பேல் பூரி

அம்மி கல்லு ஹோட்டல்
பேல் பூரி
Updated on
2 min read

கண்டது


(சென்னை மந்தைவெளியில் உள்ள எலும்பு, மூட்டு மருத்துவர் சுப்பிரமணியன் கிளீனிக்கில் பார்த்தது)

"உன் வலியை நீ உணர்ந்தால் 
நீ உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். 
பிறர் வலியை நீ உணர்ந்தால் 
நீ மனிதனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்.

-சம்பத்குமாரி,
பொன்மலை.

(மணப்பாறை- குளித்தலை சாலையில் உள்ள உணவகத்தின் பெயர்)

"அம்மி கல்லு ஹோட்டல்''

-எம்.பாலசுப்பிரமணியன்,
திண்டுக்கல்.

(பட்டுக்கோட்டை அருகே அடுத்தடுத்துள்ள இரு ஊர்களின் பெயர்கள்)

"எழுத்தாணிவயல்'', "எண்ணணிவயல்''.

-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

கேட்டது


(தஞ்சாவூர் வடூவூர் கடை வீதியில் இருவர் பேசிக் கொண்டது)

"மாப்ளே முறுக்குக் கடை வைக்கலாமுன்னு இருக்கேன். நல்ல பேரா சொல்லேன்!''
"சரக்குக்கு முறுக்குக் கடைன்னு வை நல்லா ஓடும்!''

-ஜா.தேவதாஸ்,  
தஞ்சாவூர்.

(வேடசந்தூர் கடை ஒன்றில் கடைக்காரரும், கடைக்கு வந்தவரும்)

"ஒரு வாழைப்பழம் என்ன விலை?''
"ஐந்து ரூபாய்''
"ரெண்டு ரூபாய்க்கு தருவீங்களா?''
" தோல்தான் வரும்!''
"இந்தாங்க மூணு ரூபாய். தோல் வேணாம். பழம் மட்டும்தாங்க!''
"யோவ். முதலில்இடத்தை காலி பண்ணு''

-எஸ்.கார்த்திக் ஆனந்த்,
காளனம்பட்டி.

(தென்காசி பேருந்து நிலையத்தில் இரு பெண்கள்)

"உன் மருமகள் மேல உனக்கு என்ன கோபம்.''
"வீட்டுல பழங்காலப் பொருள்களைச் சேர்த்து வைச்சிருப்பதா அவள் தோழிகளிடன் என்னைக் காட்டுறா?''

-கு.அருணாசலம்,
தென்காசி.


யோசிக்கிறாங்கப்பா!


கடன் கேட்டு அலையும் நேரத்தில்  
வேலை கேட்டு அலையலாமே!

-மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

மைக்ரோ கதை


"அப்பா. நீங்க என்ன சொன்னாலும் நான் காதலிக்கற அருணைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்.'' என்று உறுதியாய் சொன்னார் ரம்யா.
"சரிம்மா உன்னோட விருப்பம்.  ஆனா ஒன்று அவன் ஏற்கெனவே கல்யாணம் ஆனவன் என்பதை மறந்துடாதே!'' என்றார் கந்தசாமி.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா, "என்னப்பா சொல்றீங்க! என்றாள்.
"அருணை நீ காதலிக்கிறேன்னு சொன்னதும் அவனைப் பற்றி விசாரித்து, உண்மையைக் கண்டுபிடிச்சிட்டேன்.  ஆனா, நீ காதல் மயக்கத்துல தப்பானவன் கூட போகத் தயாரா இருக்கே!  வேணும்னா விசாரிச்சுப்பார். உண்மை தெரியும்'' என்று கந்தசாமி சொல்லிவிட்டு, அலுவலகம் சென்றுவிட்டார்.
மாலை அலுவவலத்திலிருந்து திரும்பி வந்த கந்தசாமியிடம் ரம்யா, "என்ன மன்னிச்சுடுப்பா! அருண் ஏற்கெனவே கல்யாணம் ஆனவன்!'' என்று கதறி அழுதாள்.
அவளைத் தேற்றிய கந்தசாமி,, "நீங்க வழிமாறிப் போக விடமாட்டோம். ஏன்னா நாங்கப் பெத்தவங்க!'' என்றார் கந்தசாமி.

-ஏ.மூர்த்தி,  
திருவள்ளூர்.


எஸ்எம்எஸ்


கல்லடி படுவதால் மரம் கலங்குவதில்லை. 
சொல்லடி படுவதால் மட்டுமே மனம் கலங்குகிறதே.

- அ. சிட்டிபாபு,
குடியாத்தம்.

அப்படீங்களா!


வாழ்க்கை வழிகாட்டியாக இருந்த நம் மூதாதையர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களது பழைய புகைப்படங்களைத் தேடி நினைவுகளை புதுப்பித்து வந்தது டிஜிட்டல் (எண்ம) காலம். தற்போதைய நவீன செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ,) தொழில்நுட்பக் காலத்தில் இறந்தவரை நேரில் அழைத்து வந்து பேச வைக்கவும் முடியும்.
சீனாவில் இந்த நவீன தொழில்நுட்ப முறை பிரபலமடைந்து வருகிறது. சாட் ஜி,பி.டி, சாட்பாக்ஸ், மிட்ஜேர்னி எனும் மென் பொருளில் இறந்தவர்களின் புகைப்படங்கள், ஒலிப் பதிவு ஆகியவற்றை பதிவிட்டால் போதும், அவர் தனது உறவினர்களிடம் பேசி உரையாடுவார். இதற்கான பிலிபிலி என்ற இணையதளத்தையும் சீனர்கள் உருவாக்கியுள்ளனர். இது சீன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
இதேபோல், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவரது பழக்கவழக்கங்கள், நடை, பாவனைகளை பதிவிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவரைப் போன்றே மற்றொருவரை உருவாக்கலாம் என்று லண்டன் ரவண்ஸ்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு இறந்த பின்பும் அவரை நம்முடன் வாழ்வதைப்போன்று உருவாக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில் அவர் இந்த உலகத்தில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இந்த நவீன தொழில்நுட்ப முறை சற்று ஆறுதல் தரும்.
மறைந்தவர்கள் வீட்டில் வெறும் புகைப்படங்களாக தொங்காமல் நம்முடன் உரையாடிக் கொண்டு வாழும் நபர்களாகவே வரும் காலங்களில் காணலாம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com