக்கிட்டு குழம்பாதீங்க மாமா!''
''இப்படியெல்லாம, அரைகுறையா பேர் வச்சுப்பாங்க! பேரே கோளாறா இருக்கே..?''
''ஆமா.. அவுங்க, கர்நாடகாவில் இருக்கிற 'கோலாரில்' பிறந்தவங்க!''
''குழப்பறீங்களே மாப்பிள்ளை.   மறுபடியும் என்னை, கைக்குட்டையால் முகத்தை மூட வச்சிடாதீங்க!''
''அதுபோகட்டும். நான் பத்திரிகை ஆபீஸில் வொர்க் பண்ணது உங்களுக்கு எப்படி தெரியும்?'' என்று அந்த 'திரெட்டை' விடாமல்,  மாமா அடுத்த கேள்வியைத் தொடுத்தார்.
''இதுக்கெல்லாம் ஜோசியம் தெரிய வேண்டியதில்லை. 'அச்சுக்கு..அச்சுக்கு'ன்னு தும்மினீங்களே! அதை வச்சுதான் தோராயமா சொன்னேன்!''
''அப்ப அந்த ஒத்தையா, ரெட்டையாகூட தோராயமா சொன்னதுதானா? ஆனா, அதுதான்நிஜம். இப்ப விஷயத்துக்கு வரேன்.''
''எங்க குடும்பத்தின் குல தெய்வமே சகுனி தேவன்தான்!''
''குல தெய்வத்தின் பெயரே புது மாதிரியா இருக்கு. அப்ப நீங்க கெளரவர் பரம்பரையா? சொல்லவே இல்லை!''
''நீங்க கற்பூரம் மாப்பிள்ளை.  டக்குன்னு கண்டுபிடிச்சுட்டீங்களே!''
''பெண் பார்க்க வந்தபோது கெளரவமான குடும்பத்திலிருந்துதான் பெண் எடுக்க விரும்புகிறோம்னு உங்க வீட்டுக்காரங்க சொன்னபோது,  'எங்களுடையது, கெளரவ குடும்பம்தான்'னு நான் கோடிட்டு காட்டியதை இப்ப ஞாபகப்படுத்திப்பாருங்க மாப்பிள்ளை!''
''அப்பவும் யாருக்கும் புரியாமல், பொடி வச்சுத்தான் பேசி இருக்கீங்க!''
''ரொம்ப புகழறீங்க மாப்பிள்ளை.  ஆமா சகுனி யாருன்னு தெரியுமா?''
''அவரை தெரியாமல் இருக்குமா. மகாபாரதத்தில் ஆஃப்லைன் சூதாட்ட விளையாட்டின் பிதாமகன் ஆச்சே.   தந்திரஉருட்டல்களால், பாண்டவர்களின்நாட்டைபறித்து, அவர்களை வனவாசத்துக்கு அனுப்பியவர்.''
''கரெக்ட். குல தெய்வங்கறதால, எங்க குடும்பத்தினரும் அவர் வழியைத்தான் பின்பற்றுகிறோம்.''
''அவர் வழின்னா?  என்ன பண்ணுவீங்க மாமா!''
''எந்த முடிவு எடுக்கறதா இருந்தாலும்,  தாயக்கட்டைதான் எங்க வழிகாட்டி. என் பொண்ணுக்கும் சீதனமா ஒரு செட்,  தாயக்கட்டை கொடுத்திருக்கோம்.  அதன் பலன்களை நீங்களே புரிஞ்சுக்கிவீங்க!''
தாயக்கட்டையை கூகுள் மேப்பாக பாவிக்கும் குடும்பத் மாப்பிள்ளையானேன்என்பதுபுரிந்தது.
பலன்கள் என்பதைவிட, அதன் அவஸ்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு புரிய ஆரம்பித்தன.
தினமும் ,  எங்களில் யார் காபி போடுவது,  யார் காய்கறி, மளிகை சாமான்கள் வாங்குவது போன்ற  அன்றாட  வேலைகளைத் தீர்மானிக்க ஒத்தையா,  ரெட்டையா விளையாட்டுதான் வழிகாட்டியது.
'ஒவ்வொரு நாளும்,  நான்தான் காபி போட்டு, காய்கறி வாங்கி வந்துகொண்டிருந்தேன்'  என்பது இந்த ட்யூப்லைட் மூளைக்கு எட்ட சிறிது காலம் பிடித்தது.
என்னுடைய நெருங்கிய உறவினர்களில் சிலர்,  சென்னைக்கு வந்து,  என்னுடன் சில நாள்கள் தங்குவதற்கு ஆசைப்பட்டபோதும்,  ஒத்தையா, ரெட்டையாதான்.
நான் ஒத்தைப்படை நம்பர் சொன்னால்  ரெட்டைப்படையும்,  ரெட்டைப்படை நம்பர் சொன்னால் ஒத்தைப்படையும் உருட்டலில் 
விழுந்தது. 
ஆக,  என் அப்ளிகேஷன் அஃப்ரூவ் ஆகவே இல்லை.  இதேநிலை நீடித்தால்,  'எந்த காலத்துக்கும் ஆகாது'  என்று தோன்றியது.
அந்த அவஸ்தைகள் என்னுடன் நில்லாமல், வெளிஉலகுக்கும் பரவ ஆரம்பித்தது.
''இனிமேல் உங்க வீட்டில் வேலை செய்யறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் முடிவு பண்ணா,  அதை அந்த ஆண்டவனாலகூட மாத்த முடியாது.'' என்று என்னிடம் பஞ்ச் டயலாக் பேசிய பணிப்பெண் செல்வியை காரணம் கேட்டேன்.
''குடியிருக்கிற ஹவுஸிங் போர்ட் வீட்டை இடிச்சு,  கட்டப் போறாங்க!  புது வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கப் பணம் கேட்டபோது,  ஜக்கம்மா குறி சொல்றது மாதிரி ஒத்தையா, ரெட்டையான்னு கேட்டு, தாயக்கட்டையை உருட்டி பார்த்துட்டு, 'முடியாதுன்னு' சொல்லுது. எனக்கு குழந்தைங்க முதற்கொண்டு இரட்டைதான். அதனால, ரெட்டைன்னுதான் சொல்லுவேன்.  ஒருதபாகூட வா, ரெட்டைவிழுந்திருக்காது. அது ஏதோ அழுக்குண்ணி ஆட்டம் ஆடுதுன்னு நல்லா தெரியுது. ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க! நானும் குறி சொல்ற பரம்பரையில் வளர்ந்தவதான். நீயாச்சு. உன் பெண்டாட்டி ஆச்சு.  இன்னும் மூணே நாளில்,  என் செல்லேருந்து உன் நம்பரை அழிச்சுடுவேன்! பார்த்துக்க?''என்ற ஆக்ரோஷமான சொற்பொழிவுக்குப் பிறகு, பணிப்பெண் செல்வி தன் ராஜிநாமா பேப்பரை போட்டாள். 
தன் செல்போனில் இருந்து தொடர்பு நம்பரை அழித்தால்,  அதற்கு பிறகு எங்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் கிடையாது என்பதை சொல்லாமல் சொன்னாள்.
அந்த ராஜிநாமாவை ஏற்றுகொள்வதில் பல சிக்கல்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது, பத்து பாத்திரம் கழுவுவதிலிருந்து, துணி துவைப்பது வரை,  என் முழு நேர வேலையாகி,  அலுவலகத்தில் நான் பேப்பர் போட வேண்டியதாகிவிடும்.  அதைவிட, வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது என்பது குதிரைக்கொம்புதான் என்பதும் தெரியும்.நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.
'மனைவியின் காலில் விழுந்து மூக்கு உடைபடுவதைவிட, பணிப்பெண் காலில் விழுந்து,  கை தேய்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்'  என்ற ஞானோதயம் பிறந்தது.  அதுவும்,விதிக்கப்பட்ட கெடுவான மூன்று நாள்களுக்குள் இது நடந்தாக வேண்டும். 
'செல்வியின் நம்பருக்கு போன் செய்து பார்த்தேன்.  சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது'  என்று தகவல் வந்தது.  அவரிடமிருந்து கே.ஒய்.சி.  விவரங்கள் வாங்கியதாக ஞாபகம் இல்லை. இடித்து கட்டப்படப் போகும் ஹவுசிங் போர்ட் கட்டடம் என்ற ஒரே க்ளூவை பயன்படுத்தி,  என் தேடுதல் படலம் தொடங்கியது.
சுற்றுவட்டாரத்தில்,  அதுபோன்ற கட்டடத்தைத் தேடியதில்,  பல பழைய கட்டடங்கள் அந்தத் திட்டத்துக்குள் வருவதாகச் சொன்னார்கள்.  ஒவ்வொரு கட்டடத்திலும், ஏகப்பட்ட செல்விகள் குடியிருந்தார்கள்.  ஆனால்,  நான் தேடிய செல்வியை காண முடியவில்லை.
கடைசி முயற்சியாக,  அந்த ஏரியாவில் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் கீழ் இட்லி கடை போட்டிருந்த ஆயாவிடம் விசாரித்தேன்.
''என் பேரும் செல்விதான். உனக்கு என்ன வேணும்! களைப்பாஇருக்கே. நாலுஇட்லி துண்ணு! அப்புறம்பேசுவோம்''  என்று வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்
கினாள்.
'எல்லாவற்றிற்கும் மறுபக்கம் என்பது உண்டு' என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அதேபோல்,  மரத்தின் மறுபக்கம், நெற்றியில் பெரிய்ய வட்ட குங்குமம் இட்டு, காளியின் படத்துக்கு பூ வைத்து,  அதற்கு முன்பாக,  கையில் மந்திரக்கோலுடன் அமர்ந்திருந்த பெண்மணியைப் பார்த்து,  அந்தப் பக்கம் நகர்ந்தேன்.
''அசப்பில் பார்த்தா என் தம்பி மாதிரிஇருக்கே! அக்கா மாதிரி நினைச்சுக்கிட்டு பிரச்னை என்னன்னு சொல்லு'' என்றவள்,  கையிலிருந்த தாயக்கட்டையை சுழற்றி, '' ஒத்தையா, இரட்டையா'' என்றாள்.
''அதுதாம்மாபிரச்னையே ! அக்கா பேரை தெரிஞ்சுக்கலாமா?''
''கலைச்செல்வி. சுருக்கமா செல்வின்னு கூப்பிடுவாங்க.  அதில ஒண்ணும் பிரச்னையே இல்லை!''
''திரும்ப சொல்றேன். எனக்கு அதுதாம்மா பிரச்னையே.  என் வீட்டில் வேலை செய்யற செல்வியைத் தேடி வந்திருக்கேன். சோதனையா நான் பார்க்கவறங்களெல்லாம், செல்விதான். ஆனா, தேடி வந்த செல்வி கிடைக்கலை!''
''நான் தெரியாமத்தான்கேட்கறேன். எதுக்குய்யா வீட்டில் வேலை செய்யற பொம்பளையை தேடற? ஏதாவது தப்பு தண்டாவா?''
''ஐயோ அக்கா! என்னை வம்பில் மாட்டி விட்டுடுவ போலிருக்கே. அவங்கக் கொடுத்த ராஜிநாமாவை தடுத்து நிறுத்தியாகணும்! யாரிடமாவது சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தோன்றியதால், ஒத்தையா, ரெட்டையாவின் பாதிப்புகள் அனைத்தையும் விவரித்தேன்.
''பிரச்னை இதுதானா! நான் என்னமோன்னு நினைச்சேன். உனக்கு உருட்டலிலதான் கண்டம்னு புரிஞ்சுது. நான் எத்தனை தாயக்கட்டைகளைப் பார்த்திருக்கேன்னு உனக்கு தெரியாது.  அதுக்கான பரிகாரம் என்கிட்டே இருக்கு!'' என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தினாள்.
''எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. முதலில் பரிகாரம் சொல்லுக்கா!'' 
''என்னம்மோ டாக்டர்கிட்ட பேசறா மாதிரி பேசற. அக்கா செய்யற உதவின்னு நினைச்சுக்கோ?  முதல்ல, வீட்டுக்குபோய், அந்தத் தாயக்கட்டையை எடுத்துக்கிட்டு வந்துடு. அதை காளி பூஜையில் வச்சு தர்றேன்! அதுக்கப்புறம் பாரு!''
வீட்டில் மனைவி இல்லை. 
'ஆபீஸிலிருந்து சீக்கிரம் வந்தால்,  என்னைத் தேட வேண்டாம்! போன் ரிப்பேர். பத்து பாத்திரங்களைக் கழுவி,  துடைத்து,  ஷெல்பில் அடுக்கவும்'  என்று ஒரு துண்டுசீட்டில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன்,  பயம் என்னைத் தொற்றிக் கொண்டு, தலை சுற்ற ஆரம்பித்தது. 
அந்தச் சுற்றலில், 'எல்லாவற்றுக்கும் மறுபக்கம் என்பது உண்டு'  என்ற தத்துவம் மீண்டும் காதுகளில் ரீங்கரித்தது.  உடனே,  அந்தச் சீட்டை திருப்பிப் பார்த்தேன். 
'நெருங்கிய சொந்தக்காரர் திடீரென்று புறப்பட்டு வருகிறார். அவரை அழைத்து வர பஸ் ஸ்டாண்ட் போகிறேன்'  என்ற வாசகத்தைப் பார்த்ததும்,  'எதையும் சுற்றிவளைத்து பேசும் குடும்பம்'  என்பது நினைவுக்கு வந்தது.  சற்று சுதாரித்து, தாயக்கட்டையைத் தேட ஆரம்பித்தேன்.
என் வாழ்க்கையின் வில்லனான அந்த உருட்டுக்கட்டை, மனைவியின் நகைப்பெட்டியில்,  ஒரு சுருக்குப் பைக்குள் ஒளிந்திருந்தது.  அதை சட்டைப்பைக்குள் ஒளித்து, ஸ்கூட்டரை வேகமாக உருட்டினேன்.
மரத்தடியின் மறுபக்கத்தைச் சென்றடைந்ததும்,  'கண்டேன்! தாயத்தை' என்று மகிழ்ச்சியில் கூவி,  அதை பவ்யமாக அக்காவிடம் ஒப்படைத்தேன்.
டாக்டர்,  பேஷன்ட்டை செக் செய்வதுபோல், அவற்றின் வயிறு,  முதுகு பகுதிகளைச் சோதித்தவர்,  என் கண்களை சிறிது நேரம் கைக்குட்டையால் கட்டி, ''ஜக்கம்மா! இந்தப் புள்ளை  நிம்மதியாக இருக்க வரன்கொடு'' என்று ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தது காதில் விழுந்தது.
''ஜக்கம்மா அருள் கொடுத்துட்டா. இப்ப நீ இந்தத் தாயக்கட்டையை வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்.  பரிகாரம் வேலை செய்ய ஆரம்பிச்சதும், என் நம்பருக்கு ஒரு மிஸ்ட் கால் கொடு'' என்றவள், ஒரு பேப்பரில் எழுதப்பட்டிருந்த தன் விசிட்டிங் கார்டை கொடுத்தாள்.
''அக்கா. உன்னோட ஃபீஸ்?''
''அப்புறம் பார்த்துக்கலாம்!'' என்று வழி அனுப்பி வைத்தாள்.
சுருக்குப்பை, அதன் வழக்கமான  இருப்பிடத்தில் ஐக்கியம் ஆனது.
பஸ்,  இரண்டு மணி நேரம் லேட். 
''எனக்கு முன்னாடியே நீங்க வந்துட்டீங்க.  யார் வந்திருக்காங்க பாருங்க!'' என்றாள் மனைவி.
அவளுக்குப் பின்னால், கையில் கைக்குட்டையோடு, மாமா நின்றிருந்தார்.
''என்ன  மாப்பிள்ளை. எல்லா வீட்டு வேலைகளையும் நீங்கதான் செய்யறதா கேள்விப்பட்டேன். கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படியே மெயின்டய்ன் பண்ணிக்கோங்க...!'' என்று சொல்லியவர்,  எகத்தளமாகச் சிரித்தார். 
'அது பொடி வச்ச சிரிப்பு' என்றுஎனக்குதோன்றியது.
மறுநாள் காலையில்,  வீட்டு வாசலில் வந்து விழுந்த பேப்பரை,  எங்கள் இருவர் கைகளும் தொட்டு,  அதை எடுத்துப் படிக்கப் போட்டி போட்டுக் கொண்டிருந்தன.
''ஒத்தையா, ரெட்டையா போட்டு பார்த்தா,  யார் முதலில் படிக்கணுங்கறது தெரிஞ்சுடப் போகுது.'' என்றவர்,  மகளை அழைத்தார்.
''நான் இரட்டை'' என்றேன்.
தாயக்கட்டையை உருட்டியவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கால் மேல் கால் போட்டு,  நான் முதலில் பேப்பரை படிக்க ஆரம்பித்தேன்.
முதல்முறையாக,  அவள் காபி பொடி டப்பாவைத் தேடினாள்.  குழப்பத்தில் மாமா மூக்குபொடி டப்பாவைத் தேடினார்.  காய்கறியும் அவள்தான் வாங்கி வந்தாள்.
என் மொபைலிலிருந்து கலைசெல்விக்கு மிஸ்டு கால் பறந்தது.
நடப்பவைகளை நம்ப முடியாமல்,  மாமா கைக்குட்டையால்,  மூக்கை மறைக்க ஆரம்பித்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் பதறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிஸ்டத்திலிருந்து, மேளதாளத்தை அலறவிட்டேன். 
மாமா சற்று தயங்கினார்.
அந்தச் சமயத்தில்,  நான் சற்றும் எதிர்பாராத குரல் ஒன்று கேட்டது.
''வந்துட்டேன்! திரும்ப வந்துட்டேன்ன்னு சொல்லு'' என்ற பஞ்ச் டயலாக்குடன்,  பணிப்பெண் செல்வி உள்ளே நுழைந்து,  தன் ஹேண்ட் பேக்கை ஓரமாக வைத்தாள்.
'உன்னை எங்கேயெல்லாம் தேடுவது! தொடர்பை கட் பண்ணப் போறதா சொன்னவள் எப்படி திடீர்னு வந்தே?'என்று மனதுக்குள்ஆச்சரிய கேள்வி கேட்டேன்.
என் மைன்ட் வாயிஸை புரிந்தவள்போல்,  ''ஜக்கம்மா சொல்றா? செல்வி செய்யறா?'' என்ற இன்னொரு பஞ்ச் டயலாக்கை ரிலீஸ் செய்தாள்.
''மாமா! எனக்கு பதிலா நீங்க கால் மேல கால் போட்டுக்கிட்டு, பேப்பர் படிச்சுக்கிட்டு இருங்க? நான் உங்களுக்கு பிடிச்ச ரோஸ்ட் செய்வதற்கு சேப்பங்கிழங்கு வாங்கிட்டு வந்துடறேன்!'' என்று லீவு சொல்லிவிட்டு,  வெளியேறினேன்.
''அக்கா! எப்படிக்கா?'' என்று போனில் ஆச்சரிய கூத்தாடினேன்.
''அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை தம்பி. தாயக்கட்டையின் ஒரு பக்கத்தைவிட, இன்னொரு பக்கத்தை ஈய குண்டுகளை உள்ளே வச்சு கனமாக்கி, கொஞ்சம் பழக்கப்படுத்திக்கிட்டு உருட்டினா,  நம்ம சொல்ற நம்பரை விழ வைக்கலாம். இது தொழில் ரகசியம்!'' என்று சர்வ சாதாரணமாக விளக்கினாள்.
''அதுக்கு நீங்க என்ன பரிகாரம் பண்ணீங்க அக்கா?''
''ஒரு சின்ன ஆபரேஷன்தான். அந்தத் தாயக்கட்டையை குடைஞ்சு,  ஒரு பக்கத்தில் அடைச்சு வச்சிருந்த ஈய குண்டுகளை அலாக்கா தூக்கிட்டேன்!''
''நான் தேடிக்கிட்டிருந்த செல்வி,  திடீர்னு மனம் மாறி எப்படி மறுபடியும் வேலைக்கு வந்தாள்?''
''நீ சொன்ன ஹவுசிங் போர்ட் மேட்டரை வச்சு,  அது என்னோட சித்தி பொண்ணுதான்னு புரிஞ்சுக்கிட்டேன். உன்னோட வேலையைக் காப்பாத்த,  அவ உங்க வீட்டிலேயே வேலைக்குத் திரும்ப வரணும்.  அதை தியாகமா நினைச்சுக்கன்னு அவகிட்டே சொன்னேன்.  அவை அதை உடனே ஒத்துக்கிட்டா. ஏன்னா?''
''மேலே சொல்லுக்கா!''
''எங்க குடும்பத்தில், என்அப்பா, தம்பி உள்பட பலஆம்பிளைங்க ராணுவத்தில் சேர்ந்து,  எல்லையைக் காத்து நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தவங்க!''
'' அந்தத் தியாக ரத்தம் எங்க உடம்பிலே ஒடுதில்லை!''
என் கண்களில் தலைகாட்டிய கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டு,  மனதுக்குள் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு, சேப்பங்கிழங்குடன், மாமாவை ரோஸ்ட் செய்ய வீடு திரும்பினேன்.
''கொஞ்சம் வெளியே வர்றீங்களா?''  மாமாவை வெளியே அழைத்து விசாரணையைத் தொடங்கினேன்.
''ஒரே பொண்ணு செல்லமா வளர்ந்தவள். எங்க வீட்டில் அவளுடைய இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கும்.  மண வாழ்க்கையிலும் அப்படியே நடக்கணும்னுட்டுதான் இந்தச் சூதகமான ஏற்பாட்டை செய்தேன்!'' என்று ஒப்புக்கொண்டவர்,  அந்த ஏற்பாட்டின் சூதான நுணுக்கங்கள்,  தன் பெண்ணுக்குத் தெரியாது என்றவர்,  தேம்பி அழ ஆரம்பித்தார்.
''என்னாச்சு மாமா! ஏன்அழறீங்க?''  என்று ஆறுதல் சொல்லத் தோன்றியது. ஆனால், சொல்ல மனமில்லை.
''மாப்பிள்ளை. உங்க கையை காலா நினைச்சு,  ஒரு வேண்டுகோள் என் பொண்ணு, நேர்மையான எண்ணம் கொண்டவள். நடந்தவைகள் அனைத்தும் என் கைங்கரியம்தான். நீங்க கண்டுபிடிச்சதை,  என் பொண்ணுக்கிட்ட சொன்னீங்கன்னா,  இதுவரை அவ என்னிடம் வச்சிருந்த மரியாதையெல்லாம் போய்,  உறவையே துண்டித்துவிடுவாள்.
''எந்தக் காரணத்தையாவது சொல்லி,  ஒத்தையா, ரெட்டையா விளையாட்டை நிறுத்தி,  அந்தத் தாயக்கட்டையை நெருப்பில் போட்டு உருக்கிடறேன். அவளிடம், என்னுடைய தகிடுதத்ததைப் பற்றி சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடுங்க?'' என்றுகெஞ்சினார்.
ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்வதில்தான்,  மணவாழ்க்கையின் சிறப்பு அடங்கியிருக்கிறது. 
மணவாழ்க்கையில் பெற்றோரின் குறுக்கீட்டை கூடிய வரையில் தவிர்த்தால்தான்,  கணவன்- மனைவியிடையான புரிதல் வளரும். அதற்கு வேறு எந்த குறுக்குவழிகளும் கிடையாது.  உங்களுடைய குறுக்குப்புத்தி செயல்பாடுகள் இதற்குமாறானது என்று புரிந்திருக்கும். ஆனா..  நீங்க  எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்கவேண்டும்.'' 
''நல்லாவே புரிஞ்சுது. நீங்க எது சொன்னாலும் செய்யறேன் மாப்பிள்ளை.''
''பொடி போடுவதை இப்பவே விட்டுடறேன்னு சத்தியம் செய்து கொடுங்க மாமா!''
''என் கையில் அவர் கை பதிய பொடி டப்பா அவர் காலில் மிதிபட்டு,  தூளானது. 
இது மாங்காய் சீசன் என்பதால், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்'  சொலவடையும் நினைவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com