மகனுக்காக ஒரு மனு

இதோடு ஏழாவது கடிதத்தை அடித்து எழுதி, திருத்தி,  அவற்றை கசக்கி கோபமாக தூக்கி தூர எறிகிறேன்.  
மகனுக்காக ஒரு மனு

இதோடு ஏழாவது கடிதத்தை அடித்து எழுதி, திருத்தி,  அவற்றை கசக்கி கோபமாக தூக்கி தூர எறிகிறேன்.  அப்படி எறியும்போதே அந்தப் பெண் வீட்டார் முகத்தில் வீசுவதுபோன்றதொரு ஆத்திரம்தான் மனதில் பொங்குகிறது.  'எப்படி ஆரம்பித்தால் அவர்கள் இந்தக் கடிதத்தை தொடர்ந்து படிப்பார்கள்' என்றுதான் யோசிக்கிறேன். ஆரம்பத்திலேயே அவர்களை சாடுவதுபோல் இருந்துவிட்டால்,  'என்ன சொல்ல வருகிறேன்'  என்று அவர்கள் முழுமையாக அறியாமலேயே போய்விடும். அதனால், என்னுடைய மனக்குமுறல்களைத் தாங்கிச் செல்லும் இந்தக் கடிதத்தை படிக்காமலே படக்கென்று கிழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அதற்குத்தான், ஆரம்பத்திலே அந்த நிலைமைக்கு அவர்களைக் கொண்டுப் போய்விடாமல், வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல், சொல்ல வந்த விஷயத்தை எப்படி நாசூக்காக சொல்வது என்று கண்கள் இரண்டையும் மூடி, எண்ணத்தை நடுநெற்றியில் வைத்து தியானிப்பதுபோல் உட்கார்ந்திருக்கின்றேன். இரவு நேரம் என்பதால் வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். இப்போதுதான் மனம் ஒரு நிலைப்பட்டு நன்றாக யோசித்து ஒரு வழியாக காகிதத் தாளை சோற்றுக் கையால் நேர்படுத்தி எழுத ஆரம்பிக்கின்றேன்.

''மானமிகு பெண் வீட்டார்களுக்கு வணக்கங்கள். என்னையும் மதித்து இந்தக் கடிதத்தை பிரித்துப் படித்துக்கொண்டிருக்கும் உங்களது மேலான பண்புக்கு மீண்டும் ஒருமுறை எனது வணக்கம்.
யாரென்று சரியாகப் பார்க்காமல் பிரித்த கடிதத்தை, முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து அனுப்புதல் பகுதிக்கு இந்த நேரம் உங்கள் பார்வை போயிருக்கும். அதிலிருக்கும் என்னுடைய பெயரையும் விலாசத்தையும் ஒரு முறை வாய்விட்டு படித்துப் பார்ப்பீர்கள். 'என்.தில்லையம்மா,  க/பெ. எஸ்.நடராஜன்,  வரதராஜன் பிள்ளை நகர், கம்மியம்பேட்டை,  கடலூர்'  என்றதும் ஒரு நிமிடம் உங்களுடையப் பார்வை அந்த விலாசத்தையே கவனிக்கும்.  'இந்த விலாசம் எங்கேயே கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதே?' என்று தோன்றியிருக்க வேண்டும். அப்படியும் தோன்றவில்லையென்றால், 'நான்கு நாள்களுக்கு முன்பு பாடலீஸ்வரர் கோயிலுக்கு என் மகன் கருப்பண்ணசாமியை உங்கள் மகள் பார்ப்பதற்காக வரச்சொல்லிவிட்டு, அங்கே அவனை அசிங்கப்படுத்தி அனுப்புனீர்களே'  என்று சொன்னால் உடனே நினைவுக்கு வந்துவிடும். அந்த அவலட்சனமான பிள்ளையைப் பெற்றெடுத்த தாய் தில்லையம்மா எழுதும் கண்ணீர் கடிதம். 
இப்போது எதற்கு, எங்களுக்கு இந்த விளக்கம் என்று நினைத்த உடனே வந்த சுவடு தெரியாமல், அந்தக் கடிதத்தை சுக்கு நூறாகக் கிழித்து தூர தூக்கிப் போட்டுவிடலாமென்று எண்ணாதீர்கள். ஏனென்றால், உங்கள் மகளின் எதிர்காலம் குறித்து, இதில் ஒரு விஷயத்தையும் குறிப்பிட இருக்கின்றேன். அதற்காக வேண்டியாவது இக்கடிதத்தை சற்று பொறுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். நான் சொல்லப்போகும் செய்தி உங்களுக்கு வருத்தமாகக்கூட இருக்கலாம்! அதற்காக எப்படி சொல்லாமல் போக முடியும்?  
நாங்கள் உங்கள் வீட்டுக்குப் பெண் பார்க்க வரும்போதே, என் மகனைப் பிடிக்கவில்லையென்று நேரடியாகவோ அல்லது எங்களை அழைத்து வந்த ருக்மணியம்மாவிடமோ சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு, 'எங்களுக்கு ரெண்டு வாரம் டைம் குடுங்க! நாங்க பெரியவங்ககிட்டெல்லாம் கேட்டுட்டு சொல்றோம்' என்று சொன்னீர்கள்.  ஆனால், பத்து நாளைக்குள்ளே, எனக்கு 'ஃபோன்' செய்து, எங்கப் பொண்ணு. மாப்பிள்ளைய சரியாப் பாக்கலையாம். அதனால, திரும்பப் பார்க்கணும்னு சொல்றா! வயிசுப்பொண்ணு இருக்கற இடத்துல.. சும்மாஆம்பளையாளுங்க வீட்டுக்கு வந்துப்போறது அவ்வளவு நல்லாயிருக்காதுங்களே!  அக்கம்பக்கத்துல இருக்கறவங்கெல்லாம் எதாவது தப்பாப் பேசுவாங்க! அதுக்காக உங்கப் பையனைமட்டும் பக்கத்திலிருக்கற பாடலீஸ்வரர் கோயிலுக்கு நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு அனுப்பி வையுங்க?' என்று சொன்னீர்கள். 
நானும் உங்களுடைய பேச்சை நம்பி, என் பொறுமை பொறுத்த ராசாவை அனுப்பி வைத்தேன்.  அப்போதே அவன் சொன்னான்:
'பொண்ணுப் பாக்கப் போன அன்னைக்கே இங்க உக்காருங்க!அங்க ஒக்காருங்கன்னு, பொண்ணு என்னை நல்லாப் பார்க்கற மாதிரி வசதியாதான் ஒக்காற வச்சாங்க. அப்றென்ன? இப்ப அங்க வா! இங்க வான்னு அலையவுடுறாங்க! இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூடப் புடிக்கலைம்மா?' என்றுதான் என் தங்க மகன் முகம் சுளித்தான். 
அப்போது நான்தான் சமாதானப்படுத்தி,  'ஒன்னை! இன்னும் கொஞ்சம் நல்லா பார்க்கணும்னு அந்தப் பொண்ணு சொல்லுதான்டா!  என்ன பண்றது? பெத்தவங்களுக்கு, அவளை ஒரு நல்ல இடத்துல கட்டிக் குடுக்கறவரைக்கும் நெருப்புமேல நிற்கறமாதிரி தவியா தவிச்சிக்கிட்டுதான் இருப்பாங்க?  நம்மமட்டும் என்ன! உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்து முடிக்கும்போது, அவ்வளவு லேசுலியா ஒத்துக்கிட்டோம். அவரு வேலை செய்யற இடத்துல,  யாருகூட கூடிக்கிட்டிருக்கறாருன்னுப் பாத்து.. அவுங்கள கண்டுபுடிச்சி, மாப்பிள்ளை எப்படி?,  ஏது? , எல்லாத்தையும் விசாரிச்சிக்கிட்டுதானே கொடுத்தோம். அதுமாதிரி அவுங்களும் யோசிக்கறாங்கபோல!  நமக்கென்ன இருக்கு! அவுங்க எங்க வேணும்ன்னாலும் விசாரிச்சிக்கிட்டோம்.  யாருகிட்ட வேணும்ன்னாலும் கேட்டுக்கிட்டோம். என் மகனைப்பத்தி எனக்குத் தெரியும். நீ போயிட்டு வாப்பா?'  என்றேன். 
'அவனும், உங்கள் பெண்ணை பார்த்ததிலிருந்தே!  ஆழ்மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டான்' என்று அவன் முகத்தில் அரும்பியிருந்த ஆனந்தத்தைக் கண்டுக்கொண்டுதான்  கெஞ்சிக் கூத்தாடி கட்டாயமாகப் போய் வரச் சொல்லி அனுப்பி வைத்தேன். 
அந்த அன்பில்தான் அவனும், 'சரிம்மா, நீங்க சொல்லிட்டீங்க! நான் போய்ட்டு வர்றேன்' என்று நீங்கள் உண்மையாகத்தான் வரச் சொல்கிறீர்களென்று நம்பி வந்துவிட்டான். இப்படி ஆசை ஆசையாக வந்த, என் பத்திரமாத்து தங்கத்தை, தவமாய் தவமிருந்து பெற்றெடுத்தப் பிள்ளையை  கோயிலில் வைத்து அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்கிறீர்கள் என்று நினைக்கும்போது பெற்ற வயிறு பற்றிக் கொண்டு எரியாமல் என்ன செய்யும்? 
'இப்போது நீங்கள்கூட என்னைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்கலாம்! 'இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லையா? என் மகளுடைய அழகென்ன? அந்தஸ்து என்ன? அவளுடைய படிப்பென்ன? அப்படியிருக்கும்போது அவளை மணம் முடிக்க உங்கள் மகனுக்கு என்ன அருகதை இருக்கு?' என்றும் கேட்கலாம். 
'நீங்கள் கேட்க நினைப்பதுபோல், புறத்தோற்றத்தின்படி அவனிடம் எந்த தகுதியும் இல்லை' என்று சொல்லியிருக்கின்றீர்கள்.  சரி, உங்கள் வழிக்கே வருகின்றேன். பின்பு எதற்காக அவனைக் கோயிலுக்கு வரச் சொல்ல வேண்டும்? அப்போதே நிராகரித்திருக்கலாமே? அங்கேதான் உங்கள் குறுக்குப்புத்தி வேலை செய்திருக்கின்றது. அசிங்கமாக இருந்தாலும், அரசு வேலையில் இருக்கின்றானே? இப்போதைக்கு இவனைவிட்டால் நமக்கு வேறு வழியில்லையென்று வரச்சொல்லிவிட்டீர்கள். முழிக்காதீர்கள், அதுதானே உண்மை?
நாங்கள் பெண் பார்த்துவிட்டு வந்தபிறகு அதே வாரத்தில் எங்களைவிட இன்னொரு வசதியான வரன் உங்கள் மகளைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். அந்தச் சம்பந்தம் உங்களுக்கு பிடித்துப் போய்விட்டது. இருந்தாலும், பவுன் போடுவதில்தான் சற்று இழுபறி!   அவர்கள் கோபித்துக்கொண்டு, 'நாங்க வீட்டில் போய் கலந்துப் பேசிட்டு சொல்றோம்' என்று சொல்லிவிட்டு  போய்விட்டார்கள். அப்படிப் போனவர்கள் அதற்குப் பின்னர் பல இடங்களில் பவுனுக்காக அலைந்திருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், என் அக்கா மகன் பெண் கட்டியிருக்கும் வழிகாலில்,  அவர்களும் எங்களுக்கு ஒரு வகையில் உறவினர்களே!
நாங்கள் அவர்களைப்போல் பவுன் எல்லாம் உங்களிடம் கேட்கவில்லை! தங்கத்துக்கே தங்கம் கேட்பது அதிகம்தானே! அந்த அளவுக்கு பேராசைக்காரரும் நாங்கள் இல்லை. அப்படி பேராசைக் கொள்ளாததால்தான் என் பையனுக்கு இந்தப் பிரச்னையெல்லாம் வருகிறதோ என்னவோ தெரியவில்லை. 
'உங்களுக்கு புது சம்பந்தம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், உங்கள் உறவுக்காரர்களிடம் உதட்டைப் பிதுக்கி, கடலூரில் இருந்து ஒரு மாப்பிள்ளை பையன் வந்தான்!  கலருல, காக்காவையே மிஞ்சிடுவாம் போலிருக்கு! தேவாங்கு மாதிரி ஒரு தேகம்! அறுவடை பண்ண நிலம் மாதிரி இப்பவே அரைமண்டையா இருக்கான்' என்றெல்லாம் பொது வெளியில் என் ஒரே மகனைத் தரம் தாழ்த்திப் பேசியிருக்கிறீர்கள். அதைக்கூட நாங்கள் பொறுத்துக் கொண்டோம்.. 
இதற்கிடையில் அந்தப் பேராசைக்காரர்கள் தங்கத்தைத் தேடி ஊர் ஊராக அலைந்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கவே,  அவர்கள் இனிமேல் வருவார்களோ,  மாட்டார்களோ என்று பயந்துப்போய், 'சரி என்ன செய்வது? இந்தப் பையனையாவது முடித்துவிட வேண்டும்' என்று நீங்கள் உங்கள் மகளிடம் போராடியிருக்கீறீர்கள். 
''இங்கப் பாரும்மா நீ. நெனைக்கற மாதிரி அந்தப் பையன் நல்லா செகப்பா அழகா, வேலையில் இருக்கறான். அது நல்ல சம்பந்தம்தான் இல்லைன்னு சொல்லல! அவுங்கதான் அம்பது பவுன்லே நிக்கறாங்களேம்மா! இருபத்தஞ்சி பவுன் வரைக்கும் நம்ம போடுறோம்னு சொல்லிட்டோம். அப்படியிருந்தும், கொஞ்சம்கூட கொறைக்க மாட்டீங்கறாங்க? இப்போதைக்கு இந்த மாப்பிள்ளை ஒன்னுதான் நம்ம கைவசம் இருக்குது! இதையும் விட்டுட்டா? அப்புறம் வேலையில் இருக்கற மாப்பிள்ளையை எங்கே போய் தேடுவே? எதாவது, ஒன்னு விட்டுக் குடுத்தாதான் ஒன்னு கெடைக்கும்மா. என்று விருப்பமில்லாதப் பெண்ணை கட்டாயமாக சம்மதிக்க வைத்து கோயிலுக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். கோயிலுக்கு வரும் வழியிலே, தங்கத்தை தேடிப்போன பேராசைக்காரர்களும் இதற்குமேல் அலைந்தால் தங்கம் போய் செம்புதான் கிடைக்குமென்று, உங்களுக்கு போன் செய்து, 'பையன் கட்டிக்கிட்டா உங்க பொண்ணத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக்கால்ல நிக்கறான். நீங்க என்னடான்னா?.  ஒட்டாரமா? முப்பது பவுன்லேதான் நிக்கறீங்க?' என்றிருக்கின்றார்கள். 
அவர்களுடைய இளக்காரத்தை தெரிந்துக்கொண்ட நீங்கள், அவர்கள் சொன்னதைத் திருத்தி, 'இருங்க முப்பதில்லைங்க. மாப்பிள்ளைக்கும் சேர்த்தே இருபத்தைஞ்சுதான் போடுறோம்னு சொன்னோம்!' என்று உங்களுடைய பிடியை விட்டுக்கொடுக்காமல் சட்டத் திட்டமாகச் சொல்லியிருக்கிறீர்கள். 
அவர்களும் கிடைத்தால்போதுமென்று, 'சரிங்க! என்ன செஞ்சாலும் உங்கப் பொண்ணுக்குத்தான் செய்யப் போறீங்க!  எங்களுக்கு என்ன இருக்கு?'  என்று வேதாந்தம் பேசியவர்கள், அப்படியே அதை உறுதிபடுத்தும் விதமாக, 'அடுத்த மாசம் வைகாசி வளர்பிறையில ஒரு நாள் 
'ஃபோன்' போட்டு சொல்லிட்டு, நாங்க முறைப்படி பொண்ணுப் பார்க்க வர்றோம்'  என்று அவர்கள் சொன்னதும்,  உங்களுடைய குடும்பத்தாருக்கு தலை கால் எதுவும் தெரியாமல் போய்விட்டது.  எங்களைவிட வசதியானவர்கள் உங்களுக்கு கிடைத்ததும், உடனே எங்களை கழற்றி விட்டுவிட்டீர்கள். 
என்ன அப்படி பார்க்கிறீர்கள்? உண்மையைத்தான் சொல்கிறேன். பல்லைக் கடித்துக்கொண்டு, அப்பளத்தை நொறுக்குவதுபோல் அந்தக் கடிதத்தைக் கசக்கி எறிய வேண்டும்போல்தான் தோன்றும். அவசரப்படாதீர்கள். தலையெழுத்தே என்று படித்துதான் ஆகவேண்டும். இல்லையேல், உங்களுடைய மகளின் எதிர்காலத்தைப் பற்றி சொல்ல இருந்த தகவலை நீங்கள் அறியாமலேயே போய்விடும். கடிதத்தை நேராகப் பிடித்துப் படியுங்கள். பாதிக்கப்பட்டவளின் வேதனை பட்டாசுபோல் சில இடங்களில் வெடிக்கத்தான் செய்யும். 
இதற்கு மத்தியில், இவனை வேறு கோயிலுக்கு வரச்சொல்லிவிட்டோமே?  எப்படி இவனை வெட்டி விடுவதென்று குடும்பமே கூடி, 'இப்படி சொல்லலாமா?, அப்படி சொல்லலாமா? என்று கலந்தாலோசித்து ஒரு தீர்வும் கிடைக்காமல் குழப்பிக்கொண்டுதான் வந்திருக்கிறீர்கள். அப்படி வரும்போது எப்படி இவனை எதிர்கொள்வதென்று தெரியாமல், வெகு நேரம் பிள்ளையை தெரியாததுபோல் அவனையே கடந்துப் போயிருக்கிறீர்கள். 
'நீங்கள் உண்மையிலேயே அவனை அடையாளம் தெரியாமல்தான் போகிறீர்கள்' என்று நினைத்து, என் பிள்ளையும் உங்கள் பின்னாலேயே வந்திருக்கின்றான். இப்போது அதை நினைத்துப் பார்த்தால் எனக்கு நெஞ்சே பதறகிறது. இப்படியா ஒரு பிள்ளையை அலையவிடுவீர்கள்? அப்படியிருந்தும், சாமி குப்பிடுவதற்கு நீங்கள் ஒரு வரிசையில் நிற்கும்போது அவன் உங்களுக்கு எதிர்வரிசையில்தான் வந்து நின்றிருந்திருக்கின்றான். அப்போதும் அவனைப் பார்க்காதது போலவே உங்களுக்குள் பேசியிருக்கின்றீர்கள். 
'இந்தப் பையனைவேற இன்னும் காணுமே! வந்தான்னா விஷயத்தைச் சொல்லிட்டு கிளம்பலாம்னு பார்த்தா? ஆளையே காணும்! ஒருவேளை செப்பு  சிலை மாதிரியிருக்கற நம்மப் பெண்ணைப் பார்த்துட்டு, அவனே அசிங்கப்பட்டு இங்கிருந்துப் போய்ட்டானோ என்னவோ தெரியலை? அவனுக்கென்னமோ மனசுல... பெரிய மன்மதன்னு நெனைப்பு போலிருக்கு! ஈஸ்வரன் கோயில் எண்ணெய் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி! ஓணான் மாதிரி ஒரு ஒடம்பு! பணங்காமாதிரி.  ரெண்டு பல்லு, ஓட்டாஞ்சில்லுமாதிரி ஒடுங்கிய கண்ணம்! இந்த லட்சணத்துல அவனுக்கு நம்மப் பொண்ணக் கேக்குது!'  என்று அவன் காது படவே பேசியிருக்கறீர்கள். 
இந்த வார்த்தைகளெல்லாம், என் புள்ளையின் மனதை என்ன பாடுபடுத்தியிருக்குமென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் பெண்ணுடைய வாழ்க்கையை மட்டும் பார்த்திருக்கிறீர்களேதவிர... இவனும் வாழவேண்டிய பையன்தான் என்று கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்காமல் பேசியிருக்கிறீர்கள். 
இதேபோன்று அவன் பள்ளியில் படிக்கும்போதுகூட ஒருமுறை, 'அம்மா, ஸ்கூல்ல... எல்லாரும் என்னை கருப்பு கருப்புன்னு கூப்புடுறானுங்கம்மா? நான் என்ன அப்படியாம்மா கருப்பாயிருக்கேன்? இனிமே செகப்பாயிட்டுதான் ஸ்கூலுக்கே வருவேன்னு அழுதுக்கிட்டே சொல்லிட்டு வந்துட்டேம்மா?' என்று சொன்னவனை சமாதானப்படுத்தி, 'அவுங்க சொன்னா சொன்னாப் போறாங்கப்பா? அதெல்லாம் இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதால விட்டுட்டு, நீ நல்லாப் படிக்கற வழியைப் பாரு!  அப்படிப் படிச்சி பெரியாளா வந்திட்டீன்னா?  இந்தக் கருப்பு செவுப்பு பேதமெல்லாம் போற இடஇஈ தெரியாம போயிடும்பா?' என்று தினமும் தன்னம்பிக்கையை ஊட்டித்தான் வளர்த்திருக்கின்றேன். 
எவ்வளவோ அவமானங்களையெல்லாம் தாண்டித்தான் சுயம்புவாகவே உழைத்து முன்னேறி சொந்தக் காலில் நின்றுக் கொண்டிருக்கின்றான். என்றாலும், அவனது மன தைரியத்தையே அசைத்துப் பார்ப்பது போலிருக்கிறது உங்களுடைய பண்பற்ற செயல். உங்களுக்கு எந்த வரன் வேண்டும் வேண்டாம் என்று தீர்மானிக்கின்ற முழு உரிமையும் இருக்கிறது. யாரும் உங்களை கட்டாயப்படுத்தப் போவதில்லை. அதற்காக, அவனுடைய உருவத்தைப் பற்றியும், நிறத்தைப் பற்றியும் நீங்கள் கேலியாகவும் கிண்டலாகவும் பேசியிருப்பது மனதிற்கு மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது. 
உங்களுடைய பெண்ணுக்கு வேண்டும் என்றால் அவன் பொருத்தமில்லாமல் இருக்கலாம்! அதற்காக எந்தப் பெண்ணுக்குமே பொருத்தமில்லாதவனைப் போல் அவனை வெறுத்து ஒதுக்கியது மிகவும் அபத்தமாக இருக்கிறது. அன்றையிலிருந்தே அவனது வாட்டமான முகத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை. ஒரு வகையில் அவன் அசிங்கப்பட நானும் ஒரு காரணமாகிவிட்டேன். அழகு என்பது நிறத்தால் வருவதல்ல! குணத்தால் வருவது! அதெல்லாம் உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. 
என்ன இந்தக் கடிதம் இவ்வளவு ஈரமாக இருக்கிறதென்று எண்ண வேண்டாம்! எல்லாம் என்னுடைய கண்ணீர் துளிகள்தான். உங்களுக்கெங்கே அதெல்லாம் புரியப்போகிறது? சரி, நான் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். 
உங்களைப் போன்றோரிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் அந்தப் மணப்பெண்ணுக்காக உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். வைகாசி மாதத்துக்கு இன்னும் நாள்கள் இருக்கிறது. அதற்குள் இப்போது பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீட்டாரிடமும்,  'எங்கப் பொண்ணு.. மாப்பிள்ளையை சரியாப் பாக்கலையாம்' என்று சொல்லி, அவர்களையும் கோயிலுக்கு வரவழைப்பதுபோல் ஒரு சந்தர்ப்பம்  உங்களுக்கு வாய்த்து விடக்கூடாதென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், எல்லோரும் எங்களைப்போல் பாவ புண்ணியம் பார்க்க மாட்டார்கள். இதேபோன்று தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தீர்களென்றால் உங்களுடைய பெண்ணின் பெயருக்கு நிச்சயம் அவப்பெயர் ஏற்பட்டு, அவளுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்! நினைவில் கொள்க!
இப்படிக்கு வருத்தமுடன், கோயிலுக்கு வரச்சொல்லி ஏமாந்துப்போன கருப்பண்ண சாமியின் தாய் தில்லையம்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com